புவிவெப்பமடைதலும் பருவநிலை மாற்றமும்:  தரணியைக் காத்திட தனிமனிதனின் பங்கு

அகில உலகத்தையும் ஆட்டிப்படைத்துக் கொண்டிருப்பதும், மனிதகுலத்தையே கவலைக்கு உள்ளாக்கி வருவதும் இரக்கமே இல்லாமல்
புவிவெப்பமடைதலும் பருவநிலைமாற்றமும்:  தரணியைக் காத்திட தனிமனிதனின் பங்கு
புவிவெப்பமடைதலும் பருவநிலைமாற்றமும்:  தரணியைக் காத்திட தனிமனிதனின் பங்கு

 
 அகில உலகத்தையும் ஆட்டிப்படைத்துக் கொண்டிருப்பதும், மனிதகுலத்தையே கவலைக்கு உள்ளாக்கிவருவதும் இரக்கமே இல்லாமல் கோடிக்கணக்கான மனித உயிர்களைப் பலி வாங்கிக்கொண்டிருப்பதுமான பெரிய விபத்து எது என்று கேட்டால் அது “கரோனா வைரஸ்” தான். ஆனால் அதை விட பல மடங்கு பயங்கரமானதும் மனித இனம் மட்டுமல்லாது அனைத்து உயிரினங்களையும் கொடுமையாகத் தாக்கி அழிக்கப்போவதும் உலகப் பொருளாதாரத்தையே சீர்குலைக்கப் போவதுமான ஓர் அரக்கப்பிறவி பூவுலகமே வெப்பமயமாக ஆகிக்கொண்டிருத்தல்.

பருவநிலை மாறிவருதல் நம்மைச் சூழ்ந்துள்ள காற்று மாசுபட்டு வருதல் என்பதாகும். அதைப்பற்றி பாமரர்கள் மட்டுமின்றி மனித இனம் முழுவதுமே தெரிந்து வைத்திருக்கிறார்களா? புரிந்துகொண்டிருக்கிறார்களா? என்றால் இல்லையென்றுதான் சொல்ல வேண்டியதிருக்கும்.  

பூவுலகம் வெப்பமாகிக்கொண்டிருக்கும் நிலையைப் பற்றியும் அதன் காரணங்கள், அதனால் ஏற்படப்போகும் விபரீத விளைவுகள், அந்த நிலையைத் தவிர்ப்பதற்கான செயல்பாடுகள், விளைவுகளின் தாக்கத்தை முடிந்த அளவு குறைப்பதற்கான வழிகள் இவை பற்றியெல்லாம் பல்வகை ஆராய்ச்சியாளர்களும், விஞ்ஞானிகளும், தொழில்வல்லுனர்களும் மற்றும் சமூகநல இயக்கங்களும், பன்னாட்டு அரசுகளும் ஆராய்ந்து வருவதைப் பற்றிய செய்திகளெல்லாம் செய்தித்தாள்களிலும் பத்திரிக்கைகளிலும் வருவதை நாம் காண்கிறோம். இம்முயற்சிகளில் ஈடுபட்டு வருவதில் நமது நாடும் விலக்கல்ல என்பது நாமனைவரும் பெருமைகொள்ள வேண்டிய ஒன்று. அதேசமயம் நாட்டுமக்கள் நாம் ஒவ்வொருவரும் வரவிருக்கும் பயங்கரநிலையை தைரியத்தோடும் தன்னப்பிக்கையோடும் எதிர்கொள்ள நாமேதும் செய்யமுடியுமா என்றகேள்விக்கு முடியும் என்ற பதிலை உணர்த்துவதுதான் இந்தக் கட்டுரையின் நோக்கம். இதுபற்றிய முக்கியமான விவரங்களைக் கீழ்வரும் பகுதிகளில் காண்போம். 

புவி வெப்பமடைதல்  

பூமியின் மேற்பரப்பில் வெப்பம் அதிகரித்துக்கொண்டே போகும்நிலைதான் புவிவெப்பமடைதல் என்று கூறப்படுகிறது. இந்த வெப்ப அதிகரிப்பு கடந்த இரு நூறாண்டுகளாக படிப்படியாக நிகழ்ந்து வருவது என்பது விஞ்ஞானிகளின் கணிப்பு. 

புவி வெப்பமடைவதற்கான காரணங்கள் 

இயற்கை நிகழ்வுகள் 

1. எரிமலைகள் வெடித்துச் சிதறும்போது வெளிப்படும் சாம்பல் மற்றும் புகை
2. நீராவி
3. உருகும் பனிப்பாறைகள்
4. காட்டுத்தீ 

மனிதகுல செயல்பாடுகளின் விளைவுகள் 

1. பெருகிவரும் மக்கள்தொகை
2. காடுகள் அழிக்கப்படுவது
. அதிகரித்து வரும் கார், மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டர்களின் உபயோகம்
4. மிகுந்துவரும் க்ளோரோ ஃப்ளோரோ, கார்பன் போன்ற ரசாயனப் பொருள்களின் உபயோகம்
5. தொழில்துறை வளர்ச்சி
6. வேளாண்மை 

ஆயினும் இச்செயல்பாடுகளின் விளைவாக, நாட்டுக்கும் நாட்டுமக்களுக்கும் நற்பயன்களும் ஏற்பட்டிருக்கின்றன என்பதை மறுக்கவோ, மறக்கவோ முடியாது.
  
புவி வெப்பமடைவதால் ஏற்படும் விரும்பத்தகாத விளைவுகள் 

1. வெப்பநிலைப் பாதிப்பு
2. இயற்கைச் சூழ்நிலைகள் அழிந்துபோதல்
3. பருவநிலையில் மாற்றம்
4. நோய்கள் பரவுதல்
5. அசாதாரண மரணங்களால் மனித இனம் பாதிப்பு
6. கடல் நீர்மட்டம் உயர்ந்து அதன்விளைவால் ஏற்படும் பற்பல பயங்கரமான விளைவுகள்
7. சுற்றுச்சூழல் பாதிப்பினால் மனித இனம் மட்டுமல்லாது மற்ற உயிரினங்களுக்கும் நிகழவிருக்கும் தீங்குகள் 


 
புவி வெப்பமயமாவதைத் தடுக்க முயற்சிகள் 

இந்தக் கட்டுரையின் முன்னுரையிலேயே இந்தியா உள்பட உலக நாடுகளிலெல்லாம் பூமி வெப்பமயமாகிக் கொண்டிருப்பது பற்றி ஆராய்ச்சிகள் நடந்துவருவது, அதை எதிர்கொள்ள வேண்டிய நாடு தழுவிய நடவடிக்கைகள் பற்றிய ஆய்வில் அரசு துறைகளும் பல்வேறு இயக்கங்களும் ஈடுபட்டிருப்பதைப் பற்றியும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

அதேவேளையில் நமது நாட்டைப் பொருத்தவரை நாட்டு மக்கள் ஒவ்வொருவருடைய தனிப்பட்ட முயற்சியும் கிடைக்கப்பெருமானால் புவி வெப்பமயமாதல் எனும் பேரிடரை வீழ்த்த அது பேருதவியாக அமையும். அந்த நோக்கத்தோடுதான் பின்வரும் ஆலோசனைகள் தமிழ்நாட்டு மக்கள் மற்றும் தமிழ்ப்புலன்சார்ந்த அனைவர் முன்னும் வைக்கப்படுகின்றன.

இந்த ஆலோசனைகளெல்லாம் உலக அளவில் மருத்துவத் துறையிலும், விஞ்ஞான, தொழில்நுட்பத் துறைகளிலும் முத்திரைபதித்த நிபுணர்களால் வழங்கப்பட்டவையாகும். 

1. மின்சாரத்தை முடிந்தவரை மிச்சப்படுத்துதல் 
வழக்கமான மின்சார பல்புகளைத் தவிர்த்து ஃப்ளாரசென்ட் பல்புகள் மற்றும் எல்இடி பல்புகளை உபயோகித்தல். உபயோகப்படுத்தாதபோது மின்னணு சாதனங்களை அணைத்து வைத்தல்.
2. வீட்டு ஜன்னல்களை திறந்துவைத்தல்.
3. வீட்டினுள் புகைபிடிக்காதிருத்தல்.
4. சுடுநீரை முடிந்த அளவு தவிர்த்தல்.
5. சுடுநீரைத் தவிர்த்து வெதுவெதுப்பான நீரிலேயே துணிகளைத் துவைத்து, அலசுதல்.


6. எங்கெல்லாம்முடியுமோ அங்கெல்லாம்  மறுசுழற்சி செய்யப்பட்ட பொருள்களை உபயோகப்படுத்துதல்.
7. கார் வைத்திருப்பவராயின் எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் மற்றவரோடு சேர்ந்து காரில் பயணம்செய்தல். 
8. குறைவான தூரமாக இருப்பின் கார் அல்லது மோட்டார் சைக்கிள்களைத் தவிர்த்து சைக்கிள்களிலோ கால்நடையாகவோ பயணம் செய்தல்.
9. எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் மரம் நடுதல்.
10. குளிர்பதனப் பெட்டி, பாத்திரம் கழுவும் இயந்திரம், துணி உலர்ப்பான்கள், குளிர்சாதனப் பெட்டிகள், சமையல் அடுப்புகள், தண்ணீர் சூடாக்கும் இயந்திரங்கள், மைக்ரோவேவ் ஓவன்கள், இயந்திர அடுப்புகள் முதலான மின்னணு சாதனங்களை வாங்கும்போது “குறைவான மின்சாரத்தில் இயங்குபவை” என்ற சான்றோடு (“எனர்ஜி ஸ்டார்”) விற்பனை செய்யப்படும் சாதனங்களையே வாங்குதல் 

11. முடிந்த அளவு சைவ உணவுகளையே உண்ணுதல் 
12. முடிந்த அளவு பால்பொருட்களைத் தவிர்த்தல்
13. ஊள்ளுரில் தயாரிக்கப்படும் உணவுகளையே உண்ணுதல் 14. தயாரிக்கப்பட்ட உணவுகளை வீணாக்காதிருத்தல் 
15. அதிகப்படியாக பாக்கெட் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும் பொருள்களை வாங்குவதைத் தவிர்த்தல் 
16. கணினியை உபயோகப்படுத்துபவர்கள் மடிக்கணினியைத் தவிர்த்து டெஸ்க்டாப் கணினிகளையே பயன்படுத்துதல் 
17. அறைகளில் வீட்டிலேயே வளர்க்கத்தகுந்த செடிகளை வளர்க்கமுயற்சித்தல்
18. பொதுப் போக்குவரத்து வாகனங்களை பயன்படுத்துவதை அதிகரிக்க முயற்சித்தல் 


19. தரைவிரிப்புகள் உபயோகப்படுத்துவதை முடிந்தவரை தவிர்த்தல் 
20. ப்ளாஸ்டிக் பைகள் உபயோகப்படுத்துவதை முழுவதுமாகத் தவிர்த்தல் 
21. குளிர்சாதனத்தைத் தவிர்த்து மின்விசிறிகளைப் பயன்படுத்துதல் 
22. ரசாயனப் பொருள்கள் கலந்த வண்ணப்பூச்சுகளையோ, வாசனை திரவியங்களையோ பயன்படுத்தவதைத் தவிர்த்தல் 
மேலே குறிப்பிட்ட பெரும்பாலான நடைமுறைச் செயல்பாடுகள் நமது நாட்டில் அடிமட்ட ஏழைகளைத் தவிர்த்து மற்ற அனைத்து மக்களிடமும் அநேகமாகக் காணப்படுபவைதாம். 

இந்நிலையில் உலகளாவிய அறிஞர் குழுக்களின் ஆலோசனைகளை முடிந்த அளவு நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் செயல்படுத்துவரெனில், அப்பங்களிப்பு நாடளவில் புவிவெப்பமாதல், பருவநிலையில் மாற்றம், காற்றின் மாசுபாடு எனும் பேரிடர்களை எதிர்கொள்ளும் பலமானசக்தியாக உருவெடுக்குமென்பதில் ஐயமில்லை. 

[கட்டுரையாளர் - காப்பீட்டுத் துறையில் நெடிய அனுபவம் பெற்ற வல்லுநர், பல்வேறு பெரு நிறுவனங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவர், காப்பீட்டு ஆலோசகர்]

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com