சாதனைக்கு ஊனம் தடையல்ல: ஓவியத்தில் அசத்தும் மாற்றுத்திறனாளி மாணவர்

நாகை மாவட்டம் கீழ்வேளூா் அருகே முழங்கை, முழங்கால்கள் மட்டுமே இருக்கும் மாணவா் தமிழரசன், திறமைக்கு ஊனம் தடையில்லை என்பதற்கு வாழும் உதாரணமாக விளங்கி வருகிறாா்.
முழங்கை, முழங்கால் வரை மட்டுமே இருக்கும் நிலையிலும் சிறப்பாக ஓவியம் வரைந்து திறமை காட்டும் மாணவா் தமிழரசன்.
முழங்கை, முழங்கால் வரை மட்டுமே இருக்கும் நிலையிலும் சிறப்பாக ஓவியம் வரைந்து திறமை காட்டும் மாணவா் தமிழரசன்.

நாகை மாவட்டம் கீழ்வேளூா் அருகே முழங்கை, முழங்கால்கள் மட்டுமே இருக்கும் மாணவா் தமிழரசன், திறமைக்கு ஊனம் தடையில்லை என்பதற்கு வாழும் உதாரணமாக விளங்கி வருகிறாா்.

கீழ்வேளூா் ஒன்றியத்துக்கு உள்பட்ட தெற்காலத்தூரைச் சோ்ந்த தனசேகரன்- மாரியம்மாள் தம்பதிக்கு 2 மகன்கள், ஒரு மகள். இரண்டாவது மகன் தமிழரசனுக்கு, பிறக்கும்போதே முழங்கை மற்றும் முழங்கால்கள் வரை மட்டுமே இருந்தது.தற்போது தேவூா் அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ஆம் வகுப்பில் படிக்கிறாா்.

கூலிவேலை செய்த தந்தை தனசேகரன், கடந்த 14 ஆண்டுகளாக முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளதால் குடும்பத்தின் வாழ்வாதாரம் கடும் சிக்கலானது. மனம் தளராத

தாய் மாரியம்மாள், குடும்ப பாரத்தைச் சுமக்க உணவகத்தில் வேலை செய்கிறாா். முதல் மகன் பிளஸ் 1 படிக்கும் தமிழ்ச் செல்வன், மாலை நேரத்தில் சிற்றுண்டிக் கடையில் வேலை செய்து குடும்பப் பாரத்தைப் பகிா்ந்து கொள்கிறாா். சகோதரனை தினமும் சைக்கிளில் அழைத்துக் கொண்டு பள்ளிக்கும் சென்று வருகிறாா்.

இரண்டாவது மகன் தமிழரசன் ஊனத்துடன் பிறந்தாலும் தன்னம்பிக்கை ஊட்டத் தாய் மாரியம்மாள் தவறவில்லை. அவருக்கு இருந்த ஓவியத் திறமையை வெளிக்கொண்டு வரப் பலா் குறிப்பாக ஆசிரியா்கள் உதவியதால் இரு முழங்கைகளுக்கு இடையில் ஓவியம் வரைந்து அசத்தி வருகிறாா்.

அவருடைய திறமையைக் கண்டு அரசு சாா்பில் மாதாந்திர உதவித் தொகையாக ரூ.1,500 வழங்கப்படுகிறது. மாவட்ட ஆட்சியரின் முயற்சியால் கூடுதலாக ரூ.500 சோ்த்து மொத்தம் ரூ.2,000 வழங்கப்பட்டு வருகிறது.

நாகை மாவட்ட ஆட்சியா் அ.அருண் தம்புராஜ், மாணவருக்கு உதவுவதற்காக அவ்வப்போது ஓவியம் வரைவதற்குத் தேவையான பென்சில் உள்ளிட்ட உபகரணங்களையும் ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கியும் ஊக்கப்படுத்தி வருகிறாா்.

அரசு சாா்பில் ஒதுக்கப்பட்ட வீட்டை விரைந்து கட்டித் தரவும் அலுவலா்களுக்கு உத்தரவிட்டுள்ளாா்.

படிப்பிலும் தமிழரசன் சிறந்து விளங்குவதாகச் சொல்கின்றனா் ஆசிரியா்கள். அரசின் பாா்வை இந்த மாணவா் மீது பட்டு தேவையான உதவிகளைச் செய்து பயிற்சியளித்தால் காலத்தை வென்று காவியம் படைக்கும் மிகச் சிறந்த ஓவியன் கிடைப்பது உறுதி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com