சாதிக்கப் பிறந்தவள் நான்!

உள்ளம் உறுதியாக இருப்பதால், உயரம் தடையில்லை; வழக்குரைஞராகி சாதித்துக் காட்டுவேன் என்கிறார் இரண்டே அடி உயரமான நாமக்கல் அரசு சட்டக் கல்லூரி மாணவி ஆர்.சுரேகா.
ஆர்.சுரேகா
ஆர்.சுரேகா

உள்ளம் உறுதியாக இருப்பதால், உயரம் தடையில்லை; வழக்குரைஞராகி  சாதித்துக் காட்டுவேன் என்கிறார் இரண்டே அடி உயரம் கொண்ட நாமக்கல் அரசு சட்டக் கல்லூரி மாணவி ஆர். சுரேகா (23). 

நாமக்கல் மாவட்டம் பேளுக்குறிச்சி அருகே கல்குறிச்சி வெள்ளாளப்பட்டியைச் சேர்ந்தவரான இவரது பெற்றோர் ராமசாமி -தங்கம்மாள். இவருக்கு அபி, தீபிகா என்ற இரு சகோதரிகள் உள்ளனர். கூலி வேலை செய்து வாழ்க்கையை நடத்தும் ராமசாமி, தனது மூன்று மகள்களையும் நன்கு படிக்க வைத்துள்ளார். அந்த வகையில் மூத்த மகளான அபி தனியார் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார். மூன்றாவது மகள் தீபிகா திருமணமாகி கணவர் வீட்டில் வசிக்கிறார்.

இவர்கள் இருவருக்கும் உடல் வளர்ச்சியில் எவ்விதக் குறைபாடுமில்லை. ஆனால் இரண்டாவது மகளாகப் பிறந்த சுரேகா, உறுப்புகள் வளர்ச்சிக் குறைபாட்டால் உயரமாக வளரவில்லை. அங்குள்ள அரசுப் பள்ளிகளில் ஒன்று முதல் 12–ஆம் வகுப்பு வரை பயின்ற அவர், நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் அரசு மகளிர் கல்லூரியில் பி.ஏ. (வரலாறு) 3 ஆண்டுகள் படித்து முடித்த நிலையில், 2020–ஆம் ஆண்டு நாமக்கல் அரசு சட்டக் கல்லூரியில் சட்டம் பயில விண்ணப்பித்தார். மாற்றுத் திறனாளி ஒதுக்கீடு அடிப்படையில் அவருக்கு மூன்று ஆண்டுகள் பயிலும் வகையில் எல்.எல்.பி. படிக்க வாய்ப்பு கிடைத்தது. இரண்டு ஆண்டுகள் முடிவுற்ற நிலையில், இறுதி ஆண்டு பயின்று வருகிறார்.

வளர்ச்சிக் குறைபாடுடைய இவரால் வழக்குரைஞராக சாதிக்க முடியுமா என்ற பலரின் பார்வைகளுக்கு மத்தியில் உயரம் எனக்கு ஒரு தடையில்லை; உள்ளம் உறுதியாக இருக்கிறது என்கிறார் மாணவி சுரேகா.

அவரிடம் பேசியபோது, 'பிறந்தது முதல் வளர்ச்சி என்பது இல்லை. பெற்றோரின் உதவியுடன்தான் பள்ளிப்படிப்பை முடித்தேன். சகோதரிகள் இருவரும் நல்ல முறையில் உள்ளனர். பெற்றோரும் சரி, சகோதரிகளும் சரி, நண்பர்களும் சரி என்னை எந்த வகையிலும் வேடிக்கையாகப் பார்த்ததில்லை. அந்த வகையில் நான் பாக்கியசாலி. பிளஸ் 2 வகுப்பில் 600-க்கும் மேல் மதிப்பெண் பெற்றேன். கல்லூரிப் படிப்பை முடித்து விட்டு சட்டம் பயில்கிறேன். இன்னும் ஓராண்டுதான் உள்ளது.

சென்னையைச் சேர்ந்த பிரபல வழக்குரைஞர் ஒருவரின் நாமக்கல் அலுவலகத்தில் கல்லூரி நேரம் தவிர்த்து இதர நேரங்களில் பயிற்சி பெற்று வருகிறேன். யாருடைய உதவியுமின்றி பேருந்தில் நானே தனியாக வந்து செல்கிறேன். அனைவரும் பாராட்டும் வகையில் வழக்குரைஞராக சாதித்துக் காட்டுவேன், அதற்கான நம்பிக்கை என்னிடம் உள்ளது' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com