சித்திரை - 1: அழிந்த பண்பாட்டின் மீள் கதைகள்!

தமிழரின் ஒவ்வொரு மாதத்திற்குப் பின்னாலும் பண்பாட்டுச் செழுமைகள் நிறைந்து இருக்கின்றன. அவற்றையெல்லாம் மறைத்துவிட்டு அல்லது மறந்துவிட்டுத்தான் மாதங்களைக் கொண்டாடி வருகின்றோம்.
சித்திரை - 1: அழிந்த பண்பாட்டின் மீள் கதைகள்!

தமிழர்களின் வருடப் பிறப்பு சித்திரையா அல்லது தை மாதமா என்ற விவாதங்கள் இன்றைக்கும் நீண்டு கொண்டே இருக்கின்றன. அந்த விவாதங்கள் ஒருபுறம் இருக்கட்டும். தமிழரின் ஒவ்வொரு மாதத்திற்குப் பின்னாலும் பண்பாட்டுச் செழுமைகள் நிறைந்து இருக்கின்றன. அவற்றையெல்லாம் மறைத்துவிட்டு அல்லது மறந்துவிட்டுத்தான் மாதங்களைக் கொண்டாடி வருகின்றோம். நம்முடைய பண்பாட்டோடு தொடர்புடைய நாள்களை மறந்துவிட்டு, புதிய புதிய நாள்களைக் கொண்டாடி வருகிறோம். அதனால் நம்முடைய பண்பாடுகளை மறந்துவிட்டோம்.

சித்திரை முதல் நாள் வேளாண்மையோடு தொடர்புடையது. மாடுகள், நிலங்கள் அழிந்துபோனதால் அந்த வேளாண்மைப் பண்பாடும் நம்மிடமிருந்து விடைபெற்றுக் கொண்டன. தமிழரின் பழமையான  விதைகள், சித்த மருத்துவம், உணவு முறைகள், கலைகள் எனப் பல பண்பாடுகள் நம்மிடமிருந்து காணாமல் போனதுபோல், சித்திரை முதல் நாளில் பின்பற்றப்பட்ட பண்பாட்டு நடைமுறைகள் நம்மிடமிருந்து விலகி நிற்கின்றன. சித்திரை முதல் நாள் பின்பற்றப்பட்ட பண்பாட்டு மரபுகளை மீட்டெடுப்பது முக்கியமான ஒன்றாகும்.

தமிழ்நாட்டில் சித்திரை முதல் நாள் வேளாண்மை/ வளமைச் சடங்கோடு தொடர்புடையது. இதனைக் கள ஆய்வின் வழியாக உறுதிப்படுத்திக்கொள்ள முடிகின்றது.

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பூதலூர் பகுதியில் சித்திரை முதல் நாள் அன்று வீட்டைச் சுத்தம் செய்து அதிகாலையில் சாமி கும்பிடுகின்றனர். வீட்டில் சாமிகும்பிடும்போது, பெண்களே பூசைகள் செய்கின்றனர். ஆண்கள் இப்பூசையில் பங்கேற்கலாம். பூசைகள்  செய்வது மரபில்லை . பூசையின்போது, படி நிறைய அரிசி அல்லது நெல் வைப்பர். அதனருகில் பல்வேறு பழங்கள் வைத்துச் சாமி கும்பிடுவர். பின்பு ஊர்ப்பொதுக் கோயிலுக்குச் செல்வார்கள். செல்லும்போது, அவியரிசி (பாதி வெந்தும் வேகாமலும் இருக்கும் அரிசி) கொண்டு செல்வார்கள். அதனைப்போல பச்சரிசியில் வெல்லம், தேங்காய், பொட்டுக்கடலை, எள் போன்றவை கலந்து சாமிக்குப் பூசைகள் செய்வர். பின்பு வயல்களில் ஏர்களைப் பூட்டி உழுவர். இந்த நாளில் உழுது சிறிய அளவில் நெல் விதைத்து வருவர். (விதைக்கப்பட்ட நெல் முளைப்பது பற்றிக்  கவலையில்லை. அவைகள் அன்றைக்கு விதைக்க வேண்டும்). சாமிக்குப் பூசைகள் செய்து வழிபட்ட பின்னர், அனைவருக்கும் அவியரிசியும் கலவைப் பச்சரிசியும் வழங்கப்படும். இந்த நாளில் உழுவதை நல்லேறு கட்டுதல் அல்லது பொன்னேறு பூட்டுதல் என்று கூறுவர். இந்த நடைமுறை பல காலம் தொடர்ந்து இருந்துள்ளது. இன்றைக்கு மாடுகள் இல்லை. அதனால் ஒரு கூடையில் குப்பையை அள்ளிச்சென்று, வயிலில் கொட்டிவிட்டு அந்த இடத்தில் மண்வெட்டியால் சிறிது கொத்திவிட்டு, நவதானியங்களை விதைத்துவிட்டு, தண்ணீரை ஊற்றுகின்றனர். அந்த இடத்திலேயே பத்தி, சூடம் வைத்து சாமி கும்பிட்டுவிட்டு வீட்டுக்குத் திரும்புகின்றனர். பொன்னேர் பூட்டுதல் என்ற சடங்கு இன்றைக்குக் காணாமல் போய்விட்டது. மாடுகள் இல்லாமல் போய்விட்டன. அதனால் பொன்னேர் பூட்டும் பண்பாடும் இல்லாமல் போய்விட்டது.

இதேபோல், ராமநாதபுரத்தில் சில பகுதிகளில்  சித்திரை முதல் நாளில்,  வீட்டினைச் சுத்தம் செய்து குலதெய்வத்தை வணங்கிவிட்டு, வீட்டில் விளக்கேற்றுவர். பின்னர், வயலுக்குச் சென்று மண்வெட்டியால் கொத்திவிட்டு நெல், பருத்தி, மல்லி, மிளகாய் இவற்றில் ஏதாவது ஒன்றை விதைப்பர். சில பகுதிகளில் வயலில் ஓரிடத்தில் குழிதோண்டி, நெல்லை ஆளுக்கொரு கைப்பிடி அள்ளி அந்தக் குழிக்குள் போட்டுவிட்டு, மண்ணால் மூடிவிட்டு வருகின்றனர். அந்த நாளில் எந்த திசை நல்ல திசையோ அந்தத் திசையிலேயே இந்த விதைப்பு நடைபெறுகிறது. இன்றைக்கு இந்தச் சடங்கு பின்பற்றப்படவில்லை. வீட்டில் மட்டும் சாமி கும்பிட்டு முடித்துக்கொள்கின்றனர்.

திருமங்கலம் பகுதியில் சித்திரை முதல் நாளில் நாளேர் பூட்டுதல் என்ற பண்பாடு இருந்துள்ளது. அப்பகுதி மக்கள் வீட்டில் சாமி கும்பிடுகின்றனர். பின்பு ஊர் மந்தையில் இருக்கக்கூடிய சாமியை அனைவரும் வணங்குகின்றனர். அவரவர் வயல்களில் மாடுகளைக் கொண்டு உழுகின்றனர். இவர்கள் விதைப்பதில்லை. உழுதல் மட்டும் செய்கின்றனர். அரிசியோடு நாட்டுச் சர்க்கரை அல்லது வெல்லம் கலந்து அனைவரும் உண்பர். அதன்பிறகு மஞ்சள் தண்ணீர் கலந்து ஒருவர் மேல் ஒருவர் என அனைவரும் ஊற்றிக்கொள்வார்கள். அன்றைய நாளில் வீட்டில் அசைவம் சமைக்கக்கூடாது. நீர்ப்பூசணி அல்லது பூசணி கொண்டு சமைத்து உண்கின்றனர். பிற காய்கறிகள் தவிர்க்கப்படுகின்றன. நீர்ப் பூசணி, பூசணிக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர். வெயில் காலம் என்பதால் இந்தக் காய்கறிகள் முக்கியத்துவம் பெறுகின்றன. நாளேர் பூட்டக்கூடிய சடங்கு இன்றைக்கு இல்லாமல் போய் விட்டது. வீட்டில் மட்டும் சாமி கும்பிடும் வழக்கமாக இன்றைக்குச் சுருங்கி விட்டது.

மதுரை மாவட்டம் புதுத்தாமரைப்பட்டியில் சித்திரைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளனர். ஊர்ப்பொது தெய்வத்தை வணங்கி விட்டு ஏர்பூட்டி வயலில் ஒரு சால் உழுகின்றனர். குறிப்பாக, ஈசாணி மூலையில் உழுகின்றனர். அன்றைய நாளில் மொச்சைப்பயறினை ஊறவைத்து அதன் தோலை நீக்கிவிட்டு அப்பயறைக் கொண்டு சாம்பார் வைத்து உண்கின்றனர்.

சித்திரை விடுதல் என்ற சமூகப் பண்பாட்டு நிகழ்வு இந்தப் பகுதிகளில் இருந்துள்ளது. அதாவது, பண்ணை வேலையில் இருப்பவர்கள், முடிவெட்டுபவர்கள், துணி துவைப்பவர்கள் இவர்களுக்குச் சித்திரை மாதத்தில்தான் பணம் அல்லது நெல் கொடுத்து கணக்கு முடிப்பர். வைகாசி-சித்திரை என்பது ஒரு ஆண்டுக் கணக்கு. ஒரு குடும்பத்திற்கு ஒரு ஆண்டிற்கு வேலை செய்துவிட்டு, அதற்கானக் கணக்கை முடித்துவிட்டு, அடுத்தக் குடும்பத்திற்கு வேலைக்குச் செல்லலாம் அல்லது ஒருவரை ஓராண்டிற்கு வேலைக்கு வைத்துக்கொண்டு, சித்திரை முடிந்ததும் அவருக்கான கணக்கை முடித்துவிட்டு, வேறு ஒருவரை வேலைக்கு வைத்துக்கொள்வார்கள். இதற்குச் சித்திரை விடுதல் என்ற பெயர் உண்டு. சித்திரை விடுதல் என்பது இன்றைக்கு இல்லை. ஓராண்டு வரை வேலை பார்த்தவர்களுக்குச் சித்திரையில் வருமானம் கிடைத்துள்ளது. இந்த நடைமுறைகள் இன்றைக்கு மறைந்துவிட்டன. சித்திரை முதல் நாளில் ஈசானி மூலையில் உழுததும், சித்திரை விடுதலும் இன்றைக்கு மறைந்து போய்விட்டன.

தேனி மாவட்டம் சின்னமனூரில் சித்திரை முதல்நாள் அனைத்துச் சாதியினரும் பெட்டி கழுவுதல் என்ற சடங்கினைச் செய்கின்றனர். அதாவது ஒவ்வொரு  கோயிலிலும் இருக்கக்கூடிய பெட்டியை மேளதாளத்துடன் முல்லையாற்றிற்கு எடுத்துச் சென்று பெட்டியைச் சுத்தம் செய்து அப்பெட்டிக்கு மாலை அணிவிக்கின்றனர். பின்பு சாமிகள் ஆடிக்கொண்டு, கோயிலுக்கு வந்ததும் மீண்டும் பூசைகள் செய்து முன்பு இருந்த இடத்திலேயே பெட்டியை வைக்கின்றனர். இந்த நடைமுறை இன்றைக்கும் தொடர்கிறது. பெட்டி பூசை என்றழைக்கப்படுகின்ற இந்தப் பண்பாடு எல்லாக் கோயிலிலும் நடைபெறுகின்றது. நாட்டார் தெய்வங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய இந்தப் பண்பாட்டுக் கொண்டாட்டம் இன்று சிறிய அளவில் சுருங்கிக்கொண்டு வருகிறது.

கன்னியாகுமரி பகுதிகளில் வீட்டில் சாமி கும்பிடுவர். அப்போது மூன்று பழங்கள் அல்லது பலவிதமான பழங்கள் வைத்து வழிபடுவர். இந்தப் பூசையை பெண்கள் மட்டுமே செய்கின்றனர். இதனைக் கனி காண்பது என்று கூறுவர். ஊர் அளவில் நிகழ்த்தப்பட்ட இந்தப் பண்பாடு இன்றைக்குச் வீட்டளவில் சுருங்கிவிட்டது.

சித்திரை முதல் நாள் நிகழ்த்தப்பட்ட இப்பண்பாடுகள் இன்றைக்கு இல்லாமல் போய்விட்டன அல்லது சுருங்கிவிட்டன. சித்திரை முதல் நாளில் மேற்கொள்ளப்பட்ட இப்பண்பாடுகள் வேளாண்மையோடு தொடர்புடையவை . இச்சடங்குகளைப்  பாதுகாப்பதும் பின்பற்றுவதும் முக்கியமான ஒன்றாகும். மாடுகள் அழிந்து போனதாலும் தண்ணீர் போதுமான அளவு கிடைக்காத சூழ்நிலையாலும் இச்சடங்குகள் சுருங்கி விட்டன. சித்திரை முதல் நாளில் நிலத்திற்கும் மனிதற்கும் இருந்த உறவை நாம் தொலைத்து இருக்கிறோம். அழிந்துபோன இந்தப்  பண்பாட்டைத்  தொலைத்த கதைகள் இன்னும் பல இருக்கின்றன.  அவற்றை எல்லாம் தொகுத்தால் நம்முடைய வேளாண்மைப் பண்பாட்டின் செழுமையை உணரலாம்.

[கட்டுரையாளர் - இணைப் பேராசிரியர்,
இந்திய மொழிகள் மற்றும் ஒப்பிலக்கியப் பள்ளி,
தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.]

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com