இந்தக் காலப் பெண்களும் மாமியார்களின் எதிர்பார்ப்புகளும்!

மாமியார் - மருமகள் என்றாலே எதிரும்புதிரும்தான் என்ற ஒரு பிற்போக்கான நடைமுறை ஆண்டாண்டு காலமாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதில் வெகு சிலர் மட்டுமே விதிவிலக்கு.
கோப்புப்படம்
கோப்புப்படம்


உறவுகள் மனித வாழ்க்கையின் வரம். மகிழ்ச்சியின்போது கொண்டாடுவதற்கும் துக்கத்தின்போது ஆறுதலுக்கும் கடினமான சூழ்நிலையில் உதவுவதற்கும் உறவுகள் தேவையாகிறது. ஒவ்வொருவரும் யாரையாவது சார்ந்துதான் வாழ வேண்டிய சூழ்நிலையில், வாழ்வில் ஒவ்வொரு உறவையும் அரவணைத்துச் செல்வது அவசியமாகிறது. 

இந்த உறவுகளில் சில இணக்கமான உறவுகள் என்றும் சில இறுக்கமான உறவுகள் என்றும் சமூகத்தால் கட்டமைக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமெனில் அதிக இறுக்கமான உறவு அதிக சண்டைகள் வருவது மாமியார்-மருமகள் உறவில்தான் என்று சொல்லப்படுகிறது. ஆனால், இந்த சண்டைகளுக்குக் காரணம் அன்பும் எதிர்பார்ப்புகளும்தான் என்ற புரிதல் இங்கு எத்தனை பேருக்கு இருக்கிறது?

மாமியார் - மருமகள் என்றாலே எதிரும்புதிரும்தான் என்ற ஒரு பிற்போக்கான நடைமுறை ஆண்டாண்டு காலமாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதில் வெகு சிலர் மட்டுமே விதிவிலக்கு. ஆனால், அந்த வெகு சிலரும் யாரும் பெரிதாக வெளிகாட்டிக்கொள்வதில்லை, மற்றவர்களும் அவர்களைக் கொண்டாடுவதில்லை. 

அதனால்தானோ என்னவோ தாய், தந்தை, சகோதர, சகோதரிகள் தினத்தை கொண்டாடும் பலருக்கு மாமியார் தினம் என்ற ஒன்று இருப்பதாகவே தெரியவில்லை. 

ஒரு பெண்ணின் மனதை மற்றொரு பெண்ணால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும் என்ற பேச்சுவழக்கு ஒன்று உண்டு. ஆனால், மாமியார்-மருமகள் உறவுக்கு மட்டும் விதிவிலக்கு போன்ற நிலையே இங்கிருக்கிறது. இந்த நிலையை மாற்ற வேண்டுமெனில் இருவருக்கும் இடையிலான புரிதல் அவசியம். 

ஒரு காலத்தில் பெரும்பாலாக கூட்டுக் குடும்பங்கள் இருந்த நிலையில், இன்றெல்லாம் திருமணத்திற்கு முன்னரே தனிக்குடித்தனம் பற்றி யோசிக்கத் தொடங்கிவிடுகிறார்கள் இக்காலத்துப் பெண்கள். குறிப்பாக தன்னுடைய சுதந்திரம் பறிபோய் விடும் என்றும் வீட்டு வேலைகளைச் செய்ய சோம்பேறித்தனப்பட்டும் பலரும் இந்த முடிவும் எடுக்கிறார்கள். ஆனால், அம்மாவைப் பற்றி கவலைப்படும் பெண்கள், தன் மாமியாரும் வயதான காலத்தில் என்ன செய்வார்? என்று யோசிப்பதில்லை. 

மாறாக, தன்னுடைய குழந்தைகளுக்கு பணிவிடைகளைச் செய்ய மட்டுமே மாமியாரை அழைக்கிறார்கள். இக்காலத்து இளம்பெண்கள் பெரும்பாலாக மாமியார்-மாமனாரை தன்னுடன் வைத்துக்கொள்ள விரும்புவதில்லை. 

பெண்கள் பலரும் வேலைக்குச் செல்வதால் வெளியூர்களுக்குச் சென்று இருக்க நேரிடுகிறது. அது விதிவிலக்கு. அதிலும் மாமியாரை உடன் வைத்து பார்த்துக்கொள்ளலாம். மாமியாரும் குடும்பத்திற்கு ஆதரவாக இருப்பார். 

தன்னுடைய மகனை நன்றாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதே பெரும்பாலான அம்மாக்களின் எதிர்பார்ப்பு. மகன்-மருமகள் இருவரும் மகிழ்ச்சியாக இருப்பதும் மாமியாரின் எதிர்பார்ப்பு. 

மகன்களும் சிலர் திருமணம் ஆனவுடன் மனைவியின் பேச்சைக் கேட்டுக்கொண்டு அம்மாவை ஒதுக்குவதும் உண்டு. இதுபோன்ற நிகழ்வுகளே மாமியார்-மருமகள் சண்டைக்கும் காரணமாகி விடுகின்றன. மகன்களும் அம்மா- மனைவி இருவரையும் அவரவர்களிடத்து விட்டுக்கொடுக்கக் கூடாது. இருவரையும் சமமாக நடத்தினாலே பிரச்னை வராது.

மாமியார்-மருமகளின் இணக்கமான உறவுக்கு இருவரிடையே புரிதல் இருக்க இருக்க வேண்டும். அவரவருடைய எதிர்பார்ப்புகளை புரிந்துகொண்டு நடந்தால் பிரச்னைகளை சண்டைகளை குறைக்க முடியும். 

மருமகளிடம் மாமியாரின் எதிர்பார்ப்புகள் என்னென்ன? 

► எதிர்பார்ப்புகள் தோல்வி அடையும்போதுதான் வாழ்க்கையில் பிரச்னை, விரக்தி ஏற்படுகிறது. எந்தவொரு உறவாக இருந்தாலும் ஒருவருக்கொருவர் எதிர்பார்ப்புகளை புரிந்துகொண்டு அதன்படி நடக்க முயற்சித்தால் உறவு இணக்கமாகிவிடும். மனிதனின் அதிகபட்ச எதிர்பார்ப்பு அன்பும் அக்கறையும்தானே. 

அந்தவகையில், தாய் தன்னுடைய குழந்தையை(மகனோ, மகளோ) பெற்றெடுத்து வளர்த்து ஆளாக்குகிறாள். மகள் திருமணமாகி வேறொரு வீட்டிற்குச் சென்றுவிடுகிறாள். தன் வாழ்வின் கடைசி வரை உடன் இருக்கும் மகனுக்குத் திருமணமாகிறது. இப்போது தனக்கும் மகனுக்கும் உள்ள இடைவெளி அதிகமாகிவிடுமோ, மருமகள், தன்னிடம் இருந்து மகனை பிரித்துவிடுவாளோ என்று அச்சம் மாமியாருக்கு ஏற்படுகிறது. 

திருமணத்திற்கு முன்பு மகன் எவ்வாறு தனக்கு முக்கியத்துவம் கொடுத்தானோ, மனைவி வந்த பின்பும் அதே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் மாமியாரிடம் அந்த நம்பிக்கையை விதைக்க வேண்டியது மருமகளின் கடமை. 

► தன்னைவிட மூத்தவருக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்பது பொதுவான வழக்கம். அதன்படியே, மாமியார் தனது மருமகளிடம் எதிர்பார்ப்பது குறைந்தபட்ச மரியாதை. வயதில் மூத்தவர், தன்னுடைய கணவனை அடையாளப்படுத்தியவர் என்ற வகையில் மாமியாருக்கு மருமகள் உரிய மரியாதை அளிக்க வேண்டும். 

►  வீட்டில் எந்த ஒரு முக்கிய முடிவுகளையும் மாமியாரைக் கேட்டு பின்னரே எடுக்க வேண்டும். அப்படியென்றால் மாமியாருக்கு நீங்கள் முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள் என்பதை அவர் உணர்வார். மருமகளாகிய உங்கள் மீது அவருக்கு மதிப்பு அதிகரிக்கும். 

►  இதுநாள் வரை குடும்பத்தை வழிநடத்திய மாமியாரிடம் இருந்து ஒரேநாளில் பொறுப்புகளை பறித்துக்கொள்ளக் கூடாது. 'என்றைக்குமே குடும்பத்தில் நீங்கள்தான் எல்லாமே' என்று மாமியாருக்கு உணர்த்த வேண்டும். செயலளவில் நீங்கள் அனைத்தையும் பார்த்துக்கொண்டாலும் 'வீட்டின் அதிகாரம் மாமியார் கையில்தான்' என்பதை அவருக்கு உணர்த்த வேண்டும். 

►  தனக்கு பிடித்தவர்களை, மருமகள் நன்றாக நடத்த வேண்டும், நன்றாக கவனித்துக்கொள்ள வேண்டும் என்பது மாமியாரின் பெரும் எதிர்பார்ப்பு. குறிப்பாக தன்னுடைய மகள்கள் வீட்டுக்கு வரும்போது மருமகள் அவர்களை சிறப்பாக கவனிக்க வேண்டும், மகள்களின் குழந்தைகளை மருமகள், தன் குழந்தைகளைப் போல பார்த்துக்கொள்ள வேண்டும் என்று விரும்புவது இயல்பு.

► உறவினர்களிடம் மாமியாரை ஒருபோதும் மருமகள் விட்டுக்கொடுக்கக்கூடாது. உங்களிடம் கண்டிப்பாக நடந்துகொண்டாலும் மற்றவர் முன்னிலையில் மாமியாரைப் பற்றி குறை கூறாமல் அவரை மெச்சினால் மாமியாரின் மனம் மாற வாய்ப்பிருக்கிறது. 

►  மாமியாரின் விருப்பு, வெறுப்புகளை அறிந்து அதற்கேற்ப நடந்துகொள்ளும் மருமகளாக இருக்க வேண்டும். மாமியாருக்கு என்ன பிடிக்குமோ அதைச் செய்ய ஊக்குவிக்க வேண்டும். அவர் செய்யும் நல்ல செயல்களை பாராட்டத் தவறிவிடாதீர்கள். 

► இக்கால பெண்கள் பலரும் பெண் சுதந்திரம் குறித்துப் பேசுகிறார்கள். எனவே, தன்னுடைய மாமியாரும் ஒரு பெண் என்பதை உணர்ந்து, வீட்டில் அவர்களுக்கான சுதந்திரத்தை நீங்களும் அளித்து மற்றவர்களிடமும் பெற்றுத் தர வேண்டியது மருமகளின் கடமை. 

► இறுதியாக, 'உங்கள் மாமியார் எப்படி இருக்க வேண்டும், அவரிடம் உங்களின் எதிர்பார்ப்பு என்ன?' என்பதையும் நேரடியாக உங்கள் மாமியாரிடமே தெரிவிக்கலாம். 

மருமகள்களே, உங்கள் கணவனின் குணம் பிடித்துதானே அவர் மீது அதீத அன்பு கொண்டிருக்கீறீர்கள்? அந்த மகனை சமூகத்தில் ஒரு மனிதனாக அடையாளப்படுத்தியது யார்? உங்கள் மாமியார்தானே? வீட்டில் அம்மாவுடன் சண்டை போட்டு பின்னர் எதுவுமே நடக்காத மாதிரி 'ஈகோ' இன்றி பேசுவீர்கள் அல்லவா? அதுபோல மாமியாரிடம் ஏன் நடந்துகொள்ளக் கூடாது?

இப்போது உங்கள் அம்மாவை விட்டு வந்த உங்கள் வாழ்வில் ஒரு வெற்றிடம் தோன்றியிருக்கலாம். அந்த வெற்றிடத்தை உங்கள் மாமியார் மூலமாக நிரப்பலாமே? 

பெண் ஒருவள் திருமணமாகி ஒரு ஆணிடம் ஒப்படைக்கப்படுவதுபோலே, ஆணும் வளர்க்கப்பட்டு மனைவி என்ற உறவிடம் ஒப்படைக்கப்படுகிறான். மகளை வளர்த்தவர்களுக்கு இருக்கும் அதே அன்பு மகனை வளர்த்தவர்களுக்கும் இருக்கும். அதை புரிந்துகொண்டு அனுசரித்து விட்டுக்கொடுத்துச் சென்றாலே நிம்மதியான மகிழ்ச்சியான வாழ்க்கை இருக்கும். 

மாமியாருக்குத் தேவையானது மகன், மருமகளிடம் இருந்து குறைந்தபட்ச அன்பு. அன்பைக் கொடுத்து அன்பைப் பெறுங்கள். இன்று மாமியார்-மருமகள் பலரும் அம்மா-மகள் போன்று இணக்கமுடன் இருக்கின்றனர் என்பதையும் மறந்துவிட வேண்டாம். 

தாய், தந்தையர் தினத்தையே அதிகமாகக் கொண்டாடிய நமக்கு மாமியார் தினம் புதிதாக இருக்கலாம். ஆனால், மாமியார்-மருமகள் உறவை ஒரு இறுக்கமான உறவாகக் கட்டமைக்கப்பட்டுள்ள இந்த சமூகத்தில் மாமியார் தினத்தைக் கொண்டாடுவதன் மூலமாக நிலையை மாற்ற முடியும். உங்கள் அம்மாவைப் போன்று உங்கள் மாமியாருக்காக இந்த ஒருநாளை அவர்களுடன் அவர்களுக்காக செலவழியுங்கள். மாமியாரை கொண்டாடுங்கள்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com