தமிழால் உலகை இணைப்போம்

தமிழால் உலகை இணைப்போம்

எத்திசையும் புகழ்மணக்க இருந்த நம் அன்னைத் தமிழ் இன்று மொழிக் கலப்பால் துயருறுகிறாள். தமிழ் எழுத்துகளை எழுதத் தெரியாமல் தமிழை ஆங்கிலத்தில் ஒலி மாற்றி எழுதும் புதிய தலைமுறை உருவாகி வருகிறது.


தமிழ் ஏன் நம் தேசத்தின் இணைப்பு மொழியாக அறிவிக்கப்படக்கூடாது எனும் வினா அனைவர் மனத்திலும் எழுந்துள்ளது. புறநானூறு இலக்கியத்தில், கருவூர் கந்தப்பிள்ளை சாத்தனார் பாடிய 168 ஆம் எண்ணுள்ள பாடலில்  “அருவி ஆர்குங் கழைபயில் நனைந்தலை” எனத் தொடங்கி “வையக வரைப்பில் தமிழகம் கேட்ப”  “தமிழகம்” என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது மொழியின் அடிப்படையில் பெருநிலத்திற்குப் பெயர் சூட்டிய தமிழ்ப் புலவரின் அறிவாற்றலை எண்ணிப் பார்க்க வேண்டியுள்ளது. தமிழ்நாட்டிற்குள் மட்டுமல்லாமல் உலகத்தில் எங்கெல்லாம் தமிழ்மக்கள் வாழ்கிறார்களோ அவர்களை எல்லாம் தமிழால் ஒருங்கிணைத்து ஆதித்தமிழரின் பெருமையை ஆதித் தமிழின் பெருமையை உலகுக்கு உரக்கச் சொல்லவேண்டிய நேரமிது.

தமிழ் மரபுத் திங்கள்

ஐந்து லட்சம் தமிழர்களுக்கு மதிப்பு தருவதற்காக ஒவ்வோர் ஆண்டும் தை மாதத்தைத் தமிழ் மரபுத் திங்களாகக் கனடா அரசு அறிவித்து, மாதம் முழுக்கத் தமிழ்ப் பண்பாட்டு நிகழ்வுகளை ஒருங்கிணைத்து நடத்தி வருகிறது. தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா, தமிழா எங்கும் வெல்லடா, தரணி எங்கும் செல்லடா என்று தமிழின் சிறப்பை உலகத் தமிழர்கள் கொண்டாடி வருகின்றனர். 

தொல்தமிழரின் பண்பாட்டுத் தாய்மடி 

கீழடி, தொல்தமிழர்களின் பண்பாட்டுத் தாய்மடி என்பதைச் சமீபத்தில் கீழடியில் கிடைத்த தொல்லியல் தடயங்கள் உணர்த்துகின்றன. கீழடி, அகரம், கொந்தகை, மணலூர் ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் அகழாய்வில் யானைத் தந்தத்தில் செய்யப்பட்ட பகடை, சுடுமண் முத்திரை, உறை கிணறுகள், சுடுமண்ணால் செய்யப்பட்டு ஒன்றோடு ஒன்றாக இணைக்கப்பட்ட மண் குழாய்கள், அடையாள முத்திரைகள், இரட்டைச் செங்கற்சுவர்கள், காதணிகள், முதுமக்கள் தாழிகள், கருப்பு சிவப்புப் பானையோடுகள், பழங்கால மக்கள் பயன்படுத்திய பொருள்கள் ஆகியன கிடைத்துள்ளன.

கீழடியில் கிடைத்துள்ள சிவப்பு நிற மண்கொள்கலன்கள் தானியங்களையும் தண்ணீரையும் சேர்த்து வைத்துக்கொள்ள தமிழர்கள் மண்ணைப் பிசைந்து பெரிய கலன்களாக உருவாக்கி உலைகளில் அவற்றைச் சுட்டு உறுதிமிக்க பொருட்களாய் மாற்றிய தொழில்நுட்பத்தை உணர்த்துகிறது. ஈமக்காடான கொந்தகையில் கிடைத்த முதுமக்கள் தாழிகள், மனித எலும்புக்கூடுகள் ஆகியன தொல்தமிழரின் இறப்புச்சடங்கைப் புரிந்துகொள்ள உதவுகின்றன, வெட்டப்பட்ட ஆடுகள் போன்ற விலங்குகளின் எலும்புகள் அவற்றைத் தமிழர்கள் உணவுக்காகவோ பலிக்காகவோ பயன்படுத்தியிருக்கலாம் என்கிற சிந்தனையை விதைக்கின்றன. தமிழ்ப் பண்பாட்டின் வேர்களைத் தேடி கீழடியில் அகழ்வாய்வைத் தொடங்கியபின், வரலாறு தமிழகத்தில் இருந்துதான் எழுதப்படவேண்டும் என்கிற புதிய பார்வையை உலகிற்கு உணர்த்தியிருக்கிறது. 3,000 ஆண்டுகளுக்கு முன்பே தந்தச் சீப்பையும் பாசிகளையும் தங்க, வெள்ளி அணிகலன்களையும் தமிழ்ச்சமூகம் பயன்படுத்தியிருந்தால் அச்சமூகம் எத்தனை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்து நாகரிகத்தோடு வாழ்ந்துகொண்டிருக்கும் என்கிற வியப்பு உலகிற்கு ஏற்பட்டிருப்பதைத் தமிழினத்திற்குக் கிடைத்த மணிமகுடமாக ஏற்றுக்கொள்ளலாம். கீழடியில் கிடைத்த தொல்படிமங்களைச் சங்க இலக்கியப் பாடல்களோடும் ஒப்பிட்டு ஆராயும்போது, “கீழடி தொல்தமிழர்களின் பண்பாட்டுத் தாய்மடி” என்பதைப் புரிந்துகொள்ளமுடியும்.

ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வுகள்

பழந்தமிழரின் ஆதித்துறைமுகமான கொற்கையிலிருந்து அகழ்வாய்வுகளைத் தொடங்கி சிவகளை, கொங்கராயன்குறிச்சி போன்ற இடங்களில் அகழ்வாய்வுகளை மேற்கொள்ள வேண்டும். தாமிரபரணி நதியின்  போக்கு மாற்றப்பட்டதாய் ஒரு கருத்து நிலவுவதால் பாபநாசம் முதல் புன்னைக்காயல் வரை தாமிரபரணி ஓடும் பாதைகள் எங்கும் அகழ்வாய்வுகள் மேற்கொள்ளப்பட்டால் புதிய செய்திகள் கிடைக்கலாம். தொல்லியல் அறிஞர் அலெக்ஸ்சாண்டர் ரியாவின் ஆதிச்சநல்லூர் ஆய்வறிக்கைகள் உலகத் தமிழர்களுக்கும் தாமிரபரணி மண்சார்ந்த வாழ்க்கை வாழ்ந்த நதியோரத்து தமிழர்களுக்குமான தொடர்பை புலப்படுத்தியது. தமிழர்களின் உலோகப் பயன்பாடுகள் குறித்த அறிவை உலகுக்குக் காட்டியது. இந்தோ - ஐரோப்பியத் தொடர்புகள் குறித்து மேலும் ஆய்வு செய்ய வழியமைத்துத் தந்துள்ளது. ஆதிச்சநல்லூரில் கிடைத்த அகழ்வாய்வுப் பொருட்களைக் கொண்டு அவ்வூரிலேயே அருங்காட்சியகம் தொடங்கவும் அதில் ஆதிச்சநல்லூர் குறித்து வெளிவந்த அரிய கட்டுரைகள், நூல்களை ஆவணப்படுத்தவும் வகைசெய்ய வேண்டும். ஆதிச்சநல்லூர் ஆய்வுகள் குறித்து எழுதியுள்ள கொற்கை அகழ்வைப்பக மேனாள் காப்பாளர் எஸ்.இராமச்சந்திரன், “தமிழ்ச் சமூக வரலாற்றின் முதன்மையான ஆவணங்களாகக் கருதத்தக்க சங்க இலக்கியங்களையும் தொல்காப்பியம் போன்ற இலக்கண நூல்களையும், பாண்டிய நாட்டின் மிகப் பழமையான வரலாற்று நிகழ்வுகளைப் புராணவடிவில் கூறுகிற திருவிளையாடற் புராணம் போன்ற இடைக்கால இலக்கியங்களையும், ஆதிச்சநல்லூர் ஆய்வு மூலம் கண்டறியப்பட்ட விடயங்களுடன் தொடர்புபடுத்தி ஆழமாக ஆராயப்படவில்லை. சங்க இலக்கியத்திலும் மணிமேகலையிலும் தாழிகளைப் பற்றி வருகிற குறிப்புகளைப் பட்டியலிடுவது மட்டுமே நடைபெற்றுள்ளது”  என்று தமிழினியில் கட்டுரை எழுதியுள்ளார்.

தனித்தன்மை கொண்ட மொழி

முன்னிருந்து பின்னோ பின்னிருந்து முன்னோ எப்படி வாசித்தாலும் உச்சரிப்போ பொருளோ மாறாத பாலிண்ட்ரோம் சொற்கள் தமிழில் நிறைய உண்டு. விகடகவி, மாலா போலாமா, தாத்தா, மேளதாளமே, மாறுமா, மாயமா, கைரேகை போன்ற சொற்களை எப்படி வாசித்தாலும் பொருள் மாறாது. உலகின் மிகப்பெரிய நான்காம் தீவாகத் திகழும் மடகாஸ்கர் தீவிலும் மொரிசியஸ் தீவிலும் பூர்வகுடிகளாகத் தமிழர்கள் இருந்திருக்கின்றனர், இன்றும் அங்கே தமிழர்களின் பண்பாடு தொடர்பான சான்றுகள் இருந்துகொண்டே இருக்கின்றன. நம் தமிழை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல உலகத் தமிழ்ப் பல்கலைக்கழகம் நிறுவுவதும் உலகெங்குமுள்ள பல்கலைக்கழகங்களின் தமிழ்த்துறைகளை அப் பல்கலைக்கழகத்தோடு இணைத்து உலகளாவிய தமிழ்ப் பாடத்திட்டத்தை உருவாக்குவதும் காலத்தின் கட்டாயம்.

தமிழ்மொழி குறித்த பெருமிதம்

எத்திசையும் புகழ்மணக்க இருந்த நம் அன்னைத் தமிழ் இன்று மொழிக் கலப்பால் துயருறுகிறாள். தமிழ் எழுத்துகளை எழுதத் தெரியாமல் தமிழை ஆங்கிலத்தில் ஒலி மாற்றி எழுதும் புதிய தலைமுறை உருவாகி வருகிறது. சோறு ரைசானது, நதி ரிவரானது, தயிர்சோறு கர்ட் ரைசானது, குடைமிளகாய் காப்சிகமானது, ஆறரை மணி சிக்ஸ் தேர்ட்டியானது, மாநிலம் ஸ்டேட்டானது, தமிழ் உணவு பாஸ்ட்பூட்டானது. இன்னும் என்னவெல்லாமோ ஆவதற்குள் தமிழ்மொழி குறித்த பெருமிதத்தை உலகம் முழுக்க ஏற்படுத்த வேண்டும். தமிழ்மொழி குறித்த பெருமிதம் இன்று உலகத் தமிழர்களிடம் மிகுந்துள்ளது. யாழினி, பரிமேலழகர், குமரன், நறுமலர், தமிழ்ச்செல்வி, தமிழினியன், தமிழினி என்று உயிரினும் மேலான அழகு தமிழ்ப் பெயரைத் தங்கள் குழந்தைகளின் பெயராக இன்று வைக்கத் தொடங்கியுள்ளனர்.

கவியரசரின் தமிழ்ப்பற்று

உயிருக்கு ஆபத்தான நிலையில் அமெரிக்க மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த கவியரசு கண்ணதாசனை அந்த தேசத்தில் வாழும் தமிழ் மக்கள் சிலர் தங்கள் குழந்தைகளோடு பார்த்து உடல்நலம் விசாரிக்கச் சென்றனர். அவர்களுடன் வந்திருந்த குழந்தைகளுடன் தமிழில் பேசக் கவிஞர் முயன்றபோது, அவர் பேசிய தமிழை அக்குழந்தைகளால் புரிந்துகொள்ள முடியவில்லை. அந்நிலை கண்டு மனம்வருந்திய கவியரசர், “மனிதரில் ஒன்றுபட்டுச் சேர்ந்திருப்பீர் –இங்கு மழலைகள் தமிழ்பேசச் செய்துவைப்பீர், தமக்கெனக் கொண்டு வந்ததேதுமில்லை- பெற்ற தமிழையும் விட்டுவிட்டால் வாழ்க்கையில்லை” என்று வருத்தக் கவிதை எழுதித் தந்தார். ஆயிரமாயிரம் பாடல்களையும் கவிதைகளையும் எழுதிய கவியரசரின் இறுதிக்கவிதைக்குள் பொதிந்திருக்கும் கவலைதான் நமக்கும். 

காதல் செய்வோம்

ஜி.யு.போப், வீரமாமுனிவர், கால்டுவெல், நிறைமதி போன்ற அயல்நாட்டாரால் காதலிக்கப்பட்ட தமிழ்மொழியை நாம் காதல்செய்கிறோமா? என்று நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டிய நேரமிது. இந்தியாவில் இலக்கிய வளம் மிக்க 179 மொழிகள் இருந்தாலும் செவ்வியல் அழகுடைய, பண்பட்ட, மிகத்தொன்மையான மொழி நம் தமிழ்மொழிதான். 

எங்கும் தமிழ், எதிலும் தமிழ் 

மலேசியாவில் நடைபெற்ற ஒன்பதாம் உலகத்தமிழ் மாநாட்டில் கலந்து கொண்டபோது பிழையற பிறநாட்டார் தூய தமிழ் பேசியதைக் கண்டேன். மலேசியா முழுக்க 590 உருவாக்கப்பட்டுள்ள தமிழ்ப் பள்ளிகளில் அந்நாட்டுக் குழந்தைகள் தமிழ்பயில்வதைக் கண்டேன். நம் நாவில் தமிழ் தவழத் தொடங்கினால், நம் நாட்டிலும் தமிழ் தவழத்தொடங்கும். எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்ற நிலை நடைமுறைக்கு வந்தால், ஓங்கும் தமிழ்ப்புகழ் ஓங்கும் எங்கும். தாய்மொழி தெரியாத தலைமுறை உருவாவது மொழிக்கு நலம்பயக்காது.

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு என்று நாம் முழங்க வேண்டுமானால், என் பிள்ளை இங்கிலீஷ் மீடியமாக்கும்! அவளுக்குத் தமிழ்வராது! என்று பெருமையாகச் சொல்வதை உடனே நிறுத்த வேண்டும். தாய்மொழி தெரியாத தலைமுறை உருவாவது மொழிக்கு மட்டுமல்ல நம் தமிழ் மண்ணுக்கே அவமானம் என்று நாம் உணர வேண்டும். தமிழ்நாட்டில் பள்ளிப்பாடம் முதல் பட்டமளிப்பு விழா வரை தமிழில் மட்டுமே நடத்தப்பட வேண்டும். பொறியியல் கல்வி, மருத்துவக் கல்வி, அறிவியல் கல்வி, கலைக் கல்வி, சட்டக் கல்வி யாவும் தமிழ்மொழி வழியேதான் நடத்தப்பட வேண்டும். 

ஆங்கில மொழி அறிவன்று

நம்மை ஆண்டு அடிமைப்படுத்திய ஆங்கிலேயரின் ஆங்கில மொழியை நாம் இன்னமும் அறிவு என்று நினைப்பதும் மூவாயிரம் ஆண்டுகள் பழமையான தமிழுக்கு இணையாக அதைத் தூக்கிப் பிடிப்பதும் நம் அறியாமையன்றி வேறில்லை. திங்க் பண்ணி, மிக்ஸ் பண்ணி, ஸ்டடி பண்ணி, ஈட் பண்ணி என்று மொழிக்கலப்போடு பேசுவதைவிட்டுவிட்டு அழகான, எளிமையான, நடைமுறைத் தமிழ்ச்சொற்களை வழுவின்றி நாளும் பேசுவோம். சொல்லுதல் எனும் சொல்லுக்குத் தமிழில் செப்புதல், நவிலுதல், இயப்புதல், மொழிதல், பறைதல், கூறுதல், சாற்றுதல், கழறுதல், உரைத்தல், கிளத்தல் எனும் பலசொற்கள் உண்டு. இப்படிப்பட்ட பெரும்புகழ்பெற்ற நற்றமிழைக் காதலிப்போம், நற்றமிழை நம் குழந்தைகளுக்குப் பயிற்றுவிப்போம்.

[கட்டுரையாளர் - தமிழ்த்துறைத் தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி]

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com