சாதனையாளர்களை உருவாக்கும் சாதனையாளர்!

போராட்டத்தையே வாழ்க்கையாகக் கொண்டு சாதனை படைத்து வாழ்நாள் சாதனையாளர் விருதையும் பெற்றவரான ஜெ. ரஞ்சித்குமார், சக மாற்றுத் திறனாளிகளை சாதனையாளர்களாக உருவாக்கி வருகிறார். 
ஜெ.ரஞ்சித்குமார்
ஜெ.ரஞ்சித்குமார்

சமூகத்தில் நல்ல உடல் வலிமையுடன் பிறக்கும் பலர் வாழ்க்கையில் சிறு தோல்வியைக் கண்டுவிட்டாலும் உடல் சோர்ந்து, மனம் சோர்ந்து விரக்தியின் எல்லைக்கே சென்று விடுகின்றனர். ஆனால், பிறர் உதவியின்றி நடக்க முடியாத நிலையிலும் சாதிக்க வேண்டும் என்ற உத்வேகத்துடன் போராடி உடல் குறைபாட்டையும் தாண்டி வாழ்க்கையில் சாதிப்பவர்களும் உள்ளனர். அந்த வரிசையில் போராட்டத்தையே வாழ்க்கையாகக் கொண்டு சாதனை படைத்து வாழ்நாள் சாதனையாளர் விருதையும் பெற்றவர் ஜெ. ரஞ்சித்குமார்.

மதுரையைச் சேர்ந்தவரான ஜெ. ரஞ்சித், பிறக்கும்போது எவ்வித உடல் குறைபாடும் இன்றி பிறந்த நிலையில், 9 மாதக் குழந்தையாக இருந்தபோது போலியோ தாக்கியதால் இரு கால்களும் செயலிழந்தன.

இதையடுத்து பெற்றோரின் பராமரிப்பில் வளர்ந்து வந்த நிலையில், சிறு வயதிலேயே தந்தையும் இறந்துவிட்டடார். பின்னர் தாயின் ஆதரவுடன் தனது தாத்தா, பாட்டியிடம் வளர்ந்து வந்துள்ளார். மேலும் படித்து முன்னேற வேண்டும் என்ற விருப்பம் இருந்தாலும் குடும்பத்தின் ஏழ்மை காரணமாக பள்ளியிறுதிப் படிப்பைத் தாண்ட முடியவில்லை.  

மேலும் குடும்பத்தைப் பாதுகாக்க வேண்டும் என்ற இக்கட்டான சூழலில் தொலைபேசி பூத், சுற்றுலா நிறுவனம், லாட்டரி விற்பனை, லிப்ட் ஆபரேட்டர் என பல பணிகளையும் செய்துள்ளார். ஆனாலும் வாழ்க்கையில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற உத்வேகம் மட்டும் நாளுக்கு நாள் வளர்ந்துகொண்டே வந்துள்ளது. 

இதையடுத்து தனது 24 வயதில் பயிற்சியாளர் பரசுராமைச் சந்தித்ததன் மூலமாக வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்பட்டுள்ளது. உடல் குறையை ஒரு தடையாக நினைக்காமல்  குண்டு எறிதல், வட்டு எறிதல் மற்றும் ஈட்டி எறிதல் போன்ற போட்டிகளில் பயிற்சி பெற்றுக் கடினமாக முயற்சி செய்து வந்துள்ளார்.

தொடர் முயற்சியின் காரணமாக மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற ரஞ்சித், தொடர்ந்து மாநிலப் போட்டிகள் மற்றும் தேசியப் போட்டிகளிலும்  வெற்றி பெற்றுச் சாதனையாளராக மாறினார். 

1998 முதல் போட்டிகளில் பங்கேற்கத் தொடங்கிய ரஞ்சித்குமார், மாற்றுத் திறனாளிகளுக்கான தடகளப் போட்டியில் ஆசிய காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி, உலக சாம்பியன்ஷிப் போட்டிகள் உள்பட  அங்கீகரிக்கப்பட்ட சர்வதேசப் போட்டிகளில் குண்டு எறிதல், வட்டு எறிதல் மற்றும் ஈட்டி எறிதல் உள்ளிட்ட போட்டிகளில் இதுவரை  26 முறை இந்தியா சார்பில் பங்கேற்று 10 தங்கப் பதக்கங்கள், 9 வெள்ளிப் பதக்கங்கள்,  7 வெண்கலப் பதக்கங்கள் பெற்று சாதனை புரிந்துள்ளார்.

மேலும் 2002  முதல் 2014  தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று 38 தங்கப் பதக்கங்கள் பெற்றும் தொடர் தேசிய சாம்பியனாக இருந்தும் சாதனை படைத்துள்ளார்.

மேலும், தான் சாதனையாளராக இருப்பது மட்டுமின்றி தன்னைப் போன்ற பிற மாற்றுத்திறனாளிகளும் சாதனையாளர்களாக மாற வேண்டும் என்ற லட்சியத்துடன் தமிழ்நாடு பாரா ஒலிம்பிக் விளையாட்டுச் சங்கத்தை 2014 இல் தோற்றுவித்து அதன் நிறுவனராகவும் பொறுப்பு வகித்துள்ளார். இதன் மூலம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர், வீராங்கனைகளை உருவாக்கி அவர்களையும் சாதனையாளர்களாக மாற்றியுள்ளார்.

ரஞ்சித் குமார் உருவாக்கியவர்களில் முக்கியமானவர் உலக பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று தங்க மகனாகப் பாராட்டப்பட்ட மாரியப்பனும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தனது விளையாட்டு சாதனைகளுக்கான முன்னாள்  குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் சிறந்த மாற்றுத் திறனாளி விளையாட்டு வீரர் என்ற விருதையும் பெற்றார். மேலும் ஏராளமான மாற்றுத்திறனாளி வீரர்களை உருவாக்கியதால் தமிழக அரசின் சார்பில் சிறந்த விளையாட்டுப் பயிற்சியாளருக்கான விருதையும் பெற்றார்.

விளையாட்டுத் துறையில் ரஞ்சித்குமாரின் சாதனைகள் தொடர்ந்த நிலையில், அவரது சாதனைகளைப் பாராட்டி மத்திய அரசு விளையாட்டு வீரர்களுக்கு வழங்கும் மிக உயரிய விருதான தியான்சந்த் வாழ்நாள் சாதனையாளர் விருதையும் வழங்கி கௌரவித்தது. இவ்விருதை முன்னாள் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கி கௌரவித்தார்.

விளையாட்டு வீரராக சாதனையாளராக மட்டுமின்றி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மாற்றுத்திறனாளி வீரர்களுக்கான தடகள விளையாட்டு பயிற்சியாளராகவும் பணிபுரிந்து வருகிறார் ரஞ்சித். மேலும் விளையாட்டு வீரர்களுக்கு வழங்குவதுபோல, மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கும் சமமான உரிமைகள் மற்றும் உரிய ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்று போராடி பெற்றுத் தந்ததன் விளைவாக நூற்றுக்கணக்கான மாற்றுத்திறனாளி வீரர்கள் பலனடைந்து வருகின்றனர்.

தனது வாழ்க்கை குறித்து ஜெ. ரஞ்சித்குமார் கூறும்போது, உடல் ஊனத்தால் முடங்கி விடக்கூடாது, என்னைப் போன்ற மாற்றுத்திறனாளிகளுக்கு முன் உதாரணமாகத் திகழ வேண்டும் என்ற லட்சியத்தோடு கடுமையாக உழைத்தேன். எனது சாதனைகளுக்குப் பின்னால் கடும் வறுமை, சமூக அலட்சியம், புறக்கணிப்பு, அவமானம் என ஏராளமானவை உள்ளன. இவற்றையெல்லாம் தாண்டித்தான் இன்று சாதனையாளராக சமூகத்தில் நிற்கிறேன். என்னைப்போலவே சாதனையாளர்களை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் பலருக்கும் குறிப்பாக பெண்களுக்கும் பயிற்சி அளித்து வருகிறேன். வாழ்க்கையில் சாதிப்பதற்கு உடல் ஊனம் ஒரு தடையல்ல என்பதற்கான அடையாளமாக இருக்கிறேன். இரண்டு குடியரசுத் தலைவர்களிடம் விருது பெற்றது எனது வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்வுகள். மாற்றுத்திறனாளியாக இருந்தாலும் நம் நாட்டு தேசிய கீதம் ஒலிக்க தேசியக் கொடி ஏற்றியபோது பிறப்பின் அர்த்தத்தை உணர்ந்தேன் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com