'குறையுடன் பிறந்ததற்காகப் பெருமைப்படுகிறேன்' - சாதனை மனிதர் நிக் வூஜிச்!

கைகளும் கால்களும் இல்லையென்றாலும் ஒரு மாபெரும் பேச்சாளனாக மாறி  தனது 26-வது வயதில் ஒரு சிறந்த தன்னம்பிக்கைச் சொற்பொழிவு ஆற்றும்  சாதனை மனிதராக மாறிவிட்டார் வூஜிச்.
நிக் வூஜிச்
நிக் வூஜிச்

தாயின் வயிற்றில் கருவாக இருக்கும்போதே தெரிந்திருந்தால்கூட கருவைக் கலைத்திருப்பார்கள் பெற்றோர்கள். பாவம், அந்த அப்பாவிப் பெற்றோர்கள் பெற்ற ஆண் குழந்தை இரு கைகளும் இல்லாமல், இரு கால்களும் இல்லாமல் பிறந்திருப்பதைப் பார்த்ததும் துடிதுடித்துப் போனார்கள். அக்குழந்தையை வளர்த்தெடுக்கவும், படிக்க வைக்கவும் அவர்கள் பட்ட துயரங்களையும், துன்பங்களையும் வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது.

குறைபாடுடைய குழந்தையை பெற்றுவிட்டோமே என அழுது புலம்பிய பெற்றோருக்குத் தைரியமும், தன்னம்பிக்கையும் கொஞ்சம் கொஞ்சமாக ஒரு செடி போல வளர்ந்து, வாசம் வீசும் பூக்களாக பூக்கத் தொடங்கின. ஆஸ்திரேலியாவில் மெல்பர்ன் நகரத்தில் ஒரு கிறிஸ்துவத் தம்பதியருக்குத்தான் அந்தக் குழந்தை பிறந்திருந்தது. அந்த ஆண் குழந்தைக்கு நிக் வூஜிச் என்று பெயரிட்டனர்.

கொஞ்சம் வளர்ந்து பள்ளியில் சேர்க்கப்போகும் போது அரசாங்கம், பள்ளியில் சேர்ந்து படிக்க அனுமதிக்கவில்லை. அரசை எதிர்த்து ஒரு மாபெரும் யுத்தமே நடத்தி அரசுப் பள்ளியில் சேர்த்து படிக்க வைத்தனர் பெற்றோர்கள். பள்ளியில் அவரைக் கிண்டலும், கேலியும் செய்யாத மாணவரும் இல்லை, மாணவியரும் இல்லை. பள்ளி முடிந்து ஒருநாள் வீட்டுக்கு வந்த சிறுவன் வூஜிச் தனது தாயாரைக் கட்டியணைத்துக் கொண்டு "அம்மா, என்னை கருவிலேயே சாகடித்திருக்கக் கூடாதா? பலரும் அவமானப்படுத்துகிற என்னை எதற்காக பெற்றெடுத்தாய்?' என்று கேட்க, தாயாருக்கும் கண்ணீர் விடுவதைத் தவிர வேறு எதையும் சொல்லத் தெரியவில்லை, சொல்லவும் முடியவில்லை.



வூஜிச் வளர, வளர அவன் பேச்சு பலரையும் வசீகரிக்கத் தொடங்கியது. கைகளும் கால்களும் இல்லையென்றாலும் அவன் ஒரு மாபெரும் பேச்சாளனாக மாறினான். தனது 26-வது வயதில் ஒரு சிறந்த தன்னம்பிக்கை சொற்பொழிவு ஆற்றும் சாதனை மனிதராக மாறிவிட்டான் வூஜிச். உலகிலுள்ள அனைத்து மக்களும் அவனது பேச்சை ஆர்வமுடன் கேட்பதற்காக குவியத் தொடங்கினார்கள். வூஜிச் பேசுகிறார் என்றால் அரங்கம் முழுவதும் நிற்கக்கூட இடமில்லாமல் நிரம்பி வழியும்.

வூஜிச் பேசும் இடங்களிலெல்லாம் ஒன்றை குறிப்பிட்டுச் சொல்வதுண்டு. 'கடவுள் இந்த உலகத்துக்குச் செய்ய வேண்டியதை என்னைப் போன்ற ஒரு அசாதாரணப் பிறவி மூலமாகத்தான் செய்து முடிக்கிறார் என்பதை உணர்ந்து கொண்டேன். எனக்கு அந்தப் பெரும் பாக்கியம் கிடைத்திருக்கிறது. உண்மையில் நான் குறையுடன் பிறந்ததற்காகப் பெருமைப்படுகிறேன். இரு கைகளும், இரு கால்களும் இல்லாமல் பிறந்த நான் எனக்குத் தேவைப்படும் எந்த உதவியையும் நான் பிறரைச் செய்யுமாறு எப்போதும் சொல்வதில்லை. எதிர்பார்ப்பதும் இல்லை. எனக்குத் தேவையான அனைத்தையும் நானே செய்துகொள்கிறேன். எனது வாகனத்தை நானேதான் ஓட்டிச் செல்வேன். என் வாழ்வில் நடந்த அவமானங்களையும், கடந்து வந்த கரடு, முரடான பாதைகளையும் சொல்லிச் சொல்லியே பலரை உற்சாகப்படுத்தியிருக்கிறேன். எனது பேச்சைக் கேட்க வந்த எண்ணற்ற மக்களின் தாழ்வு மனப்பான்மையை தவிடுபொடியாக உடைத்தெறிந்திருக்கிறேன்.



நடக்கவே முடியாமல் என் கூட்டத்துக்கு வந்த பல மாற்றுத்திறனாளிகள் என் பேச்சைக் கேட்டு எழுந்து நடந்திருக்கிறார்கள். சொன்னால் நம்ப மாட்டீர்கள், சிலர் ஓடியும் இருக்கிறார்கள். அவமானங்களையும், அடைந்து வரும் துயரங்களையும் தயவுசெய்து தூக்கி வீசுங்கள். ஒவ்வொரு நாளும் காலை எழுகிறபோது புதிதாகப் பிறந்ததாக எண்ணிக்கொண்டு புதிய பயணத்தைத் தொடங்குங்கள். உங்கள் ஒவ்வொருவரிடமும் திறமைகள் இருக்கின்றன என்பதை நம்புங்கள். நீங்கள் ஏதேனும் சாதிக்க நினைத்தால் அதற்காகத்தான் கடவுள் உங்களை அனுப்பியிருக்கிறார் என்று நம்புங்கள், எளிதில் வெற்றியடைவீர்கள்.

நான் குறையுடன் பிறந்ததால் எனது வாழ்வில் நான் சந்தித்த சோதனைகளையும் வேதனைகளையும் அவமானங்களையும் பல கூட்டங்களில் சொல்லி அவர்கள் அனைவரையும் மனதளவில் நல்வழிப்படுத்தி இருக்கிறேன்.

என் உருவத்தை என்னால் மாற்ற முடியாது. ஆனால் உலகம் முழுவதும் மனதளவில் குறைப்பட்ட எத்தனையோ பரிதாபத்துக்குரியவர்களை மாற்றி மறுவாழ்வு வாழ வைத்திருக்கிறேன். நீங்கள் எப்படிப்பட்ட தாழ்வு மனப்பான்மை உள்ளவராக இருந்தாலும் உங்களை என்னால் மாற்ற முடியும்' என்று ஒரு கனமழை பொழிவதுபோல தன்னம்பிக்கை வார்த்தைகளை கொட்டுகிறார் வூஜிச்.

சர்பிங் விளையாட்டு வீரரான வூஜிச் சொன்னதோடு மட்டுமில்லை, செய்து கொண்டும் இருக்கிறார். இவர் ஒரு புத்தகமும் எழுதியிருக்கிறார். அதன் பெயர் என்னவென்று தெரியுமா? 'கைகளும் இல்லை, கால்களும் இல்லை, அதனால் எனக்கு ஒரு கவலையும் இல்லை'!

கண்கள் இரண்டும் பார்வையற்று  இருப்பவர்கள் யாரும் இதுவரை விபத்தில் இறந்ததாக வரலாறு இல்லை. இரு கண்களும் நன்றாக இருந்தவர்களில் பலரையும் விபத்துகளில் பறிகொடுத்திருக்கிறோம் என்பதுதானே உண்மை!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com