பெரம்பலூருக்குப் பெருமை சேர்க்கும் சாதனை மாற்றுத்திறனாளிகள்!

எடுத்துக்காட்டாக வாழ்ந்து வரும் மாற்றுத்திறனாளிகளுக்கு மத்தியில் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் 2 பேர் சர்வதேச அளவிலான நீச்சல் போட்டிக்குத் தேர்வாகி சாதனை படைத்துள்ளனர். 
பெரம்பலூருக்குப் பெருமை சேர்க்கும் சாதனை மாற்றுத்திறனாளிகள்!

பெரம்பலூர்: சாதனைகள் படைக்க ஊனம் ஒரு தடையல்ல என்பதற்குச் சான்றாக உலகில் பல மாற்றுத்திறனாளிகள் எடுத்துக்காட்டாக வாழ்ந்து வருகின்றனர். அந்த வகையில், பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் 2 பேர் சர்வதேச அளவிலான நீச்சல் போட்டிக்குத் தேர்வாகியுள்ளனர். 

பெரம்பலூர் மாவட்டம், மேலப்புலியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் எஸ். கலைச்செல்வன் (38). இடது கையை இழந்தாலும் தனது தன்னம்பிக்கையால் விளையாட்டுத் துறையில் பல்வேறு சாதனைகளை படைத்து வரும் கலைச்செல்வன், பெரம்பலூரிலுள்ள நியாயவிலைக் கடை ஒன்றில் விற்பனையாளராக உள்ளார். தனி மனிதனாக விளையாட்டுப் போட்டிகளுக்குச் சென்று வந்த இவர், தற்போது 50 மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களை உருவாக்கியுள்ளார். 

2021- 2022 ஆம் ஆண்டு தமிழக அணி சார்பில், கலைச்செல்வன் தலைமையிலான குழுவினர் தேசிய அளவிலான கபடி போட்டியில் பங்கேற்று முதல் பரிசு பெற்று வந்தனர். 

மேலும், தமிழக அளவிலான ஓட்டப் பந்தயம், நீச்சல் உள்ளிட்ட போட்டிகளில் பங்கேற்று தமிழக அளவில் முதல் பரிசும், மாநில அளவிலான நீச்சல் போட்டியில் 3 தங்கப் பதக்கமும், தேசிய அளவிலான நீச்சல் போட்டியில் 4 ஆம் இடமும் பெற்றுள்ளார்.

கலைச்செல்வன்
கலைச்செல்வன்

இதுவரை 399 மாரத்தான் போட்டிகளில் பங்கேற்று பரிசுக் கோப்பைகளும், பாராட்டுச் சான்றிதழ்களும் பெற்றுள்ளார். அண்மையில் தேசிய அளவிலான நீச்சல் போட்டியில் பங்கேற்று சிறப்பிடம் பெற்ற கலைச்செல்வன், சர்வதேச அளவிலான போட்டிக்குத் தேர்வாகி தன்னை தயார்படுத்திக் கொண்டுள்ளார். 

இதுகுறித்து எஸ். கலைச்செல்வன் கூறியது:

தேசிய அளவிலான நீச்சல் போட்டிகளில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்துள்ளது பெருமையாக உள்ளது. இருப்பினும், அசாம் மாநிலத்துக்குச் செல்ல என்னிடம் போதிய வசதியில்லை. தற்போதுள்ள பணியிலும் போதிய சம்பளம் கிடைக்கவில்லை. இதனால், அடுத்தக்கட்ட முயற்சிக்கு செல்ல முடியாத சூழலில் வாழ்ந்து வருகிறேன். எனது நிலையைக் கருதி, ஏதாவதொரு கூட்டுறவுச் சங்கத்தில் அலுவலக உதவியாளர் பணியிடம் ஒதுக்கித்தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், விளையாட்டுத் துறையில் சாதிக்க மாவட்ட நிர்வாகமும், தன்னார்வலர்களும் உதவி புரிந்தால் பெரம்பலூர் மாவட்டத்துக்கு மட்டுமின்றி தமிழகத்துக்கே பெருமை சேர்ப்பேன் என்றார் அவர். 

அம்பிகா
அம்பிகா

இதேபோல, பெரம்பலூர் மாவட்டம், மங்கலமேடு கிராமத்தைச் சேர்ந்த த. அம்பிகா (28). வளர்ச்சி குறைபாடுடைய இவர், விளையாட்டுப் போட்டியில் பல சாதனைகளை புரிந்து வருகிறார். தமிழ்நாடு மாநில அளவிலான நீச்சல் போட்டியில் 3 தங்கம் வென்ற இவர், நாள்தோறும் தினக் கூலியாக வேலைக்குச் சென்று வருகிறார். மாநில அளவிலான நீச்சல் போட்டி, ஓட்டப் பந்தயம் ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்ற அம்பிகா, பெங்களூரு, ராஜஸ்தான், மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம், புதுதில்லி, அசாம் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற நீச்சல் போட்டிகளில் பங்கேற்று தங்கப் பதக்கம் பெற்றுள்ளார்.

மேலும், அசாம் மாநிலம், கௌகாத்தியில் நடைபெறவுள்ள
சர்வதேச அளவிலான நீச்சல் போட்டிக்கு தேர்வாகியுள்ளார் அம்பிகா.

இதுகுறித்து, அம்பிகா கூறுகையில், 'மிகவும் எழ்மையான குடும்பத்தில் பிறந்த எனக்கு, தாய், 2 சகோதரர்கள், 2 சகோதரிகள் உள்ளனர். எனது தந்தை உயிரிழந்துவிட்டதால், தையல் வேலை செய்து வருகிறேன். தேசிய அளவிலான நீச்சல் போட்டிகளில் பங்கேற்கச் செல்ல போதிய நிதியுதவி தேவைப்படுகிறது. ஆனால் என்னிடம் பணம் இல்லை, இருப்பினும், மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் சார்பில் நிதி திரட்டப்பட்டு வருகிறது. போதிய நிதி கிடைத்தால், மாநில அளவில் தங்கம் வென்றதைப்போல், சர்வதேச அளவிலான நீச்சல் போட்டியிலும் தங்கம் வென்று தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்ப்பேன் என்றார் அவர். 

உடலில் குறைபாடு இருந்தாலும், உள்ளத்தில் உறுதியுடன் இருக்கும் மாற்றுத்திறனாளிகள் பலர் தங்களது சுயமுயற்சியால் பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வருகின்றனர். ஆனால், அவர்களை சமூகம் கண்டுகொள்வதில்லை. ஊனமுற்றோர் என அலட்சியப்படுத்துவதாலும், போதிய நிதியுதவியும், வழிகாட்டுதல்கள் இல்லாததாலும் வீடுகளிலேயே முடங்கிக் கிடக்கின்றனர். சமுதாயத்தில் நலிவுற்ற பிரிவினராக உள்ள அவர்களை மேலும் ஊக்கப்படுத்தும் விதமாக தேவையான நிதியுதவி, தொழிற்பயிற்சி, வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க அனைவரும் முன்வர வேண்டும் என்பதே மாற்றுத்திறனாளிகளின் எதிர்பார்ப்பு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com