எரியும் இலங்கை: இந்தியப் பெருங்கடலின் முக்கியத்துவம்; நேரடி ரிப்போர்ட்- 23

இலங்கை நிலவரம் பற்றி அண்மையில் அங்கே சுற்றுப்பயணம் செய்துவந்த வழக்கறிஞர் கே.எஸ். ராதாகிருஷ்ணன் எழுதும் கட்டுரைத் தொடர்...
எரியும் இலங்கை: இந்தியப் பெருங்கடலின் முக்கியத்துவம்; நேரடி ரிப்போர்ட்- 23

புதிய உலக வரிசையில் அமெரிக்கா தலைமையிலான உலக வரிசை தவிர்க்க முடியாதபடி விளங்குகின்றது. அமெரிக்காவை பொறுத்தவரை தன் மீதான சர்வதேச நாடுகள் சார்ந்திருக்க செய்ய வேண்டும் என்றே விரும்புகிறது. இத்தகையதொரு தன்மையினை அடைந்துகொள்ள அமெரிக்கா கடைப்பிடிக்கும் உபாயங்கள் மூன்றாம் உலக யுத்தத்திற்கு கூட வழிவகுக்கலாம். ஆனால் இது சீனாவின் இராஜதந்திர ரீதியிலான செயற்ப்பாட்டினை பொறுத்தே அமையும் என்பது எனது நோக்காக உள்ளது.

உலக, பிராந்திய நலன், அதிகாரங்கள் போன்றவற்றை கைப்பெற்ற ஐக்கிய அமெரிக்கா, சீனா, இந்தியா மற்றும் ஐரோப்பிய யூனியன் நடத்தும் அதிகார போராட்டத்தில் இந்தியப் பெருங்கடலும் இலங்கையும் முதன்மையான இடத்தினை பெற்றுள்ளன.

இந்து சமுத்திர பிராந்தியம்(இந்தியப் பெருங்கடல்) இன்று அரசியல் பொருளாதார இராணுவ ரீதியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பிராந்தியமாகியுள்ளது. வரலாற்றில் இப்பிராந்தியம் பெற்றிருந்த முக்கியத்துவத்தில் இருந்தே இன்றைய இதன் முக்கியத்துவத்தை உணரக் கூடியதாக உள்ளது. கி.பி. 10 ஆம் நூற்றாண்டில் பெரும் பேரரசாக தோற்றம் பெற்ற சோழப்பேரரசு கிழக்கு ஆசிய நாடுகளில் தமது செல்வாக்கினை பெருக்கவும் பின்னர், அரேபியர்களின் கவனத்தை ஈர்த்த இப்பிராந்தியம் அரேபியர்களின் சமய, கலை, கலாச்சாரங்களை இப்பிராந்திய நாடுகளில் பரப்பவும் வாய்ப்பு ஏற்பட்டது. 16 ஆம் நூற்றாண்டில் இப்பகுதிகளில் ஐரோப்பியர் ஆதிக்கம் பெற தொடங்கியதுடன், அவர்கள் உலகில் அரசியல் பொருளாதார ரீதியில் மேன்யைடைய வழி ஏற்பட்டுள்ளதுடன் அங்கிருந்த சமயத்தை பரப்ப செய்யவும் வாய்ப்பு கிடைத்தது.

இப்பிராந்திய நாடுகள் 2ஆம் உலக யுத்தத்தை தொடர்ந்து காலணித்துவ ஆதிக்கத்தை தோற்கடித்தன. இதனால் மேலைத்தேச வல்லரசுகள் இப்பிராந்தியத்திலுள்ள நலன்ளை தமதாக்கி கொள்ள புது வடிவங்களை நிலைநிறுத்த முற்பட்டனர். இப்படியான நிலையில் இந்து சமுத்திர நாடுகளின் நிலை இந்த வல்லரசுகளின் போட்டிக்குள் ஏதோ ஒரு வகையில் சிக்குண்டு தமது சுயாதிபத்தியத்தையும் அமைதியையும் இழந்து வாழவேண்டிய துர்ப்பாக்கியம் உள்ளதாய் இருக்கிறது.

இந்து சமுத்திரம் ஆப்பிரிக்கா, ஆசியா, அண்டார்டிகா, ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்களுக்கு இடையில் அமைந்துள்ளது. இது ஏறத்தாழ 28,350,000 சதுரமையில் பரப்பு கொண்டதாகும். இந்தியப் பெருங்கடல் உலகிலுள்ள பெரிய சமுத்திரங்களில் மூன்றாவது சமுத்திரமாகவும் உலக நீர்ப்பரப்பில் 20 சதவீதத்தைக் கொண்டுள்ளதுடன் தென்முனையில் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளடங்கலாக 10,000 கிலோ மீட்டர் அகலத்தை கொண்டதாகும்.

இந்தியப் பெருங்கடலை ஐந்து புவிசார் அரசியல் பிரதேசங்களாக பிரிக்கலாம். கிழக்காபிரிக்கா பிராந்தியம், தென் மேற்க்காசியா பிராந்தியம், தென்னாசியப் பிராந்தியம், ஆஸ்திரேலிய பிராந்தியம், என ஐந்து பிராந்தியங்களாக கொள்ளலாம். இது தென்கிழக்காசியாவையும், மத்திய கிழக்கையும் அதாவது மலாக்கா நீரினையும், அரபிக்கடலையும் இணைக்கும் சமுத்திரமாகவும் விளங்குகிறது. இந்து சமுத்திரப் பிராந்தியம் அரேபியக்கடல், வங்களாவிரிகுடா, அந்தமான்கடல், ஓமான் வளைகுடா, பாரிய ஆஸ்திரேலியன் குடா, ஏடன் வளைகுடா, பசுபிக்கடல், மொசாம்பிக் கால்வாய், மலாக்கா நீரினை ஏங் கடல் சபுக் கடல், தீமோர் கடல், ஆகிய பிரதேசங்களை உள்ளடக்கிய அகன்ற கடற்பிராந்தியமாகும்.

இந்து சமுத்திர பிராந்தியத்தில் மட்டும் 47 நாடுகள் உள்ளன. இதில் 36 நாடுகள் கரையோர நாடுகளாகவும், 11 நாடுகள் இந்து சமுத்திர பின்னனி நாடுகளாகவும் காணப்படுகின்றன. இச்சமுத்திரத்தில் பல தீவுகள் காணப்படுகின்றன. அவை கொக்கோ தீவுகள், இலங்கை அந்தமான் தீவுகள், மாலத்தீவுகள், டிக்காகோவியிலி, மொரிசியஸ், பிச்ரல்ஸ் தீவுகள் ஆகும். அதே நேரம் கப்பல் போக்குவரத்துக்கான பல துறைமுகங்கள் காணப்படுகின்றன. சிற்றாங் கொஸ், திருகோணமலை, கொழும்பு, அம்பாந்தோட்டை, லியா விசாகப்பட்டினம், கொச்வின் கர்வோர், நர்மாறா வோடர், தீலுகிஸ் துறைமுகம், விக்டோரியா துறைமுகம், பூயூகென் ஆகிய துறைமுகங்கள் இந்து சமுத்திர பிராந்திய நாடுகளில் உள்ளன.

இந்து சமுத்திர பிராந்தியத்தில் உள்ள பெருமளவான சக்தி மூல வளங்களான பெட்ரோலியமும் இயற்கை வாயுவும் மிக முக்கியமானவையாகும். இவை தவிர பல தாது பொருள்களான தகரம், செம்பு, ஈயம், மற்றும் தங்கம், வெள்ளி, பிளாட்டினம், போன்ற பெறுமதி மிக்க தாதுப்பொருட்களையும் கொண்டுள்ளதுடன் இன்று உலகில் முக்கிய சர்ச்சைக்குரிய ஓர் மூலவளமான யுரேனியம் இப்பராந்தியத்தில் உள்ள தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா பகுதிகளில் காணப்படுகின்றது. மேலும் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா தவிர்ந்த இந்து சமுத்திர பிராந்திய நாடுகளில் பரவலாக விவசாயப் மூலப் பொருள்கள் காணப்படுகின்றன.

மேலும் 40 எண்ணை உற்பத்திகள் குறிப்பாக பெர்சியன் வளைகுடாவிலிருந்தும் இந்தோனேசியாவிலிருந்தும் இந்தியப் பெருங்கடலின் வழியாக ஏனைய நாடுகளுக்கு கொண்டு செல்கின்றன. மலாக்கா நீரினை உலகத்தில் இரண்டாவது கடல்வழிப்பாதையாகும். ஜப்பானுக்கான எண்ணை விநியோகத்தில் 80 சதவிகிதம் சீனாவுக்கான எண்ணை விநியோகத்தில் 60 சதவீதமும் மலாக்கா நீரினை வழியாக இடம்பெறுகின்றன. 70 மில்லியன் அமெரிக்க டாலர் பெறுமதியான மசகு எண்ணை ஒவ்வொரு வருடமும் இந்த நீரினை வழியாக எடுத்துச் செல்லப்படுகின்றன. உலக நாடுகளுக்கு கப்பல்களில் பொருட்களை ஏற்றிச் செல்லும் கொள்கலன்களில் ஏறக்குறைய அரைப்பங்கு இவ்வழியாலையே ஏற்றி இறக்கப்படுகின்றன. அத்தோடு இப்பிராந்தியம் பெரும் சந்தை வாய்ப்பினை கொண்டதாகும்.

மேற்கூறப்பட்ட தன்மைகளின் அடிப்படையில் பார்க்கும்போது இந்தியப் பெருங்கடல் இன்றைய புதிய உலக வழியாக என்றும் இல்லாத அளவுக்கு முக்கியத்துவம் பெற்றுக் காணப்படுகின்றது. இதனாலையே, "யார் இந்து சமுத்திரத்தை கட்டுப்படுத்துவார்களோ அவர்களே ஆசியாவை கட்டுப்படுத்துவார்கள் இருபத்தியோராம் நூற்றாண்டில் இந்து மகா சமுத்திரமே ஏழு கடல்களின் திறவு கோலாக விளங்கும் அதுவே உலகின் தலைவிதியை தீர்மானிக்கும் மகா சமுத்திரமாக விளங்கும்” எனக் கூறுகின்றார்கள்.

இந்தியப் பெருங்கடல் பொருளாதார ரீதியிலும் தொடர்பாடல் ரீதியிலும் மற்றும் பாதுகாப்பு ரீதியிலும் பெற்றுள்ள முதன்மை இலங்கை தீவின் கேந்திர முக்கியத்துவத்தினை ஏற்படுத்துகின்றது. இத்தகைய நிலைமையில் இலங்கை தீவின் கேந்திர முக்கியத்துவத்தினை ஆராய்வதன் வழியாக உலக அமைதி, உலக சமாதானம், உலகப் பாதுகாப்பு, உலகப் பொருளாதாரப் போட்டி ஆகிய அம்சங்களை நிகழ்காலத்திலும் சரி எதிர்காலத்திலும் சரி அமெரிக்கா, சீனா, இந்தியா, ஐரோப்பிய யூனியன் மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளிலும் முன்னெடுத்துச் செல்லப்படும் என்பதனை எதிர்கொள்ளக் கூடியதுடன், அத்தகையதொரு அம்சம் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தை ஒட்டியதாக நடைபெறவுள்ளது என்பதனை அண்மைக்கால அமெரிக்க சீன நகர்வுகளின் ஊடாக வழியாக அறியக் கூடியதாக உள்ளது.

இலங்கைக்கு கடன் உதவி அளிக்கும் திட்டமில்லை: உலக வங்கி

பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை அரசு, விரிவான பொருளாதாரக் கொள்கைகளை வகுக்கும் வரை புதிய கடனுதவி அல்லது குறுகிய காலக் கடனுதவி வழங்குவதற்கு வாய்ப்பில்லை என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட் டிருப்பதாவது: நிதி நெருக்கடியில் இருந்து இலங்கை அரசு மீண்டு வருவதற்கு குறுகிய காலக் கடன் அல்லது புதிய கடனுதவி அளிக்க நாங்கள் (உலக வங்கி) திட்டமிட்டு வருவதாக அண்மையில் செய்திகள் வெளியாகின. அவை தவறானவை. அதே சமயம், இலங்கை மக்களுக்காக கவலைப்படுகிறோம். இலங்கை அரசு சரியான பொருளாதாரக் கொள்கைகளை வகுப்பதற்குத் தேவையான ஆலோசனை வழங்குவதற்காக, சர்வதேச நிதியம் உள்ளிட்ட அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து பணியாற்றி வருகிறோம். இலங்கை அரசு விரிவான பொருளாதாரக் கொள்கையை வகுக்கும் வரை அந்நாட்டுக்கு புதிய கடனுதவி அல்லது குறுகிய காலக் கடனுதவி அளிப்பது குறித்து

உலக வங்கி திட்டமிடாது. இருப்பினும், ஏற்கெனவே ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள திட்டங்களுக்கான நிதியை அத்தியாவசிய மருந்துகள், ஏழைகளுக்குப் பண உதவி, பள்ளிகளில் மதிய உணவுத் திட்டம் ஆகியவற்றுக்கு மடைமாற்றி வருகிறோம். இலங்கையில் பொருளாதார ஸ்திரத் தன்மையை ஏற்படுத்த அந்நாட்டு அரசு தொடர்ந்து முயன்று வருகிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் உணவுப்பொருள்கள், பெட்ரொல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்ந்து, தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இலங்கை அரசின் மொத்த வெளிநாட்டுக் கடன் 5,100 கோடி டாலர் (ரூ.3.95 லட்சம் கோடி). அதில், 2,500 கோடி டாலரை (ரூ.1.93 லட்சம் கோடி) வரும் 2026-க்குள் அந்நாடு செலுத்த வேண்டும். ஆனால், நிகழாண்டில் செலுத்த வேண்டிய 700 கோடி டா லரை (ரூ.54,316 கோடி) இலங்கை அரசு நிறுத்தி வைத்துள்ளது.

எகிப்தின் பொருளாதார நிலவரம் கவலைக்குரியதாக உள்ளது. அத்தியாவசிய உணவுப் பொருள்களுக்கு கடும் தட்டுப்பாட்டை அந்நாடு எதிர்கொண்டுள்ளது. எகிப்து அதன் கோதுமை தேவைக்கு ரஷ்யா மற்றும் கோதுமை உக்ரைனை பெரிதும் சார்ந்து இருந்தது. தற்போது அவ்விரு நாடுகளிடையிலான போரின் காரணமாக இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளிலிருந்து உதவியை எதிர்பார்த்து இருக்கிறது எகிப்து.

துனிசியா வெளிநாட்டுக் கடன்களை திருப்பி செலுத்த முடியாத நிலையில் உள்ளது. ஏற்றுமதி குறைந்து இறக்குமதி அதிகரித்து அந்நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறை 800 மில்லியன் டாலரைத் தொட்டுள்ளது. அந்நாட்டில் எரிபொருள் மற்றும் உணவுப் பொருள்களின் விலை உச்சம் தொட்டுள்ளது.

2020-ல் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் லெபனான் நாட்டின் மிகப் பெரிய உணவு கிடங்கு தீக்கிரையானது. விளைவாக, உணவுப் பொருள்களின் விலை 11 மடங்கு அதிகரித்ததோடு லெபனானின் நாணய மதிப்பு 90 சதவீதம் சரிந்தது. பொது மக்களின் கடன் சுமை அந்த நாட்டின் ஜிடிபியில் 360 சதவீதமாக உள்ளது. லெபனான் அதன் கோதுமை தேவையில் 80 சதவீதத்தை உக்ரைனிலிருந்து இறக்குமதி செய்துவந்தது.தற்போது ரஷ்யா - உக்ரைன் போர் காரணமாக, லெபனானில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகி இருக்கிறது. உணவு பாதுகாப்புக்காக உலக வங்கியில் லெபனான் 150 மில்லியன் டாலர் கடனாக பெற்றுள்ளது. துருக்கி நாட்டின் கடன் சுமை அதன் ஜிடிபியில் 54 சதவீதமாக உள்ளது. பணவீக்கம் 70 சதவீதமாக உள்ளது. இது தவிர கடுமையான உணவு பற்றாக்குறையையும் துருக்கி எதிர்கொண்டுள்ளது.

அர்ஜென்டைனாவும் கடன் சுமையால் தள்ளாடுகிறது. கடன் தவணையை அடைப்பதில் 9 முறை தவறியது. இந்நிலையில் தற்போது சர்வதேச செலாவணி நிதியத்திடம் 45 பில்லியன் டாலர் கடன் கேட்டிருக்கிறது. லத்தீன் அமெரிக்காவை எடுத்துக்கொண்டால் எல் சல்வடார், பெரு போன்ற நாடுகள் கடன் சுமையில் தத்தளித்துக் கொண்டிருக்கின்றன. இந்த நாடுகளிலும் உணவுப் பற்றாக்குறை, விலை உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் தீவிரமடைந்துள்ளன.

கானா, எத்தியோப்பியா, கென்யா, தென் ஆப்பிரிக்கா போன்ற ஆப்ரிக்க நாடுகள் கடன் நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றன. கென்யா நாட்டின் கடன் சுமை 70 பில்லியன் டாலர். இது அந்த நாட்டின் ஜிடிபியில் 70 சதவீதம் ஆகும். பொருளாதாரச் சீர்குலைவை தவிர்ப்பதற்காக சென்ற வாரம் 244 பில்லியன் டாலர் கடனை சர்வதேச செலாவணி நிதியத்திடமிருந்து கென்யா பெற்றிருக்கிறது. தென் ஆப்பிரிக்காவின் கடன் சுமையும் அதன் ஜிடிபியில் 80 சதவீதம் அளவிற்கு உயர்ந்திருக்கிறது.

                                                                                                                    - தொடரும்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com