கரகர, மொறுமொறு ஊட்டி வர்க்கி

உதகையின் பருவநிலை, சுற்றுலா இடங்கள், நீலகிரி தைலம், நீலகிரி தேன், உல்லன் ஸ்வெட்டர்கள், குதிரை சவாரி என பல்வேறு அம்சங்கள் இருந்தாலும், ஊட்டி வர்க்கிக்கு தனிச்சிறப்பு உண்டு. 
கரகர, மொறுமொறு ஊட்டி வர்க்கி

உதகை: ஒவ்வொரு ஊருக்கும் ஒரு ஸ்பெஷல் இருக்கும். அது அந்த ஊரின் சிறப்பாகும்.  அந்த சிறப்பு  ஒட்டுமொத்தமாக எல்லோருக்கும் பிடித்தமானதாக இருக்குமென உறுதியாகக் கூற முடியாது. ஆனால், சில பொருள்கள் எல்லோருக்குமே பிடிக்கும். அந்த வகையிலான ஒன்றுதான் உதகையின் தனிச்சிறப்பான வர்க்கி. இது  ஆங்கிலேயர் காலத்தில் உதகையில் அறிமுகப்படுத்தப்பட்டதாக இருந்தாலும், இன்னமும் அதன் சுவை, குணம் மாறாமலிருப்பது தனிச்சிறப்பாகும்.

உதகைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ஊட்டி வர்க்கியை வாங்காமல் சென்றால், அவர்களின் பயணம் முழுமை பெறாது. நீலகிரிக்கு ஆங்கிலேயர்கள் வந்த பின்னர், 'பேக்கிங்' உணவுப் பொருள்களை அதிகளவில் தயாரித்து உட்கொண்டனர். அதில்  ரொட்டி, பிஸ்கட், பன் மற்றும் குக்கீஸ் வகையான நொறுக்குத் தீனிகள் முக்கிய இடத்தைப் பிடித்திருந்தன. ஆங்கிலேயர்கள் தயாரித்த குக்கீஸ் வகைகளை, இங்குள்ளவர்கள் 'குக்கி' என அழைத்துள்ளனர்.

இந்நிலையில் அந்த நொறுக்கு தீனிகளுக்கு மாற்றாக, சற்றே மொறுமொறுவென, ஒரு தின்பண்டத்தை உள்ளூர் மக்களின் உதவியுடன்  உருவாக்கினர். இந்த தின்பண்டத்தை ஊட்டி குளிரில், தேநீர் அல்லது காபியில் தொட்டு உண்ட ஆங்கிலேயர் மகிழ்ச்சி அடைந்தனர். அதுவே ஊட்டி வர்க்கியாகும்.

இன்றைக்கும் நீலகிரி மாவட்டத்தில் வசிப்போரின் பெரும்பாலானோரின் வீடுகளில் எப்போதுமே தயார்நிலையில்  இருக்கும் ஒரு தின்பண்டம் என குறிப்பிட்டால் அது வர்க்கியைத்தான் குறிக்கும். இது வறவறவென இருந்ததால் அதை படகர் இன மக்கள் 'பரக்கி' என அழைத்துள்ளனர்.  நாளடைவில் இது வர்க்கியாக மாறிவிட்டது. விருந்தோம்பலுக்கு பெயர் பெற்ற படகர் மக்கள் வசிக்கும்  கிராமங்களுக்கு புதிதாக யார் சென்றாலும், அவர்கள் உணவு சாப்பிட்டு செல்ல வாய்ப்பில்லாவிட்டாலும், பாலில்லாத  வெல்ல காபியுடன் கண்டிப்பாக வர்க்கியைத் தருவார்கள். இதை சாப்பிவிட்டுதான் செல்ல வேண்டும். சுற்றுலாப் பயணிகள் அனைவரும் தவறாமலும், மறவாமலும் வாங்கிச் செல்லும் பொருள்களில் ஒன்றான இந்த ஊட்டி வர்க்கி இன்னமும் புவிசார் குறியீடுக்காக காத்திருக்கிறது.

உள்ளங்கை அகலத்தில், பொன்னிறத்தில், மெல்லிய அடுக்கடுக்கான வரிசைகளுடன், பிரத்யேக வாசனையோடு, வாயில் கரையும்போதே மொறுமொறுப்பையும் லேசான இனிப்பையும் உணர வைக்கும் வர்க்கியை சுவைப்பதே அலாதியானது.  லேசான குளிர் காற்றில் சூடான டீயும்  அதைவிட சூடான மொறுமொறுப்பான வர்க்கியும் அனைத்துத் தரப்பு மக்களின் இதயத்தையும் கவர்ந்தவையாகும். மைதா, டால்டா மற்றும் நெய் கொண்டு வர்க்கி தயார் செய்யப்பட்டாலும், இதில் கலக்கும் ஈஸ்ட் மிக முக்கியம். மைதாவில் சர்க்கரை கலந்து 3 முதல் 4 நாட்கள் நொதிக்க வைத்து தயாரிக்கப்படும் ஈஸ்ட், வர்க்கியின் மாவுக்கு மிருதுத்தன்மையும், சுவையையும் அள்ளித் தரும்.  உதகையில் தயாராகும் வர்க்கியில் முட்டை சேர்க்கப்படாததால் இது வெஜிடேரியன் ரெசிபியாகும்.

புரோட்டா மாவு பதத்துக்குப் பிசைந்த மைதா மாவு, ஓரிரவு முழுதும் ஊற வைக்கப்பட்டு, மீண்டும் நன்கு பிசையப்பட்டு படிப்படியாக  வர்க்கி செய்யப்படுகிறது. இரவு முழுதும் எரிந்த விறகிலிருந்து கிடைக்கும் தணலில் சுமார் ஒரு மணி நேரம் நான்கு புறமும் வேக வைக்கப்படுவதால், மொறு மொறுப்பு குறையாமலும், வாயில் இட்டதும் கரையும் சுவையுடன் வருகிறது.

உதகையின் நீர்த் தன்மையும் விறகடுப்பும் அதன் தனிச்சுவைக்கு காரணம் எனவும் கூறலாம். மைதாவைப் பயன்படுத்த தயங்குபவர்களுக்காக தற்போது உதகையில் ஒரு சில கடைகளில் கோதுமை மாவில் தயாரிக்கப்படும் வர்க்கியும் கிடைக்கிறது.

செய்முறை: வர்க்கி தயாரிப்பதற்கு மைதா அல்லது  கோதுமை மாவு 1 கப்,   பிரெஷ் ஈஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன், சர்க்கரை -2 டேபிள் ஸ்பூன்,  உப்பு -1/2 டீ ஸ்பூன், எண்ணெய் -1 டேபிள் ஸ்பூன்,  வெண்ணெய் -2 டேபிள் ஸ்பூன் எடுத்துக்கொள்ள வேண்டும்.  

ஒரு பாத்திரத்தில் மைதா அல்லது கோதுமை மாவுடன், சர்க்கரை, உப்பு, பிரெஷ் ஈஸ்ட், எண்ணெய் மற்றும் வெண்ணெய் ஆகியவற்றை ஒன்றாக கலக்கவும். பின் தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்து கொஞ்சம் இளக்கமாக பிசையவும்.   பிசைந்த மாவை ஈரத் துணியால் மூடி வெப்பமான இடத்தில் அரை மணி நேரம் வைக்கவும். பின் மாவை எவ்வளவு மெலிதாக உருட்ட முடியுமோ அவ்வளவு மெலிதாக உருட்டி, அதன்மேல் வெண்ணெய்யுடன் லேசாக மைதா மாவை தூவி, அப்படியே கையால் நன்கு தேய்த்து வலது மற்றும் இடது பக்கமாக மடிக்க வேண்டும். மீண்டும் அதன்மேல் மறுபடியும் வெண்ணெய் மற்றும் மாவு ஊற்றி தடவ வேண்டும். ஒவ்வொரு மடிப்புக்கும் வெண்ணெய் மற்றும் மாவு தடவினால்தான் லேயராக வரும்.

ஓர் அங்குல தடிமன் அளவுக்கு தேய்த்து நீளவாக்கில் கத்தியால் வெட்டிய பின்னர்,   வெட்டிய நீளத்திலிருந்து சிறிது பிய்த்து எடுத்து அப்படியே வைக்கலாம் அல்லது சதுரங்களாகவும் வெட்டி வைக்கலாம். ஓவனை 180 டிகிரியில் வைத்து வர்க்கிகளை டிரேயில் பட்டர் பேப்பர் போட்டு அடுக்கி 25 முதல் 30 நிமிடங்கள் வரை வேக  வைக்க வேண்டும். பார்க்கும்போது வேகாத மாதிரி இருக்கும். ஆனால் ஆறியதும் மொறுமொறுப்பாக மாறிவிடும்.

உதகையின் பருவநிலை, இயற்கை எழில் கொஞ்சும் பூங்காக்கள்,  படகு இல்லங்கள், தொட்டபெட்டா மலைச்சிகரம், நீலகிரி தைலம், நீலகிரி தேன், உல்லன் ஸ்வெட்டர்கள், குதிரை சவாரி என பல்வேறு அம்சங்கள் இருந்தாலும், ஊட்டி வர்க்கி வர்க்கிதான். இதற்காகவாவது ஒருமுறை உதகைக்கு வந்து செல்லுங்களேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com