உடன்குடியும் பனை பொருள்களும்

உடன்குடியில் கருப்பட்டி, கல்கண்டு, சில்லுக்கருப்பட்டி, பனை பொருள்கள், விசிறி உள்ளிட்ட பனைமரத்திலிருந்து தயாரிக்கப்படும் மதிப்புக்கூட்டுப் பொருள்கள் பிரபலமானவை. 
உடன்குடியும் பனை பொருள்களும்

'யானை இருந்தாலும் ஆயிரம் பொன்; இறந்தாலும் ஆயிரம் பொன்' என கேள்விபட்டிருக்கிறோம். அதுபோல்தான் பனைமரம் இருந்தாலும் ஆயிரம் பொன்; இறந்தாலும் ஆயிரம் பொன்.. தமிழ்நாட்டின் மாநில மரம் என்று சிறப்பைப் பெற்றுள்ள பனைமரம் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் மிக அதிகமாககாணப்படுகிறது. குறிப்பாக கிழக்கு கடற்கரையோரம் அதிக அளவில் காணப்படுகிறது.  உடன்குடி கருப்பட்டிச் சந்தையில் மகத்துவம் வாய்ந்ததாக உள்ளது. 

கருப்பட்டி, கல்கண்டு, சில்லுக்கருப்பட்டி, கள், விசிறி இவையெல்லாம் பனைமரத்திலிருந்து தயாரிக்கப்படும் மதிப்புக் கூட்டுப் பொருள்கள். பனை பொருள்கள் அனைத்தும் இப்பகுதியில் பிரபலமானவை. 

கல்கண்டு தயாரித்தல்

பனைமரத்தில் ஆண் பனை, பெண் பனை என்ற வகைகள் உண்டு. இரண்டும் பதநீர் தரும். ஆனால் ஆண்பனையில்தான் அதிகம் பதநீர் வரும். நீண்ட தண்டுபோல் காட்சியளிக்கும் பாலை என்றழைக்கப்படும் பகுதியின் நுனியைச் சீவி அதிலிருந்து வடியும் பதநீர் ஒரு கலயத்திற்குள் விழுவதுபோல் அமைக்கப்பட்டிருக்கும். காலையில் ஏறி கலயத்தில் உள்ள பதநீரை இறக்கிவிட்டு கலயத்திற்குள் சுண்ணாம்பு தடவி மீண்டும் அந்த பாலையைச் சீவி அதன் நுனியை கலயத்திற்குள் அமையுமாறு வைத்து கட்டிவிடுவார்கள்.

மாலையில் ஒருமுறை ஏறி அத்தண்டினை இடுக்கி என்ற கருவியால் நைத்துவிட்டு வருவார்கள். பதநீர் சொட்டு சொட்டாக கலயத்திற்கு சேகரமாகும். மறுநாள் காலை அதை இறக்கி பெரிய டாங்கியில் வடிகட்டி அதைக் காய்ச்சுவார்கள். வெப்பத்தில் பதநீர் கொதித்து முறையடித்துக் கொண்டு வரும்போது ஆமணக்கு விதைகளை நசுக்கி அதை தண்ணீரில் கூழ்மமாக்கி அதை டாங்கியினுள் போடும்போது கொதிநிலை அடங்க மீண்டும் டாங்கியில் பதநீர் வற்ற வைக்கப்படும். குறிப்பிட்ட பருவம் வந்தவுடன் அதை இறக்கி மண்ணுக்குள் உள்ள பானையில் ஊற்றிவைத்துவிடுவார்கள். இதில் கொரண்டு என்ற ஒருவகையான காட்டுச்செடியை அமிழ்த்தி வைப்பார்கள். 40 நாட்களுக்கு பிறகு அந்த காய்ச்சிய பதநீர் கல்கண்டாக மாறும். அதை பிரித்தெடுத்து நல்ல வெயிலில் காயவைத்து சாக்கில் அடைத்து விற்பனைக்கு வரும். 

கருப்பட்டி தயாரித்தல்

கல்கண்டு தயாரித்தலைப் போலவேதான். ஆனால் கருப்பட்டிக்கு என்று ஒரு பருவம் இருக்கிறது. அதைக் கவனமாக கையாண்டு பருவம் வந்தவுடன் அதை செதுக்கிய பனைமட்டையால் நன்றாகக் கிளறிவிடுவார்கள். கிளற கிளற அந்த பாகுநிலையில் உள்ள பதநீர் இன்னும் கொஞ்சம் கட்டியாகி, பின்னர் அருகில் வரிசையாக அடுக்கப்பட்ட சிரட்டையில் ஊற்றிவிடுவார்கள். மீண்டும் 1 மணிநேரம் கழித்து அந்த சிரட்டைய எடுத்து தட்டிப்பார்த்தால் அது கருப்பட்டியாக வெளியில் வரும்.

வெள்ளைக் கருப்பட்டி, சில்லுக்கருப்பட்டி தயாரித்தல்

காலையில் கொண்டுவரும் பதநீரை இரண்டு அல்லது 3 மணி நேரங்கள் தெளியவைத்து பின்னர் சலிப்புத்தன்மை வரும் வரையில் காத்திருந்து வந்த பின்னர் அதை மீண்டும் மண்டி இல்லாமல் தெளித்து காய்க்கும்போது நமக்கு வெள்ளைக்கருப்பட்ட் என்ற சில்லுக்கருப்பட்டி கிடைக்கும். ஏலக்காய், சுக்கு இரண்டையும் நன்றாக இடித்து மாவுபோல் மாற்றி அதை காய்ச்சிய பதநீருக்குள் விட்டு நன்றாக கிளறி தயாரிக்கும் இந்த சில்லுக்கருப்பட்டி குழந்தைகளின் பிடித்தமான தின்பண்டமாகும். இப்போதிருக்கிறதே டெய்ரிமஜில்க்.. 5 ஸ்டார் எல்லாம் பல்டி அடித்துவிடும் இந்த சில்லுக்கருப்பட்டி முன்.

கள் தயாரித்தல்

சுண்ணாம்பு தடவாத கலயத்தை பாலைகளில் கட்டிவிடுவார்கள். அதில் சேரும் பதநீரை இறக்கி இரண்டு நாட்கள் அப்படியே வைத்துவிட்டு, அந்த பதநீரைக் கொட்டிவிடுவார்கள். இப்போது அக்கலயத்திற்குள் பதநீரின் மண்டி இருக்கும். மீண்டும் இதே கலயத்தை பதநீர் தரும் பாலையில் கட்டும்போது நமக்கு கள் கிடைக்கிறது. அப்படி கிடைக்கும் அந்தக்கள்ளை வெயிலில் வைக்கும்போது அது முறையடித்துக்கொண்டு விளைந்து அசல் கள்ளாக மாறும். ஒரு தம்ளர் குடித்தால் போதும். உடல்நலத்திற்கு நல்லது. மீண்டும் கள் தயாரிக்கும் போது கள்ளில் சிறுபகுதியை சேர்த்தால் போதுமானது. எப்படி தயிர் தயாரிப்போம் உறைமோரைக் கொண்டு அதைப்போலவே..

பனை தொழிலாளர்களும் ஊதியமும்

உலக உணவு நாளில் பனை தொழிலாளர்கள் குறித்தும் தெரிந்துகொள்வோம். பனையேறும் தொழிலாளர்கள் பல இன்னல்களை எதிர்கொள்வார்கள். பனைமரத்தில் ஏறும்போது மார்புக்கூடு புண்ணாகிவிடும். அதற்குரிய கருவி அணிந்திருப்பார்கள். காலில் வளையம்போல் மாட்டிக்கொண்டு ஏறுவார்கள். அவர்களுக்கு ஊதியம் என்பது ஒருநாள் பதநீர் முழுவதும் அவர் கணக்கில் வரும். இன்னொரு நாள் பதநீர் அவருக்கு தேவையான சாப்பாடு, பனைமரத்திற்கு கொடுக்கும் பணம், தங்குமிடம் மற்ற செலவுகளுக்கு கழித்துக்கொள்ளப்படும். சீசனின் இறுதியில் அவர் தந்த பதனீர் கணக்கிடப்பட்டு ரூபாய் வழங்கப்படும். பாதி பதநீர் அவருடைய ஊதியம். மீதிப்பாதி அவரின் இதர செலவு, உரிமையாளரின் இலாபம் உள்ளிட்டவை அடங்கும். பனை ஏறுவதற்கு உரிய அனைத்து கருவிகளும் அவர்களுக்கு பனையின் உரிமையாளர்களே வழங்க வேண்டும். அருகருகே இருக்கும் பனைகளில் மேலிருந்தே தாவி அடுத்த பனை வழியாக இறக்கும் தொழிலாளர்களும் உண்டு.

இதுகுறித்து கொம்மடிக்கோட்டை எஸ்.எஸ்.என்.அரசு மேல்நிலைப்பள்ளி, பட்டதாரி ஆசிரியர் மு.பாலகிருஷ்ணன் கூறுகையில், பனை மற்றும் பனைத் தொழிலைப் பாதுகாக்கும் வகையில் தமிழக அரசு திட்டம் வகுத்துள்ளது வரவேற்கத்தகது. நசிந்து வரும் பனைத்தொழிலை ஊக்குவிக்க அனைவரும் பனை சார்ந்த பொருள்களை அதிகம் பயன்படுத்திட வேண்டும்.  பனை பொருள்கள் விற்பனை சந்தைகள் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் அமைக்க வேண்டும். பனை தொழிலில் ஈடுப்படும் தொழிலாளர்களுக்கு சீசன்  இல்லாத நாள்களில் அரசு உதவிதொகை வழங்கிட வேண்டும்.  முன்பு போல் அனைத்து பகுதியிலும்பனை ஏறும்தொழில் வலுபெறவும்,  பனை யில் கிடைக்கும்பொருள்கள் பயன்பாடு அதிகரிக்கவும் செய்ய வேண்டும். அனைவரும் தேனீர், உள்ளிட்டவைக்கு சீனியை தவிர்த்து  கருப்பட்டியை பயன்படுத்திட வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com