அம்சவேணி
அம்சவேணி

கருணைக் கொலையிலிருந்து தப்பித்து மாற்றுத் திறனாளிகளுக்கு சேவை!

கருணைக் கொலையில் இருந்து தப்பித்து தற்போது மன உறுதியுடன் அறக்கட்டளை தொடங்கி சக மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை செய்து வருகிறார் நூறு சதவீத மாற்றுத்திறனாளியான  அம்சவேணி.

கருணைக் கொலையில் இருந்து தப்பித்து தற்போது மன உறுதியுடன் அறக்கட்டளை தொடங்கி சக மாற்றுத் திறனாளிகளுக்கு சேவை செய்து  வருகிறார் நூறு சதவீத மாற்றுத் திறனாளியான  அம்சவேணி.

மாற்றுத்திறனாளி என வீட்டின் மூலையில் ஒதுங்கிவிடவில்லை. அடுத்த வேளை உணவுக்கோ, தண்ணீர் அருந்தவோ என தன்னை பராமரித்துக்கொள்ள யாராவது உதவி செய்ய வேண்டும். ஆனால், மறைந்த விஞ்ஞானி ஸ்டீபன் ஹாகிங் போல மற்றவர்களிடம் இல்லாத மன உறுதி, தன்னம்பிக்கையுடன் சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி தன்னுடைய அலுவல் வேலைகளை சுறுசுறுப்பாக செய்து மலைப்பை ஏற்படுத்துகிறார் சேலத்தைச் சேர்ந்த அம்சவேணி (37).

தன்னம்பிக்கையை மனதில் ஆழமாகப் புதைத்துத் தடைகளைத் தாண்டி மாற்றுத்திறனாளிகள்தான் எனது குடும்பம், அவர்களுக்கு நான் சாகும் வரை சேவை செய்வேன் என்கிற வைராக்கியத்துடன் மாற்றுத்திறனாளிகளுக்கென சுபம் அறக்கட்டளையைத் தொடங்கி,  திறன் மையத்தின் மூலம் வேலைவாய்ப்பு பயிற்சிகளை வழங்கி வருகிறார். 

மாற்றுத்திறனாளிகளை தன்னுடைய சொந்தமாகக் கருதி அவர்களுக்கு சேவை செய்து மற்றவர்களுக்கும் தன்னம்பிக்கையும், தைரியத்தையும் அளித்து வரும் அம்சவேணி கூறியதாவது:

சேலத்தை அடுத்த நாட்டாமங்கலத்தில் ராஜேந்திரன், மாதேஸ்வரி தம்பதிக்கு மூன்று சகோதரிகள், ஒரு அண்ணன் என ஐந்தாவதாகக் கடைக் குட்டியாகப் பிறந்தேன். 

ஒரு வயது குழந்தையாக இருக்கும்போது உடல் அசைவுகளுடன் நன்றாக இருந்ததாகவும், காய்ச்சல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, பெற்றோர் எனக்கு மருத்துவமனையில் தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.

தடுப்பூசி செலுத்திக்கொண்ட சில நாள்களில் உடலில் கை, கால் அசைவில்லாமல் இருந்தேன் என்றும், பின்னர் நூறு சதவீத மாற்றுத்திறனாளியாக உடலில் அசைவில்லாமல் இரண்டு வருடம் படுத்திருந்ததாகப் பெற்றோர் சொல்லக் கேட்டுள்ளேன்.

மேலும், உடலில் எந்த அசைவும் இல்லாத நிலையில் அருகில் உள்ள உறவினர்கள் மாற்றுத்திறனாளி குழந்தையான என்னை கருணைக் கொலை செய்துவிடும்படி பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். ஆனால், எனது பெற்றோர் கடவுள் கொடுத்த குழந்தை என கூறிவிட்டனர். மூன்றாவது வயதில் கண்ணை திறந்து, 6 வயதில் அப்பா என முதல் வார்த்தை பேசியதாக பெற்றோர் என்னிடம் கூறியது நினைவிருக்கிறது.

எனது 10 வயதில் அனைவரையும் போல நன்றாகப் பேசினேன். எனது சகோதர, சகோதரிகள்போல நானும் படிக்க ஆசைப்பட்டேன். அருகில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான கற்றல் மையத்தில் சேர்க்கப்பட்டேன். நான் நூறு சதவீத மாற்றுத்திறனாளி என்பதால் எனது தாய் என்னை தூக்கிச் செல்வார். பின்னர் கற்றல் நேரம் முடிந்ததும் எனது தாய் மறுபடியும் வந்து என்னை வீட்டிற்கு அழைத்துச் செல்வார்.

பெற்றோரின் அன்பு, அரவணைப்பால் 10 ஆம் வகுப்பு வரை படித்தேன். எனக்கு புதிய விஷயங்களை கற்றுக்கொள்வதில் ஆர்வம் அதிகம் இருந்தது.  நான் படிக்கும்போது வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள், ஆங்கிலத்தில் பேசிக்கொள்வதைப் புரிந்துகொள்ள முடிந்தது. ஆனால், அவர்களைப் போல பேச வேண்டும் என நினைத்தேன். பின்னர் அதற்காக முயற்சி எடுத்து ஆங்கிலத்தை சரளமாக பேச கற்றுக் கொண்டேன். என்னால் முடியாது என்று நினைத்தது இல்லை. நான் ஆங்கில பாடத்தில் நல்ல மதிப்பெண்களை பெற்று வந்தேன். ஆனால், கணித பாடத்தில் சுமாரான மதிப்பெண்கள்தான் கிடைத்தது. கணிதப் பாடத்திலும் சாதிக்க வேண்டும் என நினைத்தேன். அப்போது ஆசிரியரிடம் சவால் விடுத்து படிக்கத் தொடங்கினேன். கணிதப் பாடத்தில் 85 சதவீத மதிப்பெண் பெற்றேன். எனது தன்னம்பிக்கை, விடாமுற்சியைப் பாராட்டி அந்த ஆசிரியர் எனக்கு தங்க மோதிரம் பரிசளிக்க முன்வந்து நான் அதை தவிர்த்துவிட்டேன். 

நான் படித்த அந்த கல்வி மையம் அங்கீகாரம் இல்லாமல் செயல்பட்டதால் 10 ஆம் வகுப்புக்கு மேல் படிக்க முடியாமல் போனது. அதேவேளையில் சென்னை தொலைதூர கல்வி நிலையத்தில் பி.மியூசிக் என்ற இளநிலை பாடத்தில் சேர முயற்சித்தேன். எனது தந்தை ரூ.2,700 கட்டணம் செலுத்தி படிக்க வைத்தார். ஆனால், நூறு சதவீத மாற்றுத்திறனாளியான என்னால் எந்த வேலையும் தனித்து செய்ய முடியாது என்பதால் சகோதரி மற்றும் தாயின் உதவி தேவைப்பட்டது. மூன்று பேரும் சென்னையில் தங்கி படிக்க வைப்பது சவாலாக இருந்தது. இப்படி பல்வேறு சூழ்நிலைகளால் அந்தப் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு சேலம் திரும்பினேன்.

வறுமை, உடல் குறை, புறக்கணிப்பு என்னவென்று தெரியாமல் வளர்ந்தேன். அந்த அளவுக்கு எனது பெற்றோர் என்னை கவனித்துக் கொண்டனர். 16 ஆண்டுகளுக்கு முன்பு என்னுடைய ஒரு பிறந்தநாளில் என்னைப் போல உள்ள பிற மாற்றுத்திறனாளிகளும் கலந்துகொண்டனர். அப்போது தான் மாற்றுத்திறனாளிகளின் சூழலைப் புரிந்துகொண்டேன். அப்போது முதல் நான் பிறந்த நாள் கொண்டாடுவது இல்லை. ஒரு நாள் பெருமூளை முடக்க வாதத்தால் பாதித்த (செரிபிரல் பால்சி) சிறுமி ஆரோக்கிய மேரியை அவரது பெற்றோர் வீட்டில் வைத்துப் பூட்டிவிட்டு வேலைக்குச் சென்றுவிட்டனர். அந்த சிறுமியால் பேச முடியாது. அந்த சிறுமியைப் போல உள்ளவர்களை மீட்டெடுத்து உதவ வேண்டும் என்ற நோக்கில் கடந்த 2008-இல் முயற்சி செய்தோம். இதற்காக சுமார் 11 மாற்றுத்திறனாளிகள் இணைந்து மருத்துவர் அத்தியண்ணனை அணுகினோம். அவர் மாற்றுத்திறனாளிகளுக்கென தனியாக சுய உதவிக்குழுவைத் தொடங்கி கொடுத்தார். அதன் மூலம் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வந்தோம். தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற சிந்தனையில் அறக்கட்டளை தொடங்க முயற்சி எடுத்தோம். எனது முயற்சியை பாராட்டிய எனது சித்தப்பா ராஜலிங்கம் ரூ .25,000 பணம் கொடுத்து அறக்கட்டளை தொடங்க உதவினார்.

அறக்கட்டளையை திறம்பட நடத்திட முடியுமா என பலரும் என்னைப் பேசினர். நேர்மையாக இருந்தால் யாருக்கும் பயப்படத் தேவையில்லை என்ற நம்பிக்கையில் கடந்த 2010 இல் சுபம் அறக்கட்டளையை தொடங்கினேன். நானும் எனது நண்பர்களும் ஆட்டோவில் அறக்கட்டளையை பதிவு செய்ய, பதிவுத்துறை அலுவலகத்திற்குச் சென்றோம். பதிவுத்துறை அலுவலகம் நான்காவது மாடியில் இருந்தது, எப்படி பதிவுத்துறை அலுவலகத்திற்கு செல்வது என யோசித்த நேரத்தில், எங்களின் இயலாமையைப் புரிந்து கொண்ட பதிவுத்துறை அதிகாரிகள், கீழ் தளத்திற்கு வந்து பதிவு செய்வதற்கான பணிகளை செய்து கொடுத்து உதவினர்.

எனது ஒவ்வொரு முயற்சியின்போது நிறைய வரவேற்பும், அவமானமும் கலந்து இருந்தது. ஒவ்வொரு முறையும் உதவி கேட்டு சென்ற இடங்களில் வரவேற்பு இருந்தது. தொழிலதிபர்கள் சுதர்சனம், பாலசுப்பிரமணியம் என பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் அறக்கட்டளைக்கு நிதியுதவி செய்தனர். என்னை முழுமையாக நம்பி நிதியுதவி செய்தனர். 2016 இல் மாற்றுத்திறனாளிகளுக்கான விழா நடத்திட திட்டமிட்டேன். ஆனால், கடைசி நேரம் வரை அந்த விழா நடத்துவதில் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டேன். திறந்த வெளி மைதானத்தில் நூற்றுக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் திரண்டிருந்தனர். ஆனால், சாரல் மழை பெய்தது. மழையைப் பொருட்படுத்தாமல் விழாவை சிறப்பாக நடத்திட அனைவரும் எனக்கு ஊக்கமளித்தனர். சேலத்தைச் சுற்றி கடும் மழை பெய்த போதிலும், மாற்றுத்திறனாளிகள் கடவுள் அருளால் நாங்கள் கூடியிருந்த இடத்தில் மழை பெய்யவில்லை. இதனால் அந்த விழா எந்த இடையூறின்றி சிறப்பாக நடந்தேறியது.

2020 இல் யாரும் பசியுடன் இருக்கக் கூடாது என்ற மாவட்ட நிர்வாகத்தின் திட்டத்தில், பிச்சைக்காரர்கள் கணக்கெடுப்பு நடத்தினோம். அப்போது சாலையில் சுற்றி திரிபவர்கள் உணவுக்கு கையேந்தி நிற்கும் நிகழ்வு என்னை மிகவும் பாதித்தது. 2020 இல் கரோனா வந்த கால கட்டங்களில் கிராமங்களில் ஆதரவற்றோருக்கு உணவு அளித்தோம். மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கு அரிசி, பருப்பு வழங்கினோம். கரோனா கால கட்டத்தில் வேலையில்லாமல் வருமானம் இழப்பு போன்ற சூழலில் முதல் அலையில் 1000 பேருக்கும், இரண்டாவது அலையில் 1,000 பேருக்கும் உதவிகளை வழங்கினோம். அந்த சூழலில் நானே வெளியே சென்று பல சேவைகளைச் செய்தேன். நான் மாற்றுத்திறனாளி என்பதால் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை. அதேபோல முகக்கவசம் அணிந்தாலும் என்னால் சரியாக மூச்சுவிட முடியாது. இதனால் முகக்கவசம் அணியாமலேயே வெளியே சென்று தேவையானவர்களுக்கு உதவிகளை செய்து வந்தேன். கரோனா காலத்தில் வெளியே சென்று உதவிகளைச் செய்வதற்கு பெற்றோர் மிகவும் தயங்கினர்.

சமூகத்தில் நாம் எப்படி அடையாளப்படுத்திக்கொள்கிறோமோ அதுபோல தான் சமூகமும் உன்னை அடையாளம் காணும். நாம் செய்வதை வெளிப்படையாக உண்மையாக செய்தால் அனைவரும் வரவேற்பார்கள்.
தற்போது சுபம் திறன் மையத்தின் மூலம் வேலைவாய்ப்புடன் கூடிய பயிற்சியை மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கி வருகிறோம். இந்த பயிற்சி மையத்தை தொடங்கினாலும் பல பிரச்னைகளை எதிர்கொண்டேன்.

என்னைச் சுற்றியுள்ள மாற்றுத்திறனாளிகள்தான் எனது குடும்பம். கேள்வி என்பது பெற்றோர் மறுக்காத அளவுக்கு கேள்வியை கேட்க வேண்டும். அந்த கேள்வியில் நியாயமாக இருக்கும்பட்சத்தில் நிச்சயம் பெற்றோர் நமக்கு அந்த கேள்விக்கு நிச்சயம் உதவி செய்வர்.

என்னை முழுவதும் அரவணைத்து வளர்த்த தாய், சகோதரர் என அடுத்தடுத்து இறந்து போனார்கள். அந்த இழப்பில் இருந்து மீண்டு வந்து தற்போது மாற்றுத்திறனாளிகளுக்காகவே உழைத்து வருகிறேன்.

மாற்றுத்திறனாளிகள் யாரையும் சார்ந்து இருக்காத வகையில் அவர்களுக்கான தனி திறமையை அடையாளம் கண்டு பயிற்சி வழங்கி வருகிறோம். அவர்களுக்கு திறம்படக் கல்வி, பயிற்சி அளிக்கும்போது அவர்கள் முன்னேறி விடுவார்கள்.

நாம் சுயமாக சிந்தித்து முடிவெடுத்து முன்னேற வேண்டும். மற்றவர்கள் சொல்வதைக் கேட்டு நடந்தால், நம்முடைய சுய சிந்தனை என்பது இல்லாமல் போய்விடும். என்னைப் பொருத்தவரை நான் சுயமாக சிந்தித்து முடிவெடுக்கிறேன். நான் எடுக்கும் சுயமான முடிவுகள்தான் அடுத்தடுத்து பணிகளைச் செய்ய வைக்கிறது. 

அடுத்து மாற்றுத்திறனாளிகளை அவர்களின் பெற்றோர் உயிருடன் இருக்கும் வரை பராமரிக்க முடியும். அவர்கள் இறந்த பிறகு அவர்களை பராமரிக்கும் வகையில் மாற்றுத்திறனாளிகளுக்கான காப்பகத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளேன். அங்கே என்னைப் போல உள்ள பிற மாற்றுத்திறனாளிகளை அழைத்து வந்து பராமரித்து சேவை செய்வேன். நான் உயிரிழந்தாலும் மாற்றுத்திறனாளிகளுக்கான சேவை தொடர்ந்து கிடைத்திட வேண்டும். அந்த வகையில் எனக்கு அடுத்து கட்ட நபரையும் அடையாளம் கண்டு தேர்ந்தெடுத்து இந்த பொறுப்பான சேவையை ஒப்படைத்திடவும் யோசித்து வருகிறேன் என்றார். 

படங்கள்: வே.சக்தி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com