அதிகாலையில் விழித்தும் விடியாத உப்பு சுமக்கும் பெண்களின் வாழ்க்கை

அதிகாலையில் விழித்து, ஆணுக்கு நிகராக உழைத்தாலும் உப்பு உப்பள பெண்களின் வாழ்க்கை மட்டும் இன்னும் விடியாமலே போனது.
அதிகாலையில் விழித்தும் விடியாத உப்பு சுமக்கும் பெண்களின் வாழ்க்கை
அதிகாலையில் விழித்தும் விடியாத உப்பு சுமக்கும் பெண்களின் வாழ்க்கை


'அதிகாலை நேரம் கூலிக்கு போனோம்..
அன்னைக்கு ஆறுமணிக்கு வேலை முடிஞ்சி வாறோம்..
ஏலேலோ அம்மா ஏலேலோ
ஏலேலோ அய்யா ஏலேலோ
'.. என்ற மக்களிசைப் படலில் கூறுவதைப்போல அதிகாலையில் விழித்து, ஆணுக்கு நிகராக உழைத்தாலும் உப்பு உப்பள பெண்களின் வாழ்க்கை மட்டும் இன்னும் விடியாமலே போனது.

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் உப்புக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து நடந்த போராட்டமே உப்பு சத்தியாகிரம். தண்டியில் மகாத்மா காந்தியன் தலைமையில் நடைபெற்றது. இதேபோல, தமிழகத்தின் பங்களிப்பாக 1930 வேதாரண்யத்தில் நடைபெற்றது.

விடுதலை கிடைத்தது. ஆனால், ஊடே உழைக்கும் தொழிலாளர், அதிலும் ஆணுக்கு நிகரான உழைப்பை தரும் பெண்களின் நிலைதான் உப்பு நீரில் கரையும் கண்ணீராகவே நிலைக்கிறது.

உயிரை பணயம் வைத்து நடைபெறும் சுரங்கத்தொழில் தொடங்கி, பாறைகள் உடைப்பது போன்ற எத்தனையோ தொழில்களை கடினமான பட்டியலில் கூறிவிடலாம். இவையாவும் ஆபத்துகள் நிறைந்தவை, எந்த நேரமும் எதுவும் நடக்கலாம் என்பதே நிலை.

அதேநேரம் கடினம் மட்டுமல்ல உடலையும் மனதையும் மெல்ல மெல்ல உருக்கிக் கொல்லும் இயல்புடையது என்றால் அது உப்பளத்தொழிலைக் கூறலாம். ஆணுக்கு நிகராக பெண்களும் தனது உழைப்பை கொடுத்தாக வேண்டும் என்கிற நிலை இதில் உள்ளது.

தமிழகத்தில் தூத்துக்குடியும், அதற்கு அடுத்த இடத்தில் வேதாரண்யமும் உள்ளன. இவ்விரண்டு இடங்களில் உணவு மற்றும் தொழிற்சாலைகளுக்கான உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது.

சதுப்பு நில அளத்தில் பாத்திகள் அமைத்து கடல் நீர் அல்லது நிலத்தடி உப்பு நீரை தேக்கி வெயிலில் ஆவியாக்கி உப்பு விளைவிக்கப்படுகிறது. இதில் அனுபவம் நிறைந்த மனித உழைப்பு அவசியமானது.

எந்த விதமான அடிப்படை வசதிகளும் இல்லாமல் அதிகாலை 1 மணிக்கு எழுந்து அளத்தில் நின்று வேலை பார்க்கும் கடினமான உழைப்பில் பெண்களின் பங்களிப்பு முதன்மையானது.

வேதாரண்யம் பகுதியை பொருத்தவரையில் சுமார் 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி நடைபெறுகிறது. பெரு நிறுவனங்களில் இயந்திர பயன்பாடுகள் வந்த பிறகும் சுமார் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் இந்த தொழிலை நம்பியே உள்ளனர்.

ஆண்டு தோறும் ஜனவரியில் உப்பு உற்பத்திக்கான பாத்திகளை அமைத்து தயாரிக்கும் பணி நடைபெறும். பிப்ரவரி மாதத்தில் பொண் உப்பு எடுத்து உற்பத்தி தொடங்கும். சில ஆண்டுகளில் செப்டம்பர் அல்லது அக்டோபர் முதல் வாரம் வரையில் நடைபெறும்.

இந்த தொழிலில் தொடர்பில்லாத புதியவர்கள் உப்பு உற்பத்தி செய்யப்படும் அளப்பகுதியில் குறிப்பிட்ட மணிநேரம் சும்மா நின்றால்கூட சிறு நீர் கடுப்பு, கண் எரிச்சல் என பல உபாதைகளை உடனடியாக உணரமுடியும்.

உப்பு சுமப்பது கடினம் என்பதால் வாகனங்கள் அதிகம் இல்லாத காலக்கட்டத்தில் உப்பு மூட்டைகளை வெளியில் எடுத்துச்செல்ல ஏதுவாக கடின உழைப்பை எதிர்கொள்ளும் கழுதைகளை பயன்படுத்தி வந்தனர். வாகன உற்பத்தி அதிகரிப்புக்கு பின்னர் அவை அரிதாகிவிட்டது.

ஆனால், பல நூற்றாண்டுகளாக மனித உழைப்பு, பயன்பாடு மட்டும் இந்த தொழிலில் எந்தவித மாற்றமும், எளிமைப்படுத்தலும் நடைபெறாமல் அப்படியே உள்ளது.

உப்பளத் தொழில் இல்லாத காலங்களில் கட்டுமானம் போன்ற தொழில்களில் இந்த தொழிலாளர்கள் ஈடுபடுகின்றனர். உப்பு வாரும் பணியைத் தவிர, பாத்தி, வாய்க்கால், குட்டை அமைத்தல் போன்ற மற்ற பணிகள் மராமத்து வேலை என அழைக்கப்படுகிறது.

மரமத்து பணிக்கு ஆண்களைவிட 35 முதல் 40 சதவீதம் கூலி குறைவாக பெண்களுக்கு வழங்கப்படும். உதாரணமாக தற்போது ஆண்களுக்கு ரூ.550-ம்,பெண்களுக்கு ரூ.300-ம் கூலியாக வழங்கப்படுகிறது.

மானாவாரி நிலப்பரப்பை கொண்ட வேதாரண்யம் பகுதியில் உப்பளத் தொழிலாளர்களுக்கு மாற்று வேலை கிடைப்பது எளிதல்ல.வேலை இல்லா மழைக்காலத்தில் மீனவர்களுக்கு வழங்கப்படும் நிவாரணம் போன்று வழங்க வேண்டும் என்ற கோரிக்கை மட்டும் அரை நூற்றாண்டுகளை கடந்தும் நிறைவேறாத கோரிக்கையாகவே பயணிக்கிறது.

உப்பு வாரும் பணிக்கு வாருமுதலுக்கு ஏற்ற கூலியாக ஒப்பந்தம் போன்றே பேசப்படுகிறது. குறிப்பாக 100 கிலோ உப்பை உற்பத்தி செய்து, வாரி, குவியலில் கொண்டு வந்து சேர்த்து கொடுக்க வேண்டும். அப்படி செய்துவிட்டால் 100 கிலோ உற்பத்திக்கு ரூ.30 முதல் 35 என முதலாளிக்கு ஏற்ப கூலி வழங்கப்படும் முறை உள்ளது. இது ஒப்பந்தம் முறை என்பதால் ஆணுக்கும் பெண்ணுக்கும் சம உழைப்பு, சம ஊதியமாகிறது.

விளைந்த உப்பின் மீது அதிகமான சூரியனின் வெப்பம் படும்போது அதில் இருந்து வெளிப்படும் ஆபத்தான கதிர் வீச்சுகள் மூளை மற்றும் கண் பார்வையை பாதிக்கும். கால், கை பாதங்களில் புண் போன்ற ஒவ்வாமையை ஏற்படுத்தும். இதனை தவிர்க்கும் வகையில்தான் அதிகாலையில் பணியை தொடங்கி தண்ணீர் சூடாக மாறுவதற்குள் பணிகளை முடிக்கின்றனர்.

ஒரு ஏக்கர் பாத்தியில் ஒரு முறை வாரும் பணிக்கு ஒரு ஜோடி ஆள்கள் ஈடுபடுத்தப்படுவர். பெரும்பாலும் ஆண்கள், பெண்களாகவே இருப்பர். உப்பை வாரி குவித்து 40 கிலோ கொள்ளளவு கொண்ட கூடையில் அல்லது பாத்திரத்தில் வைத்து கரை பகுதிக்கு கொண்டு செல்வர்.  இதில் ஆணுக்கு பெண்கள் இணையாக நின்று சுமையை தூக்கவும் அல்லது எதிர்த்து நின்று தூக்கிவிடும் பணியையும் செய்கின்றனர்.

இந்தப் பணிகளால் பெண்களுக்கு கருப்பை எளிதில் இறங்கவும், பாதிக்கவும் செய்கிறது. ஆண்களைவிட பெண்களுக்கு கால், இடுப்பு, நரம்புகள் விரைவாக பாதிக்கப்படுகிறது.

இது குறித்து அளத்தில் பணி செய்த செல்லமாள்(35) கூறியது: என தந்தையின் ஊர் கொருக்கை. 6 ஆம் வகுப்புக்கு மேல் செல்லவில்லை. அங்குள்ள  மக்கள் உப்பளத்தையே பார்த்ததில்லை. அங்கு விவசாய கூலிவேலைகள் தெரியும். என்னை பெண் கேட்டு வந்தபோது வீட்டில் சமைத்துக்கொடுத்தால் போதும் என்றுதான் கூறினார்கள்.

இங்கு வந்தபிறகு வேறு வழியில்லை. பிள்ளைகளை படிக்க வைக்க வேண்டும், அவர்களை கஷ்டம் குறைந்த வேறு தொழிலுக்கு அனுப்ப வேண்டும் என்றால் நானும் வேலை செய்யக் கற்றுக்கொண்டேன் என்றார்.

மற்றொரு பெண் லெட்சுமி (32) பேசுகையில், கரிச்சான் குருவி கத்தும் முன்னரே எழுந்துவிடுவோம். கஷ்டமான வேலைதான் வேறு வழியில்லை. தீபாவளி பண்டிகையின்போது பாத்தியின் முதலாளியிடம் ரூ.50 ஆயிரம் வரையில் அட்வான்ஸ் வாங்குவோம். வேலை நடைபெறும் நாள்களில் வாரத்தில் ஒருநாள் குறிப்பிட்ட தொகையை வாங்கிக்கொள்வோம். மற்ற சம்பளத் தொகையை அடுத்த தீபாவளி வரையில் கட்டி அடைப்போம். இப்படிதான் வாழ்க்கை போகிறது என்றார்.

ஆங்கிலேயரிடம் இருந்து உப்புக்கும் நாட்டுக்கும் விடுதலை கிடைத்து ஆண்டுகள் ஓடிவிட்டது. ஆனால், உப்பளத் தொழிலாளர்களுக்கு பணி பாதுகாப்பு இல்லாத வாழ்க்கை நிலைத்துவிட்டது. உப்புத்துறை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்தாலும் தொழிலாளர்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு காப்பீடு, உழைப்புக்கு ஏற்ற ஊதிய வரம்பு என எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. ஆனாலும், ஆணுக்கு நிகரான உழைப்பை கொடுப்பவர்களாக இந்தப் பெண் தொழிலாளர்கள் திகழ்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com