தமிழர் பண்பாடும் நீரும்

நீர் என்பது பஞ்ச பூதங்களில் ஒன்றாக உள்ளது. அது சடங்குகளிலும் விழாக்களிலும் பயன்பாடு என்ற நிலையில் மட்டுமன்றி ஒருவிதமான நம்பிக்கை சார்ந்த புனிதத் தன்மையையும் அடைந்து விடுகின்றது.
தமிழர் பண்பாடும் நீரும்

நீர் என்பது பஞ்ச பூதங்களில் ஒன்றாக உள்ளது. அது மனிதர்களின் நடைமுறை வாழ்வில் பெரிதும் பயன்படுகிறது. எனினும் சில நேரங்களில் சடங்குகளிலும் விழாக்களிலும் பயன்படுத்தப்பட்டுப் பயன்பாடு என்ற நிலையில் மட்டுமன்றி ஒருவிதமான நம்பிக்கை சார்ந்த புனிதத் தன்மையையும் அடைந்து விடுகின்றது. தமிழர்களின் வாழ்வில் நீர் என்பது தவிர்க்க முடியாத சடங்குப் பொருளாக வழிபாட்டிற்கு உரியதாக விளங்குவது குறிப்பிடத்தக்கது. பண்பாட்டு ரீதியிலான நீரின் பயன்பாடு பற்றி இக்கட்டுரையின் வழிக் காண்போம். 

நீரின் பயன்பாடு

மனிதர்களின் நிலையான குடியிருப்புகளும் நாகரிகங்களும் தோன்றிய இடம் நீர்நிலைகளைச் சார்ந்தே அமைந்துள்து. மானுட வாழ்வியலில் நீரின் பயன்பாடு என்பது ஒரு முக்கியக் கூறாக உள்ளது. உணவிற்கானப் பொருளாக மட்டுமின்றி, உணவு சார்ந்த பொருட்களை உருவாக்க மனிதன் உள்ளிட்ட அனைத்தையும் சுத்தம் செய்ய என நீரின் பயன்பாடு விரிந்துகொண்டே செல்கிறது. நீரின்றி அமையாது உலகு (குறள்:20) என்கிற திருக்குறள் நீரின் இன்றியமையாமையை உணர்த்துகின்றது. அந்த நீர் நமக்குப் பல்வேறு வகைகளில் கிடைக்கின்றது. மழையின் மூலமாக வரும் நீர், ஆறுகள், குளங்கள் வழியாகவும் பூமியின் அடியில் இருந்து கிடைக்கும் நீர்க் கிணறுகள், ஊற்றுகள் வழியாகவும் கிடைக்கின்றது.

நீர் பல வகைகளில் கிடைத்தாலும் மழைதான் பெருமளவில் நீரினைத் தருகின்றது. மழை இல்லையெனில் மக்களின் வாழ்வியல் பெருமளவில் பாதிப்படைகின்றது. மழை இல்லாத சமயங்களில் அதை வேண்டிப் பல விதமான சடங்குகள் செய்யப்படுகின்றன. பண்டைய தமிழ் மரபில் மழைக்கான சில கடவுளர்களும் இருந்தனர். மாரியம்மன் அவ்வாறான தெய்வமாகவே கருதப்படுகின்றது. மாரி என்ற சொல் மழையைக் குறிப்பதாக உள்ளது. மேலும், மழை மாரியம்மன், ஆகாச மாரியம்மன் என்பன போன்ற தெய்வங்களும் இன்றுவரை வழிபாட்டில் உள்ளன. பண்டைய இலக்கண, இலக்கிய நூல்களுக்கான உரையாசிரியர்களின் உரைகளில் பல்வேறு இடங்களில் மழைக் கடவுளர்கள் பற்றி குறிப்புகள் கூறுகின்றன. தொல்காப்பியம் கூறும் வருணனையும்  அவ்வகையில் கொள்ளலாம். 

பண்பாட்டுப் பயன்பாடுகள்

நீரின் சாதாரண வாழ்வியல் பயன்பாடு தவிர்த்து அதன் பண்பாடு சார்ந்த பயன்பாடுகளைப் பலவாறாகக் காணலாம். பண்பாடு என்பது மக்கள் வாழ்வின் அனைத்துக் கூறுகளையும் சார்ந்தே அமையும். அதை வாழ்வியலில் இருந்து பிரிக்க முடியாது. "பண்பாடு என்பது அறிவு, நம்பிக்கை, கலை, ஒழுக்கநெறிகள், சட்டம், வழக்கம் முதலானவையும் மனிதன் சமுதாயத்தில் உறுப்பினராக இருந்து கற்கும் பிற திறமைகளும் பழக்கவழக்கங்களும் அடங்கிய முழுமைத் தொகுதியாகும்" என டைலர் குறிப்பிடுகிறார். (பக்தவத்சல பாரதி,1999 : 150).

மேற்கண்ட வரையறையைக் கொண்டு பார்க்கும்போது மக்களின் வாழ்வியல் கூறுகளான சடங்குகள், விழாக்கள் போன்றவற்றில் பயன்படுத்தப்படும் நம்பிக்கைகள் சார்ந்த நீரின் பயன்பாடு நீரின் பண்பாட்டு பயன்பாடு எனலாம். இவ்வாறான நீரின் பயன்பாடு விழாக்கள், சடங்குகள் என்ற நிலைகளில் இடம்பெறுகின்றது.

விழாக்களில் நீரின் பயன்பாடு

மக்கள் கொண்டாடி மகிழ்கின்ற பல விழாக்களில் நீரின் பயன்பாடு என்பது பண்பாட்டுப் பொருண்மையுடன் உள்ளது. அதில் பொங்கல் விழா, ஆடிப்பெருக்கு, விநாயகர் சதுர்த்தி, கோயில் திருவிழாக்கள் போன்றவை குறிப்பிடத்தக்கவை. பொங்கல் விழாவின்போது பொங்கல் வைப்பதற்கான நீரை எடுத்து வருவதைச் சாதாரணமாக இல்லாமல் அதை ஒரு சடங்காக நிகழ்த்துகின்றனர். பொங்கலன்று ஒரு நல்ல நேரத்தில் அங்கு உள்ள சில மக்கள் ஒன்றிணைந்து நீர் நிலைகளுக்குச் சென்று அங்கு உள்ள தெய்வத்தை வணங்கிவிட்டு நீர் எடுத்து வந்து பொங்கல் வைக்கப் பயன்படுத்துகின்றனர். அந்த நீரை எச்சில்படுத்தக் கூடாது எனவும் கூறுகின்றனர். பண்டைக் காலங்களில் தைந்நீராடல் என்ற விழா இருந்ததற்கான இலக்கியக் குறிப்புகள் உள்ளன. அது இக்காலப் பொங்கல் நீர் எடுத்தலோடு தொடர்புடையதாக இருக்கலாம் எனக் கருதவும் இடமுண்டு.

இவ்வாறான விழாக்களில் நீரின் பயன்பாடு, நீரைப் பயன்படுத்துவது, நீர்நிலைகளை வழிபடுவது என இரண்டு நிலைகளில் உள்ளது. ஆடிப்பெருக்கு என்பது நீர்நிலையை வழிபடுவதாக உள்ளது. நீர்நிலையைக் கடவுளாகவும் புனிதமாகவும் கருதி ஆற்றில் நீர் வரக்கூடிய குறிப்பிட்ட நாளன்று பெண்கள் வழிபட்டு வணங்குகின்றனர். ஆடி மாதம் 18 ஆம் தேதி ஒவ்வோர் ஆண்டும் இவ்வழிபாடு சிறப்பாக நடைபெறுகின்றது. ஆற்றில் தண்ணீர் வராத காலத்திலும் இவ்வழிபாடு தண்ணீர்க் குழாய்களிடத்தும் கிணற்றுப் பகுதிகளிலும் தொடர்ந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இவ்வழிபாட்டின் மூலம் மழை கிடைக்கும், வளம் செழிக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

இந்துக்களின் வழிபாடுகளில்  விநாயகர் வழிபாடு முக்கியமானதாக உள்ளது. எல்லா இடங்களிலும் சூழல்களிலும் பொருந்தக்கூடிய ஒரு கடவுளாக விநாயகர் விளங்குகிறார். விநாயகர் சதுர்த்தி எனப்படுகிற விநாயகர் பிறந்தநாளன்று நடைபெறுகின்ற வழிபாட்டு நிகழ்வில் மண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலையை வழிபட்டுப் பின் ஊர்வலமாகச் சென்று அங்கு உள்ள நீர்நிலைகளில் கரைக்கின்றனர். இவ்வழிபாடு இன்று மிகப்பெரிய அளவில் எல்லாப் பகுதிகளிலும் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.  

கோயில் திருவிழா

ஒவ்வொரு கோயிலுக்கும் தனித்தனியாகச் சிறப்புமிக்க மூர்த்தி, தீர்த்தம், தலவிருட்சம் என்பன உண்டு. இவை அங்கு வருபவர்களின் வழிபாட்டிற்கு உரியவையாகவும் அமையும். அவ்வகையில் தீர்த்தம் என்பது பக்தர்கள் நீராடி பின் வழிபடும் வகையில் சிறப்புமிக்கதாக உள்ளது. காசியில் நீராடுதல், மகாமக வழிபாடு, ஆடி, தை அமாவாசை முழுக்குகள் என நீர் பற்றிய வழிபாட்டுப் பண்பாடு இந்தியச் சூழலில் குறிப்பிடத்தக்கதாய் உள்ளது

மக்களின் வழிபாட்டு இடமாக விளங்குகின்ற கோயில்களிலும் திருவிழாவிலும் நீரின் பண்பாட்டுப் பயன்பாடு பெருமளவில் உள்ளது. புதிதாக எழுப்பப்பட்ட கோயில்களில் குடமுழுக்குச் செய்ததன் பிறகு அக்கோயில்  வழிபாட்டு இடமாக மாறுகின்றது. கோயில்களைப் புதிதாகப் புனரமைத்து அதற்கான யாகங்களை வளர்த்துச் செய்யப்படும் சடங்குகளின் தொகுப்பே குடமுழுக்கு எனப்படுகிறது. சாதாரணமாக, கோயில்களில் நீரால் அபிஷேகம் செய்யப்படும். அதைத் தாண்டி குடமுழுக்கின்போது நீர் நிரப்பப்பட்ட கலசங்களுக்குச் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் யாகங்கள்  செய்து அமைக்கப்பட்ட கோபுரங்கள் மீதுள்ள கலசங்களுக்கு நீரால் அபிஷேகம் செய்வதோடு விழா நிறைவு பெறுகிறது. அதில் அபிஷேகம் செய்யப்படும் அந்த நீருக்குப் பெரும் சக்தி இருப்பதாக உணரப்பட்டு அந்நீர் தங்கள் மேலே பட வேண்டும் என அனைவரும் விரும்புகின்றனர்.

இதுமட்டுமல்லாது நாட்டுப்புறத் தெய்வ வழிபாட்டில் கரகம் எடுத்தல் என்ற நிகழ்வு சிறப்பானது. அதில் நீர்நிலைகளுக்குச் சென்று அங்கு நீர் எடுத்து அதைப் பூஜித்து அதைத் தலையில் சுமந்தவாறு வலம் வருவர். அப்படி அதைச் சுமந்து வருபவரைத் தெய்வீக சக்தி உடையவராகவே கருதுவர். இதுமட்டுமின்றிக் கோயில்களில் நடைபெறுகிற திருவிழாக்களின் நிறைவு நாளில் மஞ்சள் நீர் விளையாட்டு என்கிற ஒரு நிகழ்வு சிறப்பாக நடைபெறும். அதில் நிறைவுநாள் வீதி உலாவின் போது மஞ்சள் நீரைக் கரைத்து அதைத் தெளித்து வழிபடுவது வழக்கமாக உள்ளது.

சடங்குகளில் நீர்

மக்கள் வாழ்வியலோடு தொடர்புடையதாகவும் மக்களின் தொன்மை நிகழ்வின் குறியீடுகளாகவும் இருக்கின்ற வாழ்க்கை வட்டச் சடங்குகளில் நீரின் பயன்பாடு சிறப்பானதாக உள்ளது.

பிறப்புச் சடங்கு

பூப்புச் சடங்கு

திருமணச் சடங்கு

இறப்புச் சடங்கு

படையல் போடுதல்

வீடு குடிபுகுதல்

தீட்டுக் கழித்தல்

மருத்துவச் சடங்குகள் என்பன போன்ற சடங்குகளில் நீர் பண்பாட்டுப் பொருண்மை மிக்கதாகிறது.

பிறப்புச் சடங்கில் குழந்தை பிறந்தவுடன் சீனித்தண்ணீர் தருவதில் தொடங்குகின்றனர். நீரில் சிறிதளவு சர்க்கரை சேர்த்து அதைப் குழந்தைகளுக்குப் புகட்டி வழிபாடு நடத்துகின்றனர். பதினோராம் நாள் சடங்கில் குழந்தையையும் தாயையும் குளிப்பாட்டுதல் என்பதில் நீர் முக்கியப் பங்கு வகிக்கின்றது. இந்தக் குளியல் முடிந்தவுடன் இருவரின் தீட்டும் கழிந்து விட்டதாகவும் கருதுகின்றனர்.

பூப்புச் சடங்கில் உடல் பருவ மாற்றம் அடைந்த ஒரு சிறு பெண்ணைச் சில சடங்குகளின் மூலம் குழந்தை என்பதிலிருந்து பெண்ணாகிவிட்டாள் எனச்சொல்லி அவளுடைய தீட்டுப் போன்றவற்றைப் போக்கி அவளை வீட்டிற்கு அழைக்கும் சடங்குகளைச் செய்கின்றனர். தலைக்கு ஊற்றுதல் எனும் பெயரில் தாய்மாமனை வரவழைத்து அவரிடம் சீர்வரிசைகளைப் பெற்றுக்கொண்டு தலைக்கு நீர் ஊற்றிச் சடங்கு சுற்றுதல் எனும் பெயரில் சில சடங்கு முறைகளையும் பின்பற்றி வருகின்றனர். நிறைவாக ஆரத்தி எடுத்து வீட்டிற்குள் அழைக்கின்றனர். இந்த ஆரத்தி எடுத்தல் என்கிற சடங்கு இறப்புச் சடங்கு தவிர பிற எல்லாச் சடங்குகளிலும் பின்பற்றப்படுகிறது. மஞ்சள் சுண்ணாம்பு கரைக்கப்பட்ட நீரில் ஒரு வெற்றிலையின் மேல் சூடம் வைத்துக் கொளுத்தி அதனைச் சடங்கு செய்யப்பட்டவரின் முன் சுற்றி, பின்னர் வெளியில் கொண்டு வந்து விடுகின்றனர். இவ்வாறு செய்வதன் மூலம் அவர்களுக்கு ஏற்படும் திருஷ்டி போன்றவை நீங்குவதாக  நம்புகின்றனர். 

திருமணச் சடங்கில் மணமக்களின் பெற்றோர் பாதங்களைக் கழுவவும் முகூர்த்தக்கால் கழுவவும் செய்யப்படுகின்ற செயல்கள் நீரால் செய்யப்படும் சடங்குகளாக மாற்றம் பெற்றுள்ளன. திருமணத்திற்காக வைக்கப்படும் அரசாணிப் பானையில் சில இடங்களில் நீரும் நிரப்புகின்றனர். திருமணம் முடிந்தவுடன் நடைபெறுகிற ஒரு சடங்கில் ஒரு பாத்திரத்தில் நீர் நிரப்பப்பட்டு அதில் பல்வேறு விதமான (மோதிரம்,பாலாடை,சாவி) பொருட்களை இட்டு அதில் எப்பொருளை யார் எடுக்கின்றனர் என்ற போட்டியுடன் கூடிய சடங்கு புதுமணத் தம்பதியருக்கு நடத்தப்படுகின்றது. திருமணம் முடிந்தவுடன் அச்சடங்கில் இருந்த சில பொருள்களை எடுத்துக்கொண்டு நீர்நிலைகளில் கரைத்தல் எனும் சடங்கு பாளி கரைத்தல் என்னும் பெயரில் அழைக்கப்படுகின்றது.

இறப்புச் சடங்கில் இறந்தவரின் உடலைக் குறிப்பிடுவதற்கான தண்ணீர் எடுத்து வருதல், பின்னர்க் குளிப்பாட்டுதல் என்பன சடங்குகளாகச் செய்யப்படுகின்றன. ஊரில் உள்ள முக்கிய நீர்நிலைகளுக்குச் சென்று அவரின் நெருங்கிய உறவினர்கள் நீர் எடுத்து வந்து சில அபிஷேகங்களைச் செய்து பின்னர்க் குளிப்பாட்டி இறுதிச் சடங்குகளைச் செய்கின்றனர். இறந்தவரை புதைக்கவோ எரிக்கவோ செய்ய முன்பு செய்யப்படும் கொள்ளிக்குடம் உடைத்தல் முக்கிய சடங்காக உள்ளது. பத்தாம் நாள் அல்லது 16 ஆம் நாள் செய்யப்படுகின்ற சடங்குகள் பெரும்பாலும் நீர் நிலைகளை ஒட்டியே செய்யப்படுகின்றன. இறந்தவர்கள் வீட்டிற்குச் சென்று வந்தவுடன் குளித்துவிட்டு வந்தால் தீட்டு போய்விடும் என்கிற நம்பிக்கையும் உண்டு.

திருமணமான ஓர் ஆண், மனைவி கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் இறந்து விட்டால் அந்த இழப்புச் சடங்கின் போது ஒரு சொம்பில் நீரை நிரப்பி அதில் சில பூக்களை இட்டு அவள் எத்தனை மாதம் கர்ப்பமாக இருக்கிறாள் என்பதைக் கவனமாகத் தெரிவிக்கின்றனர். (தொ பரமசிவன்,82;2001)

எல்லாவிதமான சடங்குகளிலும் செய்யப்படுகின்ற படையல் போடுதல் என்கிற நிகழ்வின்போது நீரின் பயன்பாடு முக்கியமானதாகக் கருதப்படுகின்றது. கடவுளுக்கான அல்லது மூதாதையர்க்கான  படையலைப்  போட்டு விட்டு இறுதியாக அதனைச் சுற்றி நீரால் ஒரு வட்டமிடுவர் இதை நீர் லாவுதல் என்பர். இது நிறைவடைந்த பிறகே அங்குள்ள உணவு அனைவருக்கும் பரிமாறப்படும். 

வீடு குடி போகுதல் என்கிற சடங்கு நிகழ்வில் மந்திர உச்சாடனம் செய்யப்பட்ட நீர் வீட்டின் ஒரு மூலையில் முதலில் ஊற்றப்பட்டுப் பின்னர் வீடு முழுவதும் தெளிக்கப்படுகின்றது. எல்லாவிதமான தீட்டுகளையும் கழிப்பதற்கு நீராட்டுதல் அல்லது நீராடல் என்பது முக்கியச் செயல்பாடாக உள்ளது. 

அம்மை நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் படிப்படியாகக் குணமடையும்போது அவருக்கு மூன்று நிலைகளில் குளிப்பாட்டுதல் நடைபெறுகின்றது. அது தலைக்குத் தண்ணீர் போடுதல் என்று அழைக்கப்படுகின்றது இதன் மூலம் நோயாக வந்த அம்மன் இறங்கி விடுவார் என்கிற நம்பிக்கை உண்டு.

இவ்வாறாக, மக்களின் வாழ்வியலில் நீரின் பயன்பாடு என்பது வெறும் பயன்பாட்டு நிலையிலிருந்து மாறி சடங்காக, நம்பிக்கையாகப் பண்பாட்டுப் பொருண்மையினைப் பெறுகின்றது. இப்பண்பாட்டுப் பொருண்மை நீரின் ஆற்றல், வளமை,செயல்பாடு போன்றவற்றோடு ஆதி மனிதனுக்கு இருந்த நீரின் மீதான பயம், நன்றி ஆகியவற்றின் வாயிலாகத் தொடங்கப்பட்டு இன்று நம்பிக்கையாக வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது.

நீரின் உற்பத்தி ஆற்றலே நீரைக் கடவுளாகவும் கடவுளின் வடிவமாகவும் கடவுள் உறையும் இடமாகவும் கருதக் காரணமாக இருந்திருக்க வேண்டும். ஒரு சாதாரண பொருளைப் புனிதமாக்க நீர் பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றது. நீரின் பண்பாட்டுப் பயன்பாடு என்பது புனிதப்படுத்துதல் எனும் ஒற்றைப் பொருண்மையிலேயே பெரும்பான்மையாகச் செய்யப்படுகின்றது.

ஒரு பொருளையோ அல்லது ஒரு மனிதனையோ ஒரு வெளியில் இருந்து இன்னொரு வெளிக்கு மாற்றம் செய்வதற்கான புனிதப் பொருளாகவும் நீர் பயன்படுகிறது. நீரின் சுத்தப்படுத்துதல் என்கிற செயல்பாடே மற்றப் பஞ்ச பூதங்களிலிருந்து நீருக்கு முக்கியத்துவம் கிடைக்க காரணமாக இருக்கலாம்.

தமிழர் வாழ்வியலில் பண்பாட்டுப் பொருண்மை உடைய நீர் அதன் வளமை, ஆற்றல், செயல்பாடு ஆகிய நிலையில் தெய்வமாகவும், தெய்வ வடிவமாகவும், தெய்வம் உறைகின்ற இடமாகவும் உள்ளது. இதோடு சுத்தம் செய்யும் இங்கு ஆற்றலினால் புனிதப்படுத்தும் புனிதப் பொருளாகவும் செயல்படுகின்றது. இது தமிழர்களின் இயற்கையோடு இயைந்த வழிபாட்டு மரபைக் குறியீட்டு  நிலையில் சுட்டுவதாகவும் கொள்ளலாம் 

[கட்டுரையாளர் - தமிழியல் ஆய்வாளர். திருவாரூர்]

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com