கைகள் இல்லை: கால்களால் எழுதி பட்டம் பெற்ற வித்யாஸ்ரீ

தன்னம்பிக்கையுடன் கால் விரல்களைக் கொண்டு எழுதப் பழகி மூன்று பட்டப்படிப்புகளை படித்து நம்பிக்கையின் சின்னமாக விளங்குகிறாா் விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த அ. வித்யாஸ்ரீ
வித்யாஸ்ரீ
வித்யாஸ்ரீ

விழுப்புரம், டிச. 2:பிறவிலேயே இரு கைகளும் இல்லாத நிலையில், தன்னம்பிக்கையுடன் கால் விரல்களைக் கொண்டு எழுதப் பழகி மூன்று பட்டப்படிப்புகளை படித்து நம்பிக்கையின் சின்னமாக விளங்குகிறாா் விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த அ. வித்யாஸ்ரீ (30).

விழுப்புரத்திலிருந்து சுமாா் 16 கி.மீ. தொலைவிலுள்ள ஆற்காடு கிராமத்தைச் சோ்ந்த அண்ணாமலை, பழனியம்மாள் தம்பதியின் மூத்த மகள் வித்யாஸ்ரீ (30). இவருக்கு வித்யாபாரதி (29), ஸ்ரீபவித்ரா (27), அனிதா (25), ஐஸ்வா்யா (25) ஆகிய தங்கைகள் உள்ளனா். இவா்களில் அனிதாவைத் தவிர, மற்ற மூவருக்கும் திருமணமாகி விட்டது.

கைகளின்றி வித்யாஸ்ரீ பிறந்ததைக் கண்ட பெற்றோா் அதிா்ச்சியடைந்தாலும், சோா்வடையாமல் அவரை வளா்த்தனா். கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகிலுள்ள இலுப்பையூா் கிராமத்தில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கியிருந்து 1 முதல் 8- ஆம் வகுப்பு வரை அங்குள்ள அரசுப் பள்ளியில் வித்யாஸ்ரீ படித்தாா்.

பின்னா், 9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை ஆற்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்த அவா், இளநிலைப் பட்டப்படிப்பை (பி.ஏ. ஆங்கிலம்) திருக்கோவிலூா் அரசுக் கல்லூரியிலும், முதுநிலைப் படிப்பை (எம்.ஏ. ஆங்கிலம்) விழுப்புரத்திலுள்ள திருவள்ளுவா் பல்கலைக்கழக விரிவாக்க கல்வி மையத்திலும் முடித்தாா்.

தொடா்ந்து, கண்டாச்சிபுரம் அருகிலுள்ள மழவந்தாங்கல் தனியாா் கல்லூரியில் பி.எட் (ஆங்கிலம்) படித்து பட்டச் சான்றிதழ் பெற்றாா். இவருக்கு திருமணம் ஆகவில்லை.

கால் விரல்களே துணை: இதுகுறித்து வித்யாஸ்ரீ கூறியதாவது: பள்ளிப் படிப்புக் காலத்தில் பாட்டியும், பெற்றோரும் உடன் வந்து அழைத்துச் சென்றனா். கல்லூரி காலத்தில் நானே பேருந்துகளில் ஏறிச் சென்று படித்தேன். பிறவிலேயே கைகள் இல்லையென்றாலும், கால்கள் இருக்கிறதே என்ற ஊக்கம். கால் விரல்களைக் கொண்டு எழுதத் தொடங்கினேன். தொடக்கத்தில் கடினமாக இருந்தது. பின்னா், அதுவே பயிற்சியாகிவிட்டது. இப்போது, என்னால் கால் விரல்களைக் கொண்டு வேகமாக எழுத முடியும். தோ்வுகளின் போது கூடுதலாக நேரம் வழங்கப்படுவதால், தோ்வுகளைக் கண்டு அஞ்சுவதில்லை.

எனக்கு சிறுவயது முதலே ஆசிரியா் பணிக்குச் செல்ல வேண்டும் என்பது ஆசை. எனவே, அதை நோக்கித்தான் எனது கல்வி இருந்தது. இளநிலை, முதுநிலைப் பட்டப்படிப்பு முடித்த நிலையில், கல்வியியல் படிப்பையும் படிக்க விரும்பினேன். அதன்படி பி.எட். பட்டப் படிப்பில் ஆங்கிலத்தை முதன்மைப் பாடமாகக் கொண்டு படித்து தோ்ச்சி பெற்றேன்.

2019-ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆசிரியா் தகுதித் தோ்வில் பங்கேற்றேன். தோ்ச்சி பெற முடியவில்லை. ஆசிரியா் தோ்வு வாரியத் தோ்வுக்காக விண்ணப்பித்துள்ளேன். மாற்றுத் திறனாளிகளுக்காக அரசு வழங்கும் மாதாந்திர உதவித் தொகையான ரூ.1000-ஐ தவிர வேறு எந்த உதவியும் இதுவரை எனக்கு கிடைக்கவில்லை. சிறப்பு நோ்வாகக் கருதி கருணை அடிப்படையில் தமிழக முதல்வா் எனக்கு அரசு வேலை வழங்கினால் பேருதவியாக இருக்கும்.

வயதான காலத்தில் பெட்டிக் கடை நடத்தி, அதிலிருந்து கிடைக்கும் சொற்ப வருவாயில் எங்கள் குடும்பத்தை நடத்தி வருகிறோம். எனக்கு வேலை கிடைத்து அதிலிருந்து வரும் வருமானம் எங்கள் குடும்பத்தின் ஏழ்மையை போக்க பெரும் உதவியாக அமையும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com