அம்மாவாக மாறிய மாமியார்!
By சோ.தெஷ்ணாமூர்த்தி | Published On : 24th October 2021 09:15 AM | Last Updated : 24th October 2021 09:31 AM | அ+அ அ- |

மாமியார் வாசுகியுடன் மருமகள் கனிமொழி.
திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் பனங்காட்டாங்குடியைச் சேர்ந்த, கனிமொழி, தனது மாமியார் வாசுகியை தனது அம்மா என்று கூறுகிறார்.
மாமியார் தினத்தையொட்டி, மருமகள் கனிமொழி சத்யகீர்த்தி தனது மாமியார் குறித்துக் கூறியதாவது:
மாமியார் தின நாளை முன்னிட்டு, மாமியாருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். எனது திருமணம் காதல் திருமணம்தான். திருமணம் நடந்து 9 ஆண்டுகள் ஆகின்றன. என் வீட்டில் பல எதிர்ப்புகளுடன்தான் நடந்தது. இன்று வரை எனது வீட்டில் பேசுவதில்லை. எனக்கு எல்லாமே என் மாமியார்தான். எது நடந்தாலும் பார்த்துக் கொள்ளலாம், எனக் கூறி முதலில் முழு ஆதரவுடன் தன்னம்பிக்கையையும் விதைத்தவர் என் மாமியார்தான். எந்தக் கட்டுப்பாடும் சொல்ல மாட்டார்.
எனது கணவருடன் பிறந்தவர்கள் 5 பேர். நான் 3 ஆவது மருமகள். ஒரு ஆண்டுக்குள் 3 திருமணம் நடந்தது. மூன்றுமே, காதல் திருமணம்தான். 3 மருமகளையும் தன் மகள்கள் போலத்தான் பார்ப்பார். என் மாமியாருக்கு மகள் இல்லை. எங்களைத் தான் மகள்களாகப் பார்ப்பார். நாங்களும் அத்தை என்றெல்லாம் கூப்பிட மாட்டோம். அம்மா என்றுதான் அழைப்போம். எங்கு சென்றாலும் சேர்ந்துதான் போய் வருவோம். வெளியில் விழாக்களுக்குப் போனால்கூட, நாங்கள் சேர்ந்து இருப்போம். அந்த அளவுக்கு ஒற்றுமை இருக்கிறது. 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆன போது எப்படியிருந்தேனோ, அப்படித்தான் இன்றும் இருக்கிறேன். அம்மா வீட்டில் எப்படி இருந்தேனோ, அப்படித்தான் இங்கும் இருக்கிறேன். எல்லார் வீட்டிலும் மாமியார், எங்கள் மாமியாரைப் போல இருக்க வேண்டும் என்றார்.