தமிழ்த்தாய் பாடலும் தடுமாற்றங்களும்

அனைத்து அரசுத் துறை அலுவலகங்களிலும் தமிழ்த்தாய் பாடல் வரிகள் இடம்பெற்ற ஓர் பதாகை தொங்கவிடப்பட வேண்டும். அரசுத் துறை அலுவலர்கள் ஒவ்வொருவரும் அதனை மனப்பாடம் செய்திட வேண்டும்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

 

தேசிய கீதத்திற்கு நிகரானது ஒவ்வொரு மாநிலத்தின் வாழ்த்துப் பாடல். ஆறு, கடல், நிலம், இயற்கை, திராவிடம் ஆகியவற்றை போற்றி எழுதப்பட்டது 'நீராருங் கடலுடுத்த' என்ற தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல். 1891 ஆம் ஆண்டு 'மனோன்மணியம்' என்ற நாடகத்தில் இப்பாடல் இடம் பெற்றிருந்தது. அந்த நாடகத்தை, பாடலை இயற்றியவர் பெ.சுந்தரம்பிள்ளை. பின்னாளில் பாடல் தந்த புகழால் அவர் மனோன்மணியம் சுந்தரனார் என்றழைக்கப்பட்டார். ஆரம்பக் கட்டத்தில் தமிழகம், கேரளம், கர்நாடகம், ஆந்திரம் ஆகியவை ஒருங்கிணைந்திருந்ததால் அந்த மாநிலங்களின் சிறப்புகளையும் அப்பாடலில் அவர் தெரிவித்திருந்தார். பின்னாளில், தமிழகத்திற்கு ஏற்றாற்போல் வாழ்த்துப் பாடல் மாற்றப்பட்டது.

1970 ஆம் ஆண்டு ஜூன் 17 ஆம் தேதி, அப்போதைய முதலமைச்சரான திமுக தலைவர் மு.கருணாநிதி, தமிழகத்தின் வாழ்த்துப் பாடலாக 'நீராருங் கடலுடுத்த' பாடல் அனைத்து அரசு விழாக்களிலும், பள்ளிகளிலும், தனியார் நிகழ்ச்சிகளிலும் எதிரொலிக்க வேண்டும் என்பதற்கான அரசாணையை வெளியிட்டார். 'மெல்லிசை மன்னர்' என அழைக்கப்படும் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன், அப்பாடலுக்கு ஏற்ப இசையை உருவாக்கிக் கொடுத்தார். மாணவர்களின் தமிழ் பாடப்புத்தகங்களில் முதல் பக்கத்திலேயே இப்பாடலும் இடம் பெற்றது.

பள்ளிகள் தொடங்கும் முன் மாணவர்களே தமிழ்த் தாய் வாழ்த்துப்பாடலை பாடி வந்தனர். காலப்போக்கில், பள்ளிகளிலும், அரசு, தனியார் விழாக்களிலும் வாழ்த்துப்பா இசைத் தட்டுகள் மூலம் ஒலிக்கத் தொடங்கியது. அவ்வாறு ஒலிக்கும்போது அதனை பின்பற்றி யாரும் பாடுவதில்லை, பெரும்பாலோனோருக்கு வாழ்த்துப் பாடல் தெரியவில்லை, மாணவர்களும் தடுமாறுகின்றனர். தமிழ்த்தாய் பாடலுக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை. உயர்வான இடத்தில் இருப்போரும் வாழ்த்துப்பாடலின்போது எழுந்திருக்காமல் அமைதி காக்கின்றனர் போன்ற குற்றச்சாட்டுகள் வெளிவரத் தொடங்கின.

சென்னை உயர்நீதிமன்றமும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை இனி இசைத்தட்டுகள் மூலம் ஒலிக்கச் செய்யாமல், நேரடியாகப் பாட வேண்டும், தமிழக அரசு இதற்கான உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என வலியுறுத்தியது. அதன்படி, கடந்த ஆண்டு டிசம்பர் 17 ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின், 'நீராருங் கடலுடுத்த' பாடல் நேரடியாக மட்டுமே பாடப்பட வேண்டும் என்ற உத்தரவை பிறப்பித்தார்.

அவ்வாறு உத்தரவிட்டபோதும், பெரும்பாலான அரசு விழாக்களில் தப்பும், தவறுமாக சிலர் பாட அதனையே பலரும் பின்பற்றும் நிலை உள்ளது. பள்ளிகளில் பெரிய அளவில் பிரச்னை இல்லை. மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில், அரசு நிகழ்ச்சிகளில் ஆர்வத்துடன் பாட முன்வருவோர் இரண்டு, மூன்று வரிகளுக்குப் பின் தவறுதலாக பாடத் தொடங்கி விடுகின்றனர். பாடல் நிறைவடைந்தபின், விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக வந்தோர் தமிழ்த்தாய் பாடலின் தடுமாற்றத்தை கண்டு கவலைகொள்கின்றனர்.

அண்மையில், அரசு  விழா ஒன்றில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை திமுகவின் இலக்கிய அணியில் பொறுப்பு வகிக்கும் முக்கிய பிரமுகர் பாடத் தொடங்கி, பின்னர் தவறுதலாகி விழாவிற்கு வந்த அக்கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் விழா மேடையிலேயே, அமைச்சர், அதிகாரிகளிடம் வருத்தப்பட்டார். இதுபோன்று பல மாவட்டங்களிலும் அரசு நிகழ்ச்சிகளில் பெயரளவுக்கு மட்டுமே தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலானது எதிரொலிக்கிறது. இந்த நிலை தொடர்ந்து நீடிக்கக் கூடாது.

இதனை மாற்றியமைக்க அனைத்து அரசுத் துறை அலுவலகங்களிலும் தமிழ்த்தாய் பாடல் வரிகள் இடம்பெற்ற ஓர் பதாகை தொங்கவிடப்பட வேண்டும். அரசுத் துறை அலுவலர்கள் ஒவ்வொருவரும் அதனை மனப்பாடம் செய்திட வேண்டும். அரசு விழாக்களின்போதும் தடுமாற்றத்தை தடுத்திட அங்கு 'நீராருங் கடலுடுத்த' வாழ்த்துப்பாடல் குறித்த பதாகை தொங்கவிடப்பட்டால் பாடுவோருக்கும், அதனைப் பின்பற்றுவோருக்கும் வசதியாக இருப்பதுடன், தமிழ்த்தாயும் அழியாமல் தரணியெல்லாம் நிலைத்து நிற்பாள், தமிழக அரசு இதனை உடனடியாக செய்ய வேண்டும் என்பதே தமிழறிஞர்களின் எதிர்பார்ப்பு.

தாய்க்கொரு பழி நேர்ந்தால் மகர்க்கில்லையோ...?

 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com