வேரும் வேரடி மண்ணும்

வேர் அறிந்தால் இழிவழக்கு இல்லாமற் போகும். அடி அறிந்தால் சொல் வண்ணமாலை பல்கிப் பெருகும். வேரடி மண் இதுவென அறிந்தால் சொல்லை வழங்கிய மாந்தர் இனத்தின் பண்பாடும், தொன்மையும் பளிச்செனச் சுடர்வீசும்.
வேரும் வேரடி மண்ணும்

"சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே - அதைத்
தொழுது படித்திடடி பாப்பா"

என்று அன்றே அறமுரைத்தான் பாட்டுப்புலவன் பைந்தமிழ்ச் சாரதி பாரதி.  எட்டயபுரத்தில் பிறந்து காசிவரை சென்று, தெலுங்கு, கன்னடம், வடமொழி, பிரெஞ்சு, ஆங்கிலம் என அத்தனை மொழிகளையும் பயின்ற பின்னரே இந்தப் பாட்டைப் பாப்பாவுக்கு வழங்கினான், உயர்வை உள்ளபடியே ஆராய்ந்து தெளிந்த பாரதி. அவன் அருந்தமிழ் மொழியின் வேர் இது என்றும், அடி  இதுவென்றும், வேரடிமண் - பண்பாடு இதுவென்றும், தெளிவுறக் கண்ட பின்னரே, "சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே” என்று தேற்றேகாரமிட்டுப் பாப்பாவுக்குத் தெளிவுபடுத்தினான்.

வேரும் அடியும் அறிவதால் வரும் நன்மை

உந்தி எழுப்பிய வளி வாய்வழி பீய்ச்சப்படுவதால் 'பேச்சு' என்றாயிற்று. அதையே வரிந்து சொன்னால் 'அறை' மெல்லென்றிசைத்தால் 'இசை'; எடுத்துச் சொன்னால் 'என்': உள்ளது உரைத்தால் 'உயிர்': அழகுறச் சொல்வதனால் 'சொல்' (சொலி - பொன் - அழகு), கூறுபடுத்தி - வேறுபடுத்திச் சொல்வதனால் 'கூற்று; மேற்கோள் காட்டிச் சொல்வதனால் 'நுவல்தல்'; விரைந்து சொல்வதனால் 'நொடித்தல்'; எடுத்துச் சொல்வதனால் 'மொழி' வெளிப்படச் சொல்வதனால் 'விளம்பல்' ஆகும்.

சொற்களின் காரணம் பற்றி, வேர் பற்றி எண்ணிப் பார்த்தால், தமிழ்ச் சொற்களின் சிறப்புப் புலப்படும். இவற்றின் வேர் பேசுதல், கிளத்தல் - இதை அறிந்து கொண்டால், அதனடி அகப்படும்; அடி அகப்பட்டால் சொல் கிளைவிட்டுப் பரவும்; வண்ணப் பூஞ்சொற்களை வனைந்து தரும்; அவை காயாகி, கனியாகி, விதையாகும். விதைக்குள்ளேயே பரவும் பான்மையும், இயற்கை வழங்கும்; அதனால் மொழி பரவி புதிய மண்ணில் வேர் கொள்ளும். அவ்வாறு வேர் கொண்டவை பல வடமொழிச் சொற்கள்போலத் தோன்றும், அவற்றின் வேர் "தமிழ்' என்பதை ஒப்புக்கொள்ள மறுப்பார் இன்றும் உண்டு.

வேர் அறியா மயக்கம்

உத்தரம், தக்கணம் என்னும் இரு தமிழ்ச் சொற்களும் வடமொழியாளர் நிலத்தில் புகுந்து அங்கே நிலைபெற்றுவிட்டதால் வடமொழிச் சொற்களாய் மருட்டுவது கண்கூடு. முன்மைச் சுட்டான உ (அ) ஊ எனும் எழுத்தே உத்தரத்தின் வேர். 'உ' என்பது உயர்ச்சியைக் குறிக்கும் வேர்ச்சொல். உக்கம் - கட்டித்தூக்கும் கயிறு, உகப்பு - உயர்வு, உகை - எழு, உச்சம் - உயர்நிலை, உச்சி - உயரிடம் என்னும் சொற்களை உற்று நோக்கினால் 'உ' என்னும் வேர், உயர்ச்சியைச் சுட்டும் என அறியலாம். முதல்தரம், கடைத்தரம் என்பன போன்ற தமிழ்ச் சொல்லே உத்தரம் என்பதும். உ - உயர்வு, தரம் நிலை, எனவே உத்தரம் என்பது உயர்ந்த நிலை.

தக்கணம் என்பது வடவர் வாயில் தக்ஷணம் என வழங்கப்படுவது கண்டு தக்ஷிணம் தான் தக்கணம் ஆயிற்றென்று மயங்குவார் உண்டு. தக்கணத்தின் அடிச்சொல் தக்கு - தாழ்வு; தக்கணம் நிலமட்டத்தில் தாழ்ந்த தென்னாடு; அடி அறிந்தால் தக்கணம் எனும் சொல் தென்தமிழ்ச் சொல்லே என்னும் தெளிவு பிறக்கும்.

வேர் அறியாமையால் எழும் பிழைபட்ட வழக்கு

பேணாமை = பேண்+ஆ+மை. 'பேலாமை' என்னும் சொல்லின் வேர் பேண். ஆ-எதிர்மறை இடைநிலை; மை - தொழிற்பெயர் விகுதி ; பேணல் - காத்தல் என அறியப்படுவதால் 'பேணாமை' என்னும் சொல்லுக்கு "காக்காமை' எனப் பிழைபட வழங்கும் நிலை ஏற்படலாம். 'காத்தல்' என்னும் சொல்லின் வேர் 'கா' என்றறிந்தால், பேணாமை எனும் சொல்லுக்குக் 'காவாமை' என்றே பொருள் காணத் தோன்றும். வேர் அறியாமற் போனால் வேறு வேறாய்ச் சொற்கள் கிளைக்கும். கருப்புப் பூனையா, கறுப்புப் பூனையா - எது சரி என வினவுவாருண்டு, பூனையின் நிறம் குறிப்பதானால், கரி வேரடியாய்ப் பிறந்த கருப்பு என்பதே சரியான வழக்கு, பூனையின் சினப் பண்பைக் குறிப்பதாயின் கறுப்புப் பூனை என்பதே சரியான வழக்கு.

தகப்பனா - தமப்பனா?

தகு +அப்பன் எனப் பிரித்து தகுதிவாய்ந்த அப்பன் - தகப்பன் எனும் வழக்கே சரி என மயங்குவர். ஆனால், முறைப் பெயர்களாகிய தனயன், தமையன், தமக்கை, தங்கை, தம்பி என்பனவற்றின் அடி - தம் என்பதை அறிந்தால், தகப்பன் என வழங்க மனம் ஒப்புமா? தம் +அப்பன், தமப்பன் என வழங்க மனம் ஒப்புமா? வேர் அடி அறிந்தால் சொல் சாகுபடி சிறப்பாய் அமையும். இன்றேல், சொல் சாகும்படியே ஆகிவிடும்.

அடுக்குத்தொடர் ஏன்?

'இங்கே சிறுநீர்க் குழிகள் காணப்படுகின்றன' என்பதற்கும். இங்கே 'சிறுசிறு நீர்க்குழிகள் காணப்படுகின்றன' என்பதற்கும் எவ்வளவு வேறுபாடு உண்டு?
சிறுநீர் என்பது மூத்திரம் எனும் கழிவு நீரைக் குறிக்குமே. சிறு சிறு நீர்க்குழிகள் என்றால் சிறிய சிறிய நீர்க் குழிகள் என்றன்றோ எண்ணிய பொருளைத் தரும்? சிறுமை - என்பதன் வேர் சிறு என்பதை உணர்ந்து தக்கவாறு பயன்படுத்தினால் தமிழின் சீர்மை சுடர்விடும். எனவே, பொருள் புலப்படுத்திடும் உணர்ச்சியோடு மெய்ம்மையும், இழையும் அடுக்குத்தொடர் மொழிக்கு வேண்டப்படுவதே ஆகும்.

வேரடி மண்

மண் எனும் சொல் மணப்பது எனும் பொருள் உடையது. மழை மண்ணில் வீழ்கின்றபோது, அதிலிருந்து எழும் மணத்தை நாம் நுகர்ந்திருப்போம். மண்பாடு என்பது மண்ணின் பண்பாடே ஆகும்.

பளிங்கு என்னும் கண்ணாடியின் பயன்பாட்டைத் தமிழில் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே அறிந்திருந்தனர் என்பதை, "அடுத்தது காட்டும் பளிங்கு" என்னும் திருக்குறள் தொடரால் அறியலாம். அடுத்து நிற்பவர் உருவத்தைக் காட்டுவதால், ஆடு + இ - ஆடி என்று பெயர் பெற்றது என வேர்ச்சொல் அகர முதலி ஆய்ந்து காட்டுவதால், தமிழர்தம் பண்பாட்டுத் தொன்மை புலனாகிறது.

மானியம் எனும் சொல் வடசொல் போலத் தோற்றமளிக்கக் காரணம் அதன் வேரை அறியாத மயக்கமே! மானம் - அளத்தல் எனும் வேரில் கிளைத்ததே மானியம். (மானம் - அளவு, படிமானம் - படியும் அளவு, சேர்மானம் - சேர்க்கும் அளவு ) ஒருவரின் பெருமை அளவிட்டு அவர்க்கு வழங்கும் பொருள் மானியம் எனப்படும் என்பது அறிந்தால், வரிசையறிந்து ஈகை வழங்கும் தமிழரின் பண்பாடு பளிச்செனத் தெரியாதா?

அகரமுதலி - இலக்கியம்

அகர முதலியை எந்தக் காரணம் கொண்டும் விரித்துப் பாராமல், விளையாட்டாகப் பார்த்தபோது, "கரி - தீ மலம்" என்று இருப்பதைக் கண்டு திடுக்குற்றேன். ஓ! ஒரு சிறிய சிற்பக் கவிதை அன்றோ அங்கே காணக் கிடைக்கிறது! எனவே, அகரமுதலியும் இலக்கியமே.

கழி என்ற வேரிலிருந்து கழிதல், கழித்தல், கழிசடை, கழிப்பு (குற்றல்), கழிபடர், கழிவிரக்கம் எனப் பல சொற்கள் கிளை பரப்புவதை எண்ணினால் அகரமுதலியின் இலக்கிய மாண்பு இனிதே புலனாகும்.

வேர் அறிந்தால் இழிவழக்கு இல்லாமற் போகும். அடி அறிந்தால் சொல் வண்ணமாலை பல்கிப் பெருகும். வேரடி மண் இதுவென அறிந்தால் சொல்லை வழங்கிய மாந்தர் இனத்தின் பண்பாடும், தொன்மையும் பளிச்செனச் சுடர்வீசும்.

வேரை அறிவோம்! அதன் அடியையும் அறிவோம்!

 புலவர் வே.பதுமனார் 
 புலவர் வே.பதுமனார் 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com