பேருந்து, ரயில்களில் பால்புதுமையினருக்கு தனி இருக்கை கிடைக்குமா?

சமூகத்தில் பால்புதுமையினருக்கு அவர்கள் விரும்பிய தனி நபர் சுதந்திரத்தை நாமோ சமூகமோ அரசோ வழங்குகிறோமா என்றால் இல்லை என்பது உண்மையில் வேதனைக்குரிய விஷயம்.
பேருந்து, ரயில்களில் பால்புதுமையினருக்கு தனி இருக்கை கிடைக்குமா?

நான் கடந்த வாரம் பெங்களூருவிலிருந்து சென்னைக்கு தனியார் ஆம்னி படுக்கை வசதி கொண்ட (ஸ்லீப்பர்) பேருந்தில் வந்து கொண்டிருந்தேன் . அப்போது தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு திருநங்கை சில்க் போர்டு நிறுத்தத்தில் ஏறினார். தனக்கு ஒதுக்கப்பட்ட இருக்கை இரட்டை படுக்கை கொண்டதால், அவர் பாலியல் தொந்தரவு இல்லாமல் பயணம் செய்வதற்காக ஒற்றை படுக்கையில் இருந்த பயணிகளிடம் ஒற்றை படுக்கை கொண்ட இருக்கைகளை விட்டுத்தரக் கெஞ்சினார். ஆனால், அவர்கள் யாரும் மாற்றித்தர மனம் இறங்கவில்லை. பின் ஓட்டுநரிடம் சென்று உதவக் கேட்டார். அதன்பிறகு அவர் வந்து ஒற்றை இருக்கையில் இருந்த ஒரு ஆண் பயணியிடம் பேசி இருக்கையை விட்டுத்தரப் பேசி ஒற்றை இருக்கை வாங்கி கொடுத்துவிட்டார். அதன்பிறகு நிம்மதியாக பயணம் செய்தார்.

அப்போது அவர், 'ஆன்லைன் டிக்கெட் பதிவு செய்யும்போது ஆண், பெண்களுக்கு இணையதளத்தில் தனியாக இருக்கைகள் பதிவு செய்ய வசதிகள் உள்ளன. எங்களைப் போன்ற பால் புதுமையினருக்கு என்று தனி இருக்கைகள் ஒதுக்கீடு செய்து அதற்கான ஆன்லைனில் இணையதளத்தில் வசதியை ஏற்படுத்திக் கொடுத்தால் நன்றாக இருக்கும். நாங்கள் யாரிடமும் கெஞ்ச வேண்டியதில்ல' என்று குறைபட்டுக்கொண்டார்.

--

பொதுவாக சாதாரணப் பேருந்துகளில் பயணம் செய்வதற்கு ஆண்கள், பெண்கள், முதியோர், மாற்றுத்திறனாளி ஆகியோருக்கு இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால், பால்புதுமையினருக்கு இருக்கை ஒதுக்கீடு என்பது இதுவரை இல்லை. மேலும், விரைவு மற்றும் ஆம்னி பேருந்துகளில் ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்யும் பேருந்துகளின் இருக்கைகளில் மூன்றாம் பாலினம் என்று சொல்லக்கூடிய பால் புதுமையினருக்கு(LGBTQI+) தனி இருக்கைகள் பற்றி அரசோ அல்லது போக்குவரத்து நிறுவனங்களோ இதுவரை சிந்திக்கவில்லை.

பால்புதுமையினர் சமூகத்தின் பிழை அல்ல. பகுத்தறிவாளர்களுக்கு இயற்கையின் பிழை, மருத்துவர்களுக்கு டிஎன்ஏ பிழை. அவர்கள் மொத்தத்தில் உடலுக்கேற்ற உணர்வுகளைப் பெறாதவர்கள் அல்லது உணர்வுகளுக்கு ஏற்ற உடலைப் பெறாதவர்கள். அவ்வளவுதான்! 

ஐக்கிய நாடுகள் அவை வகுத்த நீடித்த நிலையான வளர்ச்சி இலக்குகள் 11.2-ன் படி, மக்களுக்கான பொதுப்போக்குவரத்து வசதியை '2030 ஆண்டுக்குள் அனைவருக்கும் பாதுகாப்பான, மலிவான, எளிதில் அணுகக்கூடிய அளவில், பெண்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள், பால்புதுமையினர் (LGBTQI) மற்றும் முதியோர்கள் போன்றவர்களை உள்ளடக்கிய தேவைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தி போக்குவரத்து சேவையினை வழங்க ஆவண செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.

மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்தவர்களை எப்படிக் குறிப்பிட வேண்டும்/ விவரிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரைத்தபடி, தமிழக அரசு ஒரு சொற்களஞ்சியத்தை ஆகஸ்ட் மாதம் வெளியிட்டுள்ளது. ஆன்லைன் டிக்கெட் வசதியை தரும் வலைத்தளங்கள் அல்லது அதன் மென்பொருள் தயாரிப்பாளர்கள் பால்புதுமையினருக்கு என்று தனி இருக்கைகள் தருவதற்கான வசதிகளை இதுவரை ஏற்படுத்தவில்லை.

தனியார்கள் பேருந்துகளுக்கு ரெட்பஸ் , அபபி பஸ், பேடிம் போன்ற ஆன்லைன் பயணச்சீட்டு பதிவு செய்யும் நிறுவனங்களும் , பிட்லா, ஈசி இன்போ, வாகை, வயாடாட்காம் , குவிக்பஸ் , ஹெர்ம்ஸ் போன்ற ஆன்லைன் மென்பொருள் வசதி செய்து தரும் நிறுவனங்களும் , தமிழக அரசிற்கு ஆன்லைன் பதிவு வசதி செய்து தரும் ரேடியன்ட் நிறுவனமும், ரயில் பயணத்திற்கு ஆன்லைன் பதிவு வசதி செய்து தரும் ஐஆர்சிடிசி நிறுவனமும் பால்புதுமையினரைக் கணக்கில் கொள்ளவில்லை என்பது வருத்தத்துக்குரிய விசயம். 

சமூகத்தில் பால்புதுமையினருக்கு அவர்கள் விரும்பிய தனி நபர் சுதந்திரத்தை நாமோ, சமூகமோ, அரசோ வழங்குகிறோமா என்றால் இல்லை என்பதும் உண்மையில் வேதனைக்குரிய விஷயம். தமிழக அரசு ஒரு திருநங்கையை மாநில திட்டக்குழு உறுப்பினராக உயர்த்திய இந்தியாவிலேயே முன்மாதிரியான நம் தமிழக அரசு, பால்புதுமையினருக்கென பேருந்துகளின் இருக்கைகளில் பயணம் செய்ய 'பால்புதுமையினர் ' என தனி இருக்கை ஒதுக்கீடு செய்து அதற்கான அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும் என்பது என்னைப் போன்ற பன்னாட்டு போக்குவரத்து நிபுணர்களின் கோரிக்கையாகும். 

பேருந்துகளின் ஆன்லைன் பதிவின்போது மூத்த குடிமகன்கள், மாற்றுத்திறனாளிகள், பால்புதுமையினர் ஆகியோருக்கு தனி இருக்கைகள் ஒதுக்கீடு செய்ய மாநில திட்டக்குழுவும்

ஆன்லைன் பயண டிக்கெட் வசதி செய்து தரும் நிறுவனங்களும் மற்றும் அதற்கான மென்பொருள் தயாரிப்பாளர்களும், போக்குவரத்து கழகங்களும், தனியார் ஆம்னி பேருந்து உரிமையாளர்களும் ஆவண செய்ய வேண்டும். 

அதுபோல, தமிழக போக்குவரத்துத் துறைக்கும், போக்குவரத்து ஆணையத்திற்கும் இதுகுறித்து உத்தரவிட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இதேபோன்று ரயிலில் பயணம் செய்யும்போது பால் புதுமையினருக்கு ஆன்லைன் பதிவு செய்யும்போது தனி இருக்கைகள் பதிவு செய்வதற்கும் ஆவண செய்ய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் முயற்சி எடுக்க வேண்டும். 

[கட்டுரையாளர் - பன்னாட்டு பொதுப்போக்குவரத்து நிபுணர்]

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com