Enable Javscript for better performance
மனித நேயத்திற்கோர் மாநபி: ரமலான் சிறப்புக் கட்டுரைத் தொடர் - 10- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

  மனித நேயத்திற்கோர் மாநபி: ரமலான் சிறப்புக் கட்டுரைத் தொடர் - 10

  By மணவை முஸ்தபா  |   Published On : 11th April 2022 05:00 AM  |   Last Updated : 09th April 2022 03:20 PM  |  அ+அ அ-  |  

  ramadan_1

  அவனிக்கோர் அருட்கொடையாக வந்துதித்த அண்ணல் நபிகள் நாயகம் (சல்) அவர்களின் பிறந்தநாளை உலகெங்குமுள்ள இஸ்லாமியப் பெருங்குடி மக்கள் பேரார்வப் பெருக்கோடு கொண்டாடி மகிழ்கின்றனர்.

  நபிகள் நாதரின் வாழ்வும் வாக்கும் மனித குலத்துக்கு வழிகாட்டும் ஒளி விளக்காக, அனைவரும் பின்பற்றத்தக்க அழகிய முன் மாதிரியாக விளங்கி வருகிறது.

  அவர்தம் சொல்லும் செயலும் மனித நேயத்தை அடிப்படையாகக் கொண்டதாகும். அவர் தம் தனிப்பட்ட வாழ்க்கையிலும் சமுதாய வாழ்க்கையிலும் அரிய குணப் பண்புகளின் ஒட்டு மொத்த உருவகமாகவே வாழ்ந்தார். அவரது வாழ்வின் ஒவ்வொரு அம்சமும் ஒவ்வொரு மனிதரும் நற்குணக்குன்றாக வாழ முனைய வழிகாட்டுவதாகும்.

  இறைவன் தன்னிலிருந்து முதல் மனிதர் ஆதாமையும் அவரினின்றும் முதல் பெண்மணியாகிய ஹவ்வா (ஏவாள்)வையும் உருவாக்கினார் என்பது இறைமறை தரும் செய்தியாகும். எனவே, ஆதாமின் சந்ததியினரான ஒவ்வொரு மனிதனும் இறையம்சமுடையவனாகவே கருதப்படுகிறான். எனவே, அவர்களை உயர்வாக எண்ணுவதும் மதிப்போடும் மரியாதையோடும் நடத்துவதும் மனிதராகப் பிறந்த ஒவ்வொருவரின் இன்றியமையாக் கடமையாகும் என்பதை பெருமானார் வலியுறுத்தியுள்ளார். இதற்கு ஏற்ற இலக்கணமாக வாழ்ந்தும் காட்டியுள்ளார்.

  உதவுவதில் பேரின்பம்

  மனித நேயம் போற்றும் இனிய பண்பு இளமைதொட்டே பெருமானாரிடம் குடி கொண்டிருந்ததை பல நிகழ்ச்சிகள் எடுத்துக்காட்டி விளக்குகின்றன.

  நற்குணங்களின் பிறப்பிடமாகத் திகழ்ந்த நாயகத் திருமேனி அவர்கள் பிறருக்கு உதவுவதில் பேரின்பம் கொண்டார். சின்னஞ்சிறு வயது முதலே இந்நற்பழக்கம் இவரிடம் குடிகொண்டிருந்தது. தான் சிறுவராக இருந்தபோது கடை வீதிக்கு ஏதேனும் பொருள் வாங்கச் செல்லவேண்டியிருந்தால் வழியில் இருக்கும் வீட்டுக் கதவுகளையெல்லாம் தட்டி, ‘நான் கடைவீதிக்குப் பொருள் வாங்கச் செல்கிறேன்’ என்று கூறிச் செல்வது அவர் பழக்கம். பிறருக்கு உதவியாக இருப்பதில் பேரின்பம் காணும் பேருள்ளமுடையவர் பெருமானார். எனவே, யார் என்ன பொருள் வாங்கி வரப் பணித்தாலும் அப்பொருளை நம்பிக்கையோடு வாங்கி வந்து தருவது வழக்கம். இவ்வினிய பண்பால் இவரைப் பலரும் ‘அல்-அமீன்’ என்றே அழைத்தார்கள். இதற்கு ‘நம்பிக்கையாளர்’ என்பது பொருளாகும்.

  இளமைதொட்டே ஆடம்பர உணர்வற்றவராக திகழ்ந்தார் பெருமானார். சகிப்புணர்ச்சியையும் எளிமையையும் இரு கண்களாகக் கொண்டொழுகியவர். மனித நேயத்தை வளர்க்கும் ஊற்றுக்கண்ணாக எளிமையை எண்ணி வாழ்ந்தவர். எந்தச் சூழ்நிலையிலும் ஆடம்பர உணர்வு அவரை அணுகியதே இல்லை.

  அண்ணல் நபிகள் நாயகம் (சல்) இறை தூதராக மட்டுமல்லாது நாட்டுத் தலைமையேற்று அரசோச்சிய காலத்தும் கூட மிக எளிமையாகவே வாழ்ந்து வந்தார். ஒரு சமயம் பெருமானார் இல்லம் வந்த உமர் (ரலி) அண்ணலாரைக் கண்டு மனத்துயர் கொண்டார். காரணம், பெருமானார் வாழ்ந்து வந்த வீட்டின் நிலை. 

  இதையும் படிக்க | பெருமானாரின் பிற சமயக் கண்ணோட்டம்: ரமலான் சிறப்புக் கட்டுரைத் தொடர் - 1

  பச்சை மண் செங்கல் கொண்டு கட்டப்பட்ட சாதாரண சிறிய அறை. பேரீச்ச இலைகளால் வேயப்பட்ட மேற் கூறை; வீட்டினுள் ஒரு கயிற்றுக் கட்டில்; பேரீச்ச இலைச் சருகுகள் திணிக்கப்பட்ட தோலுறையாலான தலையணை; விரிப்பாகப் பயன்படக்கூடிய ஒரு தோல் பாய்; தண்ணீர் வைப்பதற்கான தோலாலான நீர் பாத்திரம்; இவையே அந்த அறையில் இருந்த பொருட்கள். கட்டிலில் பெருமானார் படுத்திருந்தற்கு அடையாளமான கயிற்றுத் தழும்புகள் முதுகெங்கும் பதிந்திருந்தன. இதைக்கண்டு மனம் வருந்திய உமர் (ரலி) மற்ற நாட்டுத் தலைவர்களெல்லாம் ஆடம்பர உச்சாணியில் உல்லாசமாக வாழும்போது மாபெரும் அரபு நாட்டின் தலைவரான தாங்கள் ஒரளவாவது ஆடம் பரத்துடன் வசதியாக வாழக்கூடாதா? என வினா எழுப்பினார். இதைக் கேட்ட பெருமானார் ‘இறைவன் எளிமையையே விரும்புகிறான். எளிமை வாழ்வு வாழும் எளியவர்களையே அல்லாஹ் மிகவும் நேசிக்கிறான். அவர்களே மறுமைப் பேரின்பம் பெற தகுதி பெறுகிறார்கள். எனவே, நான் மறுமைப் பேரின்பமும் பெரு வாழ்வும் பெறுவதைத் தாங்கள் விரும்பவில்லையா?’ என எதிர்க்கேள்வி கேட்டு எளிமை வாழ்வின் சிறப்பை உணர்த்தினார்.

  அண்ணலார் எப்போதும் சாதாரண முரட்டு நூலாடையையே உடுத்துவது வழக்கம். மிக மிக எளிய உணவு வகைகளையே உண்பார். பேரீச்சம் பழமும் தண்ணீருமே அவரது அன்றாட ஆகாரப் பொருட்களாக இருந்தன. குளிர்ந்த நீரை விரும்பிக் குடிப்பார். சில சமயம் சுத்தமான பாலை விரும்பி அருந்துவார். வயிறு முட்ட உண்பதைவிட அரை வயிறு உண்பதையே அதிகம் விரும்புவார். பெரும்பாலும் பட்டினி இருப்பதே அவர்கட்கு மிகவும் பிடிக்கும். பசி தெரியாமலிருக்க வேட்டியை வயிற்றில் இறுகக் கட்டிக் கொள்வது அவர் வழக்கம்.

  பெரும் மரியாதை

  எளிமையின் உருவாய் வாழ்ந்த பெருமானார் இளையோர் முதல் முதியோர் வரை அனைவரிடத்தும் பெரும் மரியாதை காட்டுவதில் தன்னிகரற்று விளங்கினார். இளையவர்களோ பெரியவர்களோ யாரைச் சந்திக்க நேர்ந்தாலும் அவர்கட்கு சலாம் (முகமன்) கூறுவதில் எப்போதுமே முந்திக் கொள்வார். ‘சலாம் சொல்லுவதில் யார் முந்திக் கொள்கிறாரோ அவருக்கு அதிக நன்மையும் இறையருளும் கிட்டுகிறது’ என்பது நாயக வாக்காகும்.

  முதியவர்கட்குத் துணையாயிருப்பதிலும் ஆறுதலாக நடந்து கொள்வதிலும் பெரு விருப்பமுடையவராகத் திகழ்ந்தார். ஒரு சமயம் நாயகத்திருமேனி தொழுகையை முடித்துக் கொண்டு பள்ளியிலிருந்து வெளிவந்தார்கள். வரும் வழியில் மூதாட்டியொருவர் பெருமானாரை அழைத்துத் தன் குறைகளையெல்லாம் கொட்டினாள். அம் மூதாட்டியின் சொற்களைப் பொறுமையாக செவிமடுத்த நபிகள் திலகமும் அம் மூதாட்டி மனங்கொள்ளுமாறு தீர்வுகளும் சமாதான கூறித் தேற்றினார். அப்போது பெருமானாரைக் காண அங்கு வந்த ஏமன் நாட்டு மன்னர் இதைக் கண்டு பெருமானாரின் அடக்கத்தையும் எளிமையையும் மனித நேயத்தை வியந்ததாக வரலாறு கூறுகிறது.

  தான் ஆடம்பரமற்ற எளிய வாழ்வு வாழும் அதே சமயத்தில் மற்றவர்களையும் உரிமையோடும் சிக்கனத்தோடும் வாழத் தூண்டியவர் பெருமானார்.

  சிக்கனம்

  ஒரு சொட்டு ரத்தமும் சிந்தாமல் மக்காவை வெற்றி கொண்ட பின்னர் அந் நகரின் ஆட்சியைக் கவனிக்க ஒரு ஆளுநரை நியமிக்க வேண்டிய அவசிய, அவசரத்தேவை ஏற்பட்டது. அப்போது அந்நகரைச் சேர்ந்த அத்தா இப்னு ஆசீத் என்பவரை அழைத்து, ‘உங்களுக்கு ஒரு நாள் தேவைக்குக் குறைந்தபட்சம் எவ்வளவு தேவைப்படும்’ என வினவினார். எதற்காகக் கேட்கிறார் என்பதை அறிந்து கொள்ளவியலாத ஆசீத் ‘ஒரு நாள் செலவுக்கு-தேவைக்கு ஒரு திர்ஹம் இருந்தால் போதும் என்று கூறினார். உடனே பெருமானார் ‘உங்களை மக்காவின் ஆளுநராக நியமித்துள்ளேன். உங்கள் ஒரு நாளின் குறைந்தபட்சத் தேவையான ஒரு திர்ஹமே உங்கள் சம்பளம் எனக் கூறி நியமித்தார். அரசுப் பணத்தை எந்த அளவுக்குச் சிக்கனமாக எடுத்துச் செலவழிக்க வேண்டும் என்பதற்கு வழியமைத்துச் சென்றவர் பெருமானார்.

  தன்னிடம் உதவி என்று யார் எந்தச் சூழ்நிலையில் கேட்டாலும் அவ்வுதவியை மறுக்காமல் வழங்குவது அவரது மனிதநேயக் குணச்சிறப்பாகும்.

  ஒரு சமயம் கப்பார் இப்னு அரத் எனும் நபித் தோழர், மார்க்க (தீன்) விஷயமாக மதினாவிலிருந்து வேற்று நாடு செல்ல நேர்ந்தது. மிக ஏழ்மை நிலையிலிருந்த அவரது மனவிைக்கும் இளம் மகனுக்கும் உணவாக அவர்களிடமிருந்த ஒரு ஆடு பால் தந்து வந்தது. கப்பார் வேற்று நாடு சென்று விட்டதால் ஆட்டுப் பாலைக் கறந்து தர ஆளில்லை. அந்த அம்மையார் அண்ணலாரை அணுகி தாங்கள் நாள்தோறும் காலையிலும் மாலையிலும் ஆட்டுப் பால் கறந்து தர வேண்டும் என வேண்ட, பெருமானாரும் உரி மையாளரான கப்பார் திரும்பி வரும்வரை நாள்தோறும் இரு வேளையும் ஆட்டுப்பால் கறந்து தந்து வந்தார். 

  இதையும் படிக்க | பெருமானாரின் பிற சமயக் கண்ணோட்டம்: ரமலான் சிறப்புக் கட்டுரைத் தொடர் - 2

  துஷ்ட விருந்தாளி

  ஒரு சமயம் மதினா நகருக்கு வெளியிலிருந்து, மாற்றுச் சமயத்தைச் சேர்ந்த ஒரு சிறு குழுவினர் பெருமானாரைச் சந்தித்து இஸ்லாம் மார்க்கம் சம்பந்தமான பல ஐயப்பாடுகளைப் போக்கிக்கொள்ள அண்ணலாரை அணுகினர். விவாதம் நீண்ட நேரம் நீடித்தது. இரவு வெகு நேரமாகி விட்ட நிலையில், வந்துள்ளவர்கட்கு ஒவ்வொரு முஸ்லிமும் ஒரு விருந்தினரைத் தம் வீட்டுக்கு அழைத்துச் சென்று விருந்தளிக்குமாறு பெருமானார் ஏற்பாடு செய்தார்.

  அக்குழுவில் வந்தவர்களில் கெடுமதி படைத்த துஷ்டன் ஒருவனும் இருந்தான். அவனது தோற்றத்தையும் அவன் செயற்பாடுகளையும் கண்டவர்கள் அவனை வீட்டிற்கு அழைத்துச் சென்று விருந்தளிக்க விரும்பவில்லை. இறுதியாக எஞ்சியிருந்த அத்துஷ்ட விருந்தாளியை பெருமானார் தன் வீட்டிற்கு விருந்தளிப்பதற்காக அழைத்துச் சென்றார். தங்கள் குடும்பத்தவர்களுக்கென்று தயாரிக்கப்பட்டிருந்த உணவு வகைகளையெல்லாம் அன்போடு உண்ணத் தந்தார். பெருமானாரின் வீட்டாரும் உண்ண வேண்டுமே என்பதை எண்ணிப் பார்க்காத அத்துண்ட விருந்தாளி அனைத்தையும் உண்டு முடித்தான். அவ்வாறு உண்பதன் மூலம் விருந்தளிக்க அவ்வீட்டாரை அன்றிரவு பட்டினி போட வேண்டும் என்பது அவனது எண்ணமாக இருந்தது. விருந்துண்ட களைப்புத் தீர, உயர் தர விரிப்புகளை விரித்து உறங்கிக் காலையில் செல்லுமாறு பெருமானார் வேண்டினார். அவனும் அவ்வாறே தங்கினான். ஆனால், அளவுக்கதிகமாக உண்டதனால் செரிமானக் கோளாறு ஏற்பட, வாந்தியும் பேதியுமாக அவ்வறையை அசுத்தப்படுத்திவிட்டான். இதனால் விடியும் முன்னே எழுந்து யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் ஓடி விட்டான்.

  காலையில் எழுந்த பெருமானார் அறையின் நிலையை அறிந்து, அசுத்தமாக்கப்பட்ட விரிப்புகளைத் தங்கள் கைப்படவே துவைத்துச் சுத்தம் செய்துகொண்டிருந்தார். அப்போது அவ்வறையில் மறந்து வைத்துவிட்டுப்போன தன் வாளை எடுத்துச் செல்வதற்காக மீண்டும் அத்துஷ்ட விருந்தாளி அங்கு வந்து சேர்ந்தான். தான் அசுத்தப்படுத்திய விரிப்புகளை நபிகள் நாயகம் துவைத்துக் கொண்டிருப்பதைக் கண்டு நெக்குருகினான். திரும்பி வந்த விருந்தாளியைக் கண்ட அண்ணலார் ஆவலோடு ஒடிச் சென்று, வரவேற்று, அன்பு மொழி கூறி, மறந்து வைத்துவிட்டுச் சென்ற வாளை எடுத்து வந்து கொடுத்தார். அவன் உடல் நலனைப் பரிவோடு கேட்டார். துஷ்டனிடமும் அன்பும் பரிவும் காட்டும் நாயகத் திருமேனியின் மனித நேய நற்செயல் அவனை கண்ணீர்விடச் செய்தது.

  குலங்களும் கோத்திரங்களும்

  மனிதனுக்கு மனிதன் வேற்றுமை உணர்வு காட்டுவது அறவே கூடாது. உலகத்து மக்கள் அனைவரும் ஆதாமின் வழிவந்த சகோதரர்களேயாவர். ஒருவரையொருவர் இனம் காணவே குலங்களும் கோத்திரங்களும் உருவாயின. இதையே திருமறை, ‘மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண் ஒரு பெண்ணிலிருந்துதான் படைத்தோம். பின்னர், ஒருவர் மற்றவரை அறிந்துகொள்ளும் பொருட்டு, உங்களைக் கிளைகளாகவும் கோத்திரங்களாகவும் ஆக்கினோம். ஆதலால், உங்களில் ஒருவர் மற்றவரைவிட மேலானவர் என்று பாராட்டிக் கொள்வதற்கில்லை’ (திருக்குர்ஆன் 49:13) எனக் கூறுகிறது. இறைவாக்குக்கேற்ப வாழ்ந்து வழிகாட்டிய மனிதப் புனிதரான பெருமானார் நாடு, இன, மொழி, நிற வேற்றுமைகளைக் கடந்து நிலையில் மனிதநேயத்தோடும் சமத்துவ உணர்வோடும் செயல்பட்டவராவார். இதை முழுமையாக மெய்ப்பிக்கும் நிகழ்ச்சியொன்று பெருமானார் வாழ்வில் நிகழ்ந்ததைக் காண முடிகிறது.

  பிலால்

  மதினாவில் முதன்முதலாக இறைவணக்கமாகிய தொழுகைக்கென பள்ளிவாசல் ஒன்று உருவாக்கப்பட்டது. அப்போது, முதன்முதலாக தொழுகைக்கு அழைக்கும் ‘பாங்கு’ எனும் தொழுகை அழைப்புமுறை உருவாக்கப்பட்டது. இதை இனிய குரலால் கூவியழைக்க யாரை நியமிப்பது என்ற நிலை ஏற்பட்டது. வரலாற்றுச் சிறப்புமிக்க இப்பணியை மேற்கொள்ள நபித் தோழர்களில் பலரும் அவாவிய போதிலும் இனிய குரல் வளம் படைத்த பிலால் (ரலி) அவர்களையே பெருமானார் தேர்ந்தெடுத்தார். அபிசீனிய நாட்டைச் சேர்ந்த இக் கறுப்பர் அடிமையாக இருந்து, இஸ்லாத்தில் இணைந்து விடுதலை பெற்றவர். அனைத்து வேற்றுமைகளுக்கும் அப்பாற்பட்ட நிலையில் இவரைத் தேர்வு செய்ததின் மூலம் மனித நேய உணர்வை வலுப்படுத்தினார்.

  மக்கா வெற்றி பெற்றபோது பல ஆண்டுகளாகப் பெருமானாருக்கு எல்லாவகையிலும் பெருந்துன்பம் நல்கி வந்த மக்கா குறைஷிகள் பலரும் பெருந்தண்டனைகளை எதிர்நோக்கி நிலைகுலைந்து நின்றனர். ஆனால், அண்ணலாரோ அவர்களில் யாரையுமே தண்டிக்க விரும்பாமல் பொது மன்னிப்பளித்து தம் மனித நேயத்தை வெளிப்படுத்தி மகிழ்வு கொண்டார்.

  இவ்வாறு, நபிகள் நாயகம் (சல்) அவர்கள் மனிதநேயம் உள்பட உன்னத மனிதக் குணங்கள் அனைத்தும் ஒருருக்கொண்ட மனிதப் புனிதராக, மாநபியாக நம்மிடையே வாழ்ந்து வழிகாட்டிச் சென்றுள்ளார். பெருமானாரின் குணநலன்கள் ஒவ்வொன்றும் குணவொழுக்கமுடையவர்களாக நம்மை உருமாற்றும் உந்து சக்திகளாக அமைந்துள்ளன.

  இன்றைய தனிமனித வாழ்விலும் சமுதாய வாழ்விலும் காணக்கிடக்கும் குணவொழுக்கக் கேடுகள் மறைய, நற்குணங்கள் அனைத்தும் அரசோச்சும் நிறைவாழ்வு நிலை பெற பெருமானாரின் பெருவாழ்வு ஓர் அழகிய முன் மாதிரியாகும். 

  நாளை: மறை பிறந்த இறை மாதம்

  இதையும் படிக்க | மிகு பயன் விளைவிக்கும் ரமலான்: ரமலான் சிறப்புக் கட்டுரைத் தொடர் - 3


  உங்கள் கருத்துகள்

  Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

  The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை
  kattana sevai
  flipboard facebook twitter whatsapp