தமிழ் கலாசாரத்தின் முக்கிய படிக்கல்லாக விளங்கும் கொடுமணல்

ஏட்டோடு வார்த்தையாக, பாட்டோடு எழுத்தாக நூலுக்குள் அடங்கிப்போய் கிடந்த கொடுமணம் இப்போது தமிழ்க் கலாசாரத்தின் முக்கிய படிக்கல்லாக தோண்டத்தோண்ட ஆச்சரியம் தரும் கொடுமணலாக மாறி இருக்கிறது.
அகழாய்வில் ஈடுபட்ட தொல்பொருள் ஆய்வாளர்கள், பணியாளர்கள்
அகழாய்வில் ஈடுபட்ட தொல்பொருள் ஆய்வாளர்கள், பணியாளர்கள்

'கொடுமணம் பட்ட வினைமான் நன்கலம்' என்ற வரிகள் பதிற்றுப்பத்தில் 67 ஆவது வரியாக கபிலர் கூறுகிறார். அதே பதிற்றுப்பத்தில் 74 ஆவது வரியாக கொடுமணம்பட்ட வினைமாண் அருங்கலம் என்ற பாடல் வரி வருகிறது. அரிசில் கிழார் கூறிய இந்த பாடல் வரிகளும் கபிலரின் பாடல் வரிகளும் கொடுமணம் என்ற ஒரு இடத்தைப்பற்றி கூறுகின்றன. கொடுமணம் என்கிற ஊரில் வேலைப்பாடு மிக்க சிறந்த அணிகலன்கள் உருவாக்கப்பட்டதை இந்த வரிகள் கூறிச் சென்றன.

ஏட்டோடு வார்த்தையாக, பாட்டோடு எழுத்தாக நூலுக்குள் அடங்கிப்போய் கிடந்த கொடுமணம் இப்போது தமிழ்க் கலாசாரத்தின் முக்கிய படிக்கல்லாக தோண்டத்தோண்ட ஆச்சரியம் தரும் கொடுமணலாக மாறி இருக்கிறது.

சங்க இலக்கியத்தில் கொடுமணம் என்று குறிப்பிடப்பட்ட இடம்தான் ஈரோடு மாவட்டத்தில் சென்னிமலை ஒன்றியத்துக்குள்பட்ட கொடுமணல் கிராமம். இந்த 2 ஊர்களும் ஒன்றே என்று கல்வெட்டு அறிஞர் புலவர் செ.ராசு ஆதாரங்களுடன் கூறுகிறார். கொடுமணல் பகுதியில் கடந்த ஆண்டு வரை பலமுறை அகழ்வராய்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன.

1950ல் தொடங்கிய அகழ்வாராய்ச்சி

தொடக்கத்தில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலும் அகழ்வாராய்ச்சிகள் தமிழகத்தின் பல பகுதிகளில் நடந்தது. 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஈரோடு மாவட்டப் பகுதிகளில் பர்கூர் உள்ளிட்ட இடங்களில் நடந்த அளவுக்கு கொடுமணலில் அகழ்வாராய்ச்சிகள் நடைபெறவில்லை. அதற்கு பல்வேறு காரணிகள் இருக்கலாம். ஆனால், 1950-களில் சீனிவாச தேசிகர் என்பவர்தான் முதன்முதலில் கொடுமணலில் முறையான அகழ்வராய்ச்சியைத் தொடங்கினார். அவர் வந்தபோது தற்போது அகழ்வராய்ச்சி நடைபெறும் இடத்துக்கு பாண்டியன் காடு என்ற பெயர் இருந்தது. தற்போது அது பாண்டியன் நகராக மாறி இருக்கிறது. சீனிவாச தேசிகர் இங்குள்ள பழைய கல்லறையை அடையாளப்படுத்தினார். பின்னர் சங்ககாலத்து மணிகள், சங்குகள் கிடைப்பதையும் உறுதி செய்தார்.

கடந்த ஆண்டு நடந்த அகழாய்வில் சேகரிக்கப்பட்ட பொருள்கள்.
கடந்த ஆண்டு நடந்த அகழாய்வில் சேகரிக்கப்பட்ட பொருள்கள்.

நொய்யல் ஆற்று நாகரீகம்

1961 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை அதிகாரி நாகசாமி தலைமையிலான குழுவினர் இங்கு ஆய்வு நடத்தினர். அப்போது கொடுமணல் ஒரு நகரப்பகுதியாக இருந்தாகவும், சங்ககாலத்துக்கு முந்தைய நாகரிகம் கொண்டதாக அது இருந்திருக்க வேண்டும் என்பதையும் உறுதிப்படுத்தினார்.
1990களில் கல்வெட்டு அறிஞர் புலவர் செ.ராசு, சங்கப்பாடல்கள் மூலம் கொடுமணம் என்ற ஊர்தான் கொடுமணல் என்று ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்தார். அவரும், பேராசிரியர் ஒய்.சுப்பராயலு என்பவரும் கொடுமணல் பகுதிகளுக்கு வந்து முறையான ஒரு அகழ்வராய்ச்சி மேற்கொண்டனர். இந்த ஆய்வு முடிவுகளின்படி கொடுமணல் நாகரிகம் என்ற நாகரிகம் நொய்யலாற்றை மையப்படுத்தி இயங்கி இருக்கிறது என்பதை புத்தகமாக புலவர் செ.ராசு வெளிக்கொண்டு வந்தார். அதற்குப் பின்னர் அவ்வப்போது கொடுமணலில் ஆய்வுகள் தொடர்ந்து கொண்டே இருந்தது.

இங்கு வாழ்ந்த மக்கள் இயற்கை சீற்றம் காரணமாக அழிந்து போயிருக்கலாம் என்றே தெரிகிறது. 2019 இல் நடந்த அகழாய்வில் சுமார் 500 கிலோ எலும்புகள் சேகரிக்கப்பட்டது. அவை பெரும்பாலும் விலங்குகளின் எலும்புகளாக உள்ளன. மண்ணால் செய்யப்பட்ட இந்த ஓடுகளை இங்கு காண முடிகிறது. அப்போதே மிகச்சிறந்த தொழில்நுட்பத்துடன் வீடுகளை அமைத்துள்ளனர். இங்கு இரும்பை உருக்கி ஆயுதங்கள் செய்யும் தொழிற்சாலை, செப்பு பாத்திரங்கள் செய்யும் ஆலை, மண்பாண்டங்கள் செய்யும் ஆலை, கல் மணிகள் செய்யும் ஆலை, சங்கு வளையல்கள் செய்யும் ஆலை என்று தனித்தனியாக இங்கு தொழிற்சாலைகள் இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன.

அதுமட்டுமின்றி தொழிற்கூடங்களுடன் வீடுகளும் அமைந்திருக்கின்றன. அவையும் உறுதி செய்யப்பட்டுள்ளன. தொழிற்சாலைகள் வைத்து பலருக்கு வேலைவாய்ப்பு அளித்ததுடன், கால்நடைகளும் வளர்த்து இருக்கிறார்கள். இங்கு 2 குழிகள் உள்ளன. அவை கிணறு அல்லது தானியக்கிடங்காக இருக்கலாம் என அகழாய்வு அறிஞர்கள் கூறுகின்றனர்.

கி.மு.6 ஆம் நூற்றாண்டு காலம்

அகழாய்வு எச்சங்கள் ஆய்வின் அடிப்படையில் இங்கு வாழ்ந்த மக்கள் கி.மு. 6 ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய காலத்தை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். இங்கு கிடைத்திருக்கும் மண்பானைகள் அதை உறுதி செய்கின்றன. மண்பானைகள் ஒவ்வொன்றும் உறுதியாக நேர்த்தியாக செய்யப்பட்டுள்ளன. அதில் பல வேலைப்பாடுகளும் செய்யப்பட்டிருக்கின்றன. அப்போது தமிழ் பிராமி எழுத்துக்கள் அவர்களின் எழுத்து மொழியாக இருந்திருக்கிறது. தமிழ் பிராமி எழுத்துக்களின் காலம் கி.மு.7 ஆம் நூற்றாண்டு என்பதால் இந்த மக்களும் அந்த காலத்தவர்கள் என்பதை உறுதியாக கூற முடியும்.

இங்கு கிடைத்த மண்பானைகளில் ஆதன், குவிரன், ஏகன், சம்பன் உள்ளிட்ட பல பெயர்கள் எழுதப்பட்டுள்ளன. இது அதை உருவாக்கியவர்கள் அல்லது யாருக்காக உருவாக்கினார்களோ அவர்களின் பெயர்களாகக் கூட இருக்கலாம். அவர்கள் இந்தப் பகுதியில் செல்வாக்கு மிகுந்த தலைவர்களாகவும் மதிப்புக்குரியவர்களாகவும்கூட இருந்திருக்கலாம். ஆனால், நன்கு கற்ற, தொழில் நேர்த்தி உடைய, உழைத்து வாழ்ந்த ஒரு சிறந்த பண்பாட்டு, நாகரிகம் மிக்க தமிழ் சமூகம் கி.மு.7 ஆம் நூற்றாண்டில் தலை நிமிர்ந்து இங்கே வாழ்ந்திருக்கிறது என்பது மட்டும் உண்மை.

ஆனால், இந்த இடம் எப்படி அழிவுபட்டது என்பது ஆய்வுக்கு உரியதாக இருக்கிறது. நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆற்றின் போக்கு திசைதிரும்பி குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளை அடித்துச்சென்று இருக்கலாம் என்பது யூகம். அதை உறுதி செய்ய புவியியல் பகுப்பாய்வுக்கு மண் மாதிரிகள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. அகழாய்வுப் பணிகள் பரப்பு அதிகரிப்பு, ஆய்வு முடிவுகள் மூலம் இன்னும் புதைந்து கிடக்கும் ஆச்சரியங்கள் நமக்கு கிடைக்கலாம் என்கின்றனர் அகழ்ய்வு அறிஞர்கள்.

ரோமானியர்கள் வந்து சென்ற இடம்

கொடுமணல் வாழ்விடம், தொழிற்சாலைகள் நிரம்பிய பகுதி மட்டுமின்றி மிகப்பெரிய வர்த்தகத் தலமாகவும் இருந்திருக்கிறது. இங்கு ரோமானியர்கள் வந்து சென்றதற்கு அடையாளமாக ரோமானியர்கள் நாணயங்கள் கிடைத்துள்ளன. சங்ககால முத்திரை நாணயங்கள் அகழாய்வில் கிடைத்துள்ளது. எனவே, பண்டமாற்று முறை மட்டுமின்றி நாணயத்துக்கு பொருள்கள் விற்பனை செய்யும் வர்த்தகம் நடந்த பகுதியாக இது திகழ்ந்திருக்கிறது.

ரோமானியர்கள் உள்பட வெளிநாட்டு வியாபாரிகள் அரபிக்கடலில் வந்து இறங்கி பாலக்காடு கணவாய் வழியாக வந்து மிளகு, வாசனைப் பொருட்கள் வாங்கிச் சென்றனர் என்றும் அவர்கள் நொய்யல் ஆறு வழியாக வந்து காவிரியில் பயணம் செய்து காவிரிப்பூம்பட்டினம் சென்று வங்காள விரிகுடாவுக்குச் சென்று இருக்கிறார்கள் என்ற சான்றுகள் உள்ளன.  

எனவே, வெளிநாட்டு வர்த்தகர்கள் மணிகள், சங்கு வளையல்கள் வாங்குவதற்காக நொய்யல் வழியாக கொடுமணல் வந்திருக்க வேண்டும். அதுமட்டுமின்றி சங்கு இந்த பகுதியில் கிடைக்காது. எனவே, வேறு பகுதியில் இருந்து அவற்றை வாங்கி வந்து அவற்றை அறுத்து வளையல்களாகச் செய்யும் தொழில்கூடம் இங்கு இருந்திருக்கிறது. எனவேதான் மழைக்காலங்களில் இங்கு மிச்சமாக கிடக்கும் சங்கு துண்டுகள் வெளிவருகின்றன. 

 கடந்த ஆண்டு நடந்த அகழாய்வில் சேகரிக்கப்பட்ட பொருள்கள். 
 கடந்த ஆண்டு நடந்த அகழாய்வில் சேகரிக்கப்பட்ட பொருள்கள். 


வர்த்தக மையம்

கொங்கு மண்டலத்தில் 9 வர்த்தகத் தலைநகரங்கள் நொய்யல் ஆற்றங்கரையில் இருந்ததாக கல்வெட்டுகள் கூறுகின்றன. அதில் ஒன்றாக கொடுமணல் திகழ்ந்து இருக்கிறது. இங்கு வரும் வெளி வியாபாரிகள் தங்கும் சத்திரங்கள் 'தாவளம்' என்ற பெயரில் இயங்கி உள்ளன. அதுபோல் நானாதேசி, திசை ஆயிரத்து ஐநூற்றுவர், வளஞ்சியர், அஞ்சுவண்ணத்தார் ஆகிய வர்த்தகக் குழுக்கள் சங்ககாலத்தில் இருந்ததாக பதிவுகள் உள்ளன. அதுபோல் வணிகக் குழுக்கள் வந்து செல்லும் ராஜகேசரி பெருவழி, வடஇந்தியாவையும் தென் இந்தியாவையும் இணைக்கும் தட்ஷிண பெருவழி ஆகியவை இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமின்றி இங்கு உள்ள ஈமக்காடு பகுதி 'மாண்டவர் காடு' என்று அழைக்கப்பட்டது. அது பாண்டவர் காடாக மருவி, பாண்டியன் காடு என்று மாறி விட்டது. இங்கு இதுவரை 30 கல்லறைகள் தோண்டப்பட்டுள்ளன. 3 வகையான கல்லறை அமைப்புகள் உள்ளன. குத்துக்கல் கல்லறை, வட்டக்கல்(கல்வட்டம்) கல்லறை, முதுமக்கள் தாழி வகை கல்லறை. இவை அந்தக் காலத்து மக்களின் சமூகப் பிரிவுக்கு ஏற்ப அமைக்கப்பட்டதா? அல்லது தகுதியின்படி அமைக்கப்பட்டதா? என்பது குறித்த ஆய்வு நடந்து வருகிறது.

ஆனால், மரணத்துக்குப் பின்னர் ஆன்மா வாழும் என்ற நம்பிக்கை உடையவர்களாக இருந்திருக்கிறார்கள் என்பது கல்லறைகளை பார்க்கும்போது தெரிகிறது. கல்லறைகளில் தானியங்கள், தண்ணீர் ஜாடிகள், அவர்கள் பயன்படுத்திய இரும்பு ஆயுதங்கள், செப்பு பாத்திரங்கள் என்று பல பொருட்கள் வைத்துள்ளனர். அவை அகழ்வாராய்ச்சியின்போது கிடைத்துள்ளன. இவற்றை வைக்க தனித்தனியாக அறைகள் வைத்து மேலே கல் பலகையால் மூடி உள்ளனர். சிலருக்கு கல் பலகைகளை குத்துக்கல்லாக நாட்டி இருக்கிறார்கள். சிலருக்கு உருளை கற்களை வட்டவடிவமாக அடுக்கி வைத்து இருக்கிறார்கள். சிலருக்கு முதுமக்கள் தாழியிலேயே அடக்க சடங்குகள் நடத்தப்பட்டு இருக்கின்றன.

பொதுவாக இந்த கல்லறைகளில் இருந்து முழுமையான மனித எலும்புகூடுகள் கிடைக்கப்படவில்லை. உடல் உறுப்பில் ஏதேனும் ஒரு பாகங்கள் மட்டுமே கிடைத்து உள்ளன. எனவே, இதுவும் புதிராகத்தான் இருக்கிறது. ஆனால் மரணத்துக்கு பின்னர் பல்வேறு சடங்கு முறைகளை பின்பற்றி இருக்கிறார்கள். அதன் எச்சமாகத்தான் இன்றும் நாம் படையல் வைத்து வழிபடுவது என்ற பழக்கமாக இருக்க வேண்டும்.

குறைந்தபட்சம் 2,300 ஆண்டுகளுக்கு முன்பே கொடுமணலில் ஒரு அறிவார்ந்த தமிழ்ச் சமூகம் வாழ்ந்து இருக்கிறது என்பது தொடர் அகழ்வராய்ச்சியில் கிடைத்திருக்கும் உறுதியான தகவல்களாக உள்ளன. இன்னும் இதை விரிவுடுத்தும்போது தமிழர்களின், குறிப்பாக கொங்கு மண்டல வாழ்க்கை முறை  கிடைக்கும். இங்கு வாழ்ந்தவர்கள் தொழில் முனைவோர்களாக இருந்த காரணத்தால்தான், இன்றும் கொங்கு மண்டல நகரங்கள் தொழில் சார்ந்து வளர்ச்சி அடைந்து வருகின்றனவோ என்ற எண்ணமும் உள்ளது என்கின்றனர் அகழ்ய்வு அறிஞர்கள்.

தொடர் அகழாய்வில் அதிசய தகவல்கள்

கொடுமணல் அகழ்வாராய்ச்சி இதுவரை இல்லாத பல புதிய விஷயங்களை வெளி உலகுக்கு கொண்டு வந்திருக்கிறது. சங்க கால முத்திரை நாணங்கள், மனித மண்டை ஓடு ஆகியவற்றுடன் அதிக அளவில் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் கிடைத்திருப்பது நாம் ஒரு அறிவார்ந்த சமூகத்தை நமது முன்னேர்களாக கொண்டிருந்திருக்கிறோம் என்பதாகும். தமிழ் பிராமி எழுத்துக்களை அவர்கள் பயன்படுத்தி இருப்பதன் மூலம் கி.மு. 7ம் நூற்றாண்டிலேயே தமிழர்கள் எழுத்தறிவு பெற்று சிறந்து விளங்கி இருப்பதும் புலனாகிறது. தற்போது இங்கு திட்டமிடப்பட்ட கட்டுமானங்கள் கிடைத்துள்ளன.

நேர்த்தியான இந்த வேலைப்பாடுகள் இன்னும் அகழ்ந்தெடுக்கும்போது மிகப்பெரிய ஆச்சரியத்தை கொடுக்கும். அதில் புதிய விஷயங்கள் தென்படும்போது, இன்றைய தலைமுறையினர் காலச்சக்கரத்தில் பயணித்து, சங்க காலத்துக்குள் நம் முன்னோர் எப்படி வாழ்ந்தார்கள் என்பதை நேரடியாக பார்க்கும் மிகப்பெரிய வாய்ப்பு கிடைக்கும்.

நம் முன்னேர்களான ஆதன், குவிரன், சம்பன், ஏகன் உள்ளிட்டவர்களின் பாதங்கள் பட்ட இடத்தில் இந்த தலைமுறையும் வருங்கால தலைமுறையும் பாதம் பதிக்கும். பண்பாட்டு தொடர்பு இன்னும் நீடிக்கும். ஆண்டுதோறும் அகழாய்வு மேற்கொள்ள தமிழக அரசு தொடர்ந்து முயற்சியும், ஊக்குவிப்பும் அளிக்க வேண்டும் என்பது தொல்லியல் ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.