தமிழரும் விழாக்களும்

மனிதர்கள் தோன்றிய காலத்தில் தங்களை மீறிய, தங்களால் கட்டுப்படுத்த முடியாத இயற்கை சக்திகளை இறையாகக் கொண்டு அவற்றிற்கு பல்வேறு வடிவங்களையும் பல்வேறு பெயர்களையும் ஏற்படுத்தி வணங்கத் தலைப்பட்டனர்.
தமிழரும் விழாக்களும்

மனிதர்கள் தோன்றிய காலத்தில் தங்களை மீறிய, தங்களால் கட்டுப்படுத்த முடியாத இயற்கை சக்திகளை இறையாகக் கொண்டு அவற்றிற்கு பல்வேறு வடிவங்களையும் பல்வேறு பெயர்களையும் ஏற்படுத்தி வணங்கத் தலைப்பட்டனர். அதன்தொடர்ச்சியாக அந்தந்தக் கடவுள்களுக்கென்று ஆண்டிற்கு ஒரு முறையோ அல்லது சில ஆண்டிற்கு ஒருமுறையோ விழா எடுக்கத் தொடங்கினர். பின்னர் நாகரிகம் வளர வளர வேட்டையாடுதலைத் தொடர்ந்து வேளாண்குடி மக்களாக தங்களுக்கான உணவைப் பூர்த்தி செய்யும் திறன் பெற்றவர்களாக வளர்ச்சி பெற்றனர்.

இத்தகைய காலகட்டம் ஒரு செழுமையான காலகட்டமாகத் திகழ்ந்தது. வேளாண் உழவுக்காக கால்நடைகளைப் பயன்படுத்திய மக்கள் அதனை இலகுவாக்கும் முறையில் கருவிகளைப் படைத்தனர். இத்தகைய சூழ்நிலையில் இயற்கை அவர்களுக்குத் தோதாக அமைய வேண்டும், மழைப்பொழிவாக இருந்தாலும் சரி, நீர் வரத்தாக இருந்தாலும் சரி, கோடை, குளிர், வறட்சி போன்ற காலகட்டங்கள் அவர்களின் தொழிலுக்குத் துணையாக இருக்க வேண்டும். அதனையும் தாண்டி ஏற்படக்கூடிய பேரிழப்புகளைத் தாங்கி நின்றதோடு இயன்றவரை அவற்றின் போக்கைத் திசைதிருப்பவும் முயன்றனர்.

இச்சூழலில்தான் முறையான பருவ காலங்கள் வகுக்கப்பட்டன. பருவ காலங்களுக்கு ஏற்ப பயிர் விளைச்சல் அதனோடு தொடர்புடைய விழாக்கள் போன்றவை தோற்றம் பெற்றது. இந்தியாவிலும் இதுபோன்ற பல விழாக்கள் தோன்றியது. வானியலை அடிப்படையாகக் கொண்டு நாள்கள், வாரங்கள், மாதங்கள், ஆண்டுகள் வகுக்கப்பெற்றது. அதன்பிறகு வானியல் கூறுகளை அடிப்படையாகக் கொண்டும், அந்தந்த மாதங்களுக்குரிய விழாக்கள் ஏற்படுத்தப்பட்டன. எடுத்துக்காட்டாக இன்றைய காலங்களில் அம்மன் கோயில்களில் திருவிழாக்கள் நடத்தி கஞ்சி வார்த்தல், நீர்மோர், பானகம் தயாரித்து வழங்கல் போன்ற இயற்கை சார்ந்த உணவுகளை வழங்கி மக்கள் நலம் பேணுதலைக் காணலாம்.

பிறகு தமிழர்கள் கோள்நிலைகளை அடிப்படையாகக் கொண்டு ஆண்டுப் பிறப்பை கொண்டாடத் தொடங்கினர். ஆண்டுப் பிறப்பிற்கான விழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டாலும்கூட ஒவ்வொரு மாதத்திலும் தமிழர்தம் இல்லங்களில் பல விழாக்கள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.

வைகாசி மாதத்தில் ஸ்ரீ திருஞானசம்பந்தர் குருபூஜை, திருநாரையூர் ஸ்ரீ நம்பி ஆண்டார் நம்பி குருபூஜை, திருநாரையூரில் சேக்கிழார் விழா, ஸ்ரீ கள்ளழகர் கோயிலில் வஸந்த உற்சவம், ஸ்ரீ மாணிக்கவாசகர் குருபூஜை, சிவ தலங்களில் பிரம்மோற்சவங்கள், வசந்த உற்சவங்கள், நாகை, கடலூர் போன்ற இடங்களில் தெரு அடைச்சான் என்று சொல்லக்கூடிய தெரு அடைச்சான் சப்பரம் அநேக கோயில்களில் ரதங்கள் புறப்பாடு, முக்கியமாகத் திருவாரூர் ஆழித் தேரோட்டம் நடைபெறுவது இம்மாதத்தில்தான்.

வைகாசி மாதம் என்றாலே விசாக நட்சத்திரம் முக்கியத்துவம் வாய்ந்தது. குமரக் கடவுளுக்கு உகந்தது. சரவணப் பொய்கையில் முருகன் ஆறு குழந்தைகளாகத் தோன்றிய மாதம் அனைத்து குமரத் தலங்களிலும் அறுபடை வீடுகளிலும் வைகாசி விசாகத் திருநாள் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும்.

மகாவிஷ்ணு தனது பக்தனுக்காக நரசிம்ம அவதாரம் எடுத்தது, புத்தர் பிறந்து போதி மரத்தடியில் ஞானம் பெற்றதும் வைகாசி பௌர்ணமி, ஆதிசங்கரர், காஞ்சி மகாபெரியவர் தோன்றியதும் இம்மாதத்தில்தான். இம்மாதத்தில் ஸ்ரீ வாஞ்சியம், திருப்பைஞ்ஞீலி ஆகிய திருத்தலங்களில் எமதர்மராஜனுக்குச் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். ராமலிங்க அடிகளார் சத்திய தர்ம சாலையினை வைகாசி விசாகத்தில்தான் தொடங்கி வைத்தார். வைகாசி விசாகம் அன்று சிவாலயங்கள் மற்றும் வைணவக் கோயில்களில் கருடசேவை, பிரம்மோற்சவம் போன்ற விழாக்கள் கொண்டாடப்படும்.

ஆனி மாதத்தில்தான் அருணகிரிநாதர், பெரியாழ்வார், நாதமுனிகள் போன்றோர் அவதரித்தனர். மாணிக்கவாசகரின் குருபூஜை நடைபெறும் மாதம் ஆனி ஆகும். 32 ஆண்டுகளே வாழ்ந்தாலும் ஆனி மாதம் மக நட்சத்திரத்தில் ஈசனுடைய திருப்பாதத்தை அடைந்ததால் பல்வேறு பூஜைகள் சிவன் கோயில்களில் நடைபெறும். அமர்நீதி நாயனார் சிவபெருமானுடன் ஐக்கியமானதும் இம்மாதத்தில்தான். ஆனித் திருமஞ்சனம் நடராஜருக்கு மிகச் சிறப்பாக நடைபெறும். தேவர்களைக் காப்பதற்காக திருமால் கூர்ம அவதாரம் எடுத்த தினம். ஆனி மாத பௌர்ணமியில் பெண்கள் சாவித்திரி நோன்பு எடுத்து தன் கணவர் நலனுக்காக வேண்டி வழிபடுவர். இம்மாதத்தில்தான் குருபூர்ணிமா பண்டிகையும் கொண்டாடப்படுகிறது.

ஆடி மாதம் வெல்லப் பானையைத் திறந்தால் தை மாதம் முடிய அதனை மூட வேண்டிய அவசியம் இருக்காது என்ற முன்னோர் வாக்கிற்கிணங்க அடுத்தடுத்து பண்டிகைகளாக வருவதற்கு ஆடி மாதம் ஒரு முன்னுதாரணம் ஆகும். தட்சிணாயணம் ஆரம்பிக்கும் மாதம் இது. ஆடி அமாவாசை, ஆடி கார்த்திகை, ஆடிப்பெருக்கு, ஆடிப்பூரம், ஆடி வௌ்ளி போன்ற அநேக நாள் கிழமைகள் கொண்டாடப்படுகிறது. ஆடிவௌ்ளியில் பெண்களின் வழிபாடு அம்மன் ஆலயங்களில் நடைபெறுகிறது. அதன்மூலம் இல்லம் செழித்து, மாங்கல்ய பலம் பெருகுவதற்காக வழிபடுவர். ஆடிப்பூரத்தில் ஆண்டாள் அவதரித்து பாவை பாடியதும், ஸ்ரீவில்லிபுத்தூர் போன்ற விஷ்ணு ஆயலங்கள், நாகை காரோகணம் நீலாயதாட்சி அம்மன் கோயில் மற்றும் சிவாலயங்களில் ஆடிப்பூர உற்சவமும் ரத உற்சவங்களும் வெகு விமரிசையாக நடைபெறும்.

ஆடி 18 அன்று ஆறுகளில் பெருக்கெடுத்து ஓடும் வௌ்ளம்போல குடும்பத்தில் மகிழ்ச்சி பெருக வேண்டும் என்று நினைத்து பெண்கள் பூத்தூவி, தீபம் காட்டி வழிபடுவர். ஆடி கார்த்திகை முருகனுக்கு உரிய விசேஷ தினமாகக் கருதப்படுகிறது. பக்தர்கள் காவடி எடுத்து வழிபாடு செய்வர். ஆடிப்பட்டம் தேடி விதை என்கிற பழமொழிக்கேற்ப விவசாயிகள் உழவுத் தொழிலில் ஈடுபடுவர். ஆடி மாதக் காற்றிற்கேற்ப தேவையான விளைபொருள்களை விளைவிப்பர்.

ஆவணி மாதத்தில் ஆவணி அவிட்டம், கிருஷ்ணர் அவதரித்த நாளான ரோகிணி நட்சத்திரத்தன்று அனைத்து விஷ்ணு ஆலயங்களிலும் கிருஷ்ணர் பிறப்பு கொண்டாடப்படுகிறது. திருக்கண்ணன் பிறந்தநாளை இல்லங்களில் சீடை, முறுக்கு, அப்பம், வடை, நெய், பால், தயிர் வைத்துக் கொண்டாடுவர். கோயில்களில் உறியடி உற்சவம், கண்ணன், ராதை போன்று வேடமிட்டு ஆடுதல், பாடுதல், சொற்பொழிவுகள் போன்ற நிகழ்வுகள் நடைபெறும். அனைத்து மக்களின் கொண்டாட்டமாக இவ்விழாவினைச் செய்வர். வரலெட்சுமி விரதம் பெண்கள் மேற்கொள்ளும் நோன்பு ஆகும். மக்கள் அனைவரும் உற்சாகமாகவும் எளிமையாகவும் வீட்டிலும் பொது நிகழ்வாகவும் கொண்டாடும் மற்றொரு விழா விநாயகர் சதுர்த்தி ஆகும்.

புரட்டாசி மாதத்தில் விஷ்ணு ஆலயங்களில் விழாக்கள் விமரிசையாக அதிலும் முக்கியமாக புரட்டாசி சனிக்கிழமை பெருமாளுக்கு உகந்த நாளாக இருப்பதால் மக்கள் துளசி மாலையிட்டு பெருமாளை வழிபடுவர். ஒரு மாத காலம் வீடுகளைத் தூய்மைப்படுத்தி சைவ உணவு உண்ணுவர். மகாளய அமாவாசையன்று நீத்தோர் வழிபாடு செய்வர். இம்மாதத்தில் வரும் நவராத்திரி பண்டிகை மிகவும் விசேடமானது. கலைமகள், அலைமகள், மலைமகள் மூவரையும் வேண்டித் துதிப்பர். வீடுகள் மற்றும் ஆலயங்களில் கொலு வைத்து வழிபடுவார்கள். எழுத்துக் கடவுளான சரசுவதி தேவிக்கும், தமது தொழிலை முன்னேற்றும் ஆயுதங்களுக்கும் பூஜை செய்து வழிபடுவர். விஜயதசமி அன்று தங்கள் வீட்டில் பள்ளியில் சேர்க்க வேண்டிய நிலையில் இருக்கும் குழந்தைகளைப் பள்ளியில் சேர்ப்பர்.

ஐப்பசி மாதம் என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது தீபாவளிப் பண்டிகைதான். அனைத்து தரப்பு மக்களும் வேறுபாடின்றி மிக மகிழ்ச்சியுடன் கொண்டாடும் திருநாள் இது. இனிப்பு உண்டு, பட்டாசு வெடித்து, புத்தாடை புனைந்து, பெரியோர் ஆசிபெற்று மகிழ்வர். இதனையொட்டி கேதார கௌரி விரதமும், முருகப் பெருமானின் முக்கிய விழாவான கந்தர்சஷ்டி திருவிழாவும் நடைபெறும். ஆறு நாட்கள் விரதமிருந்து செந்தூர் ஆண்டவனை வழிபடுவர். அனைத்து சிவாலயங்கள் மற்றும் முருகன் ஆலயங்களிலும் மிக விமரிசையாகக் கொண்டாடப்படும் விழாவாகும். சக்தியிடம் வேல் வாங்கி சூரபதுமனை வதைத்து அருள் புரிந்த நாளாகும். தீயதை ஒழித்து நன்மை புரிந்த நாள். அதுபோன்று நம் மனதில் உள்ள தீமைகளை ஒழித்து நன்மை பெறும் நாளாகவும் அமையும். ஐப்பசி மாதம் அடைமழை என்பதற்கிணங்க சிவன் கோயில்களில் ஐப்பசி பௌர்ணமி அன்று அன்னாபிஷேகம் நடைபெறும். தஞ்சாவூர், பெரிய கோயிலைக் கட்டிய பேரரசன் இராஜராஜனுக்குச் சதய விழா மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படுவது ஐப்பசி சதயத்தில்தான்.

கார்த்திகை மாதம் என்றாலே நம் நினைவுக்கு வருவது கார்த்திகை தீபம். ஆறுமுகனை வளர்த்தெடுத்த கார்த்திகைப் பெண்களைச் சிறப்பிக்கும் வகையில் திருக்கார்த்திகை நாளில் இல்லங்களில் தீபம் ஏற்றுவார்கள். இருள்நீங்கி ஔிபெறுவதுபோல் வாழ்வில் துன்பம் நீங்கி இன்பம் பெருகும் என்பது நம்பிக்கை. பரணி தீபம் அன்று திருவண்ணாமலையில் தீபம் ஏற்றப்பட்டு பஞ்சமூர்த்தி புறப்பாடு செய்து அர்த்த நாரீஸ்வரராக சிவபெருமான் அருள் பாலிப்பார்.

மார்கழி மாதத்தினை பீடுடைய மாதம் என்பர். “மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளாம்” என்று திருப்பாவை இயற்றிய ஆண்டாள் தான் மனதார நினைத்த கணவனையே அதாவது எம்பெருமானையே அடைந்தாள். அதுபோல பாவை நோன்பு நூற்று விரதம் இருந்தால் பெண்களும் நல்ல கணவனை அடைவார்கள் என்பது மரபு. அனைத்து சிவாலயங்கள் மற்றும் விஷ்ணு ஆலயங்கள் இருக்கும் ஊர்களில் பெரியோர் முதல் சிறியோர் வரை திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, தேவாரம் முதலியவற்றைப் பாடி பஜனை செய்துகொண்டு விடியற்காலையில் வீதியில் வலம் வந்து கடவுளின் அருளைப் பெறுவர்.

இம்மாதத்தில் பகல் பத்து, இராப்பத்து உற்சவம், ஸ்ரீரங்கம், மன்னார்குடி போன்ற அனைத்து விஷ்ணு ஆலயங்களிலும் நடைபெறும். இதில் மிகவும் சிறப்பாக வைகுண்ட ஏகாதசி திருவிழாவானது நடைபெறும். இறுதியில் நம்மாழ்வார் இறைவனுடன் கலக்கும் நிகழ்வுடன் முடிவடைகிறது. அதேபோல திருவெம்பாவை நோன்பு சிவாலயங்களில் திருவாதிரைக்கு பத்து நாட்களுக்கு முன்பிருந்து தொடங்கி திருவாதிரையுடன் முடிவடையும். திருவாதிரை அன்று சிலரது இல்லங்களில் நடராஜருக்கு உரிய தினமான திருவாதிரை நாளன்று நோன்பு இருப்பர். சிதம்பரம், உத்தரகோசமங்கை முதலான சிவத்தலங்களில் நடராஜருக்கு அபிஷேகம் செய்து வீதியுலா வரும் நிகழ்ச்சி நடைபெறும்.

மார்கழி மாதத்து மூல நட்சத்திரத்தில் அனுமன் பிறந்ததையொட்டி அனைத்து வைணவ, ஆஞ்சநேயர் ஆலயங்களில் அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடமாக விளங்கும் முருகனின் திருக்கோயில் படிகளுக்கு படிபூசை செய்யப்படுகிறது.

தை மாதம் உலகெங்கும் வாழும் தமிழர்களால் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது. கதிரவனுக்கு நன்றி சொல்லி வழிபடவும், உழவுக்கு உறுதுணையாக இருக்கும் கால்நடைச் செல்வங்களை வழிபடவும், சுற்றத்தார்களுடன் கூடி இத்திருநாளைக் கொண்டாடி மகிழவும் பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது.

தை வௌ்ளி, தைக் கிருத்திகை, தை அமாவாசை போன்ற நாட்களும் கொண்டாடப்படுகிறது. தைப்பூசம் முருகனுக்கு மிகவும் உகந்த நாளாகக் கருதப்படுகிறது. அனைத்து முருகன் ஆலயங்களிலும் குறிப்பாகப் பழனியில் தைப்பூசத்தன்று காவடி எடுத்து, பாலாபிஷேகம் செய்து, மொட்டையடித்து வேண்டுதல்களை வைத்து வழிபட்டு அருள்பெறுவர்.

மாசி மாதத்தில் மாசி மகம் மிகவும் சிறப்புப் பெற்றது. குறிப்பாகக் கும்பகோணம் மகாமகத்திற்கு மிகவும் பெயர்போனது. அங்குள்ள மகாமகக் குளத்தில், நீராடினால் பக்தர் தம் பாவங்கள் நீங்கும் என்பது நம்பிக்கையாகும். அதேபோல சிவபெருமானை இரவு நேரத்திலும் வழிபாடு செய்யக்கூடிய மகாசிவராத்திரி நாளில் வேண்டி வழிபாடு செய்தால் நமக்கு வேண்டியது நிறைவேறும் என்பது ஐதீகம். தீர்க்க சுமங்கலியாக இருப்பதற்காகப் பெண்களால் கடைப்பிடிக்கப்படும் நோன்பு காரடையான் நோன்பு. இது மாசி மாத முடிவு மற்றும் பங்குனி மாத ஆரம்பத்தில் கடைப்பிடிக்கப்படுகிறது.

ஹோலிப் பண்டிகை மற்றும் வசந்த உற்சவம் பங்குனி மாதத்தில் கொண்டாடப்படுகிறது. பங்குனி உத்திரம் முருகனுக்குரிய விரத தினமாக அனைத்து சிவாலயங்களிலும் முருகன் ஆலயங்களிலும் மக்களால் கடைப்பிடிக்கப்படுகிறது. மக்கள் அலகு குத்தி பால்குடம் எடுப்பர், தேர்த்திருவிழாவும் நடைபெறும். வள்ளி, தெய்வயானை திருக்கல்யாணமும் நடைபெறும் மாதமாகும்.

இம்மாதத்தில் மாரியம்மன் கோயில்களில் கொடியேற்றி திருவிழாக்கள் 15 தினங்கள் நடைபெறும். சமயபுரம், புன்னைநல்லூர், பன்னாரி மாரியம்மன், நாகை போன்ற எண்ணற்ற தெய்வத் தலங்களில் கரக உற்சவம், பூச்சொரிதல், தீமிதித் திருவிழா, அன்னதானம், முளைப்பாரி போன்றவை நடைபெறும்.

சித்திரை மாதம் தமிழரின் வருடப் பிறப்பு கொண்டாடப்பட்டு வருகிறது. இது அனைவரின் இல்லங்களிலும் மற்றும் ஆலயங்களிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. அறுவகை சுவைகளையும் உணவில் கொள்வர். குறிப்பாக வேப்பம்பூவைச் சேர்த்து சமைப்பர். இது மருத்துவக் குணம் கொண்டது என்பது அனைவரும் அறிந்ததே. வருடத்தின் ஆரம்பமே தமிழருடைய பாங்கு மருந்தே உணவு, உணவே மருந்து என்பதாகும்.

அதேபோல சித்திரை மாதம் என்றாலே அனைத்து பிரபலமான ஆலயங்கள் உள்ள வீதிகளில் தேரோடும். சித்திரைத் திருவிழா என்றால் நமக்கு மதுரை மட்டுமே நினைவுக்கு வரும். ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி அன்று மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணமும், அதனைத் தொடர்ந்து தங்கையின் திருமணத்திற்கு விரைந்து வரும் கள்ளழகர் வைகை ஆற்றின் வௌ்ளப்பெருக்கில் மாட்டிக்கொண்ட நிகழ்வு கள்ளழகர் வைகையாற்றில் இறங்குதல் நிகழ்வு நடைபெறுகிறது.

தஞ்சையிலும் சித்திரைத் திருவிழா மிகவும் சிறப்பாகத் திருத்தேர் பவனியுடன் நடைபெறும். சித்திரா பௌர்ணமி அன்று முழு நிலவு நன்னாளில் சித்திரகுப்தனுக்கு மக்கள் படையலிட்டு பிறருக்கு தானம் செய்து மலையளவு பாவம் செய்திருந்தாலும் கடுகளவாக எழுதுங்கள், கடுகளவு புண்ணியம் செய்திருந்தாலும் அதனை மலையளவாக எழுதுங்கள் என்று சித்திரகுப்தனிடம் உப்பில்லாமல் நோன்பு இருந்து வேண்டி வழிபடுவர். அன்று காஞ்சிபுரத்தில் உள்ள சித்திரகுப்தன் கோயிலில் பூஜைகள் அபிஷேக அலங்காரங்கள் நடைபெறும். இந்திய மக்கள் அனைவரும் புத்த பூர்ணிமா விழாவைச் சிறப்புடன் கொண்டாடுவார்கள்.

இப்படியான விழாக்களில் சித்திரை விழாவை முத்திரை விழாவாக நாம் கொண்டாடி வருகின்றோம். சித்திரை மாதம் ஆண்டு பிறப்பு விழா பெருவாரியாகக் கொண்டாடப்பெறுகிறது. அதேபோல சப்த ஸ்தான விழா எனப்படும் ஏழூர் திருவிழாவும் தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவையாறு, திருச்சோற்றுத்துறை, திருவேதிகுடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, தில்லைஸ்தானம், திருப்பழனம் என்ற ஏழூரில் அமைந்துள்ள மூர்த்தங்களும் அழகிய பல்லக்கில் எடுத்துச் செல்லப்பட்டு மக்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர்.

சித்திரையின் சிறப்புகள் பலவாகும். அவற்றுள் அப்பர் சுவாமிகள் சித்திரை சதயத்தில்தான் திருப்புகலூரில் சிவஜோதியில் கலந்தார். அந்நாளில் இன்றும் பல ஊர்களில் குருபூஜை விழா எடுக்கப்பட்டு வருகின்றது. அதுபோல மாமன்னன் ராஜராஜ சோழனின் தேவியும் பழுவேட்டரையரின் மகளுமான பஞ்சவன்மாதேவியார் சித்திரை சதயத்தில் பிறந்தவர். இதன் காரணமாகவே, தான் ஐப்பசி சதயத்தில் பிறந்திருந்தாலும், மனைவியின் பிறந்த நாள் சித்திரை சதயநாள் என்பதாலும், அப்பர்பெருமான் சித்திரை சதய நாளில் முக்தி பெற்றதாலும், செம்பியன் மாதேவியார் பிறந்தது சித்திரை மாதம் என்பதாலும், சித்திரை மாத சதய நாளில் சோழநாட்டின் பல்வேறு இடங்களில் விழா எடுத்தான் ராஜராஜன்.

சோழநாட்டில் பல்வேறு இடங்களில் கோயில்கள் எழுப்பி, பல நிவந்தங்கள் வழங்கியவர் கண்டராதித்த சோழரின் மனைவி செம்பியன் மாதேவியாவார். இவர் சித்திரை மாதம் கேட்டை நட்சத்திரத்தன்று பிறந்தவர். நாகை மாவட்டத்தில் செம்பியன் மாதேவி எனும் பெயரில் அமைந்த ஊரில் இன்றும் சித்திரை மாதத்தில் விழா நடைபெறுகின்றது. கோயில்களில் சித்திரை முதல் நாளன்று இறைவனுக்கு 1008 அல்லது 108 கலசங்களில் நீர் அபிசேகம் செய்யப்பட்டதையும், குறிப்பாகக் காவிரி நீர் கொண்டு நீராட்டப் பெற்றதையும் சோழர் காலக் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.

மருத நிலத்தில் வாழும் வேளாண்குடி மக்களுக்கு கடவுள் இந்திரன். இந்த மருதநிலக் கடவுளான இந்திரனுக்கு நன்றி செலுத்துகின்ற வழிபாடாக சித்திரை முழு நிலவு நாளில் இந்திரவிழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. தஞ்சை பெரிய கோயிலின் இரண்டாம் திருவாயிலான ராஜராஜன் திருவாயிலில் இந்திரனுக்கென்று ஒரு கோயில் அமைக்கப்பட்டுள்ளது. இந்திர விழா மிகச்சிறப்பாகத் தமிழகத்தில் கொண்டாடப்பட்டதை முத்தமிழ்க் காப்பியமான சிலப்பதிகாரம் அழகாக எடுத்துரைக்கின்றது.

இத்தகு சிறப்புகள் கொண்ட சித்திரை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டின் தொடக்க நாளாகத் திகழ்ந்ததை வரலாறு தெரிவிக்கின்றது. 

[கட்டுரையாளர் - ஆசிரியை, தஞ்சாவூர்]

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com