கலைத்துறையின் சமரசமில்லா கலகக்காரன்!

கிராமப்புறத்தில், அதிலும் ஒரு சாமானியக் குடும்பத்தில் பிறந்து, திண்ணைப் பள்ளியில் இரண்டு ஆண்டுகள் மட்டுமே படித்த ஒருவர், மக்கள் கவிஞனாக மாறிய நிகழ்வு காலத்தில் அழியாத வரலாறு.
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்


கிராமப்புறத்தில், அதிலும் ஒரு சாமானியக் குடும்பத்தில் பிறந்து, திண்ணைப் பள்ளியில் இரண்டு ஆண்டுகள் மட்டுமே படித்த ஒருவர், மக்கள் கவிஞனாக மாறிய நிகழ்வு காலத்தில் அழியாத வரலாறு.

அடிமைகளின் விலங்கொடிக்க, மூடர்களின் சிந்தை விழிக்க, அநீதிகளை தகர்த்து எறிந்திட... இப்படி சமூக விடுதலைக்காக பன்முகத் தளங்களிலும் பாமரனாய் பயணித்து பட்டறிவால் ஞானம் பெற்று வீறு கொண்டு எழுந்தவன். கலையின் ஊடே கரைகண்ட அந்த மனிதர் எழுதிய பாடல்களில் ததும்பும் சீர்திருத்த கருத்துகளுக்கு இன்றைக்கும் இணையான ஆற்றல் வேறில்லை என்றால் அது மிகையில்லை.

தஞ்சாவூர் மாவட்டம்,பட்டுக்கோட்டையை அடுத்துள்ள செங்கப்படுத்தான்காடு எனும் கிராமத்தில்(1930, ஏப்.30) பிறந்து 29 ஆண்டுகள் மட்டுமே இந்த மண்ணில் வாழ்ந்து(1959, அக்.8) மறைந்தவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.

ஆனால், பாட்டுக்கோட்டையாக, மக்கள் கவிஞனாக அவரின் பாடல்கள் கூறும் தனித்துவமான சிந்தனையில் ஈர்த்து நம்மோடு வாழ்ந்து வருகிறார் என்றால் அது அவர் கொண்டிருந்த கொள்கைக்கு கிடைத்த சிறப்பு என்றே கூறலாம்.

இளம் பருவத்திலேயே எதையாவது செய்ய வேண்டும் என்ற இலக்கோடு பயணித்த கவிஞர் வாழ்நாளின் இறுதிவரையில் உழைப்பை நம்பியே ஓடிக் கொண்டிருந்தவர்.

தனது வாழ்நாளில் விவசாயி, மாடு மேய்ப்பவர், மாட்டு வியாபாரி, உப்பளத் தொழிலாளி, மாம்பழம், இட்லி, முறுக்கு, தேங்காய், கீற்று போன்ற வியபாரம், மீன், நண்டு பிடிக்கும் தொழிலாளி, மிஷின் ஓட்டுநர், தண்ணீர் வண்டிக்காரர், அரசியல்வாதி, பாடகர், நடிகர், நடனக்காரர், கவிஞர் என 17 வகையான தொழில்களை கையாண்டதாக ஜீவா குறிப்பிடுகிறார். 

இதையும் படிக்க | 'பொன்னியின் செல்வன்' நூலில் நடிகைகள் படம்! வாசகர்கள் அதிருப்தி!!

தனது 14 -ஆவது வயதில் அவரது கிராமத்தில் இருக்கும் துறையான்குளத்து நீரில் துள்ளி விளையாடிய மீன்கள்தான் கல்யாணசுந்தரத்தை முதலில் கவிதை எழுத தூண்டியுள்ளது.

ஓடிப்போ ஓடிப்போ
கெண்டைக் குஞ்சே-கரை
ஓரத்தில் மேயாதே
கெண்டைக் குஞ்சே
தூண்டிக்காரன் வரும் நேரமாச்சு-ரொம்பத்
துள்ளிக் குதிக்காதே கெண்டைக் குஞ்சே...

என்ற பாடலை எழுதி மனித நேயத்தின் வெளிப்பாட்டை ஒரு படைப்புக்குள் இருக்க வேண்டிய அழகியலை பாமரனும் புரிந்துணர வைத்தார்.

விவசாயப் பணியின் வலியை உணர்ந்தவராக இருந்ததால் அதை நம்பியுள்ள உழவர்களின் வேதனையைப் போக்க பாடல்களால் மட்டுமல்லாது களத்தில் நின்று போராடவும் கற்றுத் தந்தவர்.

விவசாய சங்கங்கள் செயல்பாடு, பொதுவுடமை இயக்கத்தில் ஈடுபாடு கொண்டிருந்ததால் அந்த அமைப்புகளின் நோக்கத்தை உயர்த்திப் பிடிக்க துணிந்து நின்றார். அதற்கு ஏற்ற தளமாக அவர் கருதிய கலை வடிவங்களில் முனைப்பு காட்டினார். பாடல்கள் எழுதுவது, நாடகங்களில் பங்கேற்று நடிப்பதில் ஆர்வம் காட்டினார்.

பொதுவுடமை இயக்கத்தின் போராளிகளாக திகழ்ந்து தலைமறைவு வாழ்க்கையோடு களம் கண்ட வாட்டாக்குடி இரணியன், ஜாம்புவானோடை சிவராமன் போன்றோருன் இணைந்து இயக்கத்துக்காக விவசாயிகளை வென்றெடுக்க முனைப்புக்காட்டியவர்.

இந்த சூழ்நிலையில் பொதுவுடமை இயக்கத்தின் தோழரான இலக்கியப் பேராசான் என்று அழைக்கப்படும் ப.ஜீவானந்தம் தோழமையில் நெருக்கம் ஏற்பட்டது.

இதனால், பொதுவுடமை இயக்கத்தின் மீது இவர் வைத்திருந்த நம்பிக்கைதான் பின்னாளில் தத்துவ பாடல்களாக பதிவிறக்கமானது என்றுகூட கூறலாம்.

சீர்த்திருத்த கருத்துகளை தனது கற்பனை திறனை உரமாக்கி பட்டுக்கோட்டை வடித்த பல பாடல்களை 1954 முதல் ஜனசக்தி இதழில் அச்சேற ஜீவா துணை நின்றார்.

அந்த இயக்கத்தின் நாடகமான கண்ணின் மணிகள் நாடகத்துக்கும் பட்டுக்கோட்டையார் பாடல்களை எழுதினார்.அப்போது எழுதிய
தேனாறும் பாயுது
செங்கதிரும் சாயிது
ஆனாலும் மக்கள்
வயிறு காயிது ...

- என்ற பாடல் வரிகள் பின்னாளில் திரைப்படப் பாடலாகியது.

திரைத்துறைக்குள் நுழைவதற்குள் பட்டுக்கோட்டை போட்ட எதிர்நீச்சல் கொஞ்சமல்ல. ஆனாலும், நம்பிக்கையோடு நின்ற அவருக்கு 1955-ல் வெளியான 'படித்த பெண்' திரைப்படத்துக்கு முதல் முதலாக பாடல் எழுதி முத்திரை பதித்தார்.

கவிஞனின் வாழ்நாளில் 56 படங்களுக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி 180 பாடல்களைத் தந்த மகா கவிஞன்.

அந்த காலகட்டத்தில் கொடிகட்டிப் பறந்த பாடலாசிரியர்கள், இசையமைப்பாளர்கள், படத் தயாரிப்பாளர்கள் என பலரையும் வியந்து போகவும், அவர் எழுதிய பாடல்களின் தாக்கத்தால் வியர்வை காணவும் செய்த மக்கள் கவிஞர்.

குட்டி ஆடு தப்பி வந்தால்
குள்ள நரிக்குச் சொந்தம்
 
குள்ளநரி மாட்டிகிட்டா
கொறவனுக்குச் சொந்தம்

தட்டுக்கெட்ட மனிதர் கண்ணில்
பட்டதெல்லாம் சொந்தம்
சட்டப்படி பார்க்கப்போனால்
எட்டடிதான் சொந்தம்

உனக்கெது சொந்தம்
எனக்கெது சொந்தம்
உலகத்துக் கெதுதான் சொந்தமடா
-என்ற பாடலை பார்த்த பிறகு இசை அமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் கண்ணீர் விட்டு அழுதார் என்றால் அதுதான் பாடலாசிரியருக்கு கிடைத்த வெற்றி.

நிமிர்ந்த நன்நடை நேர்கொண்ட பார்வை
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள்

என்ற பாரதியின் வரிகளுக்கு இலக்கணமாக தான் கொண்ட பொதுவுடமைக் கொள்கையின் நெறிகளோடு சற்றும் சமரசமில்லாத போக்கை பாடல்களாக படைத்ததோடு,இயக்கப் பணியிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர் பட்டுக்கோட்டை.

திரைப்படப் பாடல்களில் உழைக்கும் பாட்டாளி மக்களின் எதார்த்த நிலை, அவர்களின் எதிர்ப்பார்ப்புகள், ஆவேசங்களை மேலோங்கச் செய்து, தன்னெழுச்சி சக்திகளை வெளிக்கொணர்ந்தவர் பட்டுக்கோட்டை. தனது குடும்பம் விவசாயம், கால்நடை வளர்ப்பு என பண்ணை சார்ந்த தொழிலில் ஈடுபட்டதால் அதன் வலியை, துயரங்களை உணர்ந்தவர் என்பதுடன் அதே நேரம் உழைப்பால் கிடைக்கும் மகிழ்ச்சியை அணு அணுவாக அனுபவித்தும் தனது படைப்புகளில் அம்பலப்படுத்தியவர் பட்டுக்கோட்டை. 

இதையும் படிக்க | வாட்ஸ்ஆப் கணக்குகள் முடக்கமும் காரணங்களும்

பட்டுக்கோட்டையின் பாடல்கள் பொதுவுடமை சிந்தனைகளை தாங்கி வந்தாலும் அது பல நிலைகளில் திராவிட இயக்கங்களின் வளர்ச்சிக்கு வழிவகுத்தது என்று கூறலாம். திரைப்பட நடிகராக திகழ்ந்து, பின்னர் தமிழகத்தின் முதல்வராக பதவி வகித்தவர் எம்.ஜி.ஆர்.தான் வகிக்கும் முதல்வர் பதவிக்கான நாற்காலியில் நான்கு கால்கள் உள்ளது. அதில் ஒரு கால் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் என்று எம்.ஜி.ஆர் கூறியுள்ளார். 

கைக்குள் கிடைத்த செல்லிடப்பேசி போன்ற தொழில்நுட்பங்களை மனதில் கொண்டு நாம் ஏதோ வளர்ந்து விட்டதாக மார்த்தட்டிக் கொள்கிறோம். அதேநேரம் சமூகத்தில் புறையோடி வரும் அவலங்கள் குறித்து கவலைக் கொள்வதில்லை.

இன்றைய இளையோரில் பலரின் செயல் சமூகத்தில் கவலை அளிக்கவே செய்கிறது.

போதை, மூடநம்பிக்கை என ஏதோ சில காரணிகளால் இளையோரின் சிந்தை திசை மாற்றப் படுவதை மறுக்க முடியாது.

சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் சக்தியை வளரும் இளைய தலைமுறையினரால்தான் கொடுக்க முடியும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க வாய்ப்பில்லை.

அதனால்தான் மகாகவி பாரதி பாப்பாவுக்கு எழுதிய 'ஓடி விளையாடு பாப்பா' என்ற பாடலில் சமூகத்தில் நிகழும் அநீதிகளையும் அதனை எதிர்கொள்ள வேண்டிய தைரியம், நம்பிக்கையை விதைத்து எழுதினார்.

பாரதியின் வழியில் நின்று பட்டுக்கோட்டையார் சின்னப் பயலுக்கு எழுதிய பாடல் மூலம் இளைஞர்களுக்கு கூறிய வழிமுறைகள் எந்த காலத்துக்கும் பொருந்துவதாகவே அமைந்துள்ளன.

அரசிளங்குமரி என்ற படத்தில் இடம்பெற்ற 

சின்னப் பயலே சின்னப் பயலே சேதி கேளடா-நான் 
சொல்லப் போற வார்த்தையை நல்லா எண்ணிப் பாரடா...

என்ற பாடலில் 'ஆளும் வளரனும் அறிவும் வளரனும் அதுதான்டா வளர்ச்சி' என்பதோடு,மூட நம்பிக்கையிலிருந்து விடுபடவும், தனியுடமை கொடுமைகளையும், பொதுவுடமையின் அவசியத்தையும் பறைசாற்றுகிறார்.

அதேபோல, 'தூங்காதே தம்பி தூங்காதே' என்ற பாடலை ஏதோ தம்பிக்கு எழுதியதைப்போல இருந்தாலும் அரசியல், அதிகாரம், சமூகத்தில் பொறுப்பானவர்கள் அனைவருக்கும் எந்த காலத்திலும் பொருந்துவதாகவே கூறுகிறார்.

நீ தாங்கிய உடையும் ஆயுதமும்
பல சரித்திரக் கதை சொல்லும் சிறைக்கதவும்
சக்தி இருந்தால் உனைக்கண்டு சிரிக்கும்
சத்திரம்தான் உனக்கு இடம் கொடுக்கும்.


சிலபொறுப்புள்ள மனிதரின் தூக்கத்தினால் -
பலபொன்னான வேலையெல்லாம் தூங்குதப்பா

என பாடலில்  இடம்பெற்றுள்ள அத்தனை வரிகளும் மக்களை விழிப்படையவே சொல்லப்பட்டது.

காடு வெளஞ்சென்ன மச்சான்- நமக்கு
கையும் காலும் தானே மிச்சம்

என விளிம்பு நிலை வாழ் மக்களின் நிலை குறித்த பாடிய பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள் யாவும், திருவள்ளுவன், ஒளவை போன்ற  பெரியோர் வாய்மொழிப்   போல பாடப் புத்தகங்களில்  கட்டாயப் பாடமாக்கப்பட வேண்டியது காலத்தின் அவசியம் என்பதை உணர்வோம். 

மக்களின் உணர்வுகளை, பிரச்னைகளை, தேவைகளை கலைத்துறையில் சமரசமில்லா கலைஞனாக நின்று பதிவு செய்த பெரும் கவிஞனுக்கு அவரது  நினைவு நாளில் மரியாதை செலுத்துேவோம். 

[அக். 8 - பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் நினைவு நாள்]

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com