அறிவியல் ஆயிரம்: நிலவின் வரைபடம் தயாரித்த ஜோஹன்னஸ் ஹெவிலியஸ்

ஜோஹன்னஸ் ஹெவிலியஸ் சுமார் 410 ஆண்டுகளுக்கு முன்னர் போலந்தில் வாழ்ந்த ஒரு வானவியலாளர் மற்றும் வானவியலுக்கான கருவிகள் செய்தவர்.
ஜோஹன்னஸ் ஹெவிலியஸ்
ஜோஹன்னஸ் ஹெவிலியஸ்

ஜோஹன்னஸ் ஹெவிலியஸ்(Johannes Hevelius) சுமார் 410 ஆண்டுகளுக்கு முன்னர் போலந்தில் வாழ்ந்த ஒரு வானவியலாளர் மற்றும் வானவியலுக்கான கருவிகள் செய்தவர். சந்திரனின் முதல் அட்லஸை உருவாக்கித் தொகுத்த வானியலாளர். அது செலினோகிராஃபியா ( Selenographia) என்ற பெயரில் 1647-ம் ஆண்டு வெளியிடப்பட்டது. அதன் மேற்பரப்பின் ஆரம்பகால விரிவான வரைபடங்களில் ஒன்றையும் அதன் பல அம்சங்களுக்கான பெயர்களையும் கொண்டுள்ளது. சந்திரனில் உள்ள  மலைகளுக்கான அவரது சூட்டிய பெயர்களில் இன்னும் சில (எ.கா. ஆல்ப்ஸ்) இன்னும் பயன்பாட்டில் உள்ளன.

மேலும், அவருக்கு மரியாதை செய்யும் பொருட்டு, அவரின் நினைவாக சந்திரனில் உள்ள பள்ளத்துக்கு ஹெவிலியஸ் பள்ளம் (Hevelius crater) என்றும் பெயரிடப்பட்டது. ஒரு வானியலாளராக, ஜோஹன்னஸ் ஹெவிலியஸ் "சந்திர நிலப்பரப்பின் நிறுவனர்" என்ற நற்பெயரைப் பெற்றார். மேலும், பத்து புதிய விண்மீன் தொகுதிகளைக் கண்டுபிடித்து, அவைகளுக்கும் அவரே பெயர் சூட்டினார். அவற்றில் ஏழு விண்மீன் தொகுதிகளின் பெயர்கள் இன்றும்கூட வானியலாளர்களால் பயன்படுத்தப்படுகின்றன.

பெயரும் இளமை வாழ்க்கையும்

ஜோஹன்னஸ் ஹெவிலியஸின் தந்தை ஆபிரகாம் ஹோவெல்கே (1576-1649). அவரது தாயார் கோர்டெலியா ஹெக்கர் (1576-1655). அவர்கள் ஜெர்மன் மொழி பேசும் லூதரன்கள். போஹேமியன் வம்சாவளியைச் சேர்ந்த பணக்கார பீர் பானம் காய்ச்சும் வணிகர்கள். ஆபிரகாம் ஓர் லாபகரமான மதுபான ஆலையை வைத்திருந்தார் மற்றும் அவர் பல வீடுகளின் உரிமையாளராகவும் இருந்தார். ஜோஹன்னஸ் ஆபிரகாமின் பணக்கார குடும்பத்தில், கோண்டெக்ஸில்,1611ம் ஆண்டு, ஜனவரி மாதம் 28ம் நாள் பிறந்தார். அவருக்கு மூன்று சகோதரர்கள் மற்றும் ஆறு சகோதரிகள் இருந்தனர். உயிர் பிழைத்த நான்கு சகோதரர்களில் ஜோஹன்னஸ் ஹெவிலியஸ் ஒருவர். டான்சிக் நகரம் போலந்தின் கட்டுப்பாட்டில் இருந்த போதிலும், அந்தக் குடும்பம் ஜெர்மன் மற்றும் செக் இனத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் ஜெர்மன் மொழி பேசுபவர்களாக இருந்தனர். அந்த பகுதியில் போலிஷ் மொழி பேசப்பட்டது. சிறுவனாக இருந்தபோது, ​​ஹெவிலியஸ் கோண்டெக்ஸுக்கு அனுப்பப்பட்டார், அங்கு அவர் போலந்து மொழியைப் படித்தார். சிறுவயதில்கூட அவருக்கு ஜெர்மன் மற்றும் போலந்து  மொழி பற்றிய அறிவும் இருந்தது.

வானியல் மேல் காதல்

ஜோஹன்னஸுக்கு ஏழு வயதாக இருந்தபோது, 1618ம் ஆண்டு ​​டான்சிக்கில் உள்ள ஜிம்னாசியத்திற்கு அவரது  தந்தை ஜோஹன்னஸை படிக்க அனுப்பினார். அங்கு ஆறு அவர் ஆண்டுகள் படித்தார். அங்கு போர் நடந்ததால், முப்பது வருடப் போரின் பாதிப்பு இருந்தது. ஆனால், டான்சிக்கைச் சுற்றியுள்ள பகுதிகள் பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை. இருப்பினும், 1624 ஆம் ஆண்டு ஏற்பட்ட பிரச்சனைகளால் ஜிம்னாசியம் தற்காலிகமாக மூடப்பட்டது மற்றும் ஜோஹன்னஸின் பெற்றோர் அவரை ப்ரோம்பெர்க் ஊருக்கு அருகில் உள்ள சிறிய கிராமமான கோண்டெக்ஸில் உள்ள பள்ளிக்கு அனுப்பினர். இது போலந்து மொழி பேசும் பகுதி மற்றும் அவர் போலந்து மொழியில் சரளமாக பேசுவார் என்ற எண்ணம் இருந்தது.

1627ம் ஆண்டு, ஜோஹன்னஸ் ஹெவிலியஸ் டான்சிக்கில் உள்ள ஜிம்னாசியத்திற்குத் திரும்பினார். அங்கு அவர் கணிதம் படிக்க விரும்பினார். அங்குள்ள கணிதத் தலைப்புகளால் மிகவும்  ஈர்க்கப்பட்டார் ஜோஹன்னஸ். இவரது கணித ஆசிரியர் பெயர் பீட்டர் க்ரூகர். மேலும் ஜோஹன்னஸ் ஹெவிலியஸ் கணிதம் படிக்க  உத்வேகம் அளித்தவர் கணித ஆசிரியர், பீட்டர் க்ரூகர்தான். மேலும்,  இவர் வானியலிலும் ஆர்வம் கொண்டிருந்தார். இந்த ஆர்வம் இளம் ஹெவிலியஸுக்கும் தொற்றிக்கொண்டது. ஜிம்னாசியத்தில் நியாயமான முறையில் கற்பிக்கப்படும் பாடத்திற்கும் அப்பால், வானவியல் தொடர்பான  ஆய்வுகளை ஹெவிலியஸுக்கு  எடுக்க விரும்பிய, க்ரூகர் அவருக்கு தனிப்பட்ட பாடம் எடுத்தார். அதில் அவர் அந்தக் காலத்தின் முழு அளவிலான வானியல் கற்றலை முழுமையாகக்  கற்றுக்கொண்டார். க்ரூகர் ஹெவிலியஸுக்கு கோட்பாட்டு வானியல் கற்பித்தது மட்டுமல்லாமல், மரத்திலிருந்தும் உலோகத்திலிருந்தும் வானியல் கருவிகளை உருவாக்கவும் கற்றுக் கொடுத்தார்.

வானியலாளர்கள் சந்திப்பு

ஹெவிலியஸ் 1630-ம் ஆண்டு லைடன் பல்கலைக்கழகத்தில் நீதியியல் படிக்கச் சென்றார்; பயணத்தின்போது அவர் ஒரு சூரிய கிரகணத்தை அவதானித்தார், அதை அவர் பின்னர் ராயல் சொசைட்டியின் தத்துவ பரிவர்த்தனைகளில் வெளியிட்டார். சட்டப் படிப்பைத் தவிர, 1631 இல் லண்டனுக்குச் செல்வதற்கு முன், அவர் கணிதம் மற்றும் அதன் மெக்கானிக்ஸ் மற்றும் ஒளியியலுக்கான பயன்பாடுகளை மேலும் கற்றுக் கொண்டார். 1632 முதல் 1643 வரை ஹெவிலியஸ், சுவிட்சர்லாந்து, லண்டன் மற்றும் பாரிஸ் ஆகிய இடங்களுக்குச் சென்றார்,  அங்கு அவர் பல்வேறு வானியலாளர்களான பியர் காசெண்டி(1592-1655), மரின் மெர்சென்னே மற்றும் அதானசியஸ் கிர்ச்சர் ஆகியோருடன் தொடர்பு கொண்டார். 1634 ஆம் ஆண்டில் ஹெவிலியஸ் அவர் தனது தனது சொந்த ஊரில் குடியேறினார். இந்தக் காலகட்டத்திலிருந்து க்ரூகருக்கு அவர் எழுதிய கடிதங்கள் எஞ்சியுள்ளன. இரண்டு வருடங்கள் அவர் தனது தந்தையின் மதுபான ஆலையில் பணிபுரிந்தார். அதே நேரத்தில் டான்சிக்கின் அரசியலமைப்பை பொது சேவையில் நுழையும் நோக்கத்துடன் படித்தார். அவரது  குடும்பத்தின் மதுபானம் தயாரிக்கும் தொழிலில் பணிபுரியும்போது, ஹெவிலியஸ் தனது சட்டப் படிப்பை முடிக்க கோண்டெக்ஸ் திரும்பினார்.

திருமணம்

பின்னர் 1635ம் ஆண்டு, மார்ச் மாதம் 21ம் நாள், ஹெவிலியஸ் டான்சிக்கின் ஒரு பணக்கார குடும்பத்தில் பிறந்த அவரின் பக்கத்து வீட்டுக்காரரான கத்தரினா ரெபெஷ்கேவை மணந்தார். கத்தரினா அவரைவிட  இரண்டு வயது குறைவானவர். அடுத்த ஆண்டு, ஹெவிலியஸ் பீர் காய்ச்சும் குழுவில் உறுப்பினரானார்; அவர் அக்குழுவை 1643 முதல் வழிநடத்தினார். ஹெவிலியஸ் புகழ்பெற்ற "ஜோபென் பீர்" காய்ச்சினார். அந்த பீரின் பெயரிலேயே அங்குள்ள தெருவுக்கு அதன் பெயரை ஜோபெங்காஸ்/ ஜோபெஜ்ஸ்கா" என்று அழைத்தார். பின்னர் 1945 ஆம் ஆண்டுக்குப் பிறகு, செயின்ட் மேரி தேவாலயம் அமைந்துள்ள பிவ்னா தெருவுக்கு  "பீர் ஸ்ட்ரீட்" என மறுபெயரிடப்பட்டது.

வானியல் கண்காணிப்பகம் நிறுவுதல்

ஹெவிலியஸ் ஜூன் 1, 1639 சூரிய கிரகணத்தைக் கண்டார்; இந்த ஆண்டு முதல் அவர் முறையான வானியல் அவதானிப்புகளைத் தொடங்கினார் மற்றும் அவரது குருவான க்ரூகரின் மரணத்தையும் சந்தித்தார். இது அவரது வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக இருந்தது. 1639 ஆம் ஆண்டிலிருந்து வானியலில் தன்னை முழுமையாக அர்ப்பணிக்கத் தொடங்கினார். 1649 இல் அவரது தந்தையின் மரணம், மதுபானம் தயாரிக்கும் ஆலையின் அன்றாட ஓட்டத்திற்கான அவரது நேரத்தை மேலும் கோரியது என்றாலும், அது குறுகிய காலத்திற்கு உலகின் முன்னணி வானியல் ஆய்வகமாக மாறியதை உருவாக்க நிதியை அவருக்கு வழங்கியது. அவரது வீட்டில் ஒரு வானியல் கண்காணிப்பு நிலையத்தைக் கட்டுவதற்காக தனது குடும்பச் செல்வத்தை நிறையவே செலவழித்தார்.  அவரது பணிக்கு போலந்து மன்னர் மூன்றாம்  ஜான் சோபிஸ்கி,  தாராளமான ஓய்வூதியம் மூலம் நிதியுதவி செய்தார். 

1670களின் முற்பகுதியில், ஹெவிலியஸ், ஜான் ஃப்ளாம்ஸ்டீட் (1646-1719) மற்றும் பின்னர் ராபர்ட் ஹூக் (1635-1703) ஆகியோருடன் ஒரு சர்ச்சையில் ஈர்க்கப்பட்டார்.  அவர் தொலைநோக்கி மற்றும் மைக்ரோமீட்டர்களைப் பயன்படுத்தி விண்மீன்களின் நிலைகளை துல்லியமாக தீர்மானிக்க முடியும் என வாதிட்டார். ராயல் சொசைட்டியால் நியமிக்கப்பட்ட இளம் எட்மண்ட் ஹாலி (1656-1742) க்டான்ஸ்கில் ஹெவிலியஸுக்குச் சென்றபோது 1679 இல் விவாதம் சமநிலைக்கு வந்தது. இங்கிலாந்தில் இருந்து எடுத்துச் சென்ற அதிநவீன மைக்ரோமெட்ரிக் தொலைநோக்கி மூலம் ஹெவிலியஸின் நிலைப்பாடு துல்லியமானது என்பதை விஞ்ஞானி ஹாலி ராயல் சொசைட்டிக்கு உறுதிப்படுத்தினார்.

அவர் தனது 76வது பிறந்தநாளான ஜனவரி 28, 1687 அன்று க்டான்ஸ்கில் இறந்தார்.

ஹெவிலியஸின் விண்மீன் தொகுதிகளும், விண்மீன்கள் பட்டியலும்

வானில் தெரியும் கொஞ்சம் மங்கலான ஏழாவது பிரகாசம் அளவுள்ள விண்மீன்களைக் காணக்கூடிய அளவிற்கு ஹெவிலியஸுக்கு விதிவிலக்கான கூர்மையான பார்வை இருந்ததாகக் கூறப்படுகிறது. டைகோ ப்ராஹே (Tycho Brahe) வான்வெளி பொருள்களை துல்லியமாக மதிப்பிட்டவர். அவரின் வழிகாட்டலைப் பின்பற்றி, ஹெவிலியஸ் வானவியலின் மிகப் பெரிய அளவீட்டுக் கருவிகளையும்கூட தனியாகவே  உருவாக்கினார். மேலும், டைகோ ப்ராஹேவை விட துல்லியமாக, ஹெவிலியஸ் விண்மீன்களைப் பார்த்து அறிந்தார். அவரது வழக்கமான அடிப்படையில் 1 நிமிட வளைவு வரை அளவிடப்பட்ட அவரது நேரிடையான கண்பார்வை மூலம்  விண்மீன்களின் நிலைகளின் பிரகாசத்தை மற்றும் துல்லியத்தை அவரால் மேம்படுத்த முடிந்தது என்பதுதான் மிகவும் சிறப்பான அம்சமாகும்.

இரண்டாவது மனைவி எலிசபெத்தாவின் உதவி

1663 இல், ஹெவிலியஸின்  மனைவி கத்தரினா இறந்தார். எனவே, ஹெவிலியஸ் அடுத்த ஆண்டு 1664ம் ஆண்டு அவர் முப்பத்தாறு வயதிற்குள் கேத்தரினாவின் தங்கையான கேத்தரீனா எலிசபெத்தா கூப்மனை மணந்தார். அவர்களின் மூன்று மகள்களும் நீண்டகாலம் வாழ்ந்தனர். எலிசபெத்தா ஒரு பணக்கார வணிகரின் மகளாக இருந்தாலும், வழக்கத்திற்கு மாறாக நன்கு படித்த அவர், அவரது கணவர் ஹெவிலியஸின் கண்காணிப்பு இயக்கத்தில் கணிசமான பங்கை செலுத்தினார். அவருக்கு மிகவும் உதவியாக அவரது உதவியாளராக இருந்து கண்காணிப்பகத்தை நன்கு கவனித்துக் கொண்டார். எலிசபெத்தா தனது கணவரின் கண்காணிப்பகத்தில் மிகவும் உதவியாகவே இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர், அங்கு ஹெவிலியஸின் கண்காணிப்பகத்திற்கு வருகை தரும் பல வானியலாளர்களுக்கு தொகுப்பாளினியாகவும் செயல்பட்டார். ஹாலி ஒருவேளை மிகவும் பிரபலமானவர், மேலும், அவரது கணவரின் மரணத்திற்குப் பிறகு எலிசபெத்தா வெளியிடப்படாத பல எழுத்துக்களைத் திருத்தி வெளியிட்டார்.

அவரது இரண்டாவது மனைவி எலிசபெத்தாவின் உதவியுடன்தான் இதுவரை யாருமே தயாரித்திராத துல்லியமான விண்மீன்களின் பட்டியலை ஹெவிலியஸ்  தொகுத்தார். அந்த காலத்திலேயே சுமார் 380 ஆண்டுகளுக்கு முன்னரே, வெறும் கண்ணால் பார்த்து, விண்மீன்களை கண்டறிந்து 1650, விண்மீன்களைப் பட்டியலிட்டு உள்ளார் என்றால் வியப்பாகத் தானே இருக்கிறது. 

தீயின் கங்குகளில் கண்காணிப்பு அறையும், ஹெவிலியஸின் எழுத்துப் பிரதிகளும்

1679 ஆம் ஆண்டில் செப்டம்பர் 26 அன்று, ஹெவிலியஸ் வீடும் கண்காணிப்பு அறையும் தீயில் எரிந்து அழிந்து போனது.  அவரது உழைப்பின் உன்னதமான வானியல் அட்லஸ், அவரது வாழ்க்கையின் உழைப்பும் நெருப்புக்கு இரையானது. இறுதியாக அவரின் கையெழுத்துப் பிரதிகள் எப்படியோ தப்பித்துக் கொண்டன. எனவே, 1690-இல் ஹெவிலியஸ் மனைவி எலிசபெத்தாவால், அவரது எழுத்துக்கள் திருத்தப்பட்டு மீண்டும் வெளியிடப்பட்டது.

ஹெவிலியஸின் வாழ்க்கை பெரும் சோகத்துடனும் பெரும் அதிர்ஷ்டத்துடனும் வாசிக்கப்படுகிறது.

 • அவர் தனது விண்மீன் அட்லஸை வெளியிடுவதற்கு முன்பு, அவரது உதவியாளர் ஒருவரால் வேண்டுமென்றே ஏற்பட்ட தீ, விபத்தில், கண்காணிப்பகம், கருவிகள் மற்றும் பெரும்பாலான புத்தகங்கள் மற்றும் தரவுகளை இழந்தார். 
 • அதிர்ஷ்டவசமாக, சந்திரன் மற்றும் விண்மீன் அட்லஸிற்கான கையெழுத்துப் பிரதி மட்டும் எப்படியோ காப்பாற்றப்பட்டது.
 • பிரான்சின் மன்னர் பதினான்காம் லூயிஸ் மற்றும் போலந்தின் மன்னர் மூன்றாம் ஜான் சோபிஸ்கி ஆகியோர் புதிய கண்காணிப்பு நிலையத்தை கட்ட நிதியளித்தனர். சோபிஸ்கியின் ஆதரவிற்காக, ஹெவிலியஸ் 1684 இல் வானில் உள்ள ஒரு விண்மீன் தொகுதிக்கு அவரின் பெயரைச் சூட்டி "ஸ்கூட்டம்" விண்மீன் தொகுப்பை அறிமுகப்படுத்தினார்.
 • ஹெவிலியஸ் தனது தரவை மீண்டும் மறுகட்டமைக்கத் தொடங்கினார். அவர் ஸ்கூட்டம் கண்டுபிடித்த மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு 1687ம் ஆண்டு ஜனவரி 28ம் நாள் இறந்தார். அப்போது அவரது அட்லஸ் பாதி மட்டுமே அச்சிடப்பட்டிருந்தது.
 • ஹெவிலியஸ் அவரது சமகாலத்தவர்களால் கௌரவிக்கப்பட்டார்.
 • ஹெவிலியஸ் சூரியனின் வழியே புதனின் பயணம்/இடை நகர்வு  மற்றும் புதன் பற்றிய தகவல்களை வெளியிட்டார். சனிக்கோள்  மற்றும் அதன் நிலவுகளை வரைபடமாக வரைந்து காண்பித்தார். நமது சந்திரனின் தகவமைப்புக்ளையும் அதன் மலைகளையும், பள்ளங்களையும் பல அம்சங்களையும்  விவரித்தார்; அவைகளுக்கும் பெயரிட்டார். மேலும்  ஹெவிலியஸ் தனது கண்களால், விண்மீன்களைக் கணித்து, அவற்றை அவரது 1690 விண்மீன் அட்டவணையாக வெளியிட்டார். மேலும், அந்த  அட்லஸில் வானத்தில் வலம் வரும் பத்து புதிய விண்மீன் தொகுதிகளையும் சேர்த்தார்.

தற்போதுள்ள ஏழு ஹெவிலியஸ் விண்மீன்கள்

 1. கேன்ஸ் வெனாட்டிசி (Canes Venatici) என்ற விண்மீன் தொகுதி- வேட்டை நாய்கள்,
 2. லியோ மைனர் விண்மீன் தொகுதி -சிங்கக் குட்டி
 3. லாசெர்டா(Lacerta) விண்மீன் தொகுதி- பல்லி
 4. வல்பெகுலா (Vulpecula) விண்மீன் தொகுதி, நரியும் வாத்தும்
 5. செக்ஸ்டன்ஸ் (Sextans),  முதலில் யுரேனியாவின் செக்ஸ்டன்ட்(Sextans Uraniae) விண்மீன் தொகுதி. ஹெவிலியஸ் கண்டுபிடித்த மற்றும் நட்சத்திரங்களை வரைபடமாக்கப் பயன்படுத்தப்படும் பிரபலமான கருவிகளில் ஒன்றாகும், இது வானியல் அருங்காட்சியகமான யுரேனேவின் நினைவாகவும்  பெயரிடப்பட்டது.
 6. ஸ்கூட்டம்(Scutum) விண்மீன் தொகுதி, ஒரு காலத்தில் Scutum Sobiescianum, Sobieski's Shield என்று அழைக்கப்பட்டது, ஹெவிலியஸுக்கு தாராளமாக நிதியுதவி செய்த போலந்தின் மன்னரான மூன்றாம் ஜான் சோபிஸ்கியின் நினைவாக இந்த பெயரை சூட்டினார். .
 7. பின்னர் லின்க்ஸ் (Lynx), லின்க்ஸ் என்பது ஹெவிலியஸின் கூரிய பார்வையின் நினைவாக பெயரிடப்பட்டது.
 8. வானியல் சமூகத்தால் கைவிடப்பட்ட மூன்று விண்மீன்கள் செர்பரஸ், மோன்ஸ் மேனலஸ் மற்றும் முக்கோணம் மைனஸ் ஆகும்.
 9. மேலும், ஒரு விண்மீன் மஸ்கா பொரியாலிஸ், ஹெவிலியஸால் மட்டுமே மறுபெயரிடப்பட்டது.
 10.  சில குறிப்புகள் இந்த ஹெவிலியஸின் பதினொன்றாவது விண்மீன் கூட்டத்தைக் கருதுகின்றன.
 11. ப்ரிகாம் யங் யுனிவர்சிட்டி பிரஸ் (1971) வெளியிட்ட ஜோஹன்னஸ் ஹெவெலியஸ் மற்றும் அவரது விண்மீன்களின் பட்டியலில் இருந்து ஹெவிலியஸைப் பற்றி நாம்  அறியலாம். ஹெவிலியஸின் கூடுதல் தகவல்கள் என்பது, வௌலா சரிடாகிஸ், ஜிம் ஃபுச்ஸ், ரிச்சர்ட் டிபன்-ஸ்மித் மற்றும் விக்கிபீடியா ஆகியோரால் கொடுக்கப்பட்டுள்ளன.
 12. யுனைடெட் ஸ்டேட்ஸ் கடற்படை கண்காணிப்பகம் ஹெவிலியஸின் கருவிகளின் படங்களின் தொகுப்பைக் கொண்டுள்ளது.

செலினோகிராஃபியா & கண்காணிப்பகம்

1644 ஆம் ஆண்டு நவம்பர் 22 ஆம் தேதி புதனின் நகர்வுகளை ஒவ்வொரு கட்டமாக  கவனிப்பதில் ஹெவிலியஸ் வெற்றி பெற்றார். அவரது சூரிய அவதானிப்புகள் சிறப்பானவை. அவரது வெளியீடுகளில் மிகவும் பாராட்டப்பட்டது, அவரே முதன்முதலில் கணித்த சந்திரனின் மேற்பரப்பு தகவமைப்பு. அதன் பெயர்: 1647ல் "செலினோகிராஃபியா".

செலினோகிராஃபியா என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை  கோபர்நிக்கஸுக்குப் பிறகு மிகவும் புதுமையான போலந்து வானியலாளர் ஹெவிளியஸாளல் உருவாக்கப்பட்டது. செலினோகிராஃபியா என்பது சந்திர வரைபடங்கள் மற்றும் வரைபடங்களின் முதல் புத்தகம், நிலவின் பல்வேறு கட்டங்களை விரிவாக உள்ளடக்கியது. சந்திரனின் மேற்பரப்பில் மனிதர்கள் காலடி எடுத்து வைப்பதற்கு 300 ஆண்டுகளுக்கு முன்பு, ஹெவிலியஸ் தனது தொலைநோக்கி மூலம் பார்க்கக்கூடிய ஒவ்வொரு பள்ளம், சரிவு மற்றும் பள்ளத்தாக்குகளை ஆவணப்படுத்தினார். அவர் இந்த அவதானிப்புகளையும், மற்றவற்றையும் ஒரு விரிவான நட்சத்திர அட்டவணைக்காக, வீட்டில் தயாரிக்கப்பட்ட கூரை கண்காணிப்பகத்திலிருந்து தனது சொந்த உபகரணங்களைப் பயன்படுத்தி உருவாக்கினார் என்பது மிகவும் பிரமிப்பான விஷயமாகும். ஹெவிலியஸின் முதல் கண்காணிப்பகம் என்பது வீட்டின் மேல் உள்ள ஒரு சிறிய மேல் அறை தான். அது 1644-இல் அவரது வீட்டில் ஒரு சிறிய கூரை கோபுரத்தைச் சேர்த்தார். பின்னர் இரண்டு கண்காணிப்பு வீடுகளுடன் ஒரு தளத்தை அமைத்தார், அதில் ஒன்றை சுழற்ற முடியும். 

சூரியப்புள்ளிகள் மற்றும் வால்மீன்கள்

பின்னர் 1668 "கோமெட்டோகிராஃபியா" (வால்மீன்கள் பற்றியது) மற்றும் 1679 ஆம் ஆண்டு "மச்சினே கோலிஸ்டிஸ்" ஆகியவற்றின் பிற்சேர்க்கைகளாக வெளியிடப்பட்டன. ஹெவிலியஸ் தனது சூரியப் புள்ளிகளை 1642-1645 வரை அவதானித்து சூரிய சுழற்சி காலத்தை தனது முன்னோடிகளை விட மிகச் சிறந்த துல்லியமாக தீர்மானிக்கப் பயன்படுத்தினார். சூரிய புள்ளிகளைச் சுற்றியுள்ள பிரகாசமான பகுதிகளுக்கு "ஃபாகுலே" என்ற பெயரையும் அவர் உருவாக்கினார். இதுவும்கூட  இன்றுவரை வாழ்கிறது. 1642-1679 காலகட்டத்தை உள்ளடக்கிய அவரது சூரிய புள்ளி அவதானிப்புகள், சூரிய செயல்பாட்டின் "மவுண்டர் மினிமம்"(Maunder Minimum) இன் முதல் பகுதியையும், அதற்கு முந்தைய காலப்பகுதியையும் உள்ளடக்கியதால் குறிப்பாக முக்கியத்துவம் வாய்ந்தவை ஆகும்.

லின்க்ஸ் விண்மீன் கூட்டம்

லின்க்ஸ் என்பது 1680களில் போலந்து வானியலாளர் ஜோஹன்னஸ் ஹெவெலியஸால் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு நவீன விண்மீன்களில் ஒன்றாகும். ஹெவிலியஸ் யார், லின்க்ஸ் என்ற பெயர் எப்படி வந்தது என்பது ஒரு சுவாரஸ்யமான கதை.

லின்க்ஸின் கண்கள்

வானியல் குறிப்பிடத்தக்க மனிதர்களால் நிரம்பியுள்ளது: கோட்பாட்டாளர்கள், நட்சத்திரக்காரர்கள், வானியற்பியல் வல்லுநர்கள், அண்டவியலாளர்கள், விண்வெளி வீரர்கள் மற்றும் பலர். ஹெவிலியஸ் கடைசியாக நேரடியாக வெறும் கண்ணால் பார்க்கக்கூடிய பார்வையாளர்களில் ஒருவர். தொலைநோக்கிகளுக்கு மரியாதை கிடைத்தபோது தொலைநோக்கி இல்லாமல் விண்மீன்களை வரைபடமாக்க அவர் தேர்வு செய்தார். ஹெவிலியஸ் இறப்பதற்கு ஏழு ஆண்டுகளுக்கு முன்புதான் தொலைநோக்கியால் விண்மீன்களை அவரைப் போல துல்லியமாக வரைபடமாக்க முடிந்தது. உண்மையில், அவர் தனது கூர்மையான பார்வைக்காக உலகப் புகழ்பெற்றவர் மற்றும் "ஒரு லின்க்ஸின் கண்கள்" கொண்டவர் என்று விவரிக்கப்பட்டார்.

புதன் இடை நகர்வு, சூரியப்புள்ளிகள் மற்றும் சனிக்கோளின் நிலவுகள் 

ஹெவிலியஸ் 1611 இல் பிறந்தார், அதே ஆண்டு கலிலியோ வியாழனின் நிலவுகள் பற்றிய தனது தொலைநோக்கி பற்றிய அவதானிப்புகளை ஜேசுட் கல்லூரியோ ரோமானோவிடம் வழங்கினார். அகாடமியா டீ லின்சியில் கற்பிக்கப்பட்டார். கலிலியோ, ஹெவிலியஸ் க்ரூகர், ஃபிளாம்ஸ்டீட் மற்றும் ஹாலி ஆகியோருடன் சமகாலத்தவராக இருந்தார். அவர்கள் அனைவரும் அவரை ஒரு மாஸ்டர் என்று கருதினர். அவர் சூரியனின் குறுக்காக புதன் செல்லும் பாதையை, புதன் கோள் இடை நகர்வு என்ற பெயரில் வரைபடமாக்கினார். மேலும், புதன் மற்றும் சூரியனின் பல பண்புகளையும் விவரித்தார். சூரியப் புள்ளிகளைக் கண்டறிந்து அதனை வரைபடமாக்குவதன் மூலம் சூரியனின் சுழற்சி காலத்தையும்  துல்லியமாக கணக்கிட்டார். ஹெவிலியஸ்  சனி மற்றும் அதன் நிலவுகளை வரைபடமாக்கினார்.

வால்மீன் கண்டுபிடிப்பும் அதன் நகர்வும்

ஹெவிலியஸ் மேலும் நான்கு வால்மீன்களைக் கண்டுபிடித்தார். அவற்றின் சுற்றுப்பாதையைக் கணக்கிட்டு வால்மீன்கள் பரவளைய சுற்றுப்பாதையைப் பின்பற்றுகின்றன என்றும் கணக்கிட்டார். நிலவின் மேற்பரப்பின் பக்கத்தை பூமியிலிருந்து பார்ப்பதுபோல வரைபடமாக்கினார். உண்மையில், சந்திரனில் உள்ள பெரும்பாலான முக்கிய அம்சங்களான மலைகள் மற்றும் பள்ளங்களுக்கு ஹெவிலியஸ்  பெயரிட்டுள்ளார். இருப்பினும் சில பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன. நிலவின் மேற்பரப்பின் 'மென்மையான', இருண்ட தாழ்நில - கரடுமுரடான, பிரகாசமான மேட்டு நிலப்பரப்பு இருப்பதை அவர் கண்டுபிடித்தார். சந்திரனில் உள்ள மலைகளின் உயரங்களைத் துல்லியமாக அளந்தார். அவைகளின்  தாழ்நிலங்களுக்கு மரியா(maria) அல்லது கடல் என்று பெயரிட்டார்.

வால்மீன்கள் 

ஹெலிவியஸ் 1652 ஆம் ஆண்டு வால்மீன்கள் பற்றிய முதல் புத்தகத்தை எழுதினார். அவர் இடமாறுகளை மதிப்பிடுவதற்கான ஒரு புத்திசாலித்தனமான ஆனால் துல்லியமற்ற வழியைக் கண்டுபிடித்து வைத்து இருந்தார். மேலும் வால்மீனின் தூரத்தை பெரிதும் குறைத்து மதிப்பிட்டார். பின்னர் ஹெவிலியஸ் வால்மீன்களின் இயற்பியல் அமைப்பு பற்றியும்  எழுதினார். ஆனால், அதிக நுண்ணறிவு இல்லாமல்-உதாரணமாக, தலைக்கு ஒரு வட்டு போன்ற (கோள வடிவத்திற்கு மாறாக) அமைப்பு. VI, VII மற்றும் XII புத்தகங்களில் அவர் கணிசமான தகவல்களை சேகரித்தார்.

குறிப்பாக இரண்டு முந்தைய நூற்றாண்டுகளின் வால்மீன்கள் பற்றி, அவர் வால்மீன்கள் என்பவை அமுக்கப்பட்ட கோள்களின் வெளியேற்றங்களாக இருக்க வேண்டும் என்று அவர் நம்பினார். மேலும், அவை சூரியப் புள்ளிகளுக்கு காரணமான பொருளுடன் இணைக்கப்பட்டுள்ளன என்றும் நம்பினார், இதனால் திசைவேகங்கள் மற்றும் சுற்றுப்பாதைகளில் வெளிப்படையான சிரமங்களுக்கு ஆளானார்.

வால்மீன் இயக்கங்களின் இயற்பியல் காரணங்களை அவர் கேள்விக்குட்படுத்தியபோது, ​​ஊடாடும் வெளியேற்றங்களால் வழங்கப்பட்ட தூண்டுதல்களின் அடிப்படையில் தெளிவற்ற மற்றும் தரமான விளக்கத்தைத் தாண்டி அவரால் கடக்க முடியவில்லை. நிலப்பரப்பு எறிகணைகளின் பரவளைய இயக்கத்துடன் ஒப்பிடுவதன் மூலம் அவர் வால்மீன்களுக்கான அடிப்படை பரவளைய இயக்கத்தை முடிவு செய்தார். சரியான நேரத்தில் யோசனை ஏற்றுக்கொள்ளப்பட்டபோது, ​​​​அது காமெட்டோகிராஃபியாவின் கருதுகோளின் விளைவாக இல்லை; மேலும் ஹெவிலியஸுக்கு முன்னுரிமை அளித்தவர்களுக்கும் இது பற்றி எதுவும் தெரியாது.மிகவும் பலவீனமான நிலையில் இருந்தனர்.

சூரியனைச் சுற்றும் பூமி பற்றி சொன்னவர்

பூமி சூரியனைச் சுற்றி வருகிறது என்ற கோப்பர்நிக்கஸ் நம்பிக்கையை அவர் கொண்டிருந்தார். இந்த நம்பிக்கைக்காக கலீலியோ சிறையில் அடைக்கப்பட்ட பிறகும் கூட ஹெவிலியஸ் துணிந்து, பூமி சூரியனைச் சுற்றுகிறது என்று சொன்னார். மேலும் அவரது மிகப்பெரிய சாதனைகளில் ஒன்று , அவர் தனது வெறும் கண்களைப் பயன்படுத்தி விண்மீன்களை சரியாக வரைபடமாக்கினார் மற்றும் வானத்தில் பதினொரு விண்மீன் தொகுதிகளையும் கண்டுபிடித்துச் சேர்த்தார்.

உலகின் சிறந்த கண்காணிப்பகம்

அவர் தனது வீடுகளில் ஒன்றில் ஒரு கண்காணிப்பு அறையையும் மற்ற மூவரின் கூரையின் குறுக்கே ஒரு கண்காணிப்பு தளத்தையும் கட்டினார். ஹெவிலியஸ் உயிருடன் இருந்தபோது, இந்த தளம் உலகின் சிறந்த கண்காணிப்பு மையமாக இருந்தது. ஹெவிலியஸ் தானாகவே வானியல் கருவிகளைக் கண்டுபிடித்து உருவாக்கி பயன்படுத்தினார். அவைகளே அவருடைய காலத்தில் உலகில் மிகவும் துல்லியமானது. அவரது கருவிகளில் நாற்கரம், முதல் நாற்கரம், செக் ஸ்டான்ட் மற்றும் பல தொலைநோக்கிகள் இருந்தன. அவை, பல கூரை உச்சிகளுக்கு குறுக்கே பொருந்தும் மற்றும் பலரால் கையாளப்பட வேண்டியிருந்தது. இந்தக் கருவிகளின் துல்லியம் குறித்து அவர் ஒருபோதும் மகிழ்ச்சியடையவில்லை. எனவே, அவர் மேலும் மேலும் வெவ்வேறு கருவிகளைக் கொண்டு அவர் செய்த ஒவ்வொரு அளவீட்டையும் திரும்பத் திரும்பச் செய்தார். ஒவ்வொரு அளவையும் வெவ்வேறு வழிகளில் அளந்தார். இறுதியில். அவர் தனது தொலைநோக்கிகளைவிட தனது கண்களையே அதிகம் நம்பியிருந்தார்.

மேலும், அன்றைய எந்த தொலைநோக்கி பார்வையையும்விட அவரது பார்வை மிகவும் துல்லியமானது என்பதை பல சோதனைகள் மூலம் நிரூபித்தார். ஹெவிலியஸின் வெறும் கண் அளவீடுகள் நவீன அளவீடுகளின் 27 வில் வினாடிகளுக்குள் இருப்பதாக உண்மையில் காட்டப்பட்டுள்ளது. அவரது விண்மீன் பட்டியல் அட்லஸ், அவரது மரணத்திற்குப் பிறகு கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு வரை உலகில் மிகவும் அதிகமான பயன்பாட்டில் இருந்தது.

ஹெவிலியஸ் மூன்று கடினமான பணிகளை மேற்கொண்டார்

 1. தனது சொந்த வானியல் கருவிகளை உருவாக்குதல்,
 2.  பல வெளிநாட்டு வானியலாளர்களுடன் தொடர்புடையது மற்றும் குடிமைப் பதவியை வகித்தார்,
 3. முதலில் கௌரவ மாஜிஸ்திரேட்டாகவும் (1641) பின்னர் (1651) நகர கவுன்சிலராகவும் இருந்தார்.  

தீயில் தப்பிப் பிழைத்தவை

செப்டம்பர் 1679 இல் ஹெவிலியஸ் கணிசமான சோகத்தை சந்தித்தார், அவர் நாட்டில் இல்லாத நேரத்தில், அவரது டான்சிக் வீடு மற்றும் கண்காணிப்பகம், அவரது கருவிகள் மற்றும் அவற்றின் உற்பத்திக்கான பட்டறை, அவரது பெரும்பாலான புத்தகங்கள் மற்றும் காகிதங்கள் மற்றும் அவரது அச்சகததில்  தீ பிடித்து அனைத்தும் அழிந்து போனது. இது அவருக்கு ஒரு பேரிடியை உருவாக்கியது.  ஒரு பெரிய நிதி அடியை விட அதிகமாக இருந்தது, ஆனால் ஹெவிலியஸ் உடனடியாக சேதத்தை சரிசெய்யத் தொடங்கினார், வெளிப்படையாக பல தரப்பிலிருந்து நிதி உதவியைப் பெற்றார். ஆகஸ்ட் 1681 வாக்கில், கண்காணிப்பு மையம் மீண்டும் கட்டப்பட்டது மற்றும் மறுசீரமைக்கப்பட்டது, இருப்பினும் குறைவான கருவிகள் மற்றும் இவை அழிக்கப்பட்டதை விட தாழ்ந்தவை. சேமித்த பொருட்களின் பட்டியல் சில ஆர்வமுடையது மற்றும் அவரது புத்தகங்களின் பெரும்பாலான பிணைப்பு நகல்களை உள்ளடக்கியது, அவருடைய நிலையான நட்சத்திரங்களின் பட்டியல், அவருடைய அது பத்திரிகையில் இருந்தது. மற்றும் வானியல் பொருட்களின் pala தகவல்கள் உட்பட பல மதிப்புமிக்க கையெழுத்துப் பிரதிகள். பதின்மூன்று கடிதத் தொகுதிகள் மற்றும் கெப்லரின் அனைத்து கையெழுத்துப் பிரதிகளும் மீட்கப்பட்டன.  மீட்கப்பட்ட பிற படைப்புகள், பின்னர் வெளியிடப்பட்டன.  அந்நூலின் முன்னுரையில் தீ பற்றிய விளக்கம் உள்ளது. ஹெவிலியஸ் ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக இந்தப் பேரழிவிலிருந்து தப்பினார்; ஆனால் அவரது உடல்நிலை அதிர்ச்சியால் பாதிக்கப்பட்டது மற்றும் அவருக்கும் ராபர்ட் ஹூக்குடனான சர்ச்சையால் முன்னேற்றம் அடையவில்லை, பல ஆண்டுகளுக்கு முன்பு அவர் அதில் ஈர்க்கப்பட்டார். அவர் தனது எழுபத்தி ஆறாவது பிறந்தநாளில், 1687,ஜனவரி  28ம் ன் நாள்   இறந்தார்.

ஹெவிலியஸ் தொலைநோக்கி

ஹெவிலியஸ் தொலைநோக்கியுடன் பயன்படுத்திய மற்றொரு சாதனம் உச்சக்கட்டத்திற்கு அருகில் கண்காணிப்பதற்காக ஒரு வலது கோண கண் இமை ஆகும். ஹெவிலியஸ் தனது கருவியில் கார்டு நிறுத்தங்களைப் பயன்படுத்தும் பழக்கத்தில் இருந்தார். மேலும், அவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் அவர் ஒரு வரையறுக்கப்பட்ட வட்டுடன் விண்மீன்களை உணர்ந்ததாகக் கூறினார். குறிப்பிடப்பட்ட மிகப்பெரிய தொலைநோக்கி பன்னிரெண்டு (டான்சிக்) அடி நீளம் மற்றும் தோராயமாக 50X உருப்பெருக்கம் கொண்டது. (பின்னர் மேற்கோள் காட்டப்பட்ட அனைத்து நீளங்களும் ஒரு டான்சிக் கால் அலகுகளில் உள்ளன, இது தோராயமாக பதினொரு அங்குலங்களுக்குச் சமம்.)

தொலைநோக்கி ஒரு இருண்ட அறையின் சுவரில் பொருத்தப்பட்ட ஒரு சாக்கெட்டுக்குள் ஒரு பந்தின் மையத்தைத் துளைத்தது. இதனால் சூரியனின் படத்தை நீல நிற காகிதத்தில் ஒரு நகரக்கூடிய ஈசல் பொருத்தப்பட்டது. அவரது முதல் ஹெலியோஸ்கோப்பின் சில மாற்றங்கள் செய்த பின்னர் புத்தகத்தில் அறிவிக்கப்பட்டன, அதில் அவை 1661 இல் புல்லியால்டஸ் (பௌல்லியாவ்) உடன் கலந்தாலோசித்ததன் மூலம் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது,

ஹெவிலியஸ் சந்தேகத்திற்கு இடமின்றி தனது அவதானிப்புகளின் வெற்றிக்குக் கருவிகளை வடிவமைத்தல், தயாரித்தல் மற்றும் வேலைப்பாடு ஆகியவற்றில் திறமை மிக்க வானியலாளராக இருந்தார். மேலும், அவர் தனது நுட்பங்களை விவரித்த பாணி என்பது அவரது சமகாலத்தவர்களுக்கு மிகவும் ஆர்வமாக இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.