உலகின் தலைசிறந்த வழிகாட்டி: ரமலான் சிறப்புக் கட்டுரைத் தொடர் - 32

மூட நம்பிக்கைகளிலும், அறியாமை இருளிலும் தத்தளித்துக்கொண்டிருந்த மக்களுக்கு ஒளிவிளக்காகத் தோன்றி வழிகாட்டியவர் நபிகள் நாயகம் அவர்கள்.
உலகின் தலைசிறந்த வழிகாட்டி: ரமலான் சிறப்புக் கட்டுரைத் தொடர் - 32
Published on
Updated on
3 min read

புனித ரமலான் மாதத்தில் இறை சிந்தனையோடு, உடல் வருத்தத்தையும், பசியையும் பொருட்படுத்தாது உலக நலனை வேண்டி, நபிகள் பெருமானார் காட்டிய நெறிவழி தவறாது உண்ணா நோன்பினை வாழ்வின் முக்கியக் கடமையாக ஏற்று, கண்ணும் கருத்துமாக நிறைவேற்றிக்கொண்டிருக்கும் என் அன்பு இசுலாமியச் சொந்தங்கள் ஒவ்வொருவருக்கும் என்னுடைய நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்.

மூட நம்பிக்கைகளிலும், அறியாமை இருளிலும் தத்தளித்துக்கொண்டிருந்த மக்களுக்கு ஒளிவிளக்காகத் தோன்றி வழிகாட்டியவர் நபிகள் நாயகம் அவர்கள். பெருமளவு செல்வம் இருந்தும் அதனைச் சிறிதும் பொருட்படுத்தாது தன் வாழ்நாள் முழுவதும் மிக எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து மக்களுக்கு வாழ்வியல் நெறிகளைக் கற்பித்த பெருமகனார். 

பாமர மக்கள் அவரைப் பின்பற்ற தொடங்குவதற்கு முன்பும், பின்பும் உண்மை, ஒழுக்கம் எனும் உயர் பண்புகளைக் கொண்டு உன்னதமான வாழ்க்கையை வாழ்ந்து காட்டினார்கள். தம் வாழ்நாளில் ஒருபோதும் நபிகளார் மது அருந்தியதோ, அருவருப்பான செயல் எதுவும் அவர்களிடம் இருந்ததில்லை.

எப்போதும் உண்மை பேசுபவராக, மனிதாபிமானம் நிறைந்தவராக, வாக்குறுதியைத் தவறாது நிறைவேற்றுபவராக, மற்றவர்களைவிட அதிகம் பணிவுடையவராக, சிரமங்களைத் தாங்கிக் கொண்டு தொண்டாற்றும் உள்ளம் உடையவராக, இல்லையென்று சொல்லாது உதவக் கூடியவராக, நடுநிலையாளராக, எதற்காகவும் சத்தியத்தைக் கைவிடாதவராகவும் நபிகள் பெருமானார் இருந்தார்கள்.

தம் வாழ்வில் ஒருபோதும் அவதூறு, கடுஞ்சொல் பேசியதில்லை. பிறரைப் பழிக்கவோ, குறைகூறவோ, ஏளனமாகப் பேசவோ நினைத்ததுமில்லை, நடத்தியதுமில்லை. 

தங்களுக்குப் பணிவிடை செய்யக்கூடியவர்களைக்கூட அவமதித்ததில்லை. தன்முன் மற்றவர்கள் எழுந்து நிற்பதைக்கூட நபிகளார் தடை செய்தார்கள். தங்களைச் சுற்றியுள்ள மனிதர்களை அதிகம் நேசித்து அவர்களோடு மிக நெருக்கமாகப் பழகக்கூடியவர்களாகவும் இருந்தார்கள். கண்ணியம், பொறுமை சகிப்புத்தன்மை, ஆகியவற்றின் உறைவிடமாகத் திகழ்ந்தார். உயரிய ஒழுக்கங்களைத் தானும் கடைப்பிடித்து, அதனைப் பிறருக்கும் கற்றுக்கொடுத்தார்கள்.

ஒருமுறை, ஒரு தாய் தன் குழந்தை அதிகம் இனிப்பு சாப்பிடுவதை நிறுத்தக் கூறுமாறு கேட்க, அதற்குப் பெருமானாரோ, ஒரு வாரம் கழித்து வருமாறு அந்தத் தாயிடம் கேட்டுக்கொண்டார். அதேபோல் ஒரு வாரம் கழித்து, அதே தாய் தன் மகனைக் கூட்டிக்கொண்டு வந்தபோது நபிகள் நாயகம் அவர்கள் அந்தப் பிள்ளையிடம் இனிப்பு அதிகம் சாப்பிடுவதால் வரும் தீங்கினை எடுத்துக்கூறி, குறைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.

"இதை ஏன் நீங்கள் அன்றே கூறவில்லை?' என்று நபிகளிடம் அந்தத் தாய் கேட்டபோது, அன்றுவரை நானும் அதிகம் இனிப்புச் சாப்பிட்டுக்கொண்டிருந்தேன். நான் கடைப்பிடிக்காத ஒன்றை எப்படி மற்றவர்களுக்கு அறிவுறுத்த முடியும் என்று கேட்டார். 

நபிகளிடம் இருந்த இத்தகைய உயரிய நற்பண்புகள்தான் அவரை மற்ற மனிதர்களைவிட உயர்த்திக் காட்டியது. வறண்ட பாலைவனத்தின் கடினமான வாழ்க்கைமுறை கொண்ட முரட்டு மனிதர்களின் மனங்களைச் சீர்திருத்தி, செம்மைப்படுத்தி தாம் காட்டிய அன்பின் பெருவழி நோக்கி அந்தப் பண்புதான் அழைத்து வந்தது.

மற்றொரு முறை நபிகள் அவர்கள் ஒரு வயதான பாட்டிக்கு உதவி செய்யும் விதமாக அவரது சுமைகளைத் தான் வாங்கிச் சுமந்து வந்தார். அந்தப் பாட்டியோ வரும் வழியெங்கும் நபிகளைப் பற்றிக் கடுமையான அவதூறுகளைப் பேசி வருகிறார். அவற்றையெல்லாம் பொறுமையுடன் கேட்டுக்கொண்டிருந்த நபிபெருமானிடம், தான் விடைபெறும் இடம் வந்தவுடன் நன்றி கூறுவதற்காகத் தங்கள் பெயர் என்னவென்று கேட்கிறார். 
அப்போதுதான் இவ்வளவு நேரம் தான் யாரென்று தெரியாமலே அவரிடமே அவரைப்பற்றி அவதூறு கூறி வந்ததை உணர்ந்தார். நீங்கள் ஏன் என்னை ஆரம்பத்திலேயே தடுக்கவில்லை? என்று பாட்டி நபிகளிடம் கேட்டார். 
அதற்கு நபிபெருமானார் "நீங்கள் யாரோ சொன்னதைக் கேட்டு என்னைப்பற்றித் தெரியாமல் பேசினீர்கள், உண்மை தெரிந்திருந்தால் பேசியிருக்கமாட்டீர்கள்' என்றார். 

நபி பெருமானாரின் பெருந்தன்மையான குணத்தைப் புரிந்துகொண்ட பாட்டி, உளம் நெகிழ்ந்து 'அதுதான் இப்போது உண்மை என்னவென்று தெரிந்துவிட்டதே. இனி ஒருபோதும் அப்படியான அவதூறுகளை யாரிடமும், யார்குறித்தும் பேசமாட்டேன்' என்று மனம் வருந்தி, திருந்தினார்.

இப்படி ஏராளமான நிகழ்வுகள் நபிகளார் வாழ்க்கை முழுவதும் உண்டு.
தானடைந்த மெய்யியல் அனுபவங்களைக் கொண்டு, தன் மண்ணின் மக்களை நாகரீகம் மிக்க வாழ்வியல் நோக்கி வழிநடத்த முயலும்போது நபிபெருமானார் எதிர்கொள்ள நேரிட்ட எதிர்ப்புகளும், சிரமங்களும் கொஞ்ச நஞ்சமல்ல. அவர் மீது குப்பையைக் கொட்டினார்கள். நடக்கும் பாதையில் முள்ளை நட்டார்கள். அவதூறு பேசினார்கள். புழுதி மண்ணை அள்ளி வீசினார்கள். கல்லால் அடித்தார்கள், கடும் சொல்லால் வதைத்தார்கள். ஊரை விட்டே போகும்படி செய்தார்கள்.

எந்த மக்களின் துன்பமில்லா பெருவாழ்வுக்காக அயராது  போராடினாரோ, அந்த மக்களே  தன்னை புரிந்துகொள்ளாமல் தனக்கு இழைத்த எல்லா கொடுமைகளையும் தனது எல்லையற்ற பொறுமையினாலும், இணையற்ற நற்குணத்தாலும் தாங்கி நின்று தான் கொண்டிருந்த சத்தியத்தின் வலிமையால் தனக்கு ஏற்பட்ட அத்தனை சோதனைகளையும் வெற்றிக்கொண்டார்.  இத்தகைய எளிமையான, அதே சமயம் உறுதியான நல்வழிகாட்டல்தான்  அவரை உயரிய மக்கள் தலைவராக திகழச் செய்தது. இன்றைக்கு அரேபிய தேசங்களை தாண்டியும் அவரது வழியை பின்பற்றுகிற கோடிக்கணக்கான மக்களை ஈர்த்துள்ளது.  அதனால்தான் நபிகள் பெருமானார் உலகப் பேரறிஞர்கள் பலராலும் போற்றிப் புகழப்படுகிறார்.  
நபிகள் மனிதர்களை மனிதர்களாக வாழச் செய்தார்கள் இதுதான் உலகின் அரும்பெரும் சாதனை என்கிறார் மேலை நாட்டு அறிஞர் மைக்கல் ஹெச் ஹார்ட். 

"நபிகள் நாயகத்தின் வாழ்க்கை முறையைக் காட்டிலும் ஆச்சரியம் தரக்கூடிய வாழ்க்கை முறை வரலாற்றிலேயே வேறு எங்கும் இல்லை. அவரைப் போல உலக வாழ்க்கையில் ஆழ்ந்த விளைவுகளை ஏற்படுத்திய மனிதர்களைக் காணுதல் அரிதினும் அரிது'' என்கிறார் பேரறிஞர் ஜி.ஜி.கெல்லட் அவர்கள். 
உலகின் தலைசிறந்த நூறு வழிகாட்டிகளில் முதலிடத்தில் இருப்பவர் நபிகள் நாயகம் அவர்கள்தான் என்கிறார்.

இந்திய பெருநாட்டை ஆளுகின்ற ஆட்சியாளர்களால் இசுலாமியப் பெருமக்களுக்கு ஏற்பட்டுள்ள தற்போதைய நெருக்கடி மிகுந்த, சோதனையான காலகட்டத்தில் அவற்றையெல்லாம் எதிர்கொண்டு வெற்றிகொள்வதற்கு உண்டான துணிவினையும், உள்ள உறுதியினையும் பெறுவதற்கு நபிகள் பெருமானார்களது வாழ்க்கை வரலாறு நமக்கு வழங்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. தனது நகரத்தை விட்டு வெளியேறும் நிலை வந்தபோதும் அதற்கு எதிராக அறப்போர் நடத்தித் தன் மண்ணை மீட்டு வென்று பெருமானாரின் போராட்டமிக்கப் பெருவாழ்வு நம் மனதில் புரட்சிக்கான ஆற்றலை அளிக்கவல்லது. 

சாதி ஏற்றத்தாழ்வுகளைக் கற்பித்து, மனிதருக்குள் ஒரு பிரிவினரையே தனக்குக் கீழானவராக அடிமைப்படுத்தி வைக்கும் ஆண்டாண்டு காலமான ஆதிக்க மனநிலைக்கு எதிராக, அந்தக் கொடுமைகளிலிருந்து தன்னைத் தற்காத்துக் கொள்ள, சமத்துவச் சமூகத்தை உருவாக்கவே இங்குள்ள தமிழர்கள் நபி வழியை ஏற்று இசுலாத்தைத் தழுவினார்கள். ஆனால், இன்று இந்திய ஒன்றியத்தில் அதிகாரத்தில் உள்ள மதவாதிகள் இங்குள்ள இசுலாமியர்கள் அனைவரும் அரேபியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவர்கள் போன்றதொரு அவதூறைப் பரப்பி, ஆணவ மனப்பான்மையுடன் செயல்பட்டு வருகின்றனர். அதனை எதிர்த்து முறியடிக்க, இசுலாமியச் சொந்தங்கள் ஒவ்வொருவருக்குள்ளும் நான் இந்த மண்ணின் மகன், உலகின் மூத்த மொழிக்குச் சொந்தக்காரன், நான் ஒருபோதும் சிறுபான்மையன் அல்ல, பெரும்பான்மை தேசிய இனத்தின் மகன்! என்ற தெளிவும், திமிரும் நமக்கு வேண்டும்.

தமிழ் மண் ஒருபோதும் மதத்தால் வரும் அடக்குமுறைகளுக்கும், ஒடுக்குமுறைகளுக்கும், பிரிவினைகளுக்கும் இடமளிக்காது. மதத்தை வைத்து அரசியல் செய்பவர்கள் எண்ணம் தமிழ்நாட்டில் ஒருபோதும் ஈடேறப் போவதுமில்லை. ஏனென்றால், தமிழ்மண் அனைத்து மதத்தினரும் உறவினர்களாய் ஒன்றாக வாழும் பெருநிலம். இன்றைக்கும் அனைத்து மதத்தினரும் எங்கள் சிவகங்கை, ராமநாதபுரத்தில் அண்ணன் தம்பிகளாக, மாமன், மச்சான்களாக ஒற்றுமையுடன் வாழ்வதைக் காணலாம். 

நான் படித்த பள்ளிக்கூடமாகட்டும், ஜாகிர்உசேன் கல்லூரியாகட்டும் ஆகிய அனைத்தும் இசுலாமியப் பெருமக்களால் நடத்தக்கூடியவைதான். அவர்கள் ஊட்டிய அறிவும், உணர்வும்தான் எனது மண்ணின் மீதான தீராக்காதலுக்கும், மக்கள் மீதான மாறாப்பற்றுதலுக்கும் மூல காரணமாகும். என் ஆசிரியர்கள் எனக்கு ஊட்டி வளர்த்த அத்தகைய அறிவும், உணர்வும் இங்கு வாழும் நம் ஒவ்வொருவருக்கும் உள்ளவரை நமது நிலத்தை மதவாத சக்திகளால் ஒருபோதும் ஆளமுடியாது.

போற்றுதலுக்குரிய நபிகள் நாயகம் அவர்கள் தமது இறுதிப் பேருரையில், 'தனது நாவாலும், கைகளாலும் சக மனிதர்களுக்குத் தீமை விளைவிக்காதவரே மனிதர்களில் சிறந்தவர்' என்கிறார். ஆகவே, நபிகள் பெருமானார் காட்டிய அன்பு வழியில், அறநெறிபற்றிப் புனித ரமலான் மாதத்தில் இறைவனை எண்ணி நோன்பு நோற்று உடலையும், உள்ளத்தையும் பண்படுத்திக் கொண்டிருக்கும் எனதன்பு இசுலாமியச் சொந்தங்கள் நோன்பு கடமையை முழுமையாக நிறைவேற்றி, இல்லாதவருக்கு ஈயும் இன்பத்திருநாளான எதிர்வரும் ஈகை பெருநாளை மகிழ்வுடன் கொண்டாடி எந்நாளும் தாய்த்திரு தமிழ்மண்ணில் ஒற்றுமையுடனும், சகோதரத்துவத்துடனும் வாழ வேண்டுமாய் வாழ்த்துகிறேன்!

உங்கள் அனைவருக்கும் மீண்டுமொருமுறை எனது பேரன்புமிக்க பெருநாள் வாழ்த்துகள் !

[கட்டுரையாளர் - தலைமை ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சி]

2022 தினமணி - ஈகைப் பெருநாள் மலரிலிருந்து...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com