ஹோட்டல் நடத்தி சகோதரிகளின் திருமணத்தை நடத்தி வைத்த மாற்றுத்திறனாளி

புதுக்கோட்டையில் சிறுவயதிலேயே இளம்பிள்ளை வாதத்தால் இரு கால்களும் செயலிழந்த மாற்றுத்திறனாளி, ஹோட்டல் நடத்தி மூன்று சகோதரிகளின் திருமணத்தை நடத்தி வைத்துள்ளார். 
அஸ்ரப் அலி
அஸ்ரப் அலி

புதுக்கோட்டையில் சிறுவயதிலேயே இளம்பிள்ளை வாதத்தால் இரு கால்களும் செயலிழந்த மாற்றுத்திறனாளி, கொஞ்சமும் அசராமல் பள்ளி, கல்லூரிப் படிப்புகளை முடித்து சொந்தமாக ஹோட்டல் நடத்தி தனது மூன்று சகோதரிகளுக்கும் திருமணமும் செய்து வைத்திருக்கிறார்.

புதுக்கோட்டை நகரம் தட்சிணாமூர்த்தி மார்க்கெட் பகுதியைச் சேர்ந்தவர் அஸ்ரப் அலி (வயது 44). தனது 3 வயதிலேயே இளம்பிள்ளை வாதத்தால் பாதிக்கப்பட்டு இரு கால்களும் செயலிழந்தவர். தற்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள தெருவில் ஆச்சி மெஸ் என்ற பெயரில் சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாக சைவ உணவகம் நடத்தி வருகிறார்.

முளைக்கீரை, முட்டைகோஸ் பொரியல், வெண்டைக்காய்- மாங்காய் கூட்டு, சோறு, சாம்பார், சேப்பங்கிழங்கு புளிக்குழம்பு, ரசம், மோர், அப்பளம், ஊறுகாய் ஆகியவற்றுடன் ரூ. 70-க்கு குறைசொல்ல முடியாத தரமான வீட்டுச் சாப்பாடு இங்கு கிடைக்கிறது. 

உட்கார்ந்த இடத்திலேயே விறுவிறுப்பாக சாப்பாட்டை பார்சல் செய்து கொண்டிருந்த அஸ்ரப் அலி, தனது உணவகத் தொழில் குறித்து கூறியதாவது:

அப்பா அப்துல்முகமது ஜான், அம்மா நூர்ஜஹான், ஒரு மூத்த சகோதரி, இரு இளைய சகோதரிகள். அப்பா நெடுஞ்சாலைத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்று, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.

எனது மூன்று வயதில் இளம்பிள்ளைவாதம் தாக்கியது. அப்போதெல்லாம் தடுப்பூசி குறித்து பெரிய விழிப்புணர்வு இல்லை. அதனால் போடவில்லை. கீரனூர் அரசுப்பள்ளியில் படித்தேன். புதுக்கோட்டைக்கு அப்பா மாறுதலாகி வந்த பிறகு, இங்குள்ள மன்னர் கல்லூரியில் இளநிலை வணிகவியல் (பிகாம்) படித்து முடித்தேன்.  

மன்னர் கல்லூரியில் படிக்கும்போதே, கல்லூரிக்கு அருகே இருந்த உணவகத்தில் உணவு சாப்பிடுவேன். அப்போதே உணவுத் தொழில் மீது ஆர்வம் ஏற்பட்டது. கல்லூரிப் படிப்பை முடித்தவுடன் அதே பகுதியிலேயே ஓர் உணவகத்தைத் தொடங்கினோம். அப்போது அப்பா பணியில் இருந்து ஓய்வு பெற்றிருந்தார்.

சுமார் 8 ஆண்டுகள் மன்னர் கல்லூரி அருகேயே உணவகம். அதன்பிறகு, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே தற்போதுள்ள ஆச்சி மெஸ். இங்கே தொடங்கியும் 10 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டது.

எனக்குத் திருமணம் அமையவில்லை. என்னையும் 3 சகோதரிகளையும் அப்பா படிக்க வைத்துவிட்டார். அதன்பிறகு இந்த ஹோட்டல் தொழிலை வைத்து நான்தான் மூவருக்கும் திருமணம் செய்து வைத்தேன். 3 ஆண்டுகளுக்கு முன்பு அப்பா இறந்துவிட்டார். அம்மாவுடன் இருக்கிறேன்.

மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில் இருந்து 8 ஆண்டுகளுக்கு முன்பு, பக்க சக்கரங்கள் பொருத்தப்பட்ட இரு சக்கர வாகனம் வழங்கினார்கள். எனது ஹோட்டல் தொழிலுக்கு அது மிகவும் உதவியாக இருக்கிறது.

அதிகாலையில் எழுந்து அந்த வாகனத்தில்தான் உழவர் சந்தை சென்று, உணவு சமைக்கத் தேவையான காய்கறிகள், மளிகைப் பொருட்களை வாங்கி வருவேன். ஒரு சமையல் மாஸ்டர், ஓர் உதவியாளர், பரிமாறுவோர் இருவர் என நான்கு பேர் என்னிடம் வேலை செய்கிறார்கள்.

கால்கள் பாதிக்கப்பட்ட பிறகு இப்படியொரு வாழ்க்கை அமையும் என நினைக்கவில்லை. நானாக ஏற்படுத்திக் கொண்ட வாழ்க்கை இது. என்னுடன் 4 பேரின் குடும்பங்களும் வாழ்கின்றன என்பதைப் பெருமையாகப் பார்க்கிறேன்.

இதுவரை அரசிடமிருந்து எந்தக் கடனுதவியும் வாங்கவும் இல்லை, எதிர்பார்க்கவுமில்லை. 

தினமும் 100 பேர் எனது கடையில் சாப்பிடுகிறார்கள். வயிற்றுக்கு எந்தத் தொந்தரவும் செய்யக்கூடாது, அதுதான் ஹோட்டல் தொழிலின் முதன்மையான அம்சம். அந்தளவுக்கு தரமாக சாப்பாடு தயாரித்துப் பரிமாறுகிறோம். சிறிய கடைதான். அவ்வப்போது மொத்த ஆர்டர்களும் வரும். இதுவே போதும்' என தன்னிறைவுடன் கூறுகிறார் அஸ்ரப் அலி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com