சகிப்புத்தன்மைக்கோர் பெருமானார்: ரமலான் சிறப்புக் கட்டுரைத் தொடர் - 6

இன்றைய மக்களும், அரசுகளும் ஏற்றிப் போற்றிப் பின்பற்றத்தக்க வகையில் அன்றே பல்வேறு சமய மக்களிடையே சகிப்புணர்வையும், ஒற்றுமையையும், ஒருங்குணர்வையும் சட்டப்பூர்வமாக நிலைநாட்டிய பெருமை பெருமானாரையேச் சாரும
சகிப்புத்தன்மைக்கோர் பெருமானார்: ரமலான் சிறப்புக் கட்டுரைத் தொடர் - 6

அனைவரும் ஆதாம் வழியினரே

உலக மக்கள் அனைவரும் ஆதிப் பிதா ஆதாம் வழி வந்தவர்களே என்ற அடிப்படைக்கிணங்க மனிதர்களிடையே உயர்ந்தவன் - தாழ்ந்தவன் என்ற பேதமோ, நிற, மொழி எனும் வேற்றுமைகளோ ஏற்பட ஏதுவில்லை. குலம், கோத்திரம் போன்ற முறைகள் ஒருவரையொருவர் இனங்கண்டு கொள்ளவேயன்றி வேறு எதற்காகவும் இல்லை என்பதைத் திருமறை தெளிவாகக் குறிப்பிடுகிறது.

“மனிதர்களே, நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்துதான் படைத்தோம். பின்னர், ஒருவர் மற்றவரை அறிந்துகொள்ளும் பொருட்டு, உங்களைக் கிளைகளாகவும் கோத்திரங்களாகவும் ஆக்கினோம். (ஆதலால்) உங்களில் ஒருவர் மற்றவரைவிட மேலானவர் என்று பாராட்டிக் கொள்வதற்கில்லை” (திருக்குர்ஆன் 49:13)

உலகெங்கும் இறை தூதர்கள்

காலந்தோறும் மக்களிடையே ஏற்படும் மனமாச்சரியங்களைப் போக்கி அவர்களை இறைநெறியில் வழி நடத்த உலகெங்கும் இறை தூதர்கள் அவ்வப்போது இறைவனால் அனுப்பப்பட்டுள்ளனர். அவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து இருபத்தி நான்காயிரம் என இஸ்லாமிய மரபு மொழிகிறது. இவர்கள் இந்தியா உட்பட எல்லா நாடுகளிலும் இனத்திலும் மொழியிலும் பிறந்து மக்களுக்கு வழிகாட்டியுள்ளனர். இவர்களுள் முதல் இறை தூதர் முதல் மனிதராகிய ஆதாம் (அலை) ஆவார். இறுதி நபி முஹம்மது (சல்) ஆவார். இஸ்லாமிய நெறியானது முதல் மனிதரும் நபியுமான ஆதாம் தொடங்கி வளர்ந்து வந்ததாகும். இஸ்லாமிய மார்க்கமாகிய இறைநெறியை நிறைவு செய்தவர் நபிகள் நாயகம் (சல்) ஆவார்.

இன்றையத் தேவை சகிப்புணர்வே

இன்றைய மனிதகுலமாச்சரியங்களுக்கெல்லாம் அடிப்படையாக அமைவது சகிப்புத்தன்மை இன்மையேயாகும். சிறுபான்மை சமய, இன, மொழி பேசும் மக்களிடையே பெரும்பான்மையினரும், அதேபோன்று பெரும்பான்மையினரிடம் சிறுபான்மையினரும் எவ்வாறு ஒத்திணங்கி சகிப்புணர்வோடு வாழ்ந்து வளம் பெறுவது என்பதற்கு நாயகத் திருமேனியின் வாழ்வும், வாக்கும் அரிய சான்றாக அமைந்துள்ளதெனலாம். பல்வேறு இன, மொழி, சமயங்களைக் கொண்ட இந்திய மக்களிடையே சகிப்புணர்வு அழுத்தம் பெற வேண்டியது அவசிய, அவசரத் தேவையாகும்.

இந்திய சமயங்களின் அடித்தளப் பண்பு

இந்திய சமயங்கள் அனைத்தும் சகிப்புணர்வையே பெரிதும் வலியுறுத்துகின்றன. இன்னும் சொல்லப்போனால் சமயங்களின் அடித்தளப் பண்பாக அமைந்துள்ள இவ்வுயர் பண்பை மறந்துவிட்டதால் அல்லது பேணி நடக்க விழையாத காரணத்தால் எத்தனையோ இடர்பாடுகள் இன்றைய வாழ்வில் தலைதூக்கி, அமைதியின்மைக்கும் கலவரச் சூழலுக்கும் காரணமாகின்றன.

எந்தவொரு சமய, இன, வகுப்பு, மொழி மக்களாயினும் அவர்கள் இணக்கத்தோடும் ஒற்றுமையோடும் ஒத்திணங்கி வாழ வேண்டும் என்பதே இஸ்லாத்தின் அடிப்படையாகும்.

அது மட்டுமல்ல, உலகில் உள்ள அனைத்து மதங்களும் அவற்றின் வேதங்களும் இறைவனால் வழங்கப்பட்டவையே என்பதையும் அவை அனைத்தையும் முஸ்லிம்கள் மதிக்க வேண்டும் என்பதையும் இஸ்லாமிய அடித்தளப் பண்புகளாக வற்புறுத்தப்படுகின்றன. இதற்கு மாறு செய்வோர் பாவம் செய்தவர்களாவர் என இஸ்லாம் தெளிவாகக் கூறி எச்சரிக்கிறது. 

அடிநாள் தொட்டே சகிப்புணர்வு

பெருமானாரின் பெருவாழ்வில் அடிநாள் தொட்டு அரசோச்சி வந்த பண்பு சகிப்புணர்வாகும். சகிப்புத் தன்மைக்கோர் இலக்கணமாக ஆரம்ப காலம் தொட்டே விளங்கியவர் என்பதை அவரது வரலாற்றுச் சுவட்டில் தெளிவாகக் கண்டுணர முடிகிறது.

ஹிரா குகையில் வானவர் மூலம் இறைநெறி பெற்ற பெருமானார், அதைப் பல்வேறு இடர்ப்பாடுகளுக்கிடையே மக்காவில் நண்பர்களிடையே ரகசியமாகப் பரப்பி வந்தார். மதினா நகர் வந்த பிறகே பெருமானார் பகிங்கரமாகப் பிரசாரம் செய்யலானார்.

நபிகள் நாயகம்(சல்) மதினா வருமுன்னர் அந்நகர மக்களில் விரல் விட்டு எண்ணத்தக்க ஒரு சிலரே இஸ்லாமிய நெறியை ஏற்று ஒழுகினர். மற்றபடி கிறிஸ்தவர்களையும் யூதர்களையும் மற்றும் பற்பல சிறு சமயங்களைச் சார்ந்தவர்களையும் பெருமளவில் கொண்ட நகரமாகவே மதினா விளங்கியது.

அகதிப் பிரச்சினை தீர்த்த அண்ணலார்

நபிகள் நாயகம் (சல்) மதினாநகர் சென்றபின்னர் மக்காக் குறைஷியர்கள் செய்த கொடுமைகளைத் தாள முடியாத முஸ்லிம்கள் தங்கள் சொத்து, சுகம், உற்றார் உறவினர்களையெல்லாம் துறந்து அகதிகளாக மதினா நகர் வந்தனர். இவ்வாறு வந்து சேர்ந்த அகதிகளிடம் வேறு எதுவும் இல்லாத நிலை. இவர்களின் தொகை சில நூறுகளாகும்.

இவ்வாறு வந்து சேர்ந்த மக்கா நகர முஸ்லிம் அகதிகளுக்கு மறுவாழ்வு அமைத்துத் தர வேண்டிய அவசிய, அவசரப் பிரச்சினை எழுந்தது.

அகதிப் பிரச்சினை எப்படிப்பட்டது என்பதை இந்திய மக்களாகிய நாம் பலமுறை பார்த்து அனுபவித்தவர்கள்; இன்றும் அனுபவித்துக் கொண்டு இருப்பவர்கள்.

அன்றைய மதினா நகரின் பொருளாதார நிலையும் வளமானதல்ல. வறுமைக் கோட்டை ஒட்டிய நிலை. அந்நிலையில் மதினா வந்த முஸ்லிம் அகதிகளை மக்கா நகருக்கே விரைந்து திருப்பியனுப்புமாறு மக்கா குறைஷியர் விடுத்த எச்சரிக்கை வேறு; இதனால் மதினா வந்திருந்த மக்கா முஸ்லிம் அகதிகளின் நிலை இக்கட்டானதாக இருந்தது.

இந்நிலையில் மதினா வாழ் முஸ்லிம் குடும்பத் தலைவர்களைப் பெருமானார் அழைத்தார். அகதிகளாக வந்துள்ள மக்கா நகர முஸ்லிம் குடும்பமொன்றை மதினா முஸ்லிம் குடும்பம் ஒவ்வொன்றும் ஏற்றுக்கொள்ள வேணடும் என்றும் அவ்வாறு இணைந்த இரு குடும்பத்தவர்களும் ஒன்றாக உழைத்துப் பெருளீட்டிச் சமமாகப் பகிர்ந்து ஒத்திணங்கி ஒரே குடும்பமாக வாழ வேண்டும் எனவும் யோசனை கூறினார். ஆக்கப்பூர்வமான இவ்வாலோசனையை ஏற்ற மதினா முஸ்லிம் குடும்பத் தலைவர்கள் முழுமனதுடன் முஸ்லிம் அகதிகளை விரும்பி ஏற்றனர். இதன் மூலம் அகதிக் குடும்பத்தவர்க்கு இருப்பிடமும் வேலை வாய்ப்பும் உடனடியாகக் கிடைத்தது. மனிதநேய அடிப்படையில் சகிப்புணர்வும் புரிந்துணர்வும் கொண்ட சூழ்நிலையில் மலைப்பூட்டும் மாபெரும் அகதிப் பிரச்சினை எளிதாகத் தீர்க்கப்பட்டது.

பல்வேறு சமயங்களுக்கிடையே உருவான ஒருங்கிணைப்பு

பெருமானார் மதினா நகர் வந்து சேர்ந்தபோது அங்கு பல்வேறு சமயங்களைச் சார்ந்த மக்கள் வாழ்ந்து வந்தனர். அவர்களுள்ளும் கிறிஸ்துவ, யூத சமய மக்கள் பெருமளவில் வாழ்ந்தனர். அவர்களுக்கிடையே எவ்வித ஒற்றுமை உணர்வும் இல்லை. ஒரே இனத்தைச் சார்ந்த இரு வேறு கூட்டத்தால் அற்பக் காரியங்களுக்காக முடிவில்லாத சண்டையிலும் சச்சரவிலும் ஈடுபடுவது அவர்தம் வழக்கமாகவே இருந்து வந்தது. இதற்கிடையில் வெளியார்களின் தாக்குதலும் அடிக்கடி நிகழ்ந்தது. இதனால் கடுமையான உயிர்ச்சேதமும் பொருட் சேதமும் ஏற்படுவது தவிர்க்க முடியாததாக இருந்து வந்தது. இக்காரணங்களால் எல்லா வகையிலும் மதினா நகர் மக்கள் ஒற்றுமையுணர்வற்றவர்களாகவும் சகிப்புணர்வில்லாதவர்களாகவும் பிளவுண்டு கிடந்தனர். இவர்களை ஒருங்கிணைக்கும் ஒட்டு மொத்தத் தலைமை ஏதும் அந்நாளில் அப்போது மதினாவில் உருவாகியிருக்கவில்லை.

இந்நிலையை மாற்றி பல்வேறு சமயத்தவர்களையும் ஒருங்கிணைக்கும் வகையில் செயல்பட முனைந்தார் பெருமானார் (சல்) அவர்கள்.

முதல் சர்வசமயக் கூட்டம்

முஸ்லிம்களையும் முஸ்லிம் அல்லாதவர்களான கிறிஸ்துவர்கள், யூதர்கள் மற்றும் பல்வேறு சிறு சிறு சமயங்களைச் சார்ந்தவர்களையும் கொண்ட சர்வமதக் கூட்டத்தைப் பெருமானார் முதன்முறையாகக் கூட்டினார்.

மதினா நகர் மக்கள் சகிப்புணர்வின் அடிப்படையில் புரிந்துணர்வோடு ஒருங்கிணைந்து வாழ வேண்யடிதன் அவசியத்தை அப்போது வலியுறுத்தினார்.

வெளியார்களின் தாக்குதலிலிருந்து தங்களைக் காத்துக்கொள்ளவும் தங்களுக்கிடையே மதமாச்சரியங்களோ, சண்டை சச்சரவுகளோ, இன்றி அமைதியாக வாழ வழி காண வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார். பல்வேறு சமயங்களை, இனங்களைச் சார்ந்தவர்களாயினும் தங்களின் சக்தி சிதறாமல் ஒருங்கு திரண்டு அமையுமாறு செயல்பட வழிகாண வற்புறுத்தினார். 

முதல் பொது அரசு

பெருமானாரது ஆலோசனை அவர்களைச் சிந்திக்கத் தூண்டியது. விழிப்புற்ற பல்வேறு சமயத் தலைவர்களும் இவ்வகையில் தங்களுக்கு ஆக்கப்பூர்வமாகத் தொடர்ந்து வழிகாட்ட பெருமானாரை வேண்டினர். இதற்காக மதினா நகரின் தலைவராகவும் அண்ணலாரைத் தேர்ந்தெடுத்தனர். நகர அரசு ஒன்றை அமைத்து வழிகாட்டுமாறும் வேண்டினர். மதினாவின் வரலாற்றிலேயே அனைத்துத் தரப்பு மக்களும் ஒன்றிணைந்து அரசமைத்ததும், தங்களுக்கென ஒரு பொதுத் தலைவரைத் தேர்ந்தெடுத்ததும் அதுவே முதன் முறையாகும்.

உலகின் முதல் பொது அரசு அமைப்புச் சட்டம்

பல்வேறு சமய, இன மக்களின் தலைமையில் பொறுப்பேற்ற பெருமானார் கல்வி கற்காதவராக இருந்தபோதிலும் மதினா நகர அரசுக்கு என பல்வேறு சமயத்தவர்க்கும் பொதுவான அரசு அமைப்புச் சட்டம் (Constitution) ஒன்றை எழுத்துப்பூர்வமானதாக உருவாக்கினார்.

மனித குல வரலாற்றிலேயே முதன்முறையாக எழுத்து வடிவில் உருவாக்கப்பட்ட முதல் அரசமைப்புச் சட்டம் (Constitution) இதுவேயாகும். அதுவரை மதினா மக்கள் எழுத்துருப் பெறாத சில பொது விதிமுறைகளை மட்டுமே அனுசரித்து வந்தனர்.

எழுத்துருவில் உருவாக்கப்பட்ட இச்சட்டம் ஐம்பத்திரண்டு பிரிவுகளைக் கொண்டதாகும். பல்வேறு சமயங்களைப் பின்பற்றும் பல இன மக்கள் சகிப்புணர்வுடன் ஒருங்கிணைந்து வாழ வழிகாட்டும் ஒளி விளக்காக இச்சட்டம் அமைந்துள்ளதெனலாம்.

ஒவ்வொரு சமயத்தவரும் தத்தம் சமய அடிப்படையில், மனச்சாட்சிக்கிணங்க, ஒருங்கிணைந்து வாழ இச்சட்டம் வழி காட்டுகிறது. முஸ்லிம்கள் தங்கள் மார்க்க அடிப்படையிலும் கிறிஸ்துவ, யூத சமயத்தவர்கள் தங்கள் மத நியதிப்படியும் வாழ முழு உரிமையுண்டு. தங்கள் விருப்பம்போல் சமயங்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளவோ சடங்கு முறைகளைச் செய்து பேணி நடக்கவோ முழு உரிமை உண்டு. ஒருவர் மற்றவர் சமயத்தைப் பழிக்கவோ இழிவாகப் பேசவோ அறவே கூடாது. மாற்றார் வழிபாட்டுத் தலங்களையும் புனித இடங்களையும் காப்பதில் அனைவருக்கும் சமயப் பொறுப்பு உண்டு.

இதற்கெல்லாம் முடிமணி வைத்தாற்போல் எந்தச் சமயத்தவரிடையேனும் சச்சரவு ஏதாவது ஏற்பட்டால், அவர்தம் சமயச்சூழலுக்குள் தாங்கள் தங்கள் வேத நியதிப்படி அவ்வச் சமயத் தலைவர்களே தீர்ப்பு வழங்கிக்கொள்ள பூரண உரிமை பெற்றவர்களாவர் என அச்சட்டம் விளக்கிக் கூறுகிறது.

இம்மதினா நகர அரசமைப்புச் சட்டத்தில் காணும் மற்றொரு சிறப்பம்சம் சமயப் பாதுகாப்பு மட்டுமின்றி சமூகப் பாதுகாப்புமாகும்.

ஒரு சமூகத்தைச் சார்ந்தவர்களிடையே ஏற்படும் பொருளாதாரப் பிரச்சினைகளை அச்சமூகத்தைச் சார்ந்த மக்கள் அனைவரும் தங்கள் பிரச்சினையாக்க கருதித் தீர்த்துக்கொள்ளக் கடமைப்பட்டவர்களாவர் என விதித்திருப்பதாகும்.

இன்றைய ஐரோப்பிய நாடுகளில் காணும் சமூகப் பாதுகாப்பு உத்திரவாதச் சட்டங்களுக்கு அன்றே முன்னோடிச் சட்டம் உருவாக்கப்பட்டதெனலாம்.

இவ்வாறு முஸ்லிம், கிறிஸ்துவ, யூத சமயங்களைச் சார்ந்த மக்கள் சிறுபான்மை அல்லது பெரும்பான்மை என்ற எண்ணிக்கை பேதமின்றி ஆழ்ந்த சகிப்புணர்வுடன் எவ்விதப் பாகுபாடுமின்றி, முழுச் சுதந்திரத்துடன் தங்கள் சமய அடிப்படையில் வாழவும், தங்கள் மத நம்பிக்கையின்படி தங்கள் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ளவும் வழிவகை ஏற்பட்டது.

இன்றைய மக்களும், அரசுகளும் ஏற்றிப் போற்றிப் பின்பற்றத்தக்க வகையில் அன்றே பல்வேறு சமய மக்களிடையே சகிப்புணர்வையும், ஒற்றுமையையும், ஒருங்குணர்வையும் சட்டப்பூர்வமாக நிலைநாட்டிய பெருமை பெருமானாரையேச் சாரும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com