
நாள்தோறும் ஒரு முறை வரும் இரவு பலரையும் தடுமாறச் செய்கிறது. ஆனால், ஆயுள் முழுவதும் வாழ்க்கையை இரவாகவேக் கழிக்கும் பார்வையற்றோர் தங்களது பாதையில் தடம் பதித்து வருகின்றனர்.
மாற்றுத்திறனாளிகளில் எத்தனையோ வகையினர் உண்டு. ஒவ்வொருவருக்குள்ளும் ஓர் திறமை இருப்பதைக் காணலாம். ஆனால் அவையெல்லாம் பொதுவெளியில் வராமல் போவதுதான் வேதனை.
ஆசிரியர் படிப்பு, ஆராய்ச்சி படிப்பு முடித்த (எம்ஏ, பிஎட், எம்.ஃபில்) மாற்றுத் திறனாளியான நாமக்கல் தபால்கார தெருவைச் சேர்ந்த கே.பிரபாகரன் (42), ஆசிரியர் பணிக்காக முயற்சித்தபோதும் வாய்ப்பு கிட்டவில்லை. இதனால் கூடைப் பின்னல் தொழிலில் தனது மனதைச் செலுத்தினார். அதற்கான மையத்தில் ஓராண்டுக்கும் மேலாக பயிற்சி பெற்றார். 100 சதவீதம் கண் பார்வை இல்லாதபோதும் கைகளையே கண்களாகக் கொண்டு அழகிய கூடைகளை தயாரித்து விற்பனை செய்கிறார். இதைப் பார்த்த அனைவரும் ஆச்சரியப்படுகின்றனர்.
அதில் கிடைக்கும் சொற்ப வருவாயைக் கொண்டும், மாற்றுத்திறனாளிகள் நலத் துறை மூலம் கிடைக்கும் மாதப்பணம் 1000 ரூபாயைக் கொண்டும் வாழ்க்கையை நடத்தி வருகிறார். இவரது மனைவி முருகேஸ்வரி. கால் ஊனமுற்றவர். இவர் காய்கறி வியாபாரம் செய்கிறார்.
நாமக்கல் பூங்கா சாலையில், கணவன், மனைவி இருவரும் ஒரே இடத்தில் அமர்ந்துகொண்டு தங்களது வாழ்க்கைக்கான வருவாயை ஈட்டி வருகின்றனர். கடந்த 2017–ஆம் ஆண்டு சேலம் மாவட்ட ஆட்சியராக இருந்த ரோகிணி முன்னிலையில் 26 மாற்றுத்திறனாளி ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது. அந்த ஜோடிகளில் பிரபாகரன் – முருகேஸ்வரி ஜோடியும் ஒன்று.
மாற்றுத் திறனாளிகளுக்கான விடியல் முழுமையாகக் கிடைக்கவில்லை. போதிய வருவாயின்றித் தவிக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித் தொகையை உயர்த்த வேண்டும், வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும், திறமையானவர்களைக் கண்டறிந்து கெளரவிக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைக்கின்றனர், மாற்றுத்திறனாளி தம்பதியினரான பிரபாகரன்-முருகேஸ்வரி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.