'மாமியாரே என் வழிகாட்டி'

தனது மகனுக்கான வரனைத் தேடித் தேடித் தேர்வு செய்யும் தாயே, வரக்கூடிய பெண்ணுக்கு மிகப்பெரும் எதிரியாக மாறிவிடுவது பெரும்பாலான குடும்பங்களில் காணப்படுகிறது.
மருமகள் மரகதத்துடன் உஷாநந்தினி விஸ்வநாதன்.
மருமகள் மரகதத்துடன் உஷாநந்தினி விஸ்வநாதன்.

வேறெந்த உறவுகளைவிட மிகச் சிக்கலானது மாமியார் - மருமகள் இடையிலான உறவு. இதனால், காலங்காலமாக மாமியார் - மருமகள் உறவு எதிரும், புதிருமாகவே இருந்து வருகிறது.

தனது மகனுக்கான வரனைத் தேடித் தேடித் தேர்வு செய்யும் தாயே, வரக்கூடிய பெண்ணுக்கு மிகப்பெரும் எதிரியாக மாறிவிடுவது பெரும்பாலான குடும்பங்களில் காணப்படுகிறது.

இச்சிக்கல் அனைத்து சமூகங்களிலும், ஏழை - பணக்காரர் என்ற வேறுபாடின்றி எல்லா நிலைகளிலும் நிலவுகிறது. எனவே, பல குடும்பங்களில் மாமியார் - மருமகள் இடையே வெறுப்பும், பகையுமே மேலோங்கி இருக்கும்.

இப்படியொரு சூழ்நிலையிலும் தஞ்சாவூர் மாவட்டக் குழந்தைகள் நலக் குழுமத் தலைவர் உஷாநந்தினி விஸ்வநாதன் தனது மாமியாரை உயர்வாகப் போற்றுகிறார். இவர் தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகேயுள்ள தம்பிக்கோட்டை மைனர் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது மாமியார் தம்பிக்கோட்டை மைனர் என்கிற என்.ஆர். ராமசாமியின் மனைவி என்.ஆர். வைரமணி அம்மாள் (86).

இன்னர்வீல் சங்கம், கில்டு ஆப் சர்வீஸ், கலை ஆயம் உள்பட பல்வேறு அமைப்புகளின் மூலம் பல்வேறு சமூகச் சேவைகளைச் செய்து வரும் உஷாநந்தினி விஸ்வநாதன் தனது மாமியார் வைரமணி அம்மாள் குறித்து தொடர்கிறார்...

வைரமணி அம்மாள், உஷாநந்தினி, மரகதம்
வைரமணி அம்மாள், உஷாநந்தினி, மரகதம்

எங்க மாமியார் 31 வயதில் எட்டுக் குழந்தைகளுடன் விதவையாகிவிட்டார். அவருக்கு 5 மகள்கள், 3 மகன்கள். ஐந்து மகள்களையும் நல்ல குடும்பத்தில் திருமணம் செய்து கொடுத்துள்ளார். இதேபோல, 3 மகன்களுக்கும் பொருளாதார ரீதியாக உதவி செய்து, அவர்களையும் நல்ல நிலைக்குக் கொண்டு வந்துள்ளார்.

எங்க மாமனார் ஒரே பையன். இவர் 37 வயதில் இறக்கும்போது நிறைய சொத்துகள், பேருந்துகள், வணிகம் இருந்தன. இவற்றையெல்லாம் எங்க மாமியார் 31 வயதில் தனியொரு பெண்மணியாகத் திறமையாக நிர்வாகம் செய்தார். மகள்களுக்குத் தானாகவே ஒவ்வொரு இடமாகப் பார்த்து திருமணம் செய்து கொடுத்தார். எல்லோரும் நல்ல நிலையில் இருக்கின்றனர்.

அவர் இளம் வயதில் விதவையாகும்போது மிகுந்த கஷ்டம் இருந்திருக்கும். அதையெல்லாம் கடந்து குடும்பத்துக்காகவும், பிள்ளைகளுக்காகவும் பாடுபட்டார். பிள்ளைகளைப் படிக்க வைத்தது, பெண் பிள்ளைகளைத் திருமணம் செய்து கொடுத்தது என அனைத்து நிர்வாகத்தையும் எடுத்துச் செய்தார். இதற்காக அவர் ரொம்ப சிரமப்பட்டிருக்கிறார்.

எங்க மாமனார் இருந்தவரை சொத்துகள் என்னவெல்லாம் எங்கு இருக்கின்றன என்பது மாமியாருக்குத் தெரியாது. இதெல்லாம் உங்கள் சொத்து என தம்பிக்கோட்டையில் சொல்வார்கள். ஆனால், எங்கே? என்ன இருக்கிறது? என்பது புரியாது. மாமனார் இறந்த பிறகு, ஆவணங்களைச் சரிபார்த்து, அனைத்து சொத்துகளையும் மாமியார்தான் கண்டறிந்து, அளவீடு செய்து, வேலி போட்டார். இவற்றையெல்லாம் திறம்படச் சமாளித்தார்.

மாமியார் எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருந்தாலும் கூட, வங்கியில் கணக்குச் சொல்வது உள்ளிட்ட விஷயங்களில் மணக்கணக்குப் போட்டு மிகச் சரியாகக் கூறுவார்.

எங்களுடைய குடும்பத்துக்கு 21 கோயில்கள் உள்ளன. அதற்கு டிரஸ்டியாக இருந்த அவர் தனியொரு பெண்மணியாக இருந்து அனைத்தையும் கவனித்துக் கொண்டார்.

இதையெல்லாம் கேள்விப்பட்டது முதல், எனக்கு என் மாமியார் மீது தனி மரியாதை வந்தது. எனக்கு மிகப்பெரிய உத்வேகமாக இருக்கிறார். நான் 12 ஆம் வகுப்புப் படிக்கும்போது திருமணமாகி வந்தேன். அதன்பிறகு என்னை ஊக்கப்படுத்தி கல்லூரி, முனைவர் பட்டப்படிப்பு வரை முடிக்க உதவி புரிந்தார். குடும்பத்தினரின் ஆதரவு இல்லையென்றால் படித்திருக்க முடியாது. குறிப்பாக, மாமியாரின் ஆதரவு இருந்ததால்தான், சாதிக்க முடிந்தது. மிகுந்த பாரம்பரியமான இக்குடும்பத்தில் பெண்கள் அதிகமாக வெளியே வரவோ, படிக்கவோ மாட்டார்கள். இந்தச் சூழ்நிலையிலும், என்னைப் படிக்க வைத்தார்.
 
நான் எது செய்தாலும், நிச்சயமாக ஊக்கப்படுத்துவார். எந்தச் சமையல் செய்தாலும் நல்லாருக்கு எனக் கூறுவார். இதுபோல பல வகைகளிலும் எனக்கு ஊக்கமாக இருந்தது எனது மாமியார்.

உஷாநந்தினி விஸ்வநாதன், மரகதம் 
உஷாநந்தினி விஸ்வநாதன், மரகதம் 

குடும்பம் என்றால் பிரச்னைகள் இருக்கும்தான். சில நேரங்களில் சிறு, சிறு பிரச்னைகள் வந்துள்ளன. பிரச்னை வரும்போது, மாமியார் கூறுவதை அமைதியாகக் கேட்டுக்கொள்வேன். அதற்கு உடனடியாகப் பதில் பேசமாட்டேன். அமைதியாக இருக்கும்போது, அடுத்த நிமிடம் அப்பிரச்னை ஒன்றுமில்லாமல் ஆகி, சுமூகமாக மாறிவிடும்.

முதலில் அவருடைய கருத்தைக் கேட்டுக்கொள்வேன். என்னைப் பொருத்தவரை மற்றவருடைய கருத்தைக் காது கொடுத்துக் கேட்க வேண்டும். அதற்கு மாறான கருத்தைக் கூறும்போதுதான் பிரச்னைகள் வருகின்றன. அவர்கள் வேண்டாம் என்று சொல்லும்போது கேட்டுக்கொள்ள வேண்டும். அதன் பிறகு சூழ்நிலைக்குத் தகுந்தவாறு பேசித் தீர்வு காணலாம். குடும்பத்தை நடத்துவதற்கான திறன் இருக்கிறது என்ற நம்பிக்கையை மாமியார்களிடம் ஏற்படுத்திவிட்டால், அதன் பிறகு எல்லாமே சுமூகமாகச் செல்லும்.
 
எங்க மாமியாரைப் பொருத்தவரை ரொம்ப செலவு செய்யக் கூடாது என அறிவுரைகள் வழங்குவார். எந்தவொரு செலவையும் பட்ஜெட் போட்டுத்தான் செய்ய வேண்டும் எனக் கூறுவார். இவ்வளவுதான் பணம் இருக்கிறது என்றால், இதற்குள் என்ன செய்ய முடியுமோ, அதை மட்டுமே செய்ய வேண்டும் என சொல்வார். வரவு-செலவு விஷயத்தில் மிகவும் துல்லியமாகச் செயல்படுவார். வியாபாரம் உள்பட எதுவாக இருந்தாலும் அகலக் கால் வைக்கக் கூடாது என்பார். வெளியில் கடன் வாங்குவது அவருக்குப் பிடிக்காது. இதுபோன்ற விஷயங்கள் சரி என்பதே என்னுடைய கருத்தும் கூட.

ரொம்பவும் சென்டிமென்டலாக இருக்கமாட்டார். மூட நம்பிக்கை கிடையாது. சுதந்திரம் நிறையவே தருவார். கோட்பாடுகளுக்குள் நாம் செயல்பட்டால், அவரும் ஏற்றுக் கொள்வார்.

என்னைப் பொருத்தவரை எங்க மாமியாரை நான் என்னுடைய வழிகாட்டியாகவே நினைக்கிறேன். எனக்கு ஊக்கமும், உற்சாகமும் அவர்தான் என நினைக்கிறேன்.

எனது மகன் வினீத் ராமசாமிக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து வைத்தோம். மருமகள் பெயர் மரகதம். தற்போது நானும் மாமியார்தான். முன்பு மருமகளாக இருந்தபோது மருமகள்தான் விட்டுக் கொடுத்து போக வேண்டும் என நினைப்பேன். மாமியாரான பிறகு மாமியார் இன்னும் விட்டுக் கொடுத்துப் போனால், வாழ்க்கை இன்னும் சுமூகமாகச் செல்லும் என்ற கருத்து தோன்றியது.

எனவே, மருமகளிடம் நான் மாமியாராக ரொம்பவும் எதுவும் அழுத்தமாகச் சொல்லமாட்டேன். பொதுவாக, மருமகள்களை ஓராண்டுக்கு அவர்களுடைய இஷ்டப்படி விட்டுவிட வேண்டும். ஆரம்பத்திலிருந்தே எதாவது முரண்பட்ட கருத்தைக் கூறினால், நிச்சயமாக நம் மீது அவர்களுக்கு அதிருப்திதான் ஏற்படும். ஓராண்டுக்கு அவர்களுடைய இஷ்டப்படி விட்டுவிட்டால், நம்மைப் பார்த்து அவர்களும் மாறிக்கொள்வர். அடிக்கடி அவர்களிடம் கருத்துகளைக் கூறும்போது பிரச்னைகள்தான் ஏற்படும்.

ஓராண்டு கடந்த பிறகு அவர்களுக்கே பொறுப்பு வந்துவிடும். குழந்தைகள் பிறந்தபிறகு அவர்களுடைய வேலைகளை உரிய முறையில் செய்துவிடுகின்றனர். இதனிடையே, நம்முடைய குடும்பப் பாரம்பரியத்தை அவ்வப்போது சொல்லிக் கொடுக்க வேண்டும். அதேநேரத்தில் ரொம்பவும் அழுத்தம் கொடுக்கக்கூடாது.

மாமியார் நிலையில் இருப்பவர்கள் நிறைய விட்டுக் கொடுக்க வேண்டும் என்பதே எனது கருத்து. நிறைய தோழிகள் கூறும்போது, எப்போதோ 10 ஆண்டுகளுக்கு முன்பு எனது மாமியார் இப்படி செய்தார்கள், அப்படி சொன்னார்கள் என இன்னமும் அதைப் பற்றிப் பேசுவர். அது தேவையில்லை. மறப்போம் - மன்னிப்போம் என இருந்தால் வாழ்க்கை எளிதாக இருக்கும். அதன் மூலம் உறவுகளும் மேம்படும்.

என்னுடைய கனவு வேறாக இருக்கும். மருமகளின் கனவு வேறு விதமாக இருப்பது வழக்கம். இச்சூழ்நிலையில் நாம் சொல்வதுதான் சரி என வாதிடக்கூடாது. அப்படிச் செய்யும்போதுதான் பிரச்னைகள் வருகின்றன. மாமியார் செய்வதை மருமகள் செய்து வந்தாலே போதுமானது.

மாமியார்களுடைய நல்ல செயல்கள், விஷயங்கள் அனைத்தையும் மருமகள்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மாமியார் ஏதாவது சொல்லும்போது, அதை எதிர்க்கும் விதமாகப் பதில் அளிக்கக்கூடாது. பதிலுக்கு பதில் பேசுவது தேவையற்றது. ஒவ்வொரு வாதத்திலும் நாம்தான் வெற்றி பெற வேண்டும் என நினைக்கத் தேவையில்லை. விட்டுக் கொடுத்து போனால் பிரச்னை வராது. மாமியார் ஒரு கருத்தைச் சொல்லும்போது, அவரே வெற்றி பெற்றதாக இருக்கட்டும் என நினைக்க வேண்டும். மாமியார் கூறியதை தவறு என நிரூபிக்க முயற்சிக்கக் கூடாது. ஒரு கட்டத்தில் மாமியார்களே உணர்ந்துவிடுவார்கள். விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை எனக் கூறுவர். அதை என் அனுபவத்திலும் பார்த்துவிட்டேன் என்றார் உஷாநந்தினி விஸ்வநாதன்.

இதேபோல, உஷாநந்தினியின் மருமகள் வி. மரகதம் கூறியது:

அத்தை கூறியது மிகவும் சரியானது. எப்போதுமே பதிலுக்கு பதில் கருத்துகள் கூறுவது என இருக்கக் கூடாது. முதலில் மாமியாரிடம் மருமகள் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். என் அத்தை எனக்கு ரொம்பவே சுதந்திரம் கொடுத்தார். முதல் ஓராண்டுக்கு இப்படித்தான் இருக்க வேண்டும் என எந்த உத்தரவும் போட்டதில்லை. அதேபோல, எல்லையைத் தாண்டுவதாக எனக்குத் தோன்றினால், அதைச் செய்யக்கூடாது என இருந்துவிடுவேன்.

எங்களுடைய உறவு மிகவும் திறந்த மனப்பான்மையுடன் இருக்கும். விமர்சனங்கள் இருக்காது. ஏதாவது கருத்து சொல்ல வந்தாலும், அதைக் கூறுவதற்கு எனக்கு அனுமதி அளிப்பார். சிறு சிறு விவாதங்கள் இருக்குமே தவிர, பெரிய அளவுக்கு பிரச்னைகள் வராது. அத்தை நல்ல சுதந்திரமும், இடமும் கொடுப்பார். என்னை ஆதிக்கம் செய்ய வேண்டும் என அவர் ஒருபோதும் நினைத்தது கிடையாது. அவர் நெருங்கிய தோழி போலவே இருப்பார். மகிழ்ச்சியான தருணங்களிலும், வருத்தமான நிலையிலும் ஒரே மாதியாக இருப்பார்.

மாமியார் சொல்வதை எல்லாம் கேட்டுக் கொண்டாலும், நடைமுறையில் எது சரியாக இருக்கிறதோ, அதைச் செய்து கொண்டாலே போதுமானது. முதலில் மாமியாரிடம் நம்பகத்தன்மையை ஏற்படுத்த வேண்டும் என்றார் மரகதம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com