தன்னம்பிக்கை, உழைப்பால் சாதனை படைத்த மாற்றுத்திறனாளி

போலியோ நோயினால் 4 வயதிலேயே இரண்டு கால்களும் செயலிழந்த கோவிந்தராஜ், நண்பர்கள் உதவியுடன் இப்போது நல்ல நிலையை எட்டியுள்ளார்.
செயற்கை பல் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள கோவிந்தராஜ்.
செயற்கை பல் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள கோவிந்தராஜ்.

ஈரோடு: போலியோ நோயினால் 4 வயதில் இரண்டு கால்களும் செயலிழந்த கோவிந்தராஜ், நண்பர்கள் உதவியுடன் இப்போது நல்ல நிலையை அடைந்துள்ளதாகத் தெரிவித்தார்.

சேலம் மாவட்டம் கண்ணங்குறிச்சியைச் சேர்ந்த ஜெயராமன் - ராஜம்மாள் தம்பதியரின் மகன் கோவிந்தராஜ். ஜெயராமன் சேலம் அரசு மருத்துவமனையில் தூய்மைப் பணியாளராக இருந்து ஓய்வு பெற்றவர். ராஜம்மாள் கண்ணங்குறிச்சி பேரூராட்சியில் தூய்மைப் பணியாளராக பணியாற்றி வருகிறார்.

இத்தம்பதியரின் 4 ஆவது மகனான கோவிந்தராஜுக்கு 4 வயது இருக்கும்போது போலியோ நோய்த் தாக்குதலால் இரண்டு கால்களும் செயலிழந்துவிட்டன.

தனக்கு திருமணம் ஆகும் வரை தன்னை ஒரு மாற்றுத்திறனாளி என நினைத்து வருத்தப்பட்டதில்லை என்கிறார் 38 வயதான கோவிந்தராஜ். 5 ஆண் பிள்ளைகளில் தான் மட்டும் மாற்றுத் திறனாளி என்பதால் பெற்றோரின் கவனிப்பால் கல்லூரி காலம் வரை கவலை தெரியவில்லை என்கிறார் கோவிந்தராஜ்.

கிரிக்கெட் விளையாட்டில் கோவிந்தராஜ்
கிரிக்கெட் விளையாட்டில் கோவிந்தராஜ்

காதல் திருமணம்

வாழ்க்கையில் தான் சந்தித்த சவால்களையும், அதனை எதிர்கொண்ட விதம் குறித்து அவர் கூறியதாவது:

"சேலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பிபிஏ படித்துக்கொண்டிருந்தபோது, எங்கள் வீட்டுக்கு அருகில் குடியிருந்த அதே கல்லூரியில் படித்த சீனியர் மாணவியான சாந்தகுமாரி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாங்கள் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் காதலுக்கு எதிர்ப்பு இருந்தது. என்னுடைய பெற்றோர், உடன் பிறந்தவர்கள் அனைவரும் என்னை முழுமையாகக் கைவிட்டனர்.

நண்பர்கள் உதவியுடன் 2007-இல் திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்குப் பிறகு பெற்றோருடன் வசித்தோம். ஆனால், அவர்களிடமிருந்து சிறு உதவிகூட கிடைக்கவில்லை.

இதனால் சேலம் புதிய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள போட்டோ ஸ்டூடியோவில் வேலைக்குச் சேர்ந்தேன். முதல் மாத ஊதியத்தை வாங்கிக்கொண்டு இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட மோட்டார் சைக்கிளில் சென்றபோது விபத்தில் சிக்கி தொடைப் பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டது. 6 மாதங்களாக வெளியில் நடமாட முடியவில்லை. கர்ப்பணியாக இருந்த மனைவி வேலைக்குச் சென்று என்னை கவனித்துக்கொண்டார். 2008-ல் பெண் குழந்தை பிறந்தது. அந்த காலகட்டத்தில் எனக்கு என்னுடைய 3 ஆவது அண்ணன் ஜெயப்பிரகாஷ் சிறு சிறு உதவிகளைச் செய்து வந்தார். ஆனால் அவர் கடந்த 2014 ஆம் ஆண்டு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்தார்.

சிறந்த பேட்ஸ்மேனுக்கான பரிசு பெற்ற கோவிந்தராஜ்.
சிறந்த பேட்ஸ்மேனுக்கான பரிசு பெற்ற கோவிந்தராஜ்.

நண்பர்களின் உதவி

இதனிடையே 2011 இல் என்னுடைய பள்ளி நண்பர் கண்ணன் என்பவர் மூலம் ஈரோட்டில் உள்ள செயற்கைப் பல் தயாரிக்கும் மையத்தில் எனக்கு வேலை கிடைத்தது. அங்கு 2011 இல் ரூ. 3000 ஊதியத்தில் வேலைக்கு சேர்ந்தேன், அதன் பிறகு மனைவி, குழந்தையுடன் ஈரோடு மூலப்பாளையத்தில் வாடகை வீட்டில் குடியேறினேன். 2018 வரை அங்கு வேலை செய்தேன். கடைசியாக எனக்கு ரூ. 18,000 ஊதியம் வழங்கப்பட்டது. இந்த 7 ஆண்டுகளில் செயற்கைப் பல் தயாரிப்பு நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டேன்.

உடன் பணியாற்றியவர்களின் அலட்சியத்தால் வேலையை விட்டு விலக வேண்டிய நிலை ஏற்பட்டது. இதன் பிறகு தருமபுரி, சிவகாசி, பல்லடம், சேலம், ஈரோடு என பல்வேறு இடங்களில் உள்ள செயற்கைப் பல் தயாரிப்பு மையங்களில் வேலை செய்தேன். சில இடங்களில் ஏற்கனவே வாங்கிய ஊதியத்துக்கு குறைவாக ஊதியம் கிடைத்து. மருத்தவர் ஒருவரின் மையத்தில் ரூ. 25,000 ஊதியத்தில் வேலை செய்தேன். இதுதான் நான் வாங்கிய அதிகபட்ச ஊதியம்.

மனைவி, குழந்தைகளுடன் கோவிந்தராஜ்
மனைவி, குழந்தைகளுடன் கோவிந்தராஜ்

பணம் முக்கியம்

வாழ்க்கையில் பொருளாதாரம் எவ்வளவு முக்கியம் என்பதைத் திருமணத்திற்கு பிறகு உணர்ந்தேன். மேலும் இந்த சமுதாயம் சக மனிதர்களை எந்த அளவுக்கு மிக மோசமாக நடத்துகிறது என்பதையும் உணர்ந்தேன். இதனிடையே 2018 இல் இரண்டாவது பெண் குழந்தை பிறந்தது.

கரோனா காலகட்டத்தில் மிகவும் கஷ்டப்பட்டேன். வேறு வழி இல்லாமல் மீண்டும் பெற்றோர் உதவியை நாட வேண்டிய சூழல் ஏற்பட்டது. அப்போது தான், எந்த உறவாக இருந்தாலும் பணம் இல்லையெனில் மதிக்கமாட்டார்கள் என உணர்ந்துகொண்டேன். இந்த காலகட்டத்தில் குடும்ப உறவுகளாலேயே மிகவும் அவமானப்படுத்தப்பட்டேன்.

இந்த நிலையில் கடந்த ஆண்டில் நண்பர்கள் ராஜ்குமார், சத்தியசுந்தரம் ஆகியோருடன் சேர்ந்து சேலம் நான்கு சாலையில் தனியாக செயற்கைப் பல் தயாரிக்கும் மையத்தைத் தொடங்கினோம். இப்போது நானும் உரிமையாளராகிவிட்டேன் என்ற பெருமை உள்ளது.

சொந்தத் தொழில் மூலம் 3 குடும்பங்களும் கௌரவமான வாழ்க்கையை வாழ்கிறோம். நண்பர்கள் இருவரும் மருத்துவர்களிடம் இருந்து ஆர்டர் எடுத்து வந்து கொடுப்பர். செயற்கைப் பல் செய்து கொடுக்கும் பணியை நான் செய்து கொடுக்கிறேன். 

ஈரோட்டில் வாழ்ந்த காலகட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் படும் கஷ்டங்களை உணர்ந்துகொண்டேன். இங்குதான் தொழில் கற்றுக்கொண்டேன். வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்ற வெறி ஈரோடு மண்ணில்தான் கிடைத்தது. அவமானங்கள், அலட்சியங்கள் அனைத்தையும் எதிர்கொள்ளும் தன்னம்பிக்கையைக் கொடுத்தது ஈரோட்டைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி நண்பர்கள்.

இப்போது சேலத்தில் வசிப்பது தற்காலிக ஏற்பாடுதான், விரைவில் ஈரோட்டில் இதேபோன்று ஒரு செயற்கைப் பல் தயாரிப்பு மையத்தை தொடங்குவதே லட்சியம் என தன்னம்பிக்கையுடன் கூறுகிறார் கோவிந்தராஜ்.

கிரிக்கெட் அணி கேப்டன்

சேலத்தில் கல்லூரிக் காலம் வரை சாதாரண கிரிக்கெட் அணி ஒன்றின் கேப்டனாக இருந்தேன். அதில் பல போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளோம். 2011-ல் ஈரோடு வந்த பிறகு மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணியில் சேர்ந்தேன். ஆனால் அந்த கிரிக்கெட் வேறுவிதமாக இருந்ததால் தஞ்சை, கன்னியாகுமரி ஆகிய இடங்களில் நடந்த போட்டிகளில் என்னால் சரியாக விளையாட முடியவில்லை. தொடர்ந்து பயிற்சி எடுத்து சிறப்பாக விளையாடி பல இடங்களில் சிறந்த பேட்ஸ்மேன் என பெயர் எடுத்தேன். என்னுடைய சிறப்பான ஆட்டத்தால் 2016-ல் ஈரோடு அணி கேப்டன் ஆனேன். அதன் பிறகு மாநிலத்தில் பல்வேறு இடங்களில் நடந்த போட்டிகளில் கோப்பையை வென்று தமிழகத்தில் ஈரோடு அணியின் பெயரை வெளியில் தெரியவைத்தோம். மேலும், கிரிக்கெட்டில் என்னுடைய பெயரும் பிற பகுதிகளுக்குத் தெரிய ஆரம்பித்தது. கிரிக்கெட் மூலம் பிரபலம் பெற்றுள்ள நான், வாழ்க்கையிலும் சாதனை படைத்து மற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு எடுத்துக்காட்டாக இருப்பேன். உறவுகள் ஆச்சரியப்பட வேண்டும், நண்பர்கள் பெருமைப்பட வேண்டும். அந்த இலக்கை நோக்கி வெறியுடன் இயங்கி வருகிறேன். ஒருசில ஆண்டுகளில் மீண்டும் என்னைத் தொடர்புகொள்ளுங்கள். நிச்சயம் அப்போது சமூகத்தில் குறிப்பிடத்தகுந்த நபராக இருப்பேன், அந்த வாழ்க்கையை ஈரோட்டில்தான் வாழ்வேன்" என்றார் கோவிந்தராஜ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com