மாமியாரைச் சமாளிப்பது எப்படி?

மாமியாரை வெளிப்படையாக எதிர்க்கக்கூடாது. அது ஆபத்தில் போய் முடியும்...
மாமியாரைச் சமாளிப்பது எப்படி?

1. மாமியாரின் இயல்பான குணம் என்ன?

2. இயல்பான குணத்துக்கும் மாமியார்தனத்துக்கும் எவ்வளவு இடைவெளி?

இயல்பான பெண்மணி யார்?

முதலில் பார்க்கவேண்டியது, வீட்டில் ஆட்சி யார் கையில் இருக்கிறது என்பதைத்தான். உங்கள் கணவரின் ஆட்சி என்றால் பிரச்னை இல்லை. உங்கள் மாமனாரின் ஆட்சியாக இருந்தால் கொஞ்சம் சிக்கல். மாமனார் ஆட்சியில் மாமியார் பாதிக்கப்பட்டிருக்கலாம். அதாவது மாமனார் சொல்வதைக் கேட்டு அடங்கி நடந்திருக்கலாம். எத்தனையோ ஏமாற்றங்கள், ஏக்கங்கள், துக்கம், வேதனை போன்றவை அடக்கிவைக்கப்பட்டிருக்கும். மருமகளைப் பார்த்ததும் அந்தத் துக்கம் ஆழ்மனத்தில் இருந்து ஆர்ட்டீஷியன் ஊற்று போல் மேலே பொங்கி வரும். இந்த ஊற்று மருமகளைப் பதம் பார்க்காமல் விடாது.

பிரபாவதி வீட்டில் கணவர் ஆட்சிதான். கடுகு வாங்குவதாக இருந்தாலும் சரி ஃப்ரிட்ஜ் வாங்குவதாக இருந்தாலும் சரி. இவ்வளவு வேண்டும் என்று சமர்த்தாகக் கேட்டுவிட்டால் கேட்ட பணத்தை எண்ணி கொடுத்துவிடுவார் அவர். ஆனால் மொத்தப் பணத்தையும் கொடுத்து, பிரபாவதியை வீட்டு நிர்வாகத்தைக் கவனித்துக்கொள் என்று அவர் சொன்னதில்லை. அதை அவர் விரும்பவும் மாட்டார்.

ஒவ்வொரு விஷயத்துக்கும் அவரிடம் கை நீட்டி, பணம் வாங்குவது பிரபாவதிக்குப் பிடிக்கவே இல்லை. எப்படிச் செலவழித்தாய் என்ன வாங்கினாய், எங்கே வாங்கினாய், பேரம் பேசினாயா என்றெல்லாம் அவர் கேட்கும் ஆயிரத்தெட்டுக் கேள்விகளுக்குப் பதில் சொல்லி மாளாது. இத்தனைக்கும் பிரபாவதி பணத்தை வீட்டுக்காகத்தான் செலவு செய்திருப்பார். பிரபாவதிக்கு அழுகையும் கோபமுமாக வரும். ஆனால் பொதுவாக பெரும்பாலான ஆண்கள் இப்படிக் கணக்குக் கேட்பதையும், செலவுகளைக் குறைத்துக்கொள்ளச் சொல்வதையும் தங்களுடைய முக்கியப் பணியாக நினைக்கின்றனர்.

தன் கையில் பணத்தை வைத்துக் கொண்டு, தன்னை எல்லோரும் அண்டியிருக்க வேண்டும் என்று நினைத்தார் கணவன். அதனால் பிரபாவதிக்கு மருமகள் வரும் வரை அவள் கணவன் பொருளாதாரச் சுதந்தரத்தைக் கொடுக்கவே இல்லை. இந்த வலி அவருக்கு எப்போதும் இருந்துகொண்டே இருந்தது.

பிரபாவதிக்கு மருமகளைப் பார்த்ததும் குஷியாகிவிட்டது. 'இனி தான்தான் இந்த வீட்டின் எஜமானி, மருமகளை என் சொல்படி நடத்தலாம். கணவன் மீது காட்ட முடியாத கோபத்தை, எரிச்சலைக் காட்ட கல்யாணம் என்ற போர்வையில் ஓர் ஆள் கிடைத்தாள்' என்று நினைக்க ஆரம்பித்து விட்டார் பிரபாவதி. இதன் விளைவாக மாமியார் என்ற மிடுக்குடன் 'நீ அதைப் பண்ணு, இதைப்பண்ணு' என்று தன் கணவன் தன்னிடம் சொன்னது போல் தன் மருமகளிடம் சொல்ல பழகிக்கொண்டார் அவர்.

சரி, மாமனார் ஆட்சி என்றால்தானே பிரச்னை, மாமியார் ஆட்சி என்றால் பிரச்னை இருக்காது அல்லவா என்று நினைத்துவிடவேண்டாம். அங்கும் பிரச்னை இருக்கும். மாமியார் ஆட்சியில் இருக்கும் வீட்டில் உள்ளவர்கள், மாமனாரிலிருந்து பிள்ளைகள் வரை அவர் பேச்சைக் கேட்டுக்கொண்டிருப்பார்கள். எனவே மருமகளும் தன் பேச்சைக் கேட்க வேண்டும் என்று நினைப்பார் மாமியார்.

மாமியார் ஆட்சியில் இருக்கும் வீட்டில் புது மருமகள் கவனிக்க வேண்டியது இரண்டு முக்கியமான விஷயங்களை. வீட்டில் உள்ளவர்கள் மாமியாருக்கு அடிபணிந்து செல்கிறார்களா அல்லது அட்ஜஸ்ட் செய்துகொண்டு செல்கிறார்களா?

வீட்டில் உள்ளவர்கள் அட்ஜஸ்ட் செய்துகொள்கிறார்கள் என்றால் அவ்வளவாகப் பிரச்னை இல்லை என்று அர்த்தம். அதுவே அடிபணிந்து செல்கிறார்கள் என்றால் அந்த மாமியார் எல்லோரையும் கண்ட்ரோல் செய்பவர் என்று உடனே புரிந்துகொண்டுவிடலாம். கண்டிப்பாக மாமியார்-மருமகள் பிரச்னை வந்தே தீரும்.

இந்த விஷயங்களை ஆரம்பத்திலேயே நீங்கள் புரிந்துகொண்டுவிடவேண்டும். முதல் ஒரு மாதத்துக்கு இது மட்டுமே வேலையாக இருக்கவேண்டும். இது ஒரு ப்ராஜக்ட். இந்த ப்ராஜக்ட் முடியும் வரை எந்தப் பிரச்னையும் வரமால் பார்த்துக்கொள்ளுங்கள்.

இன்னொரு முக்கிய சமாசாரத்தையும் புரிந்துகொள்ளவேண்டும். உங்கள் மாமியாரிடமுள்ள குறைகளை மட்டுமே நீங்கள் கவனத்தில் எடுத்துக்கொள்ளவேண்டும் என்றில்லை. ஒருவரை எடைபோடவேண்டுமென்றால் அவருடைய நல்ல குணங்கள், துய குணங்கள் இரண்டையுமே ஆராய்ந்து பார்த்துவிடுவது நல்லது.

காந்தியைச் சுட்டுக் கொன்ற கோட்சேவிடம்கூட பல நல்ல விஷயங்கள் இருந்திருக்கின்றன. கோட்சே சிறந்த தேசபக்தன், ஹிந்து மதத்தின் மீது தீவிர பற்றுக்கொண்டவன், எழுத்தாளன். ஒரு பத்திரிகையின் ஆசிரியர்! ஒரு நாணயத்துக்கு இரண்டு பக்கங்கள் இருப்பது போல மனிதனுக்கும் இரண்டு பக்கங்கள் உண்டு. மாமியார் இதற்கு விதிவிலக்கு அல்ல.

உங்கள் மாமியார் பக்திமானாக இருக்கலாம்; பாட்டுப் பாடுபவராக இருக்கலாம்; டான்ஸ் ஆடத்தெரிந்தவராக இருக்கலாம்; ஊருக்கு உதவும் பரோபகாரியாக இருக்கலாம்; புத்தகங்கள் மீது ஆர்வம் கொண்டவராக இருக்கலாம்.

அவர் ஃப்ரீயாக இருக்கும் நேரம் பார்த்து பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு, ‘அப்புறம், சொல்லுங்க அத்தை!' என்று அவரைத் தூண்டிவிட்டு அவரைப் பற்றிய விஷயங்களைத் தெரிந்துகொள்ளவேண்டும். குறிப்பாக, மாமியாரின் நிறைவேறாத ஆசைகள் என்னென்ன என்பதை காது கொடுத்துக் கவனமாக மனதில் பதியவைத்துக்கொள்ளவேண்டும். கவனம். நிறைவேறாத ஆசைகள்தான் சிலரை நோயாளியாக மாற்றுகிறது; சிலரை மனநோயாளியாக மாற்றுகிறது; பலரை வில்லிகளாக மாற்றிவிடுகிறது.

0

அமலாவுக்கு நல்ல அடர்த்தியாக முடி இருந்தது. திடீரென்று டைபாய்டு ஜுரம் வர முடியெல்லாம் கொட்டி எலி வால் போல் ஆகிவிட்டது. பியூட்டி பார்லருக்குப் போய், முடியைக் குட்டையாகவும் ஒரே அளவாகவும் வெட்டிக்கொண்டு வந்தாள். அமலாவின் கூந்தலைக் கண்ட மாமியார் 'ஐயையோ! முடி போச்சே. இப்படியெல்லாம் பண்ணுவாளா ஒருத்தி?' என்று கத்த ஆரம்பித்துவிட்டார்.

'இது என் முடி, நான் கட் பண்ணறேன், வளர்க்கறேன், உங்களுக்கு என்ன?' என்று கேட்டுவிடலாமா என்று நினைத்தாள் அமலா. ஆனால் கேட்கவில்லை. அவள் மூளையில் ஒரு பல்ப் எரிந்தது.

ஒரு கத்தரிக்கோலையும் சீப்பையும் எடுத்துக்கொண்டு மாமியாரிடம் வந்தாள்.

'அத்தை, இங்க வாங்க. நானும் உங்களைப் பார்த்துட்டே இருக்கேன். இப்படியா மெலிசா, நீளமா சடையை வச்சிக்கிறது. உங்க ஃப்ரெண்ட் லஷ்மி ஆண்ட்டி எப்படி இருக்காங்க பார்த்தீங்க இல்லை. நானும் தெரியாமத்தான் கேட்கறேன். உங்களுக்கு அப்படி என்ன வயசாயிடுச்சி? ஏன் இப்படியே கவனிக்காம விடறீங்க. இங்க வாங்க.'

கையைப் பிடித்து இழுத்து உட்கார வைத்து, அவர் தலைமுடியின் அடிப்பகுதியை கத்தரிக்க ஆரம்பித்தாள் அமலா.

'ஐயையோ! இந்த வயசுல எனக்கெதுக்கு இதெல்லாம்? சின்னவ. நீ பண்ணிக்கலாம். '

வாய் மட்டும்தான் புலம்பியதே தவிர, தலையை வாட்டமாக மருமகளுக்குத் திருப்பிக்காட்டினார் மாமியார்.

'இதுல பெரியவங்க, சின்னவங்க வித்தியாசமெல்லாம் பார்க்க வேண்டாம் அத்தை. இருங்க, இந்த டையையும் போட்டு விடறேன்' என்று மாமியாரிடம் தன் திறமையைக் காட்டத் தொடங்கினாள் அமலா.

டை போட்டு, முடி வெட்டியதும் மாமியாரின் முகத்தில் சந்தோஷம் கலந்த வெட்கம். குடுகுடுவென்று ஓடிச்சென்று கண்ணாடி முன்னால் நின்று வெட்கத்துடன் தன்னைத்தானே பார்த்துககொண்டார். அமலாவின் கணவனே 'எங்கம்மா இவ்வளவு சந்தோஷப்பட்டுப் பார்த்ததில்லை' என்று சொன்னான்.

இன்னொன்று தெரியுமா? இப்போதெல்லாம் மாமியாரும் மருமகளுமாக ஜோடி போட்டுட்டு பியூட்டி பார்லர் கிளம்பி விடுகிறார்கள்!

0

மாமியாரிடம் உள்ள நல்ல குணங்களை, அவருடைய நிறைவேறாத கனவுகளை தெரிந்துகொள்வதைப் போலவே அவருடைய மறுபக்கத்தையும் நன்கு புரிந்துகொள்ளவேண்டும். மாமியார் வம்பு பேசுபவரா? ஏமாற்றுவாரா? வீட்டுக்குத் தெரியாமல் விஷயங்களை மறைப்பவரா? கோள் சொல்பவரா? அக்கம்பக்கத்தில் வம்பு செய்பவரா? மாமியாரின் கேரக்டரை தரோவாக ஒரு ஸ்டடி பண்ணுவது அவசியம். அப்போதுதான் மாமியாரின் பலம் என்ன, பலவீனம் என்ன என்று அக்கு அக்காகத் தெரிந்துகொள்ளமுடியும்.

0

உணவு நன்றாக இருந்தால் உறவு வலுப்படும்; உணவு சரியில்லை என்றால் உறவும் சீர்கெட்டுப்போகும். மாமியார் பிரமாதமாக சமைக்கக் கூடியவர் ஆனால் உங்களுக்குச் சமையலே தெரியாது என்றால் தானாகவே ஸ்கோர் மாமியாருக்குச் சென்று சேர்ந்துவிடும். மாமியாரின் கைப்பக்குவத்துக்குக் குடும்பமே அடிமைப் பட்டிருக்கும்போது நீங்கள் என்ன சொன்னாலும் அது எடுபடாது. இது போன்ற சமாசாரங்களில், மாமியாரின் உண்மையான பலத்தை ஏற்றுக்கொள்ளுங்கள். அவரை அங்கீகரிக்க மறந்து விடாதீர்கள்.

மாமியாரிடம் அன்பாக, பதமாகப் பேசிப் பழகி, அவருடைய சமையல் கலை நுணுக்கங்களைத் கொஞ்சம் கொஞ்சமாகக் கற்றுக்கொள்ளுங்கள். நாளடைவில் இருவருடைய சமையலும் ஒரே மாதிரி இருக்கும்போது மாமியாரின் ஆளுமை குறையும். வீட்டில் உள்ளவர்களுக்கும் சமையலில் மருமகளின் பங்கும் இருப்பது தெரிய வரும்.

0

‘வீட்டு வேலைகளை சரியா செய்யறதில்லே!'

* காபி தண்ணியாக இருக்கு.

* பாத்திரம் சரியாகத் தேய்க்கலை.

* துணியில் அழுக்குப் போகலை.

* பெருக்கும்போது அங்கே இங்கே தூசி இருக்கு.

* உணவில் சுவையே இல்லை.

இது போன்ற குறைகள் பெரும்பாலும் மருமகளை மட்டம் தட்டுவதற்காகவே சொல்லப்படுகின்றன. 'நான் என்ன உங்க வீட்டு வேலைக்காரியா? என்னால இவ்வளவுதான் முடியும்' என்று சொல்லிவிடுவது சுலபம். ஆனால் அதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்று உங்களால் புரிந்துகொள்ள முடியும்.

அதைவிட இப்படிச் சொல்லிப் பாருங்களேன்! 'என்ன இருந்தாலும் உங்களை மாதிரி வேலை செய்ய முடியுமா அத்தை? சீக்கிரமாவே உங்களை மாதிரி செய்யக் கத்துக்கறேன்' என்று சொல்லுங்கள். நிச்சயம் கோபம் வராது. புன்சிரிப்புதான் வரும். புகழுக்கு ஏங்காத மாமியார் எங்காவது இருக்கிறாரா?

இந்த மாதிரி மாமியாருக்கு அடங்கி, பவ்யம் காட்டுவது சில மாதங்களுக்குத்தான். இந்தச் சில மாதங்களுக்குள் மாமியாரையும் அனுசரித்து, கணவரிடமும் நல்ல அபிப்ராயத்தைப் பெற்றுவிட்டால் போதும். உங்கள் கணவரின் சப்போர்ட் இருந்தால் எந்த மாதிரியான மாமியாரும் ஜீரோதான். கணவர் உங்கள் மேல் வைத்திருக்கும் அன்பை நீங்கள் லாபகரமாக மாற்றிக்கொள்ள வேண்டும். லாபகரமாக மாற்றும் முயற்சியை ரகசியமாக வைத்துக்கொள்ளுங்கள். அவசரப்பட்டு வெளிக்காட்டிக் கொண்டால் எல்லாம் வீணாகிவிடும். கல்யாணம் ஆனாலும் தன் பிள்ளை தன் கண்ட்ரோலில்தான் இருக்கிறான் என்று மாமியார் நம்பவேண்டும்.

எதற்கு இத்தனை வம்பு பேசாமல் தனிக்குடித்தனம் போய்விடலாமே என்ற நினைப்பு மனத்துக்குள் உதித்துக்கொண்டே இருக்கும். அத்தகைய சிந்தனைகளை அப்போதைக்கு அப்போதே கொன்றுவிடுங்கள்.

உங்கள் அம்மா, அப்பா மீதும் உங்கள் பிறந்த வீட்டின் மீதும் எவ்வளவு அன்பும் மரியாதையும் வைத்திருக்கிறீர்கள். அதே போல்தானே உங்கள் கணவரும் அவர் பிறந்த வீட்டின்மீது பாசமும் மரியாதையும் வைத்திருப்பார். உறவை வெட்டிக்கொண்டு போகும்போது ஒருவேளை உங்கள் கணவர் ஒத்துழைப்புத் தந்தாலும் தன் குடும்பத்தை விட்டு வந்தது அவருக்குக் காலமெல்லாம் உறுத்திக்கொண்டே இருக்கும். உறவுகளை அனுசரித்துப் போவதுதானே வாழ்க்கை?

வீட்டுக்குள்ளே இருந்துகொண்டு உங்கள் உரிமைகளை நீங்கள் பெற்று, குடும்பத்தை நடத்திச் செல்வதில்தானே வெற்றி இருக்கிறது. அதில்தானே உங்கள் திறமையும் இருக்கிறது.

சில விதிவிலக்குகள் இருக்கத்தான் செய்கின்றன. மாமியாருடன் சேர்ந்து வாழும் சாத்தியமே சிலருக்கு இல்லாமல் இருக்கலாம். நினைத்துப் பார்க்க முடியாத பல பிரச்னைகளை நித்தம் நித்தம் உருவாக்கும் ஒரு நபராக அத்தகைய மாமியார் இருக்கலாம். அது போன்ற சந்தர்பங்களில், நீங்கள் நிச்சயம் சேர்ந்துதான் வாழ்ந்தாகவேண்டும் என்று உபதேசம் செய்வது வீண். அமைதியாக பிரிவதே அவர்களுக்கு உகந்ததாக இருக்கும். ஆனால், இவை விதிவிலக்குகள்.

சின்னச் சின்னப் பிரச்னைகளைப் பூதாகரமாக்கி, எல்லோரின் மனத்திலும் ரணத்தை உண்டு பண்ணாமல் வாழ்வது பற்றித்தான் இங்கு சொல்லிக்கொண்டிருக்கிறோம்.

ஒட்டிக்கொண்டு வாழும்போது ஆரம்பத்தில் கஷ்டமாக இருந்தாலும் சமஸ்தானம் உங்கள் கைக்கு வந்த பிறகு நீங்கள் தானே ராணி. அதன் பிறகு வரும் பிரச்னைகளை நீங்களே சமாளித்து விடமாட்டீர்களா என்ன?

0

* புடைவை கட்டக்கூடத் தெரியாதா?

* தலையில் எண்ணெய் வைத்து வாரி, பின்னாமல் இதென்ன கூத்து?

* செண்ட், பாடி ஸ்ப்ரே எல்லாம் தேவையா?

* அயர்ன் பண்ணாமல் டிரஸ் பண்ணறாளா பாரு!

* அவ கலருக்கு எப்படி கண்ணை உறுத்தற மாதிரி உடுத்தறா பாரு!

இதுபோன்ற குறைகளைச் சொல்லும் போது இரண்டு விதங்களில் நடந்து கொள்ளலாம். ஒன்று, இந்த மாதிரி விமர்சனங்களைக் காதில் வாங்காமல் விட்டுவிடுவது. அதாவது கண்டுகொள்ளவே கூடாது. எந்தப் பதிலும் தரக்கூடாது. இரண்டு, மாமியாரையும் உங்கள் டேஸ்ட்டுக்கு மாற்றிவிடுவது.

விஜிக்கு நல்ல டிரஸ் சென்ஸ் இருந்தது. விதவிதமான காட்டன் புடைவைகளைக் கஞ்சிப் போட்டு, அயர்ன் செய்து அழகாக உடுத்துவாள். அவளுக்குப் புடைவை பாந்தமாக இருக்கிறது என்று எல்லோரும் சொல்வார்கள்.

ஆனால் மாமியாருக்கு மட்டும் இது பொறாமையைத் தந்தது. 'என்ன சேலை கட்டறே? இந்த லட்சணத்துக்குக் கஞ்சி போட்டு அயர்ன் வேற பண்ணிக்கறே. இதுக்கு சின்தடிக் சேலைகளைக் கட்டலாம். செலவும் பிடிக்காது, ரொம்ப நாளைக்கு வரும்' என்றார்.

விஜி முதல் முறை சொல்லும்போது பொறுத்துக்கொண்டாள். ஆனால் மாமியார் தன் உடைகளை அடிக்கடி விமர்சனம் செய்ய ஆரம்பித்தபோது தான் அந்த முடிவுக்கு வந்தாள்.

மறுநாள் மாமியாருக்கு இரண்டு பெங்கால் காட்டன் புடைவைகளை வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வந்தாள். அன்று மாமியாருக்கு ஓரளவு நல்ல மூட்.

'அத்தை, வனஜா குழந்தைக்குப் பிறந்தநாள். வாங்க ரெண்டுபேரும் போயிட்டு வந்துடலாம்' என்றாள் விஜி.

'என்ன டிரஸ் போட்டுக்கறதுன்னு குழப்பமா இருக்கு.'

'குழப்பமே வேண்டாம். இந்தப் புடைவையைக் கட்டுங்க. கறுப்பு ஜாக்கெட் வச்சிருக்கீங்களே.'

'ஐயையோ, காட்டன் புடைவையா? எனக்கு வேண்டாம். கட்ட வராது.'

'நான் ஹெல்ப் பண்ணறேன் வாங்க அத்தை.'

விஜி, மாமியாருக்கு புடைவையைக் கட்டிவிட்டாள். வெளியில் வந்த மாமியாரை மாமனார் ஆச்சரியத்துடன் பார்த்தார். 'ரொம்ப நல்லா இருக்கு' என்று பாராட்டினார். மாமியாருக்கு முகம் எல்லாம் சந்தோஷம்.

'அத்தை, உங்களைப் பார்த்தால் ஒரு டீச்சர் மாதிரி கம்பீரமா இருக்கு!'

'எனக்கு எப்பவும் காட்டன் புடைவை பிடிக்கும். கல்யாணம் ஆனப்ப காட்டன் புடைவை கட்டினதுக்கு நீ என்ன கலெக்டரா, மடிப்புக் கலையாம டிரஸ் பண்ணறேன்னு என் மாமியார் ரகளை பண்ணிட்டார். அத்தோட என் ஆசை போயிருச்சு.'

'உங்க பிள்ளைதான், நீ மட்டும் நல்லா டிரஸ் பண்ணிக்கறே. எங்கம்மாவுக்கு என்ன வயசாச்சு, அவங்களுக்கும் ஏதாவது பண்ணுன்னு சொன்னார்' என்றாள் விஜி.

மாமியாருக்குத் தன்னைக் கண்ணாடியில் பார்க்கும்போது சந்தோஷமாக இருந்தது. பத்து வயது குறைந்த மாதிரி தெரிந்தது. தன் மனத்தில் இருந்த ஆசையை, மருமகள் அழகாக தீர்த்து வைத்ததை நினைத்துப் பெருமிதம் கொண்டார். இப்போதெல்லாம் விஜி மறந்தாலும் மாமியார் அவளை 'நல்லா டிரஸ் பண்ணிக்க, முடியை அழகா வெட்டிக்க' என்று ஆலோசனை சொல்ல ஆரம்பித்துவிட்டார்.

நீங்கள் செண்ட் போடுவது மாமியாருக்குப் பிடிக்கவில்லையா? அவருக்கு என்ன ஸ்மெல் பிடிக்கும் என்று கேட்டு, அந்த செண்ட்டை வாங்கி அடித்து விடுங்கள். முதலில் கொஞ்சம் தயங்கினாலும் பிறகு ஏற்றுக்கொள்வார்.

இப்படிச் செய்வதால் மாமியாரிடம் இருந்து வரும் எதிர்மறையான கருத்துகள் ஓடி ஒளிந்துகொள்ளும்.

0

உஷா கல்யாணமாகி வந்த மூன்றாம் நாளே மாமியார் சமையலறையை விட்டு வெளியேறி விட்டார். அவ்வளவுதான். பூரித்துப்போனாள் உஷா. 'அடடா, மாமியார் என்றால் இவரல்லவா மாமியார். என்னைப் போல் புண்ணியம் செய்த இன்னொரு பிறவி இந்த பூவுலகில் உண்டா?' நிறைய சீரியல் பார்த்திருப்பார் போலும். பொங்கிவிட்டார் பொங்கி. பார்ப்பவரிடம் எல்லாம் மாய்ந்து மாய்ந்து பேசினாள். மாமியார் என்றாலே சண்டைபோடுபவர் என்று யார் சொன்னது? என்னுடைய மாமியார் பத்தரைமாத்துத் தங்கம். என் செல்லக்கட்டி, வெல்லக்கட்டி, புஜ்ஜிக்குட்டி.

மறுநாளே, தன் வேலையை தொடங்கிவிட்டார் அந்த மாமியார். சாதத்துக்கு எத்தனை தம்ளர் அரிசி வைக்க வேண்டும், என்ன கூட்டு பண்ண வேண்டும்? சாம்பாரில் என்ன காய் போட வேண்டும்? மிளகு ரசமா? பூண்டு ரசமா? ஆரோக்கியாவா ஆவினா? எல்லாவற்றையும் முடிவு செய்யும் சக்தி அவர்தான்.

மாமியார் தலையசைத்தால் மட்டுமே மேற்கொண்டு உலை கொதிக்கும். இல்லையென்றால், மாமியார் கொதித்துபோய்விடுவார். இத்தனைக்கும் உஷாவுக்கு தினுசு தினுசாக பதார்த்தங்கள் செய்யத்தெரியும். ஆனால், என்ன பிரயோஜனம்? சகலத்துக்கும் மாமியார் கருத்தைக் கேட்டாகவேண்டிய நிலை.

கேட்டுக்கேட்டு செய்தால் மட்டும் என்ன? சும்மா இருந்துவிடுவாரா?

'அத்தை, என்ன குழம்பு பண்ணட்டும்?'

'ம்... எதையாவது பண்ணு. தினமும் உனக்குச் சொன்னால் தான் பண்ணத் தெரியுமா?'

கேட்டால் பிரச்னை. கேட்காவிட்டாலும் பிரச்னை.

'நான் ஒருத்தி எதுக்கு இங்கே இருக்கேன். என்ன பண்ணட்டும் அத்தைன்னு ஒரு வார்த்தை கேட்டா குறைஞ்சா போயிடுவே?'

ஒரு வாரம் கழித்து, மாமியார் உஷாவைக் கூப்பிட்டார்.

'என் ஃபிரெண்ட் சரோஜாவோட ஊர்ல சாம்பார்ல வெல்லம் போட்டு செய்வாங்களாம். இன்னிக்கு அவ சொன்ன மாதிரியே பண்ணிடு. வித்தியாசமா இருக்கும்' என்றார்.

'ஐயையோ! சாம்பாரில் வெல்லமா?' என்று வாய் விட்டு, கேட்கப் போனவள் அப்படியே நிறுத்திக்கொண்டாள். உணர்ச்சிவசப்படாமல் யோசித்தாள். இது ஒரு நல்ல சந்தர்ப்பம். தவறவிடாமல் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். வெல்லத்தை இரு கையாலும் அள்ளிப்போட்டாள். சாம்பார் ரெடி!

ஞாயிற்றுக் கிழமை. பொறுமையாக உட்கார்ந்து ஒரு கட்டு கட்டவேண்டிய தினம். ஆவலுடன் மாமனாரும் உஷாவின் கணவனும் சாப்பிட உட்கார்ந்தார்கள். சாம்பாரை ஊற்றி ஒரு வாய் வைத்ததும் இருவரின் முகமும் சுண்டைக்காயாகச் சுருங்கிவிட்டது.

'என்ன இது? நல்லாத்தானே சமைச்சிட்டிருந்தே! இப்படி பண்ணி வச்சிருக்கே?' முதல் ரியாக்‌ஷன் கணவனிடமிருந்து.

'சாம்பார்ல வெல்லத்தை யாராவது போடுவாங்களா? இனிப்புச் சாப்பிடணும்னா பாயசம் பண்ணிருக்கலாமே? இல்ல உங்க அத்தையையாவது கேட்டிருக்கலாமே?' இது மாமனார்.

'மாமா, அத்தைதான் இந்தச் சாம்பாரை செய்யச் சொன்னாங்க. எனக்கு இது எப்படி பண்ணறதுன்னு கூட தெரியாது. அவங்க சொன்னதாலதான் செஞ்சேன்' என்றாள் உஷா.

'அம்மாதான் சொன்னாங்கன்னா உனக்குப் புத்தி இல்லையா? சண்டே மூடே போச்சு' என்றான் அவள் கணவன்.

'பெரியவங்க சொல்லும்போது எப்படி மறுத்துப் பேச முடியும்? அத்தை நல்லதுக்குத்தானே சொல்வாங்க' என்று உஷா சொல்லிக்கொண்டிருக்கும் போதே மச்சினர் வந்தார்.

சாம்பாரை டேஸ்ட் பார்த்து விட்டு, 'அம்மா, அம்மா இங்க வாங்க' என்று

கத்தினான்.

'எதுக்குடா கூப்பிட்டே?'

'சாம்பார் பிரமாதம். உன்னோட ஐடியாவா?'

'சரோஜா சொல்லிக் கொடுத்தா. நான்தான் உஷாவுக்குச் சொல்லிக் கொடுத்தேன்' என்றார் பெருமை பொங்க மாமியார்.

'சகிக்கலை. ஏம்மா, இப்படி அபத்தமெல்லாம் பண்ணறே? உன்னால முடியலைன்னா சும்மா இரு. அண்ணி நல்லாத்தான் சமைச்சிட்டிருக்காங்க. அவங்களை இப்படியெல்லாம் பண்ண வைக்காதே' என்று சொல்லிவிட்டு வெளியே சென்று விட்டான்.

'ஏன் அகிலம் இப்படியெல்லாம் ஐடியா கொடுக்கறே? உனக்குப் பிடிச்சா நீயே சாப்பிடு' என்று மாமனாரும் கிளம்பினார்.

மாமியாருக்கு அவமானமாகி விட்டது. அசடு வழிய நின்றார்.

'வாங்க அத்தை. நம்ம ரெண்டுபேரும் சாப்பிடலாம்' என்று கூப்பிட்ட உஷாவைப் பொருட்படுத்தாமல் தன் அறைக்குச் சென்று விட்டார் மாமியார்.

மறுநாள், 'அத்தை என்ன சட்னி...?' என்று உஷா சொல்லி முடிப்பதற்குள் 'நீயே ஏதாவது செய். நான் ஒண்ணும் சொல்லப் போறதில்லை' என்று ஒதுங்கிக் கொண்டார் மாமியயார். தான் சொன்ன விஷயம் தோற்றுப் போனது மட்டுமில்லாமல், தன் சின்ன மகன் மருமகளின் சமையலைப் பாராட்டியதும் மாமியாருக்கு ஒரு பயத்தைக் கொடுத்து விட்டது. அதிலிருந்து உஷாவிடம் சமையல் விஷயத்தில் தலையிடுவதே இல்லை அவர்.

மருமகளை அடிமையாகக் கருதி, ஆதிக்கத்தைச் செலுத்தி வரும் மாமியாரை வெளிப்படையாக எதிர்க்கக்கூடாது. அது ஆபத்தில் போய் முடியும். நீயா நானா குடுமிப்பிடிச் சண்டைக்கு வழி வகுக்கும். அவர்கள் வழியிலேயே போய் அவர்களை வீழ்த்த வேண்டும்.

****

குடும்ப வாழ்க்கையில் பெண்கள் எதிர்கொள்ளும் இந்தப் பெரிய சவாலுக்குப் பல தீர்வுகளைத் தருகிறது ஒரு தமிழ்ப் புத்தகம்.

திருமலை அம்மாள் எழுதிய உங்கள் மாமியாரை புரிந்துகொள்ளுங்கள் என்கிற புத்தகம் புதிதாகத் திருமணம் ஆன பெண்களுக்குப் பிரத்யேக வழிகாட்டியாக உள்ளது. அதில் மேலே நாம் பார்த்த பல்வேறு வகையிலான அறிவுரைகள், யோசனைகள் இடம்பெற்றுள்ளன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com