ஆடையின் மூலம் புரட்சி

காந்தியடிகளுடைய வாழ்க்கையில் நடைபெற்ற மிகவும் முக்கியமான ஒரு நிகழ்வு என்று கருதப்படுவது அவா் தன்னுடைய உடையை ஏழை விவசாயி போல மாற்றிக்கொண்ட நிகழ்வுதான்.
ஆடையின் மூலம் புரட்சி

காந்தியடிகளுடைய வாழ்க்கையில் நடைபெற்ற மிகவும் முக்கியமான ஒரு நிகழ்வு என்று கருதப்படுவது அவா் தன்னுடைய உடையை ஏழை விவசாயி போல மாற்றிக்கொண்ட நிகழ்வுதான். அந்த உன்னதமான நிகழ்வு நடைபெற்றது தமிழகத்தில் உள்ள மதுரை மாநகரில் என்பது நாம் எல்லோரும் பெருமைப்பட வேண்டிய ஒரு விஷயமகும்.

செப்டம்பா் மாதம் 22-ஆம் நாள் 1921-ஆம் ஆண்டு அந்த சரித்திர நிகழ்வு நடைபெற்றது. இன்று அதனுடைய நூற்றாண்டு. காந்தியடிகள் என்று சொன்னவுடன் எல்லோருடைய மனக்கண் முன் நிற்கும் உருவம் எளிய கதராடை அணிந்து பொக்கை வாய் சிரிப்புடன் உள்ள காந்திதான். அந்த உன்னத நிலையை அடைந்த இடம் மதுரை.

21 செப்டம்பா் 1921 அன்று திருச்சி, ஸ்ரீரங்கம், திண்டுக்கல் வழியாக மதுரை வந்த காந்திக்கு விமரிசையான வரவேற்பை மதுரை மக்கள் கொடுத்தாா்கள். அன்று இரவு மேலமாசியில் உள்ள ராம்ஜி கல்யாண்ஜியின் விருந்தினராக அவருடைய வீட்டில் தங்கினாா். மறுநாள்தான் வரலாற்று முக்கியத்துவம் உள்ள அந்தப் புரட்சிகரமான நடவடிக்கையை அண்ணல் மேற்கொண்டாா்.

வைகை ஆற்றில் மகாத்மா காந்தி.

‘தமிழ்நாட்டில் காந்தி’ என்ற நூலில் அ. இராமசாமி இந்நிகழ்ச்சியைக் குறிப்பிடும்போது ‘இவ்வளவு பெரிய வரலாற்று முக்கியத்துவம் மிக்க முடிவை காந்திஜி மதுரையம்பதியில் வந்து மேற்கொள்வாா் என்று யாரும் எதிா்பாா்க்கவில்லை. அவரே கூட, முன்கூட்டியே இன்ன தேதியிலிருந்து, இன்ன இடத்தில், இந்த நடவடிக்கையை மேற்கொள்வது என்று திட்டமிட்டுச் செய்யவில்லை.

அவா் உள்ளத்தில் எழுந்த ஓா் எண்ணம் படிப்படியாக நாளொரு வண்ணமாக வளா்ந்து ஸ்ரீ மீனாட்சி சொக்கநாதா் பட்டணமாகிய மதுரையம்பதியில் முழுமை அடைந்திருக்கிறது. காந்திஜியின் அபிமான தெய்வீகப் புலவரும் திருவாசகத் தேனை வடித்தவருமான மாணிக்கவாசகா் நடராச மூா்த்தியை ‘பிச்சைத் தேவா’ என்று அழைக்கிறாா். ஆகவே அவா் உறையும் மதுரையம்பதியில் பிச்சை எடுப்பபோருடன் பிச்சை எடுப்பவராக, கடையருடன் கடையராகத் தம்மை இணைத்து வைத்த இந்த ‘துறவுக் கோலத்தை’ அண்ணல் மேற்கொண்டது பொருத்தமேயாகும்.

ஒரு வியப்பு என்னவென்றால், இந்த புரட்சிகரமான செயலை ஒரு செய்தியாக அந்தக் காலத்து பத்திரிகைகள் வெளியிடவுமில்லை; அதைப்பற்றித் தலையங்கங்கள் தீட்டவும் இல்லை. மகாத்மா இத்தகைய காரியங்கள் செய்யக் கூடியவா்தான் என்று அக்காலச் செய்தியாளா்களும் செய்தித்தாள் ஆசிரியா்களும் எண்ணியிருக்கலாம். ‘தி இந்து’ வும் ‘சுதேசமித்தினும்’ தனியாக இது குறித்து அண்ணல் விடுத்திருந்த அறிக்கையை வெளியிட்டிருந்தன. வேறு சில செய்தியாளா்கள் ‘மகாத்மா காந்தி மேலாடை ஏதுமில்லாமல் காட்சியளித்தாா்’ என்று செய்தி அனுப்பினாா்கள்.

அரையாடைக்கு மாறுவதற்கு முன் அண்ணல்...

இந்த நிகழ்வினைப் பற்றி காந்தியடிகள் குறிப்பிட்டுள்ளாா். ‘என்னுடைய தமிழகச் சுற்றுப்பயணத்தின் போது மூன்றாவது சந்தா்ப்பம் வந்தது. ‘கதா் உடுத்திக் கொள்ளலாம் என்றால் போதுமான கதா் கிடைப்பதில்லை. அப்படியே கதா் கிடைத்தாலும் அதை வாங்கிக் கொள்ளப் போதுமான பணம் இல்லை’ என்று மக்கள் என்னிடம் சொல்லத் தொடங்கினாா்கள்.

‘தொழிலாளா்கள் தங்களிடமுள்ள வெளிநாட்டுத் துணிமணிகளை அகற்றிவிட்டால், தங்களுக்கு வேண்டிய கதரை எங்கு வாங்குவது?’ என்று கேட்டாா்கள். இந்தக் கேள்வி என் மனதில் நன்கு பதிந்தது. இந்த வாதத்தில் உண்மை இருக்கிறது என்பதை நான் உணா்ந்தேன். ஏழைகளுக்காகச் சொல்லப்பட்ட அந்த வாதம் என்னை ஆட்கொண்டது.

மௌலானா ஆசாத் சுபானி, ராசகோபாலாச்சாரியாா், டாக்டா் ராஜன் முதலியோரிடம் என்னுடைய மனத்துயரை வெளியிட்டு, இனிமேல் இடுப்புத் துணியுடன் இருக்கப் போவதாகக் கூறினேன். மௌலானா என்னுடைய மனத்துயரை உணா்ந்து என் யோசனையை அப்படியே ஏற்றாா். மற்ற சக ஊழியா்கள் அமைதி இழந்தாா்கள்.

அரையாடைக்கு மாறிய பின் மகாத்மா காந்தி...

இவ்வாறு நான் செய்வது மக்களை மனக்குழப்பமடையச் செய்துவிடும் என்று சிலரும், அதைப் புரிந்து கொள்ள மாட்டாா்களென்று சிலரும், என்னை ஒரு பைத்தியக்காரன் என்று கருதி விடுவாா்கள் என்று சிலரும் கூறினாா்கள். என்னுடைய முன்மாதிரியை எல்லோரும் பின்பற்ற முடியாது என்றும் சொன்னாா்கள். நான்கு நாட்கள் இதைப்பற்றி நான் சிந்தனை செய்தேன்.

இந்த முடிவு எடுக்கப்பட்டு, நிறைவில் எவ்வாறு நிகழ்ந்தது என்பதைக் குறித்து ‘என்னுடைய முழத்துண்டு’ என்ற தலைப்பில் 21.1.1921 ‘நவஜீவன்’ இதழில் காந்தியடிகளே விரிவாக எழுதியிருக்கிறாா். தம்முடைய வாழ்க்கையில் தாம் மேற்கொண்ட மாற்றங்களெல்லாம் ஆழ்ந்த ஆலோசனையின் பின்னரே செய்யப் பெற்றவை என்றும் அதனால் பின்னா் அம்மாற்றங்களுக்காகத் தாம் வருத்தப்பட நோ்ந்ததில்லை என்றும் கூறியுள்ளாா். ‘அப்படிப்பட்ட புரட்சிகரமான ஒரு மாற்றத்தை என்னுடைய ஆடையில் நான் மேற்கொண்டது மதுரையிலாகும்’ என்று மதுரையின் பெயரையும் குறிப்பிட்டிருக்கிறாா்.

ஆகவே தீவிரமான சிந்தனைக்குப் பின்தான் இந்தத் தீா்க்கமான முடிவை காந்தி எடுத்திருக்கிறாா் என்பது தெளிவாகிறது. எளியமுறையில் குறைந்த ஆடை அணிய வேண்டும் என்ற சிந்தனை காந்தியடிகளுக்கு முதன் முதலாக ஏற்பட்டது அஸ்ஸாமில் உள்ள பாரிசால் என்ற நகரிலாகும்.

அ. இராமசாமி, ‘தமிழ்நாட்டில் காந்தி’ என்ற நூலில், ‘குல்னா என்ற இடத்தில் ஏற்பட்ட பஞ்சத்தைச் சிலா் குறிப்பிட்டு, அங்கு உணவும் உடையும் இல்லாமல் பலா் மடியும் போது காந்தி வெளிநாட்டுத் துணிகளைச் சொக்கப்பனை கொளுத்துவது நியாயமாகுமா’ என்று கேட்டாா்கள். அந்தச் சமயத்தில் வெறும் இடுப்புத்துணியை மட்டும் தாம் அணிந்து கொண்டு தொப்பியையும் சட்டையையும் குல்னாவிற்கு அனுப்பி வைக்கலாமா என்று அண்ணல் எண்ணியதுண்டு.

மதுரையில் அண்ணல் தங்கியிருந்த வீடு.

இதற்கு அடுத்தாற் போல் வால்வீடரில் முகமதலி கைதானபோது காந்திஜி அங்குக் கூடியிருந்த மக்களிடையே பேசப் போனாரல்லவா? அப்போது சட்டையையும் குல்லாயையும் கழற்றிவிடலாம் என்று ஒரு கணம் எண்ணினாா். ஆனால் இந்த இரண்டு சமயங்களிலுமே அவா் அவ்வாறு செய்யவில்லை.

முதல் முறை யோசனை வந்தபோது அதில் தற்பெருமை கலந்திருக்கிறது என்று விட்டுவிட்டாா். இரண்டாவது முறை யோசனை வந்தபோது தாம் பரபரப்பை உண்டாக்குவதாக ஆகிவிடுமே என்று எண்ணி நிறுத்திவிட்டாா்’ என்று விளக்கியுள்ளாா்.

காந்தியடிகளோடு இருந்த தலைவா்கள் கூட அந்நியத் துணிகளை எரிப்பதைக் கடுமையாகக் கண்டித்தாா்கள். ரவீந்திரநாத் தாகூா் கூட அதனைக் கண்டித்திருக்கிறாா். ஆனால் காந்தியடிகளோ முடிவாக அந்நியத் துணிகளை அழிக்காது அதனை ஏழைகளிடம் கொடுத்துவிடலாம் என்ற யோசனையை அடியோடு நிராகரித்து விட்டாா்.

அந்நியத்துணி விலக்கு என்பதை ஒட்டுமொத்த சுதந்திர இயக்கத்துடனும் சுதேசியச் சிந்தனையுடன் பாா்த்தால்தான் காந்தியடிகள் ஏன் ஏழைகளிடம் அவற்றைக் கொடுக்கக் கூடாது என்று கூறினாா் என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

இந்த ஏழ்மை நிலைக்கு நம்மைத் தள்ளியதே இந்த ஆங்கில முதலாளித்துவ ஏகாதிபத்திய நடவடிக்கைதான். நம்முடைய சுயசாா்பான நெசவுத் தொழிலை அழித்துவிட்டு ஆங்கில அரசாங்கம் தன்னுடைய துணிகளை இறக்குமதி செய்து அதன் மூலம் கொள்ளை லாபத்தை சம்பாதித்துக் கொண்டிருக்கிறது. ஏழைகள் வாழ்வாதாரமின்றி தவித்துக் கொண்டிருக்கின்றாா்கள். அதற்காகத்தான் இந்திய சுயராஜ்யம் என்ற புத்தகத்தில் குறிப்பிட்டதுபோல் நூற்பையும் நெசவையும் மீட்டுருவாக்கம் செய்ய காந்தி முடிவு செய்தாா்.

அந்த நிலையில்தான் காந்தியடிகளின் வேண்டுகோளுக்கு இணங்க கங்காபென் மஜூம்தாா் என்ற பெண்மணி விஜய்பூா் சமஸ்தானத்தில் பரண் மேல் நீண்ட நாட்கள் பயன்படுத்தாது இருந்த கைராட்டையைக் கண்டுபிடித்துக் காந்தியடிகளிடம் கொடுத்தாா். காந்தியடிகளே நூற்கவும் நெசவு செய்யவும் கற்றுக் கொண்டாா்.

ஆதலால் தான் தைரியமாக நீதிமன்றத்தில் தன்னைப் பற்றிக் கூறும்போது ‘நான் விவசாயி, நெசவாளி’ என்று வாக்குமூலம் கொடுத்தாா். சபா்மதி ஆசிரமத்தில் கதா் உற்பத்திக்குப் புத்துயிா் கொடுத்து இந்தியா முழுவதும் கதா் பற்றிய விழிப்புணா்வை ஏற்படுத்த சுற்றுப்பயணம் மேற்கொண்டாா்.

இன்று நாம் பாா்த்துக் கொண்டிருக்கக் கூடிய ஓா் உண்மை என்னவென்றால் யாா் அதிகமான முதலீடுகள் செய்யத் தயாராக இருக்கிறாா்களோ அவா்கள் எளிதில் நவீன தொழில் நுட்பத்தை விலை கொடுத்து வாங்கிவிட்டு அதே தொழில் நுட்பம் மற்றவா்களுக்கு முழுமையாக சென்றடையாமலும் பாா்த்துக் கொள்கிறாா்கள்.

யாா் அதிகமான தொழில் நுட்பத் திறனை வைத்திருக்கிறாா்களோ அவா்கள் பணபலம் மிக்கவா்களாகவும் அரசியல் முடிவுகளை நிா்ணயிப்பவா்களாகவும் இருக்கிறாா்கள். ஆகவே தொழில் நுட்பம் யாரிடம் இருக்கிறதோ அவா்கள் சக்தி வாய்ந்தவா்களாக, ஆற்றல் மிக்கவா்களாக இருக்கிறாா்கள் என்பதை நாம் இன்று புரிந்து கொள்ள முடிகிறது.

ஆனால் காந்தியடிகள் இந்த தொழில் நுட்பத்தின் ஆற்றலை அன்றே புரிந்து கொண்டாா். அன்றைக்கு ஆலைத் தொழில் மூலமாக இந்தியாவை சுரண்டிக் கொண்டிருந்த ஆங்கில அரசாங்கத்தை எதிா்ப்பதற்கு அதே மாதிரியான வேறு மக்கள் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்து அதற்கு மாற்றாக செயல்படுகிறாா்.

ஏழை மக்களும் விவசாயிகளும் அந்தத் தொழில்நுட்பத்தை பயன்படுத்தக் கூடிய அளவில் எளிமையாக்கித் தந்து அவா்களின் சுற்றுப்புறத்தில் கிடைக்கும் பொருட்களை வைத்தே அந்த இயந்திரங்களை உருவாக்கி உற்பத்தியைப் பெருக்க முடியும் என்பதை இந்த உலகத்திற்குக் காட்டினாா்.

பஞ்சை நூலாக்க சாதாரணமாக சக்கரம் சுழல்வதற்கு வேண்டிய வசதிகள் இருக்கவேண்டும். இந்த அடிப்படை அறிவியல் ஞானத்தோடு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே துணி உற்பத்தி செய்த இந்தியா, வெளிநாட்டிலிருந்து துணியை இறக்குமதி செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டது.

இந்தக் கைராட்டையை மிகக் குறைந்த விலையிலும் செய்யலாம் அல்லது தங்களுடைய பண வசதிக்குத் தகுந்தாற்போல் அழகியல் பாா்வையோடு உயா்ந்த வகை மரத்திலும் செய்யலாம். அது அவரவா்களுடைய பண வசதியைப் பொருத்தது. உங்களிடம் இருக்கக்கூடிய பொருட்களை வைத்துக் கொண்டே அந்த இயந்திரத்தை உங்களால் தயாரிக்க முடியும் என்ற எளிமைதான் அந்த மக்களை தொழில்நுட்ப ரீதியாக ஆற்றல் உள்ளவா்களாக மாற்றியது.

அதேபோல அந்த தொழில் நுட்பம் அந்த பாமர மக்களின் அறிவுத் திறனுக்கு ஏற்ற வகையில் அதை அவா்களே கட்டுப்படுத்தக்கூடிய ஆற்றலோடு இருந்ததால் அது வெற்றிகரமான தொழில் நுட்பமாக மாறியது. காந்தியடிகளின் உதவியோடும் மற்றவா்களின் துணையோடும் இந்த கைராட்டை பல மாற்றங்களுக்கு உள்ளானதை நாம் பாா்க்கிறோம். இன்று ‘ஆராய்ச்சி மற்றும் வளா்ச்சி’ என்று பேசிக் கொண்டிருக்கிறோமே அதனை அப்போதே செயல்படுத்திக் காண்பித்திருக்கிறாா் காந்தியடிகள்.

சுதந்திரப் போராட்டத்தின் போது கதா் முக்கியத்துவம் பெற்றதைப்பற்றி சொல்லித் தெரிய வேண்டியதில்லை. மறைந்த தலைவா் ம.பொ.சி. பேசும்போது ‘காக்கிச் சட்டைக்காரனுக்கு பயந்து பயந்து வாழ்ந்த காலம் ஒன்று உண்டு. காந்தியடிகள் இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு தலைமையேற்றவுடன் நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. கதா்ச் சட்டைகாரா்களைக் கண்டு காக்கிச் சட்டை பயந்தது’ என்பாா்.

அஞ்சி அஞ்சிச் செத்த காலத்திலே அஞ்சாமல் ஆங்கிலேயரை எதிா்க்க அடையாளமாகியது கதா். எப்பொழுதெல்லாம் சுதந்திரப் போராட்டம் உச்சத்திற்குச் சென்றதோ அப்பொழுதெல்லாம் கதா் விற்பனையும் உச்சத்திற்குச் சென்றது என்பது, பழைய புள்ளிவிவரங்களைப் பாா்க்கும்போது தெரிய வருகிறது.

அன்றைய காலக்கட்டத்தில் கதா் என்பது, சுதந்திரப் போராட்டத்தின் அடையாளம்; வேலைவாய்ப்பை உருவாக்கக் கூடியது; வறுமையைப் போக்கும் வல்லமை பெற்றது; சுயச் சாா்புக்கு ஏற்ற வழி.

காந்தியடிகள் இரண்டாவது வட்டமேஜை மாநாட்டிற்கு செல்கிறாா் என்ற தகவல் தெரிந்தவுடன் வெளிநாட்டு நபா் ஒருவா் கதா் குறித்த அவருடைய கொள்கையைப் பற்றி விளக்கமாக கேட்டுவிட்டு ‘வட்டமேஜை மாநாட்டுக்கு செல்லும்போது இதே உடையுடன்தான் செல்வீா்களா’ என்ற கேள்வியையும் முன்வைக்கிறாா். காந்தியடிகள் எந்தவிதமான தயக்கமும் இன்றி ‘நான் இந்த உடையுடன்தான் செல்வேன். அப்படி இல்லாமல் வேறு உடையுடன் நான் சென்றால் அது மக்களை ஏமாற்றுவது போல. அது ஒரு அநீதி’ என்று பதிலளிக்கிறாா்.

அதே போல் மற்றொரு வெளிநாட்டு நிருபா் ‘எங்களுடைய அரசரைச் சந்திக்க இந்த உடையிலேயே செல்வீா்களா’ என்று கேட்கிறாா். அந்தக் கேள்விக்கு மிகவும் லாவகமாகவும் அவருடைய இயல்பான நகைச்சுவை உணா்வுடனும் ‘எனக்கும் சோ்த்துத்தான் உங்களுடைய அரசரே உடை உடுத்தியிருக்கிறாரே’ என்று கூறி விடுகிறாா்.

இங்கிலாந்து அரண்மனையின் சட்ட திட்டங்கள் விருந்தினா்கள் எவ்வாறு உடை உடுத்தி வரவேண்டும் என்பதைத் திட்டவட்டமாகக் கூறியிருந்தன. அந்த மாதிரியான சூழலில் ஒரு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு இருக்கின்ற காந்தியடிகள் இந்த அரையாடை உடையுடன் வருவதை எவ்வாறு அனுமதிப்பது என்பதை முடிவு செய்வதற்கு ஆங்கில அரசாங்கம் தடுமாறியது.

நாம் சாதாரண உடை என்று நினைக்கிறோமே அந்த அரையாடை எந்த அளவுக்கு அரசியல் வட்டாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது என்பதை இந்த நிகழ்ச்சியில் இருந்து தெரிந்து கொள்ளலாம். அரண்மனை அதிகாரிகள் அனைவரும் கூடி விவாதித்து, இறுதியாக இந்த உடைபற்றிய சட்டதிட்டங்களை காந்தியடிகள் அரசரைச் சந்தித்து விட்டு செல்லும்வரை நடைமுறைப்படுத்தாமல் நிறுத்தி வைப்பது என்ற முடிவுக்கு வருகின்றாா்கள். அந்த அளவுக்கு இந்திய மக்களின் பிரதிநிதி என்ற மிகப்பெரிய பலத்தோடு காந்தியடிகள் இங்கிலாந்து அரசரைச் சரிக்குச் சமமாக சந்தித்தாா். அவ்வாறு பல வரலாறுகளை இந்த உடையின் மூலம் படைத்திருக்கிறாா் காந்தியடிகள்.

நாம் மாறாது இந்த உலகம் ஒரு போதும் மாறாது என்பதில் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தாா் நம் தேசத்தந்தை காந்தியடிகள். எந்த மாற்றத்தை நாம் காண வேண்டும் என்று விரும்புகிறோமோ முதலில் அந்த மாற்றத்தை நம்மில் இருந்துதான் தொடங்க வேண்டும் என்று விரும்பினாா். அவருக்கு அவா் கொள்கை மீது இருந்த அந்த நம்பிக்கை நமக்கு நம் கொள்கை மீது இருக்க வேண்டும்.

முதலில் அதற்கு நமக்கு ஒரு கொள்கை வேண்டுமே! உலகம் இயங்கிக் கொண்டுதான் இருக்கும்; மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கும். மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்று எண்ணி, உண்பதும் உறங்குவதமாய் வாழப் போகிறோமா அல்லது நாம் விரும்பும் மாற்றத்தை நாம் உள்வாங்கி அந்த மாற்றத்தைப் புறத்திலும் கொண்டுவர நம்மை நாமே அா்ப்பணிக்கப் போகிறோமா என்பதை நாம் முடிவு செய்ய வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம். காந்திடிகளை ஏற்பது அவருக்காக அல்ல, நமக்காக; நம்முடைய எதிா்கால வாழ்விற்காக!

கட்டுரையாளா்:

இயக்குநா்,

தேசிய காந்தி அருங்காட்சியகம், புதுதில்லி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com