
இவ்வாண்டு லைலத்துல் கதீர் இரவு ஏப்ரல் 28ல் வருகிறது. இந்த இரவு நற்பாக்கியம் நிறைந்தது என்பதை இறைமறை குர்ஆனின் 44.3-ஆவது வசனம் கூறுகிறது.
மேலும் குர்ஆனின் 96-ஆவது சூராவை முதன்முதலில் இந்த இரவில் வானவர் ஜிப்ரயீல் மூலம் இறுதி தூதர் முகமது நபி (ஸல்) அவர்களுக்கு ஓத கற்பித்தான் என்பதை 97.1 -ஆவது வசனம் கூறுகிறது.
இந்த இரவு கண்ணியம் உடையது என்று 97.2 -ஆவது வசனம் உரைக்கிறது. 97.3 -ஆவது வசனம் இந்த இரவு ஆயிரம் மாதங்களிலும் மேலானது என்பதை உறுதிப்படுத்துகிறது.
ஆயிரம் மாதங்கள் தொடர்ந்து வழிபட்ட நன்மையை அடைவர் என்று இப்னு கதீர் 413 - 8 விளக்குகிறது. இந்த இரவில் வானவர்கள் பூமிக்கு வருவதைப் புகழ்கிறது 97.4 -ஆவது வசனம். இந்த வானவர்கள் இறைவனின் நற்பாக்கியம், கருணை முதலிய அருள் கொடைகளைக் கொண்டு வருகின்றனர்.
வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டு இருப்பவர்களின் திருப்தியான வாழ்விற்கு இறைவனை இறைஞ்சுகின்றனர். வைகறை தொழுகைக்கு அழைப்பொலி எழுப்பும் வரை அடியார்களின் அறைகூவலுக்கு ஆமீன்-ஆமோதிப்பு கூறுகிறார்கள். நூல் - அல்குர்துபி 133.20.
அந்த ஆண்டில் அடியார்களுக்கு அல்லாஹ் வழங்கும் அருள் கொடைகளைச் சுமந்து வானவர் ஜிப்ரயீல் அவர்களின் தலைமையில் வானவர்கள் வருகிறார்கள். கிடைக்கப்போகும் வாழ்வாதாரமும் அந்த இரவிலேயே நிர்ணயிக்கப்படுகிறது.
இவ்விரவின் வணக்க வழிபாடுகளில் வசதியற்றவர்களுக்கு வசதி பெற வாய்ப்பு ஏற்படுத்துவது, தானதர்மங்கள் புரிவது, ஆன மட்டும் அறச்செயல்கள் புரிவது, இறைவனைத் துதிப்பது, தொழுவது, அழுது மன்றாடி அறிந்தோ அறியாமலோ செய்த அதீத செயல்களுக்கு மன்னிப்புக் கோருவது, திருக்குர்ஆன் ஓதுவது முதலியனவும் அடங்கும். அன்னை ஆயிஷா (ரலி) இந்த இரவை அடைந்தால் அதிகமாக எதை ஓத வேண்டும் என்று ஏந்தல் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டபொழுது -மன்னிப்பை விரும்பும் மன்னிக்கும் மாண்பாளன் அல்லாஹ்விடம் மன்னிப்பைக் கோர கூறியதாக- அறிவிக்கிறார்கள். நூல்- திர்மிதீ, இப்னு மாஜா.
மன்னிக்கப்படும் மனிதன் நல்லடியார்கள் கூட்டத்தில் சேர்க்கப்பட்டு, இம்மையிலும் இறை கட்டளையை நிறைவேற்றி, நிறைவாழ்வு வாழ்ந்து மறுமையிலும் மாறா நற்பேற்றைப் பெறுவான்.
ரமலான் மாதத்தின் கடைசி பத்தில் இந்த இரவைத் தேடிப் பெற வேண்டும் என்பதின் பொருள், ரமலான் மாத கடைசி பத்து இரவுகளிலும் விழித்திருந்து விழைந்து இழைந்து, இறைவனைக் குறைவின்றி குன்றாது வணங்கி வழிபட வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.