சுதந்திர நாள்: ஏற்றத்தாழ்வு கொண்டாட்டம்!

குடிநீர் பானையைத் தொட்டதற்காக பள்ளி சிறுவனை ஆசிரியர் தாக்கியதில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த சிறுவன் உயிரிழந்தார். இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
சுதந்திர நாள்: ஏற்றத்தாழ்வு கொண்டாட்டம்
சுதந்திர நாள்: ஏற்றத்தாழ்வு கொண்டாட்டம்

ஆங்கிலேயர்களிடமிருந்து இந்திய நாடு சுதந்திரம் பெற்றதன் 75ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடினோம். 76ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நாம், ஆங்கிலேயர்களிடமிருந்து பெற்றதாக எண்ணும் சுதந்திரத்தை அனைவரும் முழுமையாக அனுபவிக்க முடிகிறதா என்ற கேள்வியை எழுப்பினால், முடிகிறதே! என்று அனைவராலும் யோசிக்காமல் பதில் கூற முடியாது. ஏனெனில் அதற்கு சான்றாக அரங்கேறியுள்ளது ராஜஸ்தானில் குடிநீர் பானையைத் தொட்டதற்காக பள்ளி சிறுவன் ஆசிரியரால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம்.

ராஜஸ்தானில் ஜூலை 20ஆம் தேதி நடந்த இந்தச் சம்பவம், சிறுவன் சிகிச்சை பலனின்றி இறந்த பிறகுதான் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜலோர் மாவட்டத்தின் சுரானா பகுதியில் செயல்பட்டுவரும் தனியார் பள்ளியில், 3ஆம் வகுப்பு பயின்று வரும் இந்திரா மேக்வால் என்ற சிறுவன், ஆசிரியரின் குடிநீர் பானையைத் தொட்டுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த ஆசிரியர் சலில் சிங், மாணவனை சரமாரியாக அடித்துள்ளார்.

பாடம் சரியாகப் படிக்காததாலும், வீட்டுப் பாடங்களை முடிக்காததாலும் ஆசிரியர்கள் அடிக்கும் அடி அல்ல அது. அதனால்தான் சம்பவம் நடந்த ஜூலை 20ஆம் தேதி முதல், இறப்பதற்கு முன்பு வரை மருத்துவமனை கண்காணிப்பிலேயே வைக்கப்பட்டிருந்தார் அச்சிறுவன்.

சிகிச்சையில் சிறுவன் இந்திரா மேக்வால்
சிகிச்சையில் சிறுவன் இந்திரா மேக்வால்

பள்ளியில் ஆசிரியர் அடித்ததில், கண் மற்றும் காதுகளில் பலத்த காயமடைந்து சிறுவன் சுயநினைவை இழந்துள்ளார். சிறுவனை முதலில் மாவட்ட மருத்துவமனையில் அவரது பெற்றோர்கள் அனுமதித்துள்ளனர். பின்னர் மருத்துவர்களின் அறிவுரையின்படி, உதய்பூர் அரசு பொதுமருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். ஒரு வாரத்திற்கு மேல் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்தும் அவரது உடல் நலனில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை என மருத்துவர்களும் சிறுவனின் தாயாரும் தெரிவிக்கின்றனர். அங்கிருந்து அகமதாபாத் மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட பிறகு கூட, மருத்துவமனையில் நேற்று (ஆக.14) இறக்கும் வரை சுயநினைவு திரும்பவில்லை என சிறுவனின் தந்தை தேவாராம் மேக்வால் வேதனை தெரிவிக்கிறார்.

பள்ளியில் நடனமாடும் இந்திரா மேக்வால் / முதல்நிலை சிகிச்சையில்
பள்ளியில் நடனமாடும் இந்திரா மேக்வால் / முதல்நிலை சிகிச்சையில்

மாணவன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த புகைப்படங்களைக் கண்டால் ஆசிரியரின் தாக்குதல் எவ்வளவு குரூரமானது என்பது புரியும். சம்பவம் நடந்து சிறுவன் இறக்கும் 25வது நாளில் கூட கண்கள் வீங்கிய நிலையிலேயே இருந்துள்ளது. தாகத்திற்காக குடிநீர் பானையை அணுகியது அவ்வளவு பெரிய தவறா?

சிறுவன் இந்திரா மேக்வால்
சிறுவன் இந்திரா மேக்வால்

சமத்துவத்தையும், சகிப்புத்தன்மையையும் மாணவர்களுக்குப் புரிய வைக்க வேண்டிய இடத்தில் இருக்கும் ஆசிரியரே, பட்டியலினத்தைச் சேர்ந்தவன் குடிநீர் பானையைத் தொடுவதா? என வஞ்சம் வைத்தாற்போல் அடிப்பது சக மாணவர்கள் மத்தியில் எந்தமாதிரியான எண்ணங்களை விதைக்கும். பட்டியலினத்தைச் சேர்ந்த சக மாணவர்களிடம் எந்தமாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும். கடந்த சில நாள்களுக்கு முன்பு, ''எல்லோரும் சமம் தானே டீச்சர்..'' என பள்ளி மாணவர் ஒருவர், சாதிய வேறுபாட்டை விதைக்கும் வகையில் பேசிய தனது ஆசிரியருக்கு பாடம் எடுத்த ஆடியோதான் நினைவுக்கு வருகிறது. கள்ளம் கபடமற்ற மாணவர்கள் மத்தியில், கற்றுத்தேர்ந்த ஆசிரியர்கள் விதைக்கும் நஞ்சுகள் இவை. சுதந்திர இந்தியாவில் எண்ணற்ற மேம்பாடுகள் கொண்டுவரப்பட்டாலும், இதுபோன்று நிகழும் சாதிய வேறுபாடுகள் தொடர்கதைகளாகவே நிகழ்வதுதான் வேதனை.

இதனால்தானோ என்னவோ, இந்திய சுதந்திரம் என்பது ஆங்கிலேயர்களிடமிருந்து பெற்று ஆதிக்க சமூகத்திடம் ஒப்படைக்கப்பட்ட சம்பிரதாய நிகழ்வுதானே தவிர. அது ஜனநாயக வருகை அல்ல எனக் குறிப்பிட்டார் பெரியார்.

நாட்டின் வளர்ச்சியில் பல்வேறு பகுதிகளுக்கு இடையே ஏற்றத்தாழ்வுகள் குறைந்து வருவதாக குடியரசுத் தலைவராக பொறுப்பேற்றுள்ள திரெளபதி முர்மு தனது சுதந்திர நாள் உரையில் நாட்டு மக்களிடம் தெரிவித்தார். 75ஆம் ஆண்டு சுதந்திர நாள் கொண்டாட்டங்கள் அனைத்தும் மக்களுக்கானவை. நாட்டை தன்னிறைவு அடையச் செய்வது அதன் ஒரு பகுதியே எனச் சுட்டிக்காட்டினார். ஆனால், ஊராட்சி மன்றத் தலைவர், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், கொடியேற்ற அனுமதி மறுக்கப்பட்டதும் இங்குதான். 

தேசப்பிரிவினையில் உயிரிழந்தவர்களுக்கு ஆண்டுதோறும் ஆகஸ்ட் 14ஆம் தேதி அஞ்சலி செலுத்தப்படுகிறது. இந்த ஆண்டு நடைபெற்ற நிகழ்ச்சியில், 1947-ல் நிகழ்ந்த தேசப்பிரிவினை இந்தியாவின் வரலாற்றில் கொடூரமான, மனிதத்தன்மையற்ற செயல் என்றார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா. நாட்டிற்குள்லேயே நிகழும் பிரிவினைகள் யாருடைய துயரம் என்ற கேள்வி எழாமல் இல்லை.

இறைச்சி விவகாரத்தில் சிறுபான்மை சமூகத்தின் மீது நடத்தப்படும் தாக்குதல், பழங்களைப் பறித்ததாக  கட்டி வைத்து அடிக்கும் கொலைவெறித் தாக்குதல், போன்றவை அரங்கேறுகின்றன. பட்டியலின இளைஞர்களை சாணியை குடிக்க வைப்பது, காலணிகளை நாக்கால் துடைக்க வற்புறுத்துவது போன்றவை ஆங்கிலேய ஆட்சி காலத்தில் நடத்த கொடுமைகளையே நினைவூட்டுகிறது.

மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் தொடர்ந்து இரண்டாவது முறை பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். குடியரசுத் தலைவராக பட்டியலினத்தைச் சேர்ந்தவர் நியமிக்கப்பட்டார். தற்போது பழங்குடியினத்தைச் சேர்ந்த திரெளபதி முர்மு நியமிக்கப்பட்டுள்ளார். இதனை நாடு சுதந்திரம் அடைந்த பிறகு நிகழ்ந்த வளர்ச்சியாக சிலர் குறிப்பிடுகின்றனர். ஆனால், அவர்கள் சார்ந்த சமூகம் விடுதலையை உணராதவரை இதனை வெற்றி எனக் கருதமுடியாது என்றே தோன்றுகிறது.

அரசியல் மனித வாழ்க்கையில் இன்றியமையாததாகிவிட்டது. ஒவ்வொரு நகர்வின் பின்புலத்திலும் அரசியல் ஆதாயங்கள் மறைந்துள்ளன. அந்தக் கண்ணோட்டத்திலேயே அனைத்தும் அணுகப்படுகிறது. காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில் பட்டியலின மாணவனை அடித்த ஆசிரியரின் செயலைக் கண்டிக்கும் பாஜகவின் மாநிலத் தலைவர் சதீஷ் பூனியா, தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகளை நிலைநாட்டுவதில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்துவிட்டதாக சாடியுள்ளார். ஆனால், பாஜக ஆட்சி நடைபெறும் குஜராத், மத்தியப் பிரதேச மாநிலத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த பெண்கள், குழந்தைகளுக்கு நிகழும் அசம்பாவிதங்களை நாம் செய்திகளாகக் கடக்காமல் இல்லை.

ஒரு பெண் கழுத்து நிறைய நகையுடன் சாலையில் இரவு நடந்து சென்று வீடு திரும்பினால்தான் நாடு சுதந்திரம் அடைந்ததாகக் கருத வேண்டும் என்றார் காந்தி. இதேபோன்றுதான் இப்போது சொல்லத்தோன்றுகிறது. சாதிய ஏற்றத்தாழ்வுகளை அனுபவிக்காமல், எவர் ஒருவர் பள்ளி, கல்லூரி, அலுவலகம் சென்று வருகிறாரோ அப்போதுதான் சுதந்திர நாள், அனைவரும் கொண்டாடும் நாளாக இருக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com