குற்றாலத்தை மறந்தாலும் மறக்க முடியாத பார்டர் கடை புரோட்டா

குற்றாலம் என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது குற்றாலம் அருவிகளும், இதமான சாரல்மழையும், மெல்லிய வெயிலும்தான். அடுத்ததாக அசைவ உணவுப் பிரியர்கள் அனைவரும் தேடுவது பிரானூர் பார்டர் புரோட்டா கடைதான்.
குற்றாலத்தை மறந்தாலும் மறக்க முடியாத பார்டர் கடை புரோட்டா

குற்றாலம் என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது குற்றாலம் அருவிகளும், இதமான சாரல்மழையும், மெல்லிய வெயிலும்தான். தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் குளித்து மகிழ்வது ஒரு சுகமான அனுபவம் என்றால் குளித்து முடித்தவுடன் அசைவ உணவுப் பிரியர்கள் அனைவரும் தேடுவது பிரானூர் பார்டர் புரோட்டா கடைதான்.

அப்படி என்னதான் இருக்கிறது என கேள்வி கேட்பவர்களுக்கு செங்கோட்டை பிரானூர் பார்டர் பகுதிக்கு சென்று விட்டாலே  தெரிந்துவிடும். கடையின் முன்பு நிலவும் வாகனங்களின் நெரிசலும், அப்பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடியும்.  குற்றாலம் சீசன் காலங்களில் கடையின் கதவை மூடி வைத்து, வாடிக்கையாளர்களை சாப்பிட உள்ளே அனுப்பும் அளவிற்கு கூட்டம் காணப்படும்.

அதிலும் விடுமுறை நாட்கள்,  சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கூட்டத்தை கேட்கவே வேண்டாம். ஒரு வழியாக கடைக்குள் சென்று இருக்கையை தேடிக் கண்டுபிடித்து அமர்ந்துவிட்டால் நமக்கு எப்பொழுது புரோட்டா, சிக்கன் கிடைக்கும் என்ற அளவிற்கு சிக்கன் வாசனை மூக்கை துளைத்து வாயில் எச்சில் ஊற வைத்துவிடும்.

இந்த பகுதியில் பல புரோட்டா கடைகள் இருந்தாலும் பார்டர் ரஹ்மத் புரோட்டா கடையில் மட்டுமே இந்த கூட்டம் காணப்படும்.  காலையில் 11 மணிக்கு கடை செயல்படத் தொடங்கி இரவு 11 மணி வரை செயல்படுகிறது. காலை முதல் இரவு வரையிலும் புரோட்டா தடையின்றி கிடைக்கும்.

மதியம் மட்டன் பிரியாணி கிடைக்கும். பிரியாணி மதியம் 12 மணி முதல் 3 மணி வரை மட்டுமே கிடைக்கும்.  சிக்கன், காடை போன்றவை இரவு நேரம் செல்லசெல்ல காலியாகிவிடும். எனவே முன்கூட்டியே செல்பவர்களுக்கு மட்டுமே சிக்கன், காடை போன்றவை கிடைக்கும்.  வழக்கமாக மற்ற கடைகளைப் போன்று இல்லாமல் இக்கடையில் உள்ள புரோட்டா சற்று சிறிய அளவில் பொன்னிறத்துடன், ஆங்காங்கே லேசாக தீய்ந்தும் மிருதுவாகவும் காணப்படும்.

புரோட்டக்களில் கொத்து புரோட்டா,  சிக்கன்கொத்து புரோட்டா,  வீச்சு புரோட்டா, முட்டை கொத்து புரோட்டா உள்பட பல்வேறு புரோட்டா வகைகள் கிடைக்கும்.  புரோட்டாவிற்கு வழங்கப்படும் குழம்பு இப்பகுதியில் சால்னா என்றழைக்கப்படுகிறது.  சிக்கன் சால்னா, உரப்பு இல்லாத சால்னா, உரப்பு சால்னா போன்றவை புரோட்டாவிற்கு குழம்பாக வழங்கப்படுகிறது.

இங்கு பிராய்லர் கோழி அறவே கிடையாது.  இங்கு சமைக்கப்படும் கோழிகள் முழுவதும் நாட்டுக்கோழி மட்டுமே. மேலும் சிக்கன், காடை மட்டுமே கிடைக்கும்.  சிக்கன்65,  பெப்பர் சிக்கன், ஆம்லெட் வகைகள் கிடைக்கும். மட்டன் கிடையாது.

குற்றாலம் அருவிகளில் குளித்து முடித்து விட்டு ஈர உடையுடன் தங்களுடைய வாகனங்களில் இங்கு வருகை தரும் சுற்றுலாப்பயணிகள் புரோட்டா மற்றும் சிக்கனை மிகவும் விரும்பி உண்கின்றனர். இந்த கடைக்கு ஒரு முறை வருகை தரும் சுற்றுலாப்பயணிகள் அடுத்த முறை குற்றாலம் வரும்போது இந்த கடைக்கு சென்று புரோட்டா, சிக்கனை சாப்பிடாமல் திரும்புவதில்லை.

செங்கோட்டை பகுதி கேரளத்துடன் இணைந்திருந்தபோது இப்பகுதி கேரள- தமிழக எல்லையின் பார்டராக இருந்தது. இதனால் இப்பகுதிக்கு பிரானூர்பார்டர் என்ற பெயர் ஏற்பட்டது. இப்பகுதியில் அதிகளவில் மர அறுவை மில்கள் உள்ளது.  லாரிகளில் மரங்களை ஏற்றுவது, இறக்குவது என அதிகளவில் தொழிலாளர்கள் இருந்தனர். மேலும் லாரி டிரைவர்களும் அதிகளவில் இந்த புரோட்டா கடையில் சாப்பிட்டுவிட்டு இதுகுறித்து பல்வேறு இடங்களில் தங்களுடைய கருத்துகளை தெரிவித்தனர்.

மேலும் குற்றாலத்திற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்து சாப்பிட்டு விட்டு இதுகுறித்து தங்களுடைய நண்பர்களிடம் தெரிவித்ததையடுத்து தமிழகம் முழுவதும் இந்த கடை பிரபலமானது.

இதனால்  இந்த உணவிற்கு தமிழகம், கேரளம் மட்டுமின்றி வெளிநாடுகளிலிருந்து குற்றாலம் வருகை தரும் சுற்றுலாப் பயணிகளும் வாடிக்கையாளர்களாக உள்ளனர். மேலும் இப்பகுதியில் படப்பிடிப்பிற்காக வருகைதரும் நடிகர், நடிகைகளும் புரோட்டா, சால்னாவை விரும்பி வாங்கி சாப்பிடுவதுண்டு.

கடந்த 48 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகம் முழுவதும் மிகவும் பிரபலமாக விளங்கி வரும் பார்டர் ரஹ்மத் புரோட்டா கடை உரிமையாளர் மு.சேக்அப்துல்லாவிடம் கேட்டபோது, எங்களுடைய கடையில் சுடச்சுட மட்டுமே உணவுப் பொருள்கள் பரிமாறப்படுகிறது. முதல் நாள் இருப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை.  உணவு தயாரிக்க பயன்படுத்தும் மசாலா பொடிவகைகள் அனைத்தையும் நாங்களே சொந்தமாக தயாரிக்கிறோம். சுத்தமாகவும்,  சுகாதாரமாகவும்,  தரமாகவும் உணவு வகைகளை வழங்க வேண்டும் என்ற நோக்கோடு செயல்பட்டு வருகிறோம். மக்கள் எங்கள் கடையின் மீது வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்றுவதற்காக கூடுதல் கவனத்துடன் செயல்பட்டு கடைகளை நடத்தி வருகிறோம்.

சென்னையில் இரண்டு இடங்களிலும், கோயம்புத்தூரில் ஒரு இடத்திலும் எங்களுக்கு கிளைகள் உள்ளது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com