தீயன தீண்டா நேய நோன்பு: ரமலான் சிறப்புக் கட்டுரைத் தொடர் - 29

பசி, தாகம், இச்சைகளைத் தவிர்த்து இருப்பது மட்டும் அல்ல நோன்பு. தீயன கேட்டல், தீயன செய்தல் ஆகிய ஆகாத செயல்களை விட்டும் ஐம்புலன்களையும் தவிர்த்தலே நோன்பு.
தீயன தீண்டா நேய நோன்பு: ரமலான் சிறப்புக் கட்டுரைத் தொடர் - 29

நோன்பிற்கு அரபியில் 'ஸெளம்'(sawm) என்று பெயர். ஸெளம் என்றால் 'தடுத்து கொள்ளுதல்' என்று பொருள். வைகறையிலிருந்து அந்திவரை உண்பதை, பருகுவதை, தாம்பத்திய உறவை, எதிர்ப்படும் தகாதவற்றைத் தடுத்து கொள்வதால் இதற்கு இந்தப் பெயர் பொருத்தமானதாக அமைந்தது. 

நோன்புகளில் இறைவனுக்குப் பிரியமானது தாவூது நபி நோற்ற நோன்பு. தாவூது நபி ஒருநாள் விட்டு ஒருநாள் நோன்பு நோற்பார்கள். ஒவ்வொரு நபியும் அவரவர்கள் காலத்தில் பலவாறு நோன்பு நோற்றார்கள். இதனையே இறைமறை குர்ஆனின் 2-183 -ஆவது வசனம், நம்பிக்கை உடையோரே, உங்களுக்கு முன்னுள்ளவர்கள் மீது கடமையாக்கப்பட்டிருந்தது போல உங்கள் மீதும் நோன்பு நோற்பது கடமையாக்கப்பட்டுள்ளது. நீங்கள் இறையச்சம் உடையோர் ஆகலாம் என்று கூறுகிறது. 

முந்திய நபிமார்களும் அவர்களைப் பின்பற்றியோரும் பின்பற்றியதுபோல் பெருமானார் முஹம்மது நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றிய இஸ்லாமியர்களுக்கும் ஹிஜ்ரி 2-ஆம் ஆண்டு முதல் ஒரு மாத ரமலான் நோன்பு கடமையானது.

ஈமான், தொழுகை ஆகிய இரு கடமைகளுக்குப்பிறகு நோன்பு மூன்றாவது கடமை ஆனது. 'ரமலான் அல்லாஹ்வால் அருளப்பட்ட மாதம். எவர் ரமலானைப் பெறுகிறாரோ அவர் அம்மாதத்தின் கடமையான நோன்பு நோற்கட்டும். அம்மாதத்தில் சொர்க்க கதவுகள் திறக்கப்படுகின்றன'' என்ற ஏந்தல் நபி (ஸல்) அவர்களின் அருள்மொழியை அறிவிக்கிறார் அபூஹுரைரா (ரலி) நூல்- புகாரி, அஹ்மத். 

நோன்பு என்பது வைகறை சுபுஹு தொழுகைக்குப் பாங்கொலி எழுப்புமுன் துவங்கி சூரியன் மறையும் வரை உண்ணாது, பருகாது, உணர்ச்சிகளுக்கு உள்ளாகாது, பசி, தாகம், இச்சைகளைத் தவிர்த்து இருப்பது மட்டும் அல்ல நோன்பு. தீயன கேட்டல், தீயன செய்தல் ஆகிய ஆகாத செயல்களை விட்டும் ஐம்புலன்களையும் தவிர்த்தலே நோன்பு. இது புறத்தே புலப்படும் நோன்பு. இதனினும் உயரிய நோக்கம் நோன்பு நோற்பவர் இறையச்சம் பெறுவதே. இறையச்சம் என்பது இறைவனின் கட்டளைகளைக் கடைபிடிப்பது. அல்லாஹ் விலக்கியதை விட்டு விலகி இருப்பது. தகாதவற்றை முற்றிலும் தவிர்த்து விடுவது. இந்த நிலைக்குப் பயிற்சி தந்து பக்குவப் படுத்துகிறது நோன்பு. ஆண்டுக்கு ஒருமுறை ரமலான் மாதம் முழுவதும் நோன்பு நோற்பது ஒரு புத்தாக்க புத்துணர்வு பயிற்சி. இந்த அடிப்படையில்தான் அரசு, பொது தனியார் துறைகளில் பணிபுரிவோருக்கு அவ்வப்போது அளிக்கும் புத்தாக்கப் பயிற்சி அமைகிறது.

ரமலான் மாதம் எத்தகையது என்றால் அதில்தான் மனிதர்களுக்கு நேர்வழி காட்டும் திருக்குர்ஆன் இறக்கப்பட்டது. அது நேரான வழியைத் தெளிவாக்கும் வசனங்களை உடையது. ஆகவே அம்மாதத்தை அடைகிறவர் அம்மாதத்தில் நோன்பு நோற்கட்டும் என்று 2-185 ஆவது வசனம் கூறுகிறது. மனிதர்கள் நேர்மையாய் வாழ நேர்வழி காட்டும் குர்ஆன் இறங்கிய இம்மாதத்தில் நோன்பு நோற்பது அந்த நேர் வழியில் நடப்பதற்கு நற்பயிற்சி ஆகும். 

அதோடு வாழ்வில் ஒவ்வொரு நிலையிலும் எதைச் செய்ய வேண்டும் எதைச் செய்யக் கூடாது என்பதையும் விளக்கும் குர்ஆனின் வழியில் நம் வாழ்வு அமைய இறையச்சம் இன்றியமையாதது. அவ்விறையச்சம் இல்லையேல் பொல்லாத வழியில் அல்லாதன செய்ய அஞ்சமாட்டோம். அல்லவை நீக்கி நல்லவை நாளும் செய்து அல்லாஹ்வின் அருளைப் பெற்று உற்ற வழியில் உயர்வாழ்வு வாழ உரிய பயிற்சியைத் தருகிறது நோன்பு.

நோன்பு முடிந்ததும் நோன்பு காலத்தில் பெறும் இப்பயிற்சியை வாழ்நாள் முழுவதும் கடைப்பிடிக்க வேண்டும். தடைபடுத்தப்பட்டவற்றைத் தடுத்திட வேண்டும். நோன்பு நோற்பதைச் சுமையாக நினைக்கக் கூடாது. உள்ள உறுதியுடனும் விருப்பத்துடனும் பொறுப்போடும் நோன்பு நோற்கும் காலம் எல்லாம் நன்மையை நுகர்வர் என்ற ஏந்தல் நபி (ஸல்) அவர்களின் நன்மொழியை நவில்கிறார் ஸஹ்லுப்னு ஸஃது (ரலி) நூல்- புகாரி, முஸ்லிம், முஅத்தா, திர்மிதீ.

நாம் நோற்கும் நோன்பிற்கும் நமக்கு முன்னுள்ள வேதகாரர்களின் உபவாசத்திற்கும் இடையில் உள்ள வேறுபாடு ஸஹர் நேரத்தில் உண்பது என்ற உத்தம நபி (ஸல்) அவர்களின் சத்திய வாக்கை அறிவிக்கிறார் அம்ருப்னுல் ஆஸ் (ரலி) நூல்- முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ, நஸஈ.

ஸஹர் நேரம் வைகறைக்கு முன்னுள்ள நேரம். ஸஹரில் உணவை உண்பதில் அருள்வளம் உள்ளது என்ற வள்ளல் நபி (ஸல்) அவர்களின் வாக்கை அறிவிக்கிறார் அனஸ் (ரலி) நூல்- முஸ்லிம்.

ஸஹர் நேரம் சாப்பிட்டு முடித்ததும் நோன்பு துவங்குகிறது. இந்த நேரத்தில் உண்ணும் உணவுக்கு ஸஹூர் என்று பெயர். காலையில் வயிறு பட்டினியாக இருக்கக் கூடாது என்ற இன்றைய மருத்துவத்திற்கு முன்னோடியாக அன்றே அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்பவர் ஸஹரில் உணவு உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்தினார்கள். ஸஹர் நேரம் பொழுது உதயமாவதற்குச் சுமார் நூறு நிமிடங்களுக்கு முன் முடிந்து விடுகிறது.

அவர்கள் ஸஹர் நேரத்தில் பாவ மன்னிப்பு கேட்பர் என்று 51- 18 ஆவது வசனம் அறிவிக்கிறது. யாகூப் நபி அவர்களின் பத்து மகன்கள் அழகிய மகன் யூசுபு நபி அவர்களுக்கு இழைத்த தீங்கை மன்னிக்குமாறு வெள்ளி இரவு ஸஹர் நேரத்தில் இறைவனை இறைஞ்சியதாக கூறப்படுகிறது. லூத் நபி அவர்களும் அவர்களைப் பின்பற்றியோரும் பிரளயத்திலிருந்து தப்பிக்க கப்பலில் புறப்பட்டது ஸஹர் நேரத்தில் என்று 54-34 ஆவது வசனம் கூறுகிறது. 
சிறப்புக்குரிய ஸஹரில் உணவுண்டு அந்திவரை நோன்பு நோற்றவர்களை நோக்கி "" சென்று போன நாள்களில் நீங்கள் முற்படுத்தியதற்குப் பதிலாக தாராளமாக உண்ணுங்கள். இன்னும் பருகுங்கள் என்று கூறப்படும் என்ற 69-24- ஆவது வசனத்தில் உள்ள "பில் அய்யாமில் காலிய்யா' என்ற அரபி சொற்றொடர் குறிப்பிடும் சென்று போன நாள்கள் என்பது இவ்வுலகில் நோன்பு நோற்ற நாள்களைக் குறிக்கிறது என்று கூறுகிறார் முஜாஹிது (ரஹ்). 

இன்னும் விளக்கமாக பானங்கள் பருகாது உங்களின் உதடுகள் சுருங்கின. உங்களின் கண்கள் உட்குழிந்தன. உங்களின் வயிறுகள் ஒட்டின. இன்றைய நாளில் உங்களுக்குரிய பாக்கிகளைப் பெற்று நோற்ற நோன்பின் பயனாக பருகுங்கள். புசித்து பசியின்றி இருங்கள் என்று கூறப்படுகிறது. 

அத்தகு நிலையை நாமும் எய்த மூன்றாம் கடமையாம் நோன்பை முனைந்து நோற்போம். இணைந்து பெறுவோம் பயனை ஈருலகிலும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com