தமிழ்ப் புத்தாண்டு: 'ஞாயிறு போற்றுதும்'

தமிழர்கள் தமிழ்ப் புத்தாண்டு தினத்தை வழக்கமான பண்டிகை தினங்களில் ஒன்றாக பாரம்பரியமாகக் கொண்டாடி வருகின்றனர்.
தமிழ்ப் புத்தாண்டு: 'ஞாயிறு போற்றுதும்'

தமிழர்கள் தமிழ்ப் புத்தாண்டு தினத்தை வழக்கமான பண்டிகை தினங்களில் ஒன்றாக பாரம்பரியமாகக் கொண்டாடி வருகின்றனர். புதிய ஆண்டு பிறப்பதைக் கொண்டாடும் வகையில், சித்திரை மாதம் முதல் நாளை தமிழ் புத்தாண்டாகக் கொண்டாடி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் பிற நாடுகளில் வாழும் தமிழ் மக்கள் அனைவரும் சித்திரை மாதத்தின் முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டு பெரும் பண்டிகையாக கொண்டாடி வருகின்றனர். இக்கொண்டாட்டத்தில் பகிர்ந்து உண்ணுதல், பரிசு வழங்குதல் போன்ற பாரம்பரிய வழக்கங்களை கடைப்பிடித்து வருகின்றனர். பொதுவாக தமிழர் கொண்டாடும் பண்டிகைகளில் சூரியனுக்கு முதலிடத்தைத் தந்துள்ளனர்.

சிலப்பதிகாரம் எழுதிய இளங்கோவடிகள் 'ஞாயிறு போற்றுதும்' எனத் தொடங்குகிறார். பண்டையக் காலந்தொட்டு தமிழர் வாழ்வியலில் சோதிடம் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. அரசர்கள் போர் தொடங்குவதற்கும் முடிப்பதற்கும் சோதிட வல்லுநர்களின் ஆலோசனையைப் பெறுவர்.

மகாபாரதத்தில் பாண்டவர்களும், சோதிட சாஸ்திரம் அறிந்த சகாதேவன் கௌரவர்களுக்கும் போர் தொடங்க நாள் குறித்து தந்ததாகக் கூறப்பட்டுள்ளது.

சோதிட வல்லுநர்கள் பிரதானமான சூரியனின் சஞ்சாரத்தைக் கொண்டே சோதிடம் பலன்களைக் கணிக்கின்றனர். தமிழ்ப் புத்தாண்டு வழிபாட்டில் வேப்பம் பூவைக் கொண்டு தயார் செய்யப்படும் பச்சடி நல் உறவுகளோடு அளவளாவுதல், மருந்து நீர் வைத்தல் எனக் கடைப்பிடிக்கப்படுகிறது. தமிழ் நாள்காட்டியில் சித்திரை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடப்படுகிறது.

இதன் தொடர்புடையனவாக வைசாகி விஷூ கேரளத்திலும், பர்மிய புத்தாண்டு கம்போடியாவிலும் கடைப்பிடிக்கப்படுகிறது. சிங்கள புத்தாண்டு, தாய்லாந்து புத்தாண்டு என பல்வேறு நாடுகளில் வாழ்கின்ற தமிழர்கள் கொண்டாடி வருகின்றனர்.

ஒரு தமிழ் ஆண்டு என்பது வானியல்  ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் அளவிடப்பட்ட காலத்தைக் கொண்ட காலப்பகுதியாகும். பூமி சூரியனை ஒரு தடவை சுற்றிவர 365 நாட்கள் 6 மணி நேரம் 11 நிமிடம் 41 நொடிகள் ஆகின்றன. இதுவே தமிழ் வருடத்திலும் கால அளவாகும். சூரியன் மேஷ ராசியில் பிரவேசிக்கும்போது தொடங்கும் ஆண்டு மீன ராசியில் இருந்து வெளியேறும்போது முடிவடைகின்றது. ஆகவே, தமிழ் வருடத்தின் கால அளவு எப்போதும் சீரானதாகவே இருக்கிறது. அதன் அடிப்படையிலேயே தமிழ் புத்தாண்டு பிறக்கும் நாள், நேரம் கணிக்கப்படுகிறது.

தமிழ்ப் புத்தாண்டு சில ஆண்டுகளில் ஏப்ரல் 13 அல்லது 15 தேதிகளில் தொடங்கும். இதற்குக் காரணம் ஆங்கில கிரிகோரியன் நாட்காட்டி ஒரே சீரானதாக இல்லை என்பதே.

நடைமுறைக்கு ஏற்றதாக தமிழ்ப் புத்தாண்டு ஒரு குறிப்பிட்ட நாட்களில் கொண்டாடப்பட்டாலும் தமிழ்ப் பஞ்சாங்கங்களிலும் அந்த நாளில் ஆண்டு பிறக்கும் சரியான நேரம் குறிப்பிடப்பட்டிருக்கும். அதன் அடிப்படையிலேயே ஆண்டு காலம் கணிக்கப்படுகிறது. தமிழ்ப் புத்தாண்டு வரலாறு என்பதற்கான சான்றுகள் முழுமையாகக் கிடைக்கப் பெறவில்லை என நம்பப்படுகின்றது.

தமிழ் நாட்காட்டி ராசி சக்கரத்தை காலக் கணிப்பில் பயன்படுத்தும் ஒரு சூரிய நாட்காட்டி என்பதால் பன்னிரு ராசிகளிலும் முதல் ராசியான மேஷத்தில் சூரியன் உறையும் சித்திரையே முதல் மாதமாகக் கருதப்பட்ட தாக சொல்லப்படுகின்றது.

சங்க இலக்கியமான நெடுநல்வாடையில் மேஷமே முதல் ராசி என்ற குறிப்பு காணப்படுவதால் அதை மேலதிகச் சான்றாகக் கொள்ளலாம். எனினும் பத்தாம் நூற்றாண்டுக்குப் பிந்திய அகத்தியர் பன்னீராயிரம் பதினைந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த புட்ப விதி முதலான நூல்களில் தெளிவாக சித்திரை முதல் மாதம் என்று செல்வதாக தமிழ் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

பங்குனி இறுதி நாட்களிலும் அல்லது சித்திரை முதல் நாளிலும் தான் வழக்கமாக வேங்கை மரம் பூக்கும் மலைபடுகடாம் நூலில் தலைநாள் பூத்த பொன் இணர் வேங்கை என்றும் பழமொழிநானூறில் கனி வேங்கை நன்னாரே நாடி மலர்களால் என்றும் பாடுவதால் இளவேனில் துவக்கமான சித்திரையே அக்காலத்தில் தலைநாளாக மிளிர்ந்தது என்றும் சொல்கிறார்கள்.

இலங்கையில் தமிழரும் சிங்களவரும் சித்திரை ஒன்றையே புத்தாண்டாகக் கொண்டாடுகின்றார்கள். கி.பி. 1310 காலக்கட்டத்தில் இலங்கையை ஆண்ட மன்னன் மூன்றாம் பராக்கிரமபாகுவின் அரசு குருவான தேவரை பெருமான் எழுதிய சரசோதி மாலை எனும் நூலில், வருடப் பிறப்பின்போது செய்ய வேண்டிய சடங்குகள் விவரிக்கப்பட்டுள்ளன.

மேலும், சித்திரை மாதம் தமிழர் புத்தாண்டுக்கு முந்தைய நாட்களில் வீடு வாசலை சுத்தம் செய்வதிலும் அலங்கரிப்பதும், தலைவாசலில் மா,பலா, வாழை ஆகிய முக்கனிகளில் அலங்கரிக்கின்றனர். புத்தாண்டு வழிபாட்டில் வாசனை மிகுந்த மலர்கள், வெற்றிலை, பாக்கு, பொன்னால் ஆபரணங்கள், நெல் முதலான மங்கலப் பொருள்கள் வைத்த தட்டை வழிபாட்டு அறையில் வைத்து அதை புத்தாண்டு அதிகாலையில் காண்பது புனிதமாக கருதப்படுகிறது.

புத்தாண்டன்று அதிகாலையில் நீராடி வாசலில் கோலமிட்டு புத்தாடை அணிந்து கோயிலுக்குச் சென்று வழிபடுவர். மாலை வேளையில் உறவினர் வீடுகளுக்குச் செல்வது பலகாரங்களை பகிர்ந்து கொள்வதும் வழக்கமாக தமிழர்கள் கடைப்பிடித்து வருகின்றனர். வாழ்க்கை என்றாலே, கசப்பும், இனிப்பும் கலந்ததுதான். இதன் தொடர்பாக புத்தாண்டிலும் கசப்பும் இனிப்பும் இருக்கும் என்பதன் அடையாளமாக வேப்பம்பூ, பச்சடி, மாங்காய் பச்சடி என்பவற்றை உண்பதே குறிப்பிடத்தக்க மரபாகும். இவற்றில் மருத்துவ குணங்கள் இருப்பதால் தொடரும் வேனில் காலங்களில் தலையெடுக்கும் நோய்களுக்கு தடுப்பு மருந்தாகவும் செயல்படுகிறது.

சில ஆலயங்களில் புத்தாண்டு பிறக்கும் புண்ணிய காலத்தில் ஆலயத்தில் வழிபடும் பக்தர்களுக்கு வழங்கப்படும் மருந்து நீர் எனப்படும் மூலிகை கலவை வழங்கப்படுவது மரபாகும். புத்தாண்டு தினத்தில் இளையவர்களின் தலையில் மூத்தோர் தங்கள் கைகளை வைத்து ஆசீர்வதிப்பர். அதன்பின்னர் நீராடி அவர்களிடம் ஆசி பெற்று குறித்த சுப வேலைகளில் ஈடுபடுவது பாரம்பரியமாகும். மூத்தவர்கள் இளையவர்களுக்கு புத்தாண்டு அன்பளிப்பாக வழங்கப்படும் பணமே கைவிட என்பதாக மொழி ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர். புத்தாண்டு கொண்டாட்டத்தில் முத்தாய்ப்பாக போர்த்தேங்காய் அடித்தல், வழுக்கு மரம் ஏறுதல், யானைக்கு கண் வைத்தல் வைத்தல் மற்றும் பெண்கள் கிளித்தட்டு வைதல் வைத்தல் ஊஞ்சலாட்டம், முட்டி உடைத்தல் ஆகிய விளையாட்டுகளில் ஈடுபட்டதாக சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றது. இரவு வேளைகளில் வசந்தன் நாட்டம், மகிடிக்கூத்து, நாட்டுக்கூத்து முதலான பொழுதுபோக்ககில் கலைஞர்கள் மக்களை மகிழ்விப்பது அவர்களுக்கு பரிசில்கள் வழங்குவதையும் பண்டைத்தமிழர்கள் கடைப்பிடித்துள்ளனர்.

பொதுவாக நகரங்களில் சூரியனுக்கும் சந்திரனுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இதனை வலியுறுத்துவதாக தமிழர்கள் சித்திரை முதல் நாளில் சூரியனையும் அடுத்துவரும் சித்திரை பௌர்ணமி தினத்தில் சந்திரனையும் சிறப்பாக வழிபடுகின்றனர். தொடங்கும் சுபகிருது தமிழ்ப் புத்தாண்டில் நாமும் நாடும் வளம்பெற்றிட  எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com