தனிக்குடித்தனத்தால் மாமியார் - மருமகள் உறவு சீர்குலைகிறதா?

ஒரு காலத்தில் மாமியார் - மருமகள் என்றால் எலியையும் பூனையையும் உதாரணமாக காட்டுவர். ஆனால் நவீன காலத்தில் அவர்களுக்கு இடையிலான உறவு பிணைப்புத் தரும் வகையிலான உறவைத் தருவதாக மாறி வருகிறது. 
தனிக்குடித்தனத்தால் மாமியார் - மருமகள் உறவு சீர்குலைகிறதா?

ஒரு காலத்தில் மாமியார் - மருமகள் என்றால் எலியையும் பூனையையும் உதாரணமாக காட்டுவது வழக்கம். ஆனால் நவீன காலத்தில் அவர்களுக்கு இடையிலான உறவு பிணைப்புத் தரும் வகையிலான உறவைத் தருவதாக மாறி வருகிறது. இந்த உறவு எப்படி இருக்க வேண்டும் என்று கூறுகிறார் தமிழியல் ஆய்வாளர் முனைவர் இரா. அறிவழகன்.

மாமியார்-மருமகள் உறவு என்பது தொலைக்காட்சித் தொடர் தொடங்கி சமூக வலைதளங்கள் வரை சிக்கலானதாகவே கருதப்படுகின்றது. அவ்வாறு சித்தரிக்கப்படுகிறது என்றில்லாமல் பல குடும்பங்களில் அவ்வாறாகவே இருந்து விடுவதும் உண்மை. இதற்கு என்ன காரணம்? தமிழ் சூழலில் தொடக்கம் முதலே அவ்வாறு இருந்து இருக்கிறதா? பெரும்பாலான குடும்பங்களில் மாமியார்கள் மற்றும் மருமகள்களுக்கு இடையான பூசல்களுக்கான காரணம் என்ன என்பது விடைதெரியாத வினாவாகவே தொடர்கிறது.

தமிழர் பண்பாட்டு விழுமியங்களில் முக்கியமானது குடும்பம் என்றால் மிகையாகாது. மதிப்புமிக்க தமிழர் குடும்பங்களின் இன்றைய சூழல் பொருளாதாரத் தேடலை நோக்கிய நகர்புறமயமாக்கம் ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து செல்ல முடியாத தனிக்குடும்பமயமாக்கம் போன்றவற்றால் சீர்குலைந்துள்ளது எனலாம். இருபது முப்பது ஆண்டுகளுக்கு முன்னதாக கூட்டுக் குடும்பம் எனும் ஒரு சமூக அமைப்பு தமிழ் சமூகத்தில் பெரும்பான்மையாக இருந்தது. எல்லாவற்றையும் நிர்வகிக்கும் அந்த கூட்டுக் குடும்பத்தின் மூத்த மருமகள் அல்லது மாமியார் மிகச் சிறந்த குடும்பத் தலைவியாக விளங்கி வந்தனர். 

தமிழியல் ஆய்வாளர் முனைவர் இரா. அறிவழகன்
தமிழியல் ஆய்வாளர் முனைவர் இரா. அறிவழகன்

விழாக்களுக்கு உடைகள், அணிகலன்கள் வாங்குவது மட்டுமல்லாமல் செய்து வைத்த உணவுப்பண்டங்களைப் பகிர்ந்து தருவது உள்பட எல்லாப் பணிகளும் சிறப்பாகவும் முறையாகவும் நடந்து வந்தது. அவசரகதியில் முடிவு செய்யாமல் எல்லாவற்றையும் நிதானமாக யோசித்து முடிவு செய்யும் இடத்தில் பெண்கள் இருந்து செய்து வந்தனர். பாரம்பரிய தமிழ் சமூக அமைப்பான தாய்வழிச் சமூகத்தின் எச்சமாகவே அந்த நிகழ்வுகள் கருதப்பட்டன.

கூட்டமாக வாழ்ந்த கூட்டுக் குடும்பத்திற்குள் பெரிய வசதிகள் ஏதும் இல்லாத சூழலிலும் மிகச் சிறப்பான வாழ்வு இருந்து வந்ததை பலர் கூறக் கேட்டிருக்கிறோம். ஒவ்வொரு நாளும் விழாக்கள் போன்று 25க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் வாழ்ந்துவந்த வீடுகளுக்கான செய்திகள் இன்றைய காலத்தில் மிகப்பெரிய வியப்பைத் தருகின்றன. அது எப்படி முடியும் சுதந்திரமாக வாழ முடியாது அது எல்லாம் சரிப்பட்டு வராது? என்கிற எண்ணம் இன்றைய சூழலில் எல்லோர் மனதிலும் இருந்து வருகிறது. ஆனால் அவ்வாழ்வை வாழ்ந்தவர்கள் கூறும் செய்திகள் மனதிற்கு நெகிழ்ச்சியையும் அன்புப் பரிமாற்றத்தின் முயற்சியையும் அழகாகக் காட்டுகிறது.

அதை ஏன் இழந்தோம்? எப்படி இழந்தோம்? என்று யோசிக்கிற போது சுருங்கிப்போன மனித மனங்கள் தன் பெண்டு தன் பிள்ளை என்ற வட்டத்திற்குள்ளாக மாறிய பொழுது அந்த கூட்டுக் குடும்ப முறை எனும் ஒரு சிறப்பு வாய்ந்த அந்த முறை காணாமல் போனது.

அறிவியல் யுக வாழ்வு அவசரகதியில் சென்று சகோதரப் பாசம், பெற்றோர் பாசம் போன்றவற்றைப் பற்றிய யோசனை கூட இல்லாது நகர்ந்துகொண்டிருக்கிறது. எங்கங்கோ தூர தேசத்தில் இருப்பவர்களோடு தொடர்புபடுத்திக்கொள்கிற வாழ்வு நம்மோடு பிறந்தவர்களோடு நாம் பெற்றோர்களோடு காட்ட முடிவதில்லை என்பது ஆச்சரியம் கலந்த உண்மை. இது போன்ற காரணங்கள்தான் மாமியார்-மருமகள் போன்ற உறவு நிலைகள் சீர்குலைவதற்கு அடிப்படையாக அமைந்துவிட்டது.

கூட்டுக்குடும்ப முறையில் வளராது தனிக் குடும்பச் சூழலில் வளர்ந்த பெண்களே மாமியாரை அனுசரித்துக்கொள்ளாத புரிந்துகொள்ளாத மருமகளாக இருக்கிறார்கள். 'கூடி வாழ்ந்தால் கோடி நன்மை' என்ற பழமொழி சமூகத்திற்கு மட்டுமல்லாது குடும்பத்திற்கும் தேவை என்பது இன்றைய தலைமுறை மருமகள்களுக்கு புரியாமலேயே இருக்கிறது. இந்த மாதிரியான பெண்கள் தன் தாய் சொல்வதையே ஏற்றுக்கொள்வதில்லை என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

இக்கால பெண்கள் வாழ்வை சுதந்திரமானதாகவும் தனியாகவும் இருக்க வேண்டும் என விரும்புகிறார்கள். நல்ல நல்ல உடைகளை அணிந்துகொள்வது, அடிக்கடி உணவு விடுதிகளுக்கு சென்று சாப்பிடுவது, திரையரங்கிற்கு செல்வது, மால்களுக்கு சென்று வருவது போன்ற செயல்பாடுகளே வாழ்வு என்று ஆழமாக நம்புகிறார்கள். எல்லாவற்றையும் நாம்தான் செய்ய வேண்டும், யாரும் தலையிடக் கூடாது என்பதையே சுதந்திரமான வாழ்வு சிறந்த வாழ்வு என அவர்கள் கருதுகின்றனர். இவ்வறான சுதந்திர வாழ்விற்கு மாமியார் தொந்தரவாக இருப்பார் என்பதை ஆழமாக நம்புகின்றார்கள். இதை இன்றைய ஊடகங்கள் அவர்கள் மனதில் மிக ஆழமாக பதியவும் வைத்துவிட்டன.

வரவுக்கு தகுந்தவாறு செலவு செய்ய வேண்டும். அடிக்கடி உணவு விடுதிகளுக்கு சென்று சாப்பிடுவது உடல் நலத்திற்கு தீங்கானது. அதிகாலை எழுந்து சரியான நேரத்தில் உறங்கச் செல்ல வேண்டும். சில வழிபாடுகள் சில சடங்குகள் ஆகியவற்றை முறையாகவும் சரியாகவும் செய்ய வேண்டும் என்பன போன்ற பெரியவர்களின் அறிவுரைகளும் வாழ்வியல் முறைகளும் இன்றைய தலைமுறையினருக்கு பெரும் தொந்தரவாக தெரிகின்றன.

மாமியார் வீட்டில் இருந்தால் அதிகாலை எழவேண்டும், வாசலில் கோலம் போட வேண்டும் தனியாக இருந்தால் எப்போது வேண்டுமானாலும் எழுந்து கொள்ளலாம், சுதந்திரமாக இருக்கலாம் என்று சொல்கிற மருமகள்கள் பெருகிவிட்ட காலம் இது. மாமியார்கள் இல்லாததால் ஏற்படுகிற சில சங்கடங்களை வேண்டுமானாலும் பொறுத்துக்கொள்ளலாம். ஆனால் அவர்களோடு இருந்தால் நாம் சுதந்திரமாக இருக்க இயலாது என்று எண்ணுகிற அளவுக்கு அவர்களின் மனநிலை இருக்கிறது என்பதை கவனிக்க வேண்டும்.

இன்றைய மருமகள்களின் இவ்வாறான எண்ணங்களுக்கு காரணம் அவர்கள் மட்டுமல்ல. தன்னுடன் பிறந்தவர்களை தன் பெற்றோர்களை மதிக்கத் தெரியாத மதிக்காத ஆண்களின் மனைவிகளே மாமியார்களை மதிக்காதவர்களாக மாமியாரோடு சண்டை போடுபவர்களாக மாறி போயிருக்கிறார்கள் என்பது முற்றிலும் உண்மை.

இன்றைய ஊடகங்களால் வாழ்வியல் முறைகளால் மருமகள்கள் எனப்படுகிற இளம் தலைமுறையின் எண்ணங்களும் மனங்களும் இவ்வாறு மாறி இருக்கிறது என்றால், வயதில் மூத்தவர்களாக சென்ற தலைமுறை வாழ்வில் வாழ்ந்தவராக கருதப்படுகிற மாமியார்களின் மனநிலையும் இதே அளவிற்கு உள்ளது என்பதையும் கவனிக்க வேண்டும்.

மருமகள்களுக்கு கொஞ்சமும் சளைக்காமல் இக்கால மாமியார்களும் தங்கள் பங்குக்கு இவ்வுறவுகளுக்குள் பெரிய விரிசலை ஏற்படுத்தி இருக்கின்றன. மருமகள்களை கைக்குள்ளேயே வைத்துக்கொள்ள வேண்டும். கொஞ்சம் விட்டுவிட்டாலும் நம் பிள்ளைகளை நம்மிடமிருந்து பிரித்து விடுவாள் எனக் கருதும் மாமியார்கள் அதிகம். அதேபோன்று நான் திருமணமாகி வந்தபோது என் மாமியார் என்னை அப்படி இருக்க சொன்னார்கள், இப்படி இருக்க சொன்னார்கள் என்கிற அவர்களின் பழைய அனுபவங்களும் வலியும் அடுத்த தலைமுறையும் பட வேண்டும் என எண்ணுகிறார்கள்.

இவர்களில் இந்த மனமாற்றத்திற்கு இக்கால சமூக ஊடகங்களில் பங்கு அதிகமாக இருக்கலாம். புதிய வாழ்வியல் முறையை விரும்பி பழைய வாழ்வை வெறுத்திடும் மருமகள்களும் தம் பிள்ளைகள் சரியாக வாழ வேண்டும் என்கிற நோக்கத்திலோ அல்லது நான் வாழ்ந்த மாதிரி இவர்கள் வாழ வேண்டும் என்கிற ஆசையைத் இணைக்கின்ற மாமியார்களும் சேர்ந்து வாழமுடியாத சூழல் பெருகிவருகின்றன.

'மகள் தனிக்குடித்தனம் சென்றால் கெட்டிக்காரி, மருமகள் தனிக்குடித்தனம் சென்றால் கொடுமைக்காரி' என்கிற எண்ணம் இன்றைய வயது வந்த பெண்களிடம் அதிகமாக இருக்கிறது. தன் மகள் அவர்களின் கணவன் குடும்பத்தையும் பெற்றோர்களையும் பார்த்துக்கொள்வதை விரும்பாத அம்மாக்கள் அவர்களின் மருமகள்கள் அவர்களைப் பார்த்துக்கொள்ள வேண்டும் என விரும்புவது விந்தையே.  

குடும்ப வாழ்வியலில் மாற்றங்களை ஏற்படுத்தாது மனித மனங்களுக்குள் அன்பு, பாசம் போன்றவற்றை ஏற்படுத்தாது வாழ்வியல் என்பது எப்படி இருக்க வேண்டும் என்கிற புரிதல்களை கொண்டு வராது. இந்த உறவு நிலைகளில் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது. இவற்றை மாற்ற வேண்டுமெனில் தமிழ் சமூகப் பெண்களின் மனங்களுக்குள் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். மாறி மாறி குறை சொல்வது மட்டும் இதன் நோக்கம் அல்ல. நல்ல குடும்பச்சூழல் அமைய வேண்டும். அந்த குடும்பச் சூழலுக்குள் அடுத்த தலைமுறை வளர வேண்டும் என்பதே முக்கிய நோக்கம்.

தன் மருமகள் தன்னிடம் தன் குடும்பத்தாரிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என ஒரு மாமியார் எதிர்பார்கிறாரோ அதையே தன் மகளுக்கு சொல்லித் தரவேண்டும். தனக்கு தன் மாமியார்கள் தொந்தரவு செய்தபோது ஏற்பட்ட கோபத்தை, வருத்தத்தை நினைவில் கொண்டு அதை அடுத்த தலைமுறைக்கு செய்யக்கூடாது என்கிற எண்ணத்தை வளர்க்க வேண்டும். நம் வாழ்வு முடிந்துவிட்டது அடுத்த தலைமுறையின் வாழ்வு இப்படி இருக்கிறது. இதற்கு காரணம் இக்கால சமூக மாற்றமே என்பதை கருத்தில் கொண்டு, இதை நாம் சொல்வதால் சரி செய்ய முடியாது என்பதை உணர்ந்து சில விஷயங்களை அறிவுறுத்தி மட்டும் விட்டு விட்டு அவர்களை சுதந்திரமாக விட்டு விடலாம்.

மாறாக சில விஷயங்களை அறிவுறுத்தி தொந்தரவு செய்யும் போது அது அவர்களின் மேலான வெறுப்பாக வளர்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. லேசான அறிவுறுத்தல்களை செய்து கொஞ்சம் விலகி இருந்து அவர்களை கவனிக்கிறபோது அவர்களாகவே மாறுவதற்கோ அல்லது விழாக்காலங்களில் கூடி கொள்கிற வாய்ப்புக்கோ சாதகமாக அமையும். மாறாக அவர்களை மாற்றி விட வேண்டும் என்கிற வைராக்கியம் வெறுப்பை அதிகமாகி தொடர்பைத் துண்டித்து விடும்.

நிச்சயமாக பெரும்பான்மையான மாமியார்கள் மருமகள்களின் வாழ்வு கெட வேண்டும் என்பதற்காகவோ அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கக் கூடாது என்பதற்காகவோ சொல்ல மாட்டார்கள் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். ஆங்காங்கே சிலர் இருப்பார்கள், அதை பெரிதாக்கிக் கொண்டு எல்லோரும் அப்படித்தான் இருப்பார்கள் என்ற எண்ணத்தை தவிர்க்க வேண்டும்.
தன் தாயிடம் எப்படி நடந்து கொள்வாரோ அதேபோன்று தன் மாமியாரிடமும் மருமகள்கள் நடந்துகொள்ள வேண்டும். தன் ஆசைக் கணவனைப் பெற்று, வளர்த்து, படிக்க வைத்து நம்மிடம் தந்திருக்கிற அவர்களுக்கு தன் கணவனாகிய அவர்களின் மகன்தான் உரிய ஆதரவு. அவர்கள் அவர்களுடன் இருப்பதுதான் நல்லது என்பதை அவசியம் புரிந்துகொள்ள வேண்டும். தன் அம்மாவை விட்டுச் சென்ற அண்ணன் மேல் கோபம் வருகிற மருமகள்களுக்கு தனக்காக தன் கணவன் தவிக்க விட்டு வந்த மாமியார்களின் நினைவு இல்லாமல் போவதும் எப்படி என்று தெரியவில்லை.

சில குடும்பங்களில் தன் மகளுக்கு அறிவுரை சொல்கிறேன் என்ற பெயரில் அந்த மருமகள்களின் அம்மாக்களின் தவறான வழிகாட்டுதல்கள் இந்த  உறவை சிதைத்து விடுகின்றன.

இன்றைய மருமகள்களின் அம்மாக்கள், குடும்பத்திற்கான வாழ்வியல் முறைகள் ஆகியவற்றை சொல்லித் தந்து தன் மகள்களான அடுத்த குடும்பத்தின் மருமகள்களை  நெறிப்படுத்த முடியும். குறிப்பிட்ட அளவிற்கு மேல் அவர்களின் குடும்ப விவகாரங்களில் தலையிடாமல் அறிவுரைகளை மட்டும் சொல்வது நலம் பயக்கும்.

இன்றைய ஆண்களின் அதீத தாய் பாசமும் அளவுக்கதிகமான மனைவிக் காதலுமே மாமியார் - மருமகள் உறவு சிக்கல்களை வரவழைத்து விடுகின்றன.
குடும்பத் தலைவர்களாக விளங்குகிற ஆண்களும் அவர்களின் கடமைகளை உணர்ந்து குறிப்பிட்ட அளவுக்கு மேல் வீட்டுப் பெண்களின் பிரச்சனைகளில் தலையிடாது இருக்க வேண்டும். ஒருவருக்கு ஆதரவாக இருக்கிறேன் என்ற பெயரில் அடுத்தவர்களை காயப்படுத்தாது ஒருதலைபட்சமாக கருத்து சொல்லாது இருந்து விடுவது சிக்கல்களைத் தவிர்க்கும்.

ஒருவருக்கொருவர் ஒத்துணர்ந்து அடுத்தவர்களின் ஆசைகளையும் அன்பையும் புரிந்து வாழ்கிறபோது உறவுகள் வலுபெற்று வளமான குடும்பம் வலிமையான சமூகமும் உருவாகும் என்பது நிச்சயம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com