முதல் சுதந்திர தினத்தில் பிரதமர் நேரு என்ன பேசினார்? முழு விவரம்!

நாட்டின் முதல் விடுதலை நாளில் நாட்டு மக்களுக்குப் பிரதமர் நேரு ஆற்றிய உரை - முழு விவரம் 
முதல் பிரதமராகப் பொறுப்பேற்கிறார் நேரு
முதல் பிரதமராகப் பொறுப்பேற்கிறார் நேரு
Published on
Updated on
4 min read

நாடு விடுதலை பெற்று 75-வது ஆண்டுவிழா கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஒவ்வோராண்டும் விடுதலைத் திருநாளில் நாட்டு மக்களுக்காக  பிரதமர்கள் உரையாற்றி வருகின்றனர்.

விடுதலை பெற்ற 1947 ஆம் ஆண்டிலும் 48 ஆம் ஆண்டிலும் வானொலியில்தான் பிரதமர் ஜவாஹர்லால் நேரு சுதந்திர தின உரையாற்றியிருக்கிறார். 1949 ஆம் ஆண்டிலிருந்துதான் செங்கோட்டையில் கொடியேற்றி உரையாற்றும் வழக்கம் பிறந்திருக்கிறது.

விடுதலை பெற்ற நாளில், பொறுப்புமிக்க அந்தத் தருணத்தில் நாட்டு மக்களுக்காக ஆற்றிய உரையில் என்ன தெரிவித்திருப்பார் பிரதமர் நேரு?

பிரதமர் நேருவின் உரையில் விடுதலை உற்சாகத்தைவிடவும் நாட்டின் எதிர்காலம் தொடர்பான கவலையும் மக்கள் மீதான கரிசனையும் இவற்றையொட்டிய தொலைநோக்குமே தென்படுகிறது.

மக்களுக்கு உணவும் துணியும் வேண்டும் என்று குறிப்பிடும் அவர், ஏனோ வீடு பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. வாழ்க்கைத் தரம் பற்றி பெரும் அக்கறையைப் பகிர்ந்துகொண்டிருக்கிறார்.

1947 ஆகஸ்ட் 17 ஆம் தேதியிட்ட தினமணி நாளிதழில் வெளியான பிரதமர் ஜவாஹர்லால் நேருவின் உரை பற்றிய செய்தி முழுமையும் (இன்றைய வாசகர்களைக் கருத்தில்கொண்டு மொழிநடை மட்டும் சற்றும் மாற்றப்பட்டிருக்கிறது):

"பரஸ்பர சண்டை, பூசலை மறந்து முன்னேற்ற வேலையில் ஈடுபடுக"

நாட்டு மக்களுக்கு முதல் இந்திய பிரதமர் நேரு வேண்டுகோள் 

'உற்பத்தியைப் பெருக்குவதே முதல் வேலை'

அரசின் உடனடியான நல்வாழ்வுத் திட்டத்தை விளக்குகிறார் திரு. நேரு. 

புது தில்லி, ஆக. 16 _ இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித ஜவாஹர்லால் நேரு ஆகஸ்டு 15 - ந்தேதி இரவு வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் நமக்குக் கிடைத்துள்ள சுதந்திரத்தின் பொறுப்புகளை விளக்கினார்: உற்பத்தியைப் பெருக்குவதில் பரஸ்பரம் ஒத்துழைத்து மக்களின் உணவுக் கஷ்டம், துணிக் கஷ்டத்தைப் போக்க வேண்டும் என்றார். அமைதியான சூழ்நிலையைப் பொருத்தே நல்வாழ்வுத் திட்டம் இருப்பதால் பரஸ்பரம் சண்டையையும் தகராறுகளையும் விட்டொழிக்க வேண்டுமென்று அவர் கேட்டுக்கொண்டார். 

நேரு உரையின் முழு விவரம்: 

இந்திய பிரதமர் பண்டித ஜவாஹர்லால் நேரு 15-ந் தேதி இரவு 8.30 மணிக்கு அ.இ. வானொலியில் பேசியதாவது: 

இந்தியாவுக்காகவும் இந்திய சுதந்திர லட்சியத்துக்காகவும் பல ஆண்டுகளாக சேவை செய்யும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. முதல் தடவையாக உத்யோக முறையில் இந்திய மக்களின் முதல் சேவகன் என்ற அந்தஸ்தில் உங்களுக்கு நான் இப்பொழுது உரையாற்றுகிறேன். இந்திய மக்களின் நலனுக்காக சேவை செய்ய நான் அர்ப்பணம் செய்துகொண்டுள்ளேன். உங்களுடைய சம்மதத்துடனேயே நான் இந்தப் பதவியை வகிக்கிறேன். உங்களுக்கு என்னிடம் நம்பிக்கையிருக்கும் வரைதான் நான் இந்தப் பதவியில் இருக்க முடியும். 

நாம் இன்று சுதந்திர மக்கள். நாம் இன்று முழுமையான அரசுரிமை பெற்றுள்ளோம். பழைமையின் பளுவிலிருந்து விடுதலை பெற்றுவிட்டோம்; வெளி உலகத்தை நாம் தெளிவுள்ள கண்களுடன் நோக்குகிறோம்; எதிர்காலத்தை நம்பிக்கையுடன் நோக்குகிறோம். 

அயலாரின் ஆதிக்க சுமை நீங்கிவிட்டது. ஆனால் சுதந்திரத்துடன் நமக்குப்  பொறுப்புகளும் பாரங்களும் வருகின்றன. நாம் சுதந்திரமடைந்துவிட்டோம் என்பதை உணர்ந்து தன்னடக்கமாகவும் கட்டுப்பாடாகவும் இருந்தால்தான் அந்த பொறுப்புகளை ஏற்க முடியும். அந்த சுதந்திரத்தை விரிவுபடுத்திக் காப்பாற்ற உறுதிகொள்ள வேண்டும்.

நாம் எவ்வளவோ சாதித்துள்ளோம்; இன்னும் எவ்வளவோ சாதிக்க வேண்டியிருக்கிறது. நமது மாபெரும் தலைவர் [மகாத்மா காந்தி] கற்றுக்கொடுத்துள்ள சித்தாந்தங்களைப் பின்பற்றி உறுதியுடன் நமது முன்னுள்ள புது வேலைகளில் ஈடுபடுவோமாக. வழிகாட்டி ஊக்கமளித்துப் பெரு முயற்சிகளில் நாம் அனுஷ்டிக்க வேண்டிய வழிகளைச் சுட்டிக்காட்ட மகாத்மாஜி இப்பொழுது நம்மிடையே இருப்பது நமக்கு ஒரு பெரும் அதிர்ஷ்டம். நாம் கடைப்பிடிக்கும் முறை சரியாக இருந்தால்தான் நாம் அடையும் சாதனையும் சரியாக  இருக்குமென்பதை காந்திஜி நமக்கு வெகுநாளைக்கு முன்பே கற்றுக் கொடுத்துள்ளார். வாழ்க்கையில் நாம் பெரிய லட்சியங்களைக் கொள்வதற்கு நாம் பெரிய மனிதர்களாயிருத்தல் வேண்டும். இதரர்களுக்கு சுதந்திரச் செய்தியையும் சமாதானச் செய்தியையும் கொடுப்பது இந்தியாவுக்கு தனிச் சிறப்பு வாய்ந்த ஒரு பண்பாடு. நமது அந்த பண்பாடு உலகத்தில் சோபிக்க வேண்டுமானால் பாரத தாயின் ஏற்ற புதல்வர்களாயிருத்தல் வேண்டும். கிழக்குப் பகுதியிலுள்ள இந்த நாட்டில் இப்பொழுது பிறந்துள்ள சுதந்திரத்தை உலகம் முழுதும் கவனித்து பார்த்து வருகிறது. இந்த சுதந்திரம் எவ்வகையில் வேலை செய்யப் போகிறதென்பதையும் ஆச்சர்யத்துடன் உலகம் கவனித்து வருகிறது. 

நம்மை இழிவுபடுத்திவருகிற, நம்மை அவலட்சணப்படுத்திவருகிற, நமது சுதந்திரத்தைக் கெடுத்துவருகிற உள்நாட்டு சச்சரவுகளையும் வன்முறைகளையும் நிறுத்தவேண்டியதே நம்முடைய முதலாவது கடமையாகும். அவை பொதுமக்களின் பொருளாதார பிரச்னைகளில் கவனம் செலுத்த முடியாதபடி செய்துவிடுகின்றன. பொதுமக்களின் பொருளாதார முன்னேற்றம் சம்பந்தமான பிரச்னையை அவசரமாகக் கவனிக்க வேண்டும். அதில் முட்டுக்கட்டை போடவே கூடாது. 

நமது வெகுகால அடிமைத்தனம், இரண்டாவது உலக யுத்தம், யுத்த பிற்கால விளைவுகள் காரணமாக பல வாழ்க்கைப் பிரச்னைகள் ஏற்பட்டுவிட்டன. இப்பொழுது நமது மக்களுக்குப் போதுமான உணவும் துணியும் இதர அத்தியாவசிய பொருள்களும் கிடைப்பதில்லை. தொடர்விளைவாக மாறிமாறி, பண வீக்கமும், விலைவாசி உயர்வும் ஏற்பட்டுக்கொண்டே வருகின்றன. இப்பிரச்னைகளை நாம் திடீரென தீர்த்துவிட முடியாது. ஆனால், அப்பிரச்னைகளை தாமதப்படுத்தக் கூடாது. பாமர மக்கள் மீதுள்ள சுமை குறைந்து வாழ்க்கைத் தரம் உயரும் வகையில் நாம் விவேகமாகத் திட்டம் வகுக்க வேண்டும். நாம் யாருக்கும் கெடுதல் எண்ணவில்லை. 

வெகு நாட்களாக அவதிப்பட்டு வரும் பாமர மக்களின் சமுதாய முன்னேற்றம், பாமர மக்களின் நிலைமையை உயர்த்துவதில் இதர நலன்கள் குறுக்கிடக் கூடாது. 

நில சம்பந்தமான உளுத்துப்போன குத்தகை முறைகளை மாற்ற வேண்டும். நமது தொழிற்சாலைகளை விரிவான அளவிலும் பிற தொழில்களுக்கு இடையூறு செய்யாத முறையிலும் பெருக்க வேண்டும். அதன் மூலமாக நாட்டின் செல்வத்தை வளர்க்க வேண்டும். தேசிய வருமானம் அதிகரிக்கப்பட்டு அது நேர்மையாக விநியோகிக்கப்படும். 

உற்பத்தி பெருக வேண்டும் 

எல்லாவற்றையும்விட உற்பத்தியை அதிகப்படுத்துவதிலேயே அவசரமான கவனத்தைச் செலுத்த வேண்டும். உற்பத்திக்கு ஊறு ஏற்படுவதோ உற்பத்தியைக்  குறைக்க முயற்சிப்பதோ நாட்டுக்கு தீங்கு விளைவிக்கிறது. அதனால் தொழிலாளர் வர்க்கத்துக்கே விசேஷமாக தீங்கு ஏற்படுகிறது. வெறும் உற்பத்தி பெருக்கம் மட்டிலும் போதாது. அதனால் ஒருசிலரிடமே பணம் குவிந்துவிடும். அது முன்னேற்றத்துக்கு ஒரு இடையூறாக இருக்கும்; இன்றைய நிலையில் அது தகராறை ஏற்படுத்தும்; ஸ்திரமற்ற நிலையை நீடித்துவைக்கும். ஆகவே, பிரச்னை தீர வேண்டுமானால் நேர்மையான முறையில் விநியோகம் நடைபெற வேண்டும். 

நதிகள் மூலமாக நீர்ப்பாசன வசதிகளைப் பெருக்க இந்திய அரசிடம் பல பெரிய திட்டங்கள் இருக்கின்றன. நதிகளின் வெள்ளத்தைக் கட்டுப்படுத்தி அணைகள் கட்டுதல், நீர்த்தேக்கங்கள் அமைத்தல், மின்சார வசதிகளைப் பெருக்குதல் போன்ற திட்டங்கள் இருக்கின்றன. இது மூலமாக உணவு தானிய உற்பத்தி அதிகமாகும். தொழிற்சாலைகள் பெருகும்; பல துறைகளிலும் முன்னேற்றம் ஏற்படும். எந்த நல்வாழ்வுத் திட்டத்துக்கும் இந்தத் திட்டங்கள் அடிப்படையானவை. பொது மக்கள் வாழ்க்கைத் தரம் உயரும்பொருட்டு இத்திட்டங்களைத் துரிதமாக செய்துமுடிக்க உத்தேசித்துள்ளோம். 

தகராறு செய்ய இது தருணமல்ல 

இந்தத் திட்டங்கள் நிறைவேற வேண்டுமானால் அமைதியான சூழ்நிலை இருக்க வேண்டும், எல்லோருடைய ஒத்துழைப்பும் வேண்டும்; இடைவிடாது முயற்சி எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த மகத்தான வேலைகளில் நமது கவனத்தைத்  திருப்புவோமாக. சண்டையும் தகராறும் செய்ய இது தருணமல்ல. சண்டைபோடவும் ஒரு நேரம் இருக்கிறது, ஒத்துழைக்கவும் ஒரு நேரம்  இருக்கிறது, வேலை செய்யவும் ஒரு நேரம் உண்டு. விளையாடவும் ஒரு நேரம் உண்டு. இது பரஸ்பரம் சண்டை போடவோ அல்லது விளையாடவோ நேரமல்ல. பரஸ்பரம் சண்டை போட்டால் அல்லது விளையாடிக் கொண்டிருந்தால் நாம் நமது நாட்டிடமும் நாட்டுமக்களிடமும் நமது கடமையைச் செய்யத் தவறியவர்களாவோம். இது நாம் பரஸ்பரம் ஒத்துழைத்துக் கூடி வேலை செய்யும் நேரம். சரியான நல்லெண்ணத்துடன் வேலை செய்ய வேண்டும். 

அரசு ஊழியர்களுக்கு

அரசின் ராணுவ மற்றும் சிவில் ஊழியர்களுக்கு ஒரு சொல். அரசு வேறு நீங்கள் வேறு என்ற வேறுபாடு இப்பொழுது மறைந்துவிட்டது. நாம் எல்லோரும் இப்பொழுது பாரதமாதாவின் சுதந்திரமான மக்கள். நாட்டின் விடுதலையில் நாம் அனைவரும் ஒருமிக்கப் பெருமிதம் கொள்கிறோம். பாரத மாதாவுக்கு நாம் அனைவரும் வேறுபாடின்றி ஒன்றுபட்டு சேவை செய்ய வேண்டும். இந்தியாவிடம் நாம் எல்லோரும் பொதுவாக விசுவாசமாயிருக்க வேண்டும். நம் முன்னுள்ள சிரமமான எதிர்காலத்தில் ஊழியர்களும் நிபுணர்களும் முக்கியமான பங்கேற்க  வேண்டியிருக்கும். தாய்நாட்டின் சேவையில் எங்கள் தோழர்களாக ஈடுபடும்படி அவர்களை அழைக்கிறோம். 

"ஜெய் ஹிந்த்"

* * *

இந்த 75 ஆண்டு கால இந்திய வரலாற்றில் என்னென்னவோ நடந்திருக்கின்றன. எத்தனை பிரதமர்கள், எத்தனை ஆட்சிகள், எத்தனை அரசியல், எவ்வளவு மாற்றங்கள், எவ்வளவு முன்னேற்றங்கள்... எல்லாவற்றுக்கும் அப்பால் ஜனநாயகம் நிலைத்திருக்கிறது!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.