சித்திரைப் பெருவிழாவில் அரங்கேறும் சின்ன மேளம்

சின்ன மேளம் என்ற சொல் நம் வழக்கத்தில் அதிகமாகப் பயன்படுத்தப்படுவதில்லை. குறிப்பாக, நாட்டியக் கலை, அதிலும் கோயில்களில் தேவரடியார்கள் (தேவதாசிகள்) ஆடிய நாட்டியத்தைக் குறிக்கும் சொல்.
தஞ்சாவூர் பெரியகோயிலில் சித்திரைப் பெருவிழாவில் நிகழும் சின்ன மேளம் (கோப்புப்படம்)
தஞ்சாவூர் பெரியகோயிலில் சித்திரைப் பெருவிழாவில் நிகழும் சின்ன மேளம் (கோப்புப்படம்)

மேளங்களில் சங்கீத மேளம், பெரிய மேளம், சின்ன மேளம், பாகவத மேளம், நையாண்டி மேளம், உறுமி மேளம் என பல வகையான மேளங்கள் உள்ளன.

மேளம் என்ற சொல்லுக்குத் தவில் இசை எனப் பொருள். நாகசுரம், தவில், ஒத்து, தாளம் ஆகியவற்றின் தொகுதியே மேளம் என அகராதி கூறுகிறது. இத்தகைய இசைக் கருவிகளின் சங்கமத்தை நாம் நாகசுரக் குழுவினர் வாசிப்பில் பார்த்திருக்கிறோம். அதை பெரிய மேளம் என அழைக்கிறோம்.

ஆனால், சின்ன மேளம் என்ற சொல் நம் வழக்கத்தில் அதிகமாகப் பயன்படுத்தப்படுவதில்லை. குறிப்பாக, நாட்டியக் கலை, அதிலும் கோயில்களில் தேவரடியார்கள் (தேவதாசிகள்) ஆடிய நாட்டியத்தைக் குறிக்கும் சொல். இப்போது போல அன்றைய நாட்களில் கோயில்களில் பக்கவாத்திய இசைக் கலைஞர்கள் தரையில் அமர்ந்திருக்க எதிரில் பரந்து விரிந்த மேடையில் நடன மாதர் ஆடுவது போல இல்லை.

இந்தச் சின்ன மேளம் என்ற அமைப்பில் நாட்டியமாடுகிற கலைஞர்கள், நட்டுவாங்கம் செய்யும் நட்டுவனார், முட்டுக்காரர் எனப்படும் மிருதங்க இசைக் கலைஞர், குழலிசை வழங்குவோர், தித்திக்காரர் ஆகியோர் இடம்பெறுவர்.

கோயிலில் நாள்தோறும் சன்னதி திறந்தது முதல் இரவு அர்த்த ஜாமம் வரையிலான அனைத்து பூஜை நேரத்திலும் அதிகாலை, காலை, பகல், மாலை, இரவு அர்த்தஜாமம் போன்ற நேரங்களில் நடைபெறும் பூஜை விதிகளில் நாட்டியக் கலைஞர்கள், இசைக் கலைஞர்கள் ஆகியோருக்கும் பங்கு உண்டு. அவ்வாறு ஒவ்வொரு வேலைக்கும் நடைபெறும் பூஜைகளின்போது இவர்களுடைய சேவையைச் செய்துவிட்டுத்தான் போக வேண்டும்.

தஞ்சாவூர் பெரியகோயிலில் சித்திரைப் பெருவிழாவில் நிகழும் சின்ன மேள விழா
தஞ்சாவூர் பெரியகோயிலில் சித்திரைப் பெருவிழாவில் நிகழும் சின்ன மேள விழா

இரவு அர்த்த ஜாமம் முடிந்தவுடன் சுவாமியைப் பள்ளியறையில் வைத்து அங்கு பாட்டுப் பாடி, ஆடி பூஜை முடியும் வரை இவர்களுக்குப் பணி உண்டு. இந்த வரிசையில் கும்ப ஆரத்தி என்பதைச் செய்யும் உரிமை அந்தந்த கோயிலின் தேவரடியார்களுக்குத்தான் உண்டு.

கோயில் தேவரடியார்களுக்கு நான்கு வேளை வழிபாட்டுக்கும் என்னென்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பான விதிமுறைகள் உள்ளன. காலை வேளையில் நாட்டியம் ஆடும் பெண் எழுந்து குளித்துவிட்டு, தெய்வ வழிபாடு செய்ய வேண்டும். அதற்காக அந்தப் பெண் அணிந்துகொள்ள வேண்டிய ஆடை வகைகளும் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. நீராடி உடலைத் தூய்மைப்படுத்திக் கொண்ட பெண், இதற்கென தைக்கப்பட்ட மேல் சட்டை, துப்பட்டா அல்லது சேலை, அரைக்கச்சை போன்றவற்றை அணிய வேண்டும். நெற்றியில் குங்குமப் பொட்டு வைத்துக்கொள்ள வேண்டும். உடலில் தங்க ஆபரணங்கள் அணிந்து கொண்டு இரு கால்களிலும் சலங்கை கட்டிக்கொள்ள வேண்டும்.
 
அப்படி நடந்து வரும் இப்பெண்ணின் பின்னால் மிருதங்கம், வீணை, சாரங்கி, தாளம் வாசிக்கிறவர்கள் அனைவரும் வரிசையாக நிற்க வேண்டும். இவர்கள் அனைவருமே தலைக்குத் தலைப்பாகை (முண்டாசு) அணிந்திருக்க வேண்டும். உடலுக்குப் பஞ்சக்கச்ச வேட்டி, முழுக்கைச் சட்டை, ஒரு வகை அங்கி (அல்லது சட்டை) இடுப்பில் இறுகச் சுற்றிய துப்பட்டா ஆகியவை அவசியம் அணிந்திருக்க வேண்டும். தவிர, தோளில் அங்க வஸ்திரம் கண்டிப்பாக அணிய வேண்டும்.

தஞ்சாவூர் பெரியகோயிலில் சித்திரைப் பெருவிழாவில் நிகழும் சின்ன மேள விழா 
தஞ்சாவூர் பெரியகோயிலில் சித்திரைப் பெருவிழாவில் நிகழும் சின்ன மேள விழா 

தாசிகள் அனைவருமே ஒரே பெயரில் அழைத்துவிடக் கூடாது. மன்னர்கள் வசிக்கும் அரண்மனையில் பணியாற்றும் நாட்டிய மகளிர் தாசிகள் என்றும், கோயிலில் பணிபுரிவோர் தேவதாசிகள் எனவும் பிரித்துப் பார்க்க வேண்டும். பொதுவாக இப்படி பணி அமர்த்தப்பட்டவர்கள் அழகிகளாகவும், இசை, நடனத்தில் சிறந்தவர்களாகவும் இருப்பர்.

இந்த விதிமுறைகள் நடனமணிகளுக்கு மட்டுமல்லாமல், நடன ஆசிரியர்களான நட்டுவனார்களுக்கும் பொருந்தும். இவர்கள் அணிகிற ஆடைகளில் சில கட்டுப்பாடுகள் உண்டு. அதுபோலவே அணியக்கூடிய நகைகளிலும் சில விதிவிலக்குகள் உண்டு. இவை எல்லாம் சுமார் 200 ஆண்டுகளுக்கு முந்தைய சில ஆவணங்கள் விரிவாகக் குறிப்பிடுகின்றன.

நாட்டியத் தாரகைகள் அணியக் கூடாத சில வகை நகைகளும் அந்த ஆவணங்களில் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, கழுத்தில் அணியக்கூடிய ஒரு வகை அலங்கார அணி, பானபாட்யா என்ற பெயரால் அணியக்கூடிய மார்புக்கச்சை, வைர ராக்கோடி என்ற ஒரு தலைக்கு அணிகலன், பேசரி என்ற மூக்கில் அணியும் நகை, ஐந்து கலசங்கள் கொண்ட பூகடி, அட்டிகை என்ற கழுத்தில் அணியும் நகை, வெள்ளியால் ஆன மெட்டி, தலையில் திருகுப்பூ ஆகியவை அணியக் கூடாது.

நகைகள், ஆடைகள் தவிர இவர்கள் ஒப்பனையில் சிலவற்றைத் தவிர்க்க வேண்டும். நெற்றியில் குங்குமத்தை வட்டமாகவும், குறுக்குவாட்டில் நீளமாகவும் இட்டுக் கொள்ளக்கூடாது. தலைமுடி பின்னலில் பட்டுக் குஞ்சலம், பட்டு ரிப்பன் வைத்துக் கட்டிக்கொள்ளக் கூடாது. பின்னலின் நுனியில் குஞ்சலம் கூடாது. தலையில் ஜரிகை வேலைப்பாடு அமைந்த நாடாக்கள் அணியக் கூடாது. மேலும், தலைக்கு அணியும் சில நகைகளில் கட்டுப்பாடுகள் உண்டு.

இவை தவிர உடலை ஆடையால் போர்த்திக் கொண்டுதான் வர வேண்டும். அது, வெள்ளை ஆடையாக இருக்கக் கூடாது. தலையில் கிருஷ்ணன் கொண்டை போட்டுக் கொண்டால், அதில் முத்துக்கள் கொண்ட சலங்கை இருக்கக் கூடாது. அணியும் ரவிக்கையில் தங்கம், வெள்ளி ஜரிகைகளால் நெய்ததாக இருக்கக்கூடாது. ரூமாஸ் என்ற கைக்குட்டை இருக்கக்கூடாது.

கோயில்களில் ஆடப்படும் நடனங்களில் உள்ளதுபோல இறைவன் பெயரால் அரண்மனையில் நாட்டியம் ஆடும்போது பதங்கள் ஆடக்கூடாது. மன்னரைப் புகழ்ந்து மட்டும் அங்கு ஆடலாம். இறைவன் சன்னதியில் இறைவன் புகழைப் பாடலாம். எங்கும் நர ஸ்துதி செய்யக் கூடாது. தற்காலத்தில் அவையில் அமர்ந்திருக்கும் பெரிய மனிதர்களைப் போற்றியும், பாராட்டியும், புகழ் பாடியும் பாடல் அமைத்துப் பாடுவதும், ஆடுவதும் உண்டு. அவை மேடைக்கு ஏற்றவை அல்ல.

இதுபோல ஏராளமான சமூகக் கட்டுப்பாடு வரையறைகளுக்குள்தான் நாட்டியக் கலைஞர்கள் நடனமாட வேண்டும் என்ற விதி இருந்தது. திருவிழாக் காலங்களில் சுவாமி வீதி வலம் வரும்போது ஆங்காங்கே மக்கள் கூடுமிடங்களிலும், சில தெரு சந்திப்புகளிலும் இசைக் கலைஞர்கள், நட்டுவனார் நின்று கொண்டு பாட, நாட்டியக் கலைஞர்கள் மக்கள் பார்க்கும்படி ஆட வேண்டும். இது சுவாமி ஊர்வலம் ஆலயத்துக்குத் திரும்பும் வரை நடைபெறும். இப்போதெல்லாம் சுவாமி ஊர்வலங்களும் குறைந்துவிட்டன. அங்கு நடைபெற வேண்டிய நாட்டியக் கலையும் இல்லாமல் போய்விட்டது.

சுவாமி வீதி உலா முடிந்து தட்டு சுற்றுதல் என்ற வைபவத்தின்போது சின்ன மேளக் கலைஞர்களுக்குக் கலைஞர் ஒருவருக்கு அக்காலத்திய அணா நான்கு சன்மானம் தாம்பூலத்துடன் கோயில் நிர்வாகத்தின் சார்பில் அளிக்கப்படும்.

கடந்த நூற்றாண்டுகளில் பழக்கத்தில் இருந்த பல்வேறு கலைகள் இந்த நூற்றாண்டில் பெரிதும் புதுப்பிக்கப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஏறத்தாழ 70 ஆண்டுகளுக்கு முன்பு மறைந்துபோன கோயில் வழிபாட்டில் இருந்த நடனக் கலை ஏறத்தாழ 10 ஆண்டுகளாக மீண்டும் புத்துயிர் பெற்று பல புதிய பெயர்களில் நடைபெறுகின்றன.

தஞ்சாவூர் பெரிய கோயிலில் நடைபெறும் சித்திரைத் திருவிழாவின்போது கொடியேற்றம் நடைபெறும் நாள் முதல் விழாக்காலம் முடியும் வரை சின்ன மேளம் என்ற நாட்டிய நிகழ்ச்சி மூலம் பெருவுடையாருக்கு நாட்டிய அஞ்சலி செலுத்தப்படுகிறது. இந்தக் கலை வழிபாட்டை மீண்டும் தொடங்கிய பெருமை தஞ்சை பாரம்பரிய கலை கலாச்சார கழகத்தின் பி. ஹேரம்பநாதன் உள்ளிட்டோரை சாரும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com