தர்மசங்கடத்தில் அரவிந்த் கேஜரிவால்!

 ஏனைய எதிர்க்கட்சிகளுடன் இணை ந்து பாரதிய ஜனதா கட்சியை எதிர்ப்பதைத் தவிர்த்து வந்த ஆம் ஆத்மி கட்சி இப்போது எதிர்க்கட்சிகளின் கூட்டணி முயற்சிக்கு ஆதரவாகத் திரும்பி இருப்பது
தர்மசங்கடத்தில் அரவிந்த் கேஜரிவால்!

 ஏனைய எதிர்க்கட்சிகளுடன் இணை ந்து பாரதிய ஜனதா கட்சியை எதிர்ப்பதைத் தவிர்த்து வந்த ஆம் ஆத்மி கட்சி இப்போது எதிர்க்கட்சிகளின் கூட்டணி முயற்சிக்கு ஆதரவாகத் திரும்பி இருப்பது, புதிய அரசியல் திருப்பம். காங்கிரஸ் - பாஜக இரண்டிற்குமே மாற்றாக, புதிய மாற்று அரசியலை முன்வைத்துக் களமிறங்கிய அந்தக் கட்சியின் புதிய நிலைப்பாட்டை காலத்தின் கட்டாயம் என்றுதான் கூற வேண்டும்.
 ஊழலுக்கு எதிரான அண்ணா ஹசாரே இயக்கத்தின் நீட்சியாக உருவான ஆம் ஆத்மி கட்சி, அதன் தலைவர் அரவிந்த் கேஜரிவாலின் செல்வாக்கின் அடித்தளத்தில் உருவான கட்சி. ஊழலுக்கு எதிரான கோஷத்துடன் அரவிந்த் கேஜரிவால் தலைமையில் களமிறங்கிய ஆம் ஆத்மி கட்சி, தில்லியைக் கைப்பற்றியதும், சென்ற ஆண்டு பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும் வெற்றியைப் பெற்று ஆட்சியைப் பிடித்ததும், பாஜக உள்ளிட்ட எல்லா கட்சிகளையும் திகைக்க வைத்தன.
 2015, 2020 தில்லி சட்டப்பேரவைத் தேர்தல்களிலும், 2022 பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலிலும் வெற்றி பெற்றபோது, "ஊழலுக்கு இடமளிக்காத ஆட்சி' என்பதுதான் அந்தக் கட்சி வழங்கிய வாக்குறுதி. இப்போது அந்தக் கட்சி பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு தர்மசங்கடத்தில் சிக்கி இருப்பது யாருமே எதிர்பார்க்காத திருப்பம்.
 கடந்த ஆண்டு ஜூலை மாதம் தில்லி அரசின் அமைச்சராக இருந்த சத்யேந்திர ஜெயின் சட்டவிரோத பணச் சலவைக் குற்றச்சாட்டில் சிக்கி, அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். இன்னும் சிறையில் தொடர்கிறார். பஞ்சாபின் முதல்வராகப் பதவி ஏற்றபோது, பகவந்த் மான் ஊழல் குற்றச்சாட்டைப் பதிவு செய்ய தொலைபேசி எண்ணை அறிவித்தபோது, பெரும் வரவேற்பைப் பெற்றது. இப்போது, பஞ்சாப் மாநில அமைச்சர்கள் பலர் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியிருக்கிறார்கள்.
 இப்போது ரத்து செய்யப்பட்டுவிட்ட தில்லி கலால் கொள்கையை உருவாக்கி, நடைமுறைப்படுத்துவதில் காணப்பட்ட முறைகேடுகள் குறித்த விசாரணைக்காக தில்லியின் துணை முதல்வர் மனீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டிருக்கிறார். கடந்த ஆண்டு ஜூலை மாதம், தில்லியில் துணைநிலை ஆளுநர் விமர்சனத்துக்குரிய தில்லி அரசின் கலால் கொள்கை குறித்து சிபிஐ விசாரணைக்கும் உத்தரவிட்டார். அந்தப் பிரச்னை இப்போது விஸ்வரூபம் எடுத்திருக்கிறது.
 மதுக் கடைகளுக்கும், மது வகைகளைக் கொள்முதல் செய்வதற்கும் உரிமம் வழங்குவதில் விற்பனையாளர்களிடமிருந்து அதிகாரிகள் லஞ்சம் வாங்கினார்கள் என்பதுதான் அடிப்படைக் குற்றச்சாட்டு. உரிய அனுமதி அல்லது உத்தரவு பெறாமல், பலருக்கு உரிமக் கட்டணம் முற்றிலுமாகத் தள்ளுபடி செய்யப்பட்டது. வேறு சிலருக்குக் குறைக்கப்பட்டது.
 குற்றச்சாட்டு அத்துடன் நின்றுவிடவில்லை. அதற்குப் பின்னால் அதிகாரிகளும், அரசியல்வாதிகளும், மதுத் தயாரிப்பு நிறுவனங்களும் இருந்தன என்பதுதான் விவகாரம் பிரச்னையாவதற்கே காரணம். தில்லி மது விற்பனை கலால் கொள்கையில் செய்யப்பட்ட மாற்றங்கள் காரணமாகப் பெறப்பட்ட பெரும் லஞ்சப் பணம் பஞ்சாப், கோவா சட்டப்பேரவைத் தேர்தல்களுக்கு செலவிடப்பட்டிருக்கிறது என்பதற்கான ஆதாரங்களின் அடிப்படையில்தான் விசாரணை சூடுபிடித்தது.
 அந்த விசாரணையின் நீட்சிதான் துணை முதல்வராக இருந்த மனீஷ் சிசோடியாவின் கைதும், முதல்வர் அரவிந்த் கேஜரிவாலிடம் சிபிஐ நடத்திய 9 மணிநேர விசாரணையும். தில்லி கலால் கொள்கை வழக்கில், தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர் ராவின் மகளும், முன்னாள் எம்.பி.யும், இப்போது தெலங்கானா சட்ட மேலவை உறுப்பினருமான கவிதாவும் சம்பந்தப்பட்டிருப்பது இன்னொரு திருப்பம். முதல்வர் கேஜரிவாலைப் போலவே அவரும் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார்.
 முதல்வர் அரவிந்த் கேஜரிவாலைப் பொருத்தவரை அவர் நல்ல நிர்வாகி என்பதைவிட புத்திசாலித்தனமான அரசியல்வாதி. இல்லையென்றால், அண்ணா ஹசாரேயின் ஊழலுக்கு எதிரான இயக்கத்தில் முன்னிலை வகித்த யோகேந்திர யாதவ், பிரசாந்த் பூஷண் ஆகியோருடன் ஆம் ஆத்மி கட்சியைத் தொடங்கி, அடுத்த சில மாதங்களில் அவர்களை ஓரங்கட்டி வெளியேற்றி கட்சியைத் தனது முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்க முடியுமா?
 2013 சட்டப்பேரவைத் தேர்தலில் இரண்டாவது பெரிய கட்சியாக வெற்றி பெற்று, காங்கிரஸின் ஆதரவில் தில்லி முதல்வரானார் அரவிந்த் கேஜரிவால். அவர் கொண்டுவந்த "ஜன் லோக்பால்' மசோதாவுக்குக் காங்கிரஸ் ஆதரவளிக்கவில்லை என்பதால், 49 நாள்கள் மட்டுமே ஆட்சியில் இருந்த ஆம் ஆத்மி கட்சி பதவி விலகியது.
 குடியரசுத் தலைவர் ஆட்சிக்குப் பிறகு 2015-இல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில், 70 இடங்களில் 67 இடங்களுடன் வரலாற்று வெற்றியை ஈட்டி, மீண்டும் முதல்வரானார் அரவிந்த் கேஜரிவால். ஐந்தாண்டுகளுக்குப் பிறகு நடந்த 2020 சட்டப்பேரவைத் தேர்தலிலும் 70 இடங்களில் 62 இடங்களை வெல்ல முடிந்தது என்பது மட்டுமல்ல, 2017 பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் 20 இடங்களில் மட்டுமே வென்றிருந்த ஆம் ஆத்மி கட்சி, 2022 தேர்தலில் 92 இடங்களைப் பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியது. குஜராத்தில் 12.9% வாக்குகள் பெற்று சட்டப்பேரவையில் 5 இடங்களையும் கைப்பற்றியது.
 2013-இல் தேர்தல் ஆணையத்தில் அரசியல் கட்சியாகப் பதிவு செய்து கொண்ட ஆம் ஆத்மி கட்சி, இப்போது தேசியக் கட்சி அந்தஸ்தைப் பெறும் அளவுக்கு உயர்ந்திருக்கிறது. இணையவழி மூலம் உறுப்பினர் சேர்க்கை, வெளிப்படையான வங்கிப் பரிமாற்றத்தின் மூலம் மட்டுமே கட்சிக்கு நன்கொடை என்று பல புதுமைகளை ஆம் ஆத்மி கட்சி அறிவித்தபோது நாடு தழுவிய அளவில் அதற்கு வரவேற்பு பெருகியது.
 முதல்வர் அரவிந்த் கேஜரிவாலின் அரசியல் செல்வாக்கை நிலைநிறுத்துவதில் அவரது இரு கரங்களாகச் செயல்பட்ட துணை முதல்வர் மனீஷ் சிசோடியாவுக்கும், அமைச்சராக இருந்த சத்யேந்திர ஜெயினுக்கும் பெரும் பங்குண்டு. நிதி, கல்வி, பொதுப்பணித் துறை உள்ளிட்ட முக்கியமான துறைகளை மனீஷ் சிசோடியாவாலும், உள்துறை, சுகாதாரம், மின்சாரம், தண்ணீர், தொழில், கலால் உள்ளிட்டவை சத்யேந்திர ஜெயினாலும் நிர்வகிக்கப்பட்டன. சத்யேந்திர ஜெயினின் கைதுக்குப் பிறகு அவரது துறைகளையும் சேர்த்து மனீஷ் சிசோடியா 18 துறைகளை கவனித்து வந்தார்.
 மனீஷ் சிசோடியாவும், சத்யேந்திர ஜெயினும் இல்லாமல், கவச குண்டலங்களை இழந்த கர்ணனைப்போல நின்று கொண்டிருக்கிறார் முதல்வர் அரவிந்த் கேஜரிவால். அரசியல் ரீதியாகப் பின்னடைவுகளை எதிர்கொள்வதில் அவர் வல்லவராக இருந்தாலும், தில்லி அரசின் நிர்வாகம் முறையாக நடக்காவிட்டால், "திறமையான நிர்வாகம்' செய்கிற அவரது பிம்பம் உடைந்துவிடும். அதுவே அரசியல் ரீதியிலான பின்னடைவுக்குக் காரணமாகக் கூடும்.
 காங்கிரஸின் வீழ்ச்சியில்தான் ஆம் ஆத்மி கட்சியின் வளர்ச்சி சாத்தியமாகியது என்பதால், அந்தக் கட்சியுடன் எந்தவிதத் தொடர்பும் வைத்துக் கொள்வதைத் தவிர்த்து வந்தார் அரவிந்த் கேஜரிவால். காங்கிரஸுடனான கூட்டணியால் தனது வாக்கு வங்கி காங்கிரஸுக்கு மடைமாறும் ஆபத்து இருப்பது அவருக்கு நன்றாகவே தெரியும். ஆனாலும், காங்கிரûஸ இனிமேலும் பகைத்துக்கொள்ள முடியாது என்கிற நிலைமைக்கு ஆம் ஆத்மி கட்சி இப்போது தள்ளப்பட்டிருக்கிறது.
 இதற்கு முன்னர், காங்கிரஸின் அழைப்பை ஏற்று நாடாளுமன்றத்தில் நடக்கும் எந்தவொரு எதிர்க்கட்சிக் கூட்டத்திலும் ஆம் ஆத்மி கட்சி கலந்துகொண்டதில்லை. இப்போது கலந்து கொள்கிறது. அவதூறு வழக்கில் ராகுல் காந்தி இரண்டாண்டு சிறைத் தண்டனை பெற்றபோது, அவருக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டார் முதல்வர் அரவிந்த் கேஜரிவால். அதேபோல, அரவிந்த் கேஜரிவாலை சிபிஐ விசாரணைக்கு அழைத்தபோது காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அவரை அழைத்துப் பேசினார்.
 கடந்த மாதம் "மோடியை அகற்றுவோம், தேசத்தைக் காப்பாற்றுவோம்' (மோடி ஹடாவ், தேஷ் பச்சாவ்) என்கிற கோஷத்துடன் தில்லி ஜந்தர் மந்தரில் தனது பிரசாரத்தைத் தொடங்கினார் முதல்வர் அரவிந்த் கேஜரிவால். பாஜக, காங்கிரஸ் கட்சிகளல்லாத எட்டு மாநில முதல்வர்களை அவர் விருந்துக்கு அழைத்தது, ஊடகங்களில் கசிந்துவிட்டது.
 தில்லி கலால் கொள்கை விவகாரத்தில் விசாரணையும், தனது மிக முக்கியமான இரண்டு நம்பிக்கைக்குரிய தலைவர்களின் கைதும் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலை மிகப் பெரிய நெருக்கடிக்கு உள்ளாக்கி இருக்கின்றன. சிசோடியா கைதில் உச்சநீதிமன்றம் தலையிட மறுத்திருப்பதும், சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம்.கே. நாக்பால் அவரது கைதை உறுதிப்படுத்தியதும், குற்றச்சாட்டில் அடிப்படை ஆதாரங்கள் இருப்பதை உறுதி செய்கின்றன.
 ஊழலுக்கு எதிரான இயக்கத்தின் மூலம் மக்கள் செல்வாக்கைப் பெற்று இப்போது தேசிய கட்சியாக உயர்ந்திருக்கும் ஆம் ஆத்மி கட்சி, ஊழல் குற்றச்சாட்டில் சிக்கி இருப்பது என்பது மிகப் பெரிய சோகம். அதிரடி அரசியலுக்குப் பெயர்போன முதல்வர் அரவிந்த் கேஜரிவால், ஊழல் குற்றச்சாட்டை எப்படி எதிர்கொள்ளப் போகிறார் என்பதும், மனீஷ் சிசோடியாவும், சத்யேந்திர ஜெயினும் இல்லாமல் தில்லி அரசு நிர்வாகத்தை எப்படி கையாளப் போகிறார் என்பதும், அவரது வருங்காலத்தையும், ஆம் ஆத்மி கட்சியின் வருங்காலத்தையும் தீர்மானிக்கும்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com