மரபின் மாண்பு

காரிய காரணத் தொடர்பு இல்லாத சிலவற்றில் எனக்கு நம்பிக்கை உண்டு. எல்லாவற்றுக்குமே காரியக் காரண விளக்கம் தர இயலாது. அப்படித் தர முடியாதவைகளில் சில முக்கியமானவை.
ராஜாஜி
ராஜாஜி

மனிதனுக்கு அப்பாற்பட்ட சக்தியில் நான் நம்பிக்கை உள்ளவன். பழைய சிறப்புகள் திரும்ப வேண்டும் என்று விரும்புகிறவன். புத்தியினால் மட்டுமே அறியக் கூடாததை நாடுகின்றவன். காரிய காரணத் தொடர்பு இல்லாத சிலவற்றில் எனக்கு நம்பிக்கை உண்டு. எல்லாவற்றுக்குமே காரியக் காரண விளக்கம் தர இயலாது. அப்படித் தர முடியாதவைகளில் சில முக்கியமானவை. அவற்றை அலட்சியம் செய்ய முடியாது. என் சித்தப்போக்கு நாடறிந்த விஷயம். எனவே, என் காரிய காரணப் பிணைப்பற்ற தன்மை வாசகர்களுக்கு மிதமிஞ்சிய சிரமத்தைத் தராது. 

ஜீவாத்ம, பரமாத்ம நம்பிக்கை இல்லாதவன் முடிவற்ற காரிருளில் அலைந்து திரிந்துதானாக வேண்டும். உலகம் சூரியன் இல்லாத நிலைமையைத்தான் அவன் காண்பான். 

அசூர்ய நாமதே லோகா
அந்தேன தமஸா விருதா
தான் ஸ்தே பிரேத்யாபி கச்சந்தி
யே கே சர ஆத்மனோ ஜனா: 
 (ஈசோப நிஷத்)

"தமது மனதில் ஆத்மாவுக்கே இடமில்லாமல் அடித்து விடுகிறவர்கள், அம்மாதிரி மறுப்பதன் காரணமாக மரணமெய்தி, சூரியனில்லாத உலகில், கன இருட்டு சூழ்ந்த நிலையில் சஞ்சரித்துக் கொண்டிருக்கிறார்கள்" என்பது இதன் பொருள். 

ஆத்ம விசாரம்

மனிதனுக்கு சரீரம் மட்டுந்தான் உண்டு, அதற்கப்பால் விளங்குகின்ற ஆத்மா இல்லை என்றால், இன்பமும் அவற்றைத் தருகின்ற பொருள்களும்தான் மிஞ்சும். இவற்றிற்காக உழைப்பதற்கு நாம் உயிரைப் பற்றிக்கொண்டிருக்க வேண்டுமா? பிறகு மற்றொரு கேள்வி எழுகிறது. மனித வர்க்கத்தின் நன்மைக்காக, அதாவது இனி வரப்போகின்ற தலைமுறைகளுக்காக நாம் ஏன் உழைக்கலாகாது? அவற்றிற்காக ஏன் எதையாவது ஒருவன் செய்தாக வேண்டும்? அத்தகைய பணியுடன் அவனைப் பிணைப்பது எது? ஆத்மா இல்லை, சரீரம்தான் உண்டு என்றால் மனித வர்க்கமோ அல்லது இனி வரப்போகின்ற தலைமுறைகளோ ஏன் வாழ வேண்டும், வாழ்க்கையின் போராட்டங்களில் ஈடுபட வேண்டும்? உண்மையைச் சொல்லுமிடத்து, ஆத்மா இல்லையென்றால் நம்மில் ஒவ்வொருவரும் தனியாகவும், எல்லோரும் மொத்தமாகவும் பேணிப் போற்றுகின்ற பெரு நியதிகளெல்லாம் மறைந்துவிடும். 

பரிணாம தத்துவம்

ஒரு கண நேரம் 'மூட நம்பிக்கை'யினின்று வெளிப் போந்து, பரிணாமத்தின் பரிபாஷையில் பேசுவோம். 'ஜீன்ஸ்' என்ற உயிரணுக்கள், எண்ணற்ற தடவை யதேச்சையாக நிகழ்கின்ற மாறுதல்களுக்கு உள்ளாகி, பல கோடி வருஷம் கண்ட வளர்ச்சியின் விளைவாக உருப்பெற்றவன் மானிடன் என்பதை ஒப்புக்கொண்டு இதைப் பார்ப்போம். இந்த நீண்ட கால வளர்ச்சியில், சுபாவமான சேர்க்கையைத் தேர்ந்தெடுத்து இன்றைய நிலைமையை அவன் வந்து அடைந்துள்ளான். 

சத்தியம், அன்பு, உயிருக்கு மதிப்பு, வாக்குப்படி நடப்பது, ஒத்துழைப்பு, உணர்வு, தயை, நன்றி போன்ற நியதிகள் ஏற்றம் கண்டு, மனிதனது சிந்தனையில் நிலையான இடம்பெற்று விட்டன, எல்லா இடுக்கண்களையும் சமாளித்து தப்பிப் பிழைத்து வளருவதற்கான மதிப்பு இந்த குணங்களுக்கு உண்டு என்பதுதான் இவ்வாறு நடந்து வந்திருப்பதற்குக் காரணம். 

புறக்கணித்தால் 

இந்த நியதிகளை புறக்கணிப்பது எவ்வாறு இருக்கும்? சிங்கமும் புலியும் தமக்கே உரிய துணிவு மிகுதியையும் மூர்க்கத்தையும் கைவிடுவது போல இருக்கும். பறவைகள் தமது சிறகுகளைத் தியாகம் செய்வது போல இருக்கும்; காளைமாடு தன் கொம்புகளைத் துறப்பதுபோல இருக்கும்; மனிதன் தனது மூளையையும் நேராக நிமிர்ந்து நடக்கின்ற தன்மையையும் கைவிட்டது போல இருக்கும். 

மரபுச்செல்வம்

'வழிவழியான நியதிகள்' (Traditional values) உலகமெங்கும் மதிப்புப் பெற்றுள்ள சிறப்பு நிலைகள். சமுதாயத்துக்குச் சமுதாயம் அவற்றிடையே அளவில் சிறிது வேறுபாடுகள் இருக்கும். இந்த நியதிகள் வியாபகமாக இருந்து வந்த துறைகளில், சமயச் சார்பற்ற சக்திகளும் ஸ்தாபனங்களும் படர்கின்ற நிலவரத்தில், அவற்றில் சிலவற்றின் வழிவழித் தன்மையானது தெளிவாகத் தெரியாமலிருக்கலாம், அல்லது மறைந்துவிட்டிருக்கும். 

சக்தியற்ற மிருகம்

மரபையொட்டிய இந்த நியதிகளை, நாசகரமான அவநம்பிக்கை சூழ்ந்துகொண்டு, இவற்றைக் கைவிட வேண்டும் என்பதற்கான இயக்கம் வெற்றி பெறுமானால் எத்தனையோ அகஸ்மாத்தான நிகழ்ச்சிகளின் அருளினால் கிட்டிய உயர்நிலையை விட்டு, பரிணாமத்தின் தொடக்கத்தில் இருந்த தாழ்நிலைகளுக்கே மனிதன் மீண்டும் தாழ்ந்து விடுவான். அந்நிலையில் தேக திட்டமில்லாத, பரிதாபத்துக்குரிய காட்டு விலங்கின் நிலையை அடைந்து உலகிலிருந்து அவன் அநேகமாக மறைந்து படலாம். 

நான் இங்கு சொல்லியிருப்பதை சிலர் நெடுநாளைக்கு முன்னரே கூறியிருக்க வேண்டும். அவற்றையெல்லாம் நான் படிக்கவில்லை. இதை ஹெர்பெர்ட் ஸ்பென்ஸர் இன்னும் திறம்படக் கூறியிருக்கிறார் என்று நினைக்கிறேன். 

வளர்ச்சித் தத்துவம் 

நாம் ஏதோ கண்மூடித்தனமாக தவறுகளை இழைத்து வளர்ச்சி அடைந்துவிட்டோம் என்ற தத்துவத்தை நான் ஒப்புக்கொள்ளவில்லை, நமது வளர்ச்சியில் ஒரு நியமம் இருப்பதாக நம்புகிறேன். அது எப்பேர்ப்பட்டது என்பதை துருவித் தேடிக் கண்டறிய இயலாது. எனவே, மரபையொட்டி சிறப்பு எய்திய இந்த நியதிகள் தாம், மனிதனது வளர்ச்சிக்கு ஆண்டவன் உருவாக்கிய நியமங்களைச் சேர்ந்தவை என்று நம்புகிறேன். சிலர் இவற்றைக் கைவிட்டு துன்பமடைந்தாலுங்கூட, மனித வர்க்கம் இவற்றைக் கைவிடாது என்பது என் நம்பிக்கை, பாரம்பரியச் சீர்மையுடன் வழிவழியாக வந்து ஏற்றம் கண்ட நியதிகள் தனிப்பெருமை படைத்தவை. சமயச் சார்பற்ற அரசாங்கச் சட்டங்கள் ஒருக்காலும் அவற்றிற்கு போதியவாறு ஈடு செய்பவை ஆக முடியாது. 

அசட்டு நிம்மதி 

தமது படிப்பு அறையில் அமர்ந்த வண்ணம், இக்கால வாழ்வையும் பகுத்தறிவையும் சுட்டிக்காட்டி மரபையொட்டிய நியதிகளைக் கண்டனம் செய்வது சுலபம். அதன் மூலம் ஓரளவு மனத் திருப்தியடையலாம். வெற்றியுணர்வும் கொள்ளலாம். ஆனால், இந்த நியதிகளை விசுவாசத்துடன் ஏற்றுக்கொண்டு அவற்றிற்கு நமது மக்கள் கட்டுப்பட்டு நடந்துகொண்டிருக்கும் வரையில்தான், நாம் பத்திரமாக வாழ முடியும். அறிவாளிகள் எனப்படுவோர் எத்தகைய கண்டனங்களை வீசியபோதிலும் இதுதான் நிலவரம். வாழ்வு நமக்கு அளிக்கின்ற மகிழ்ச்சியைத் தருபவை நாகரிகமும் பண்பாடுந்தான். இவை நெருக்கமாகப் பின்னி இணைக்கப்பட்ட ஒருதளுவம் போன்றவை. எல்லா வளைவுகளையும் ஊடுருவி நின்று, முடிச்சுகளையெல்லாம் பிணைத்து வைத்திருக்கும் நூல் ஒன்றே. ஒரு மூலையில் அது அறுந்து வெளிவந்துவிட்டால் என்ன ஆகும் என்பது நாம் அறிந்ததே. வழிவழியாக வந்த நியதிகளை நமது மக்கள் திரளாகக் கைவிடுவார்களாயின், நாகரிகமும் பண்பும் கீழ் நிலைக்கு தாழ்ந்து போய் பிறகு மறைந்துவிடும். 

சக்கரவர்த்தி சி. ராஜகோபாலாச்சாரியார்,

 1964 ஆம் ஆண்டு டிச. 24 ஆம் நாளிட்ட

தினமணி நாளிதழில் எழுதிய கட்டுரையின்

மீள் பிரசுரம்.

(டிச. 25 - ராஜாஜி நினைவு நாள்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com