மாமியார் தினத்தை எப்படிக் கொண்டாடலாம்?

வயதில் பெரியவர். தாய்க்கு நிகரானவர். எனவே, மாமியார் நாளில், அவரை மகிழ்ச்சியாக வைத்திருக்க சில சின்ன சின்ன யோசனைகளைத்தான் சொல்லப் போகிறோம். மனதிருந்தால் மார்க்கம் உண்டு.
மாமியார் தினத்தை எப்படிக் கொண்டாடலாம்?
மாமியார் தினத்தை எப்படிக் கொண்டாடலாம்?

மாமியார் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. ஒரு வேளை நீங்கள் மருமகளாக அல்லது மருமகனாக இருந்தால், இந்த நாளை கொண்டாடத் திட்டமிடலாம்.

மாமியார் - மருமகள் என்றாலே எதிரும் புதிரும் என்ற பார்வை தற்போது மாறி வருகிறது. பல வீடுகளில் மாமியார் - மருமகள் எல்லாம் தோழிகளைப் போல பழகும் போக்கும் அதிகரித்துவிட்டது. 

அதே வேளையில், என்னங்க கிண்டலா? மாமியார் தினம் என்பதே அதிர்ச்சியாக இருக்கிறது? இதில் மாமியார் தினத்தைக் கொண்டாட யோசனை வேறு கொடுக்கிறீர்களா என்று எங்கள் மீது கோபக் கனலை வீசுபவர்களும் உண்டு.

மாமியார் என்பவர் உங்களுக்குப் பிடித்தவராக இருந்தாலும் இல்லையென்றாலும், உங்கள் வாழ்க்கைத் துணையின் தாய். எனவே, அவர்தான் உங்கள் மாமியார்.. அதை மாற்ற முடியாது. அவரும் கொண்டாடப்பட வேண்டியவர்தான்.

மாமியார் தினத்தைக் கொண்டாடுவது என்றால் ஏதோ மண்டபத்தை வாடகைக்குப் பிடித்து நூறு பேருக்குச் சொல்லி செய்யப்போவதில்லை. உங்கள் மாமியாருடன் இருக்கும் சில சின்னச் சின்ன பிணக்குகளை கூட்டிக் கழித்து பூஜ்யமாக்கும் ஒரு நாளாகக்கூட இதை நீங்கள் மாற்றிக் கொள்ளலாம்.

வயதில் பெரியவர். தாய்க்கு நிகரானவர். எனவே, மாமியார் நாளில், அவரை மகிழ்ச்சியாக வைத்திருக்க சில சின்ன சின்ன யோசனைகளைத்தான் சொல்லப் போகிறோம். மனதிருந்தால் மார்க்கம் உண்டு.

உங்கள் மாமியாருடன் அடிக்கடி போனில் பேசுவரோ இல்லையோ, மாமியார் தினத்தன்று அவருக்கு போன் செய்து நலமா என்று விசாரியுங்கள். அவரது நாள்கள் எப்படிச் செல்கின்றன என்று கேளுங்கள். அவருடன் சில மணித் துளிகளாவது பேசுங்கள். அவர் பேசுவதை காது கொடுத்துக் கேளுங்கள். சில முதியவர்களுக்கு பேச்சுத் துணைதான் பெரும் தேவையே. அடிப்படையில் அதை நிறைவு செய்வதே போதுமானது.

கூடுதலாக, இன்று உங்கள் நினைவு வந்ததாக அவரிடம் சொல்லுங்கள். அவருடன் நீங்கள் பெற்ற ஒரு அனுபவத்தை, அவருடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இதைச் செய்தாலே போதும்.. ஒரு குறைந்தபட்ச மாமியார் தினத்தைக் கொண்டாடியதாகக் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். உங்கள் கணக்கில் வரவு வைத்துக் கொள்ளலாம்.

அதற்கும் மேல், ஏதேனும் செய்ய நினைத்தால், ஒரு வேளை புதிய மருமகளாக / மருமகனாக இருக்கும்பட்சத்தில், 

மாமியாருக்குப் பிடித்த பரிசுபொருள் ஏதேனும் ஒன்றை வாங்கிப் பரிசளிக்கலாம். அவரை பெருமைப்படுத்தி நாலு வார்த்தை வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸில் வைக்கலாம். அவருடன் நேரத்தைப் பகிர்ந்து கொள்ளலாம். வெளியில் சென்று உணவருந்த அழைக்கலாம். தினமும் சமைப்பவராக இருந்தால், ஒருநாள் ஓய்வு கொடுத்து சமைக்கலாம் அல்லது வெளியிலிருந்து உணவை வரவழைத்துக் கொடுக்கலாம்.

மாமியார் உங்களுடன் இருந்தால், அவருக்கு மிகவும் பிடித்த உறவினர் அல்லது நண்பரை, வரவழைத்து இன்ப அதிர்ச்சிக் கொடுக்கலாம். 

அவருக்கு மிகவும் பிடித்த கோயிலுக்கு அழைத்துச் செல்லவோ, அழைத்துச் செல்ல முடியாவிட்டால், அங்கிருந்து கோயில் பிரசாதத்தையோ வரவழைத்துக் கொடுக்கலாம்.

வெகு நாளாக அவருக்குத் தேவை என்று சொல்லிக் கொண்டிருக்கும் ஒரு விஷயத்தை பூர்த்தி செய்யலாம், முயற்சிக்கலாம், பூர்த்தி செய்வதாக வாக்குக் கொடுக்கலாம். 

எப்படியாகினும்.. கொண்டாட்டமோ, கொண்டாடவோ பெரிதாக எதுவும் தேவையில்லை. மனதார வாழ்த்தி, அவரது வாழ்த்துகளைப் பெற்றுக் கொண்டாலே போதும். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com