திணை பேதமற்ற பேரன்பில் முகிழ்த்த கவிதைகள்

சுமித்ரா சத்தியமூர்த்தியின் ‘ஆசை அகத்திணையா’ என்னும் தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் கவிதைகள் அவரது உண்மையான வாழ்பனுபவங்களின் உணர்வுகளிலிருந்தே முகிழ்த்தவை.
திணை பேதமற்ற பேரன்பில் முகிழ்த்த கவிதைகள்

’உண்மையான  கவிதை  எது?’  என்ற  தேடலில் ஒரு வாசகனோ  படைப்பாளியோ ஒருபோதும்  நிறைவை கண்டுகொள்ள முடியாது. இந்தப்  பூவுலகில்  இதுநாள் வரையில் தோன்றியிருக்கும் அத்தனை மகாகவிகளின் கவிதைகளை வாசித்து முடித்தாலும் கவிதை குறித்த மெய்யான  பேருண்மையை நாம் உணர்ந்து விட இயலாது. ஆனால் நமது  அனுபவங்களையும்  உள்ளுணர்வின்  துடிப்புகளையும் எழுதியெழுதி அதைப்  பின்தொடர்கையில் கவிதையின் அண்மையை தர்சித்து விட முடியும். ஆனால்  கவிதையை நெருங்கிச் செல்ல வெற்று முயற்சிகளால் மட்டும்  இயன்று விடுவதில்லை. ஒருவர் அவரது இதயத்தை தகுதிப்படுத்த வேண்டும்.  தந்திரமும் சூழ்ச்சியும் பேராசையும் காமமும் அற்ற வேளைகளில் இதயத்தின்   தூய்மைமிகு சந்நிதானத்தில் கவிதை பிரசன்னமாகிறது. வாசிப்பவனையும்  அதே மனநிலைக்கு இட்டுச் செல்கிறது கவிதை. நுட்பமான உணர்வுகளை  ஒருவருக்குள் கடத்துவதில் இசைக்கு நிகரானது அது.

சுமித்ரா சத்தியமூர்த்தி படைப்பாக்கத்தில் அண்மையில் வெளிவந்திருக்கும் ‘ஆசை அகத்திணையா’ என்னும் தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் கவிதைகள் அவரது உண்மையான வாழ்பனுபவங்களின் உணர்வுகளிலிருந்தே முகிழ்த்தவை. இந்தத் தொகுப்பின் முன்னுரையின் தொடக்க வரியில் அவரது கவிதைகள் குறித்து அவரே சுயவிமர்சனம் செய்துகொள்ளும் அறம் சார்ந்த துணிவுடன் அவரின் முதல் கவிதைத் தொகுப்பை வெளியிட்டிருக்கிறார்.

ஆனபோதிலும் இந்தத் தொகுப்பின் கவிதைகள் அவருடைய உண்மையான உணர்வு வீச்சின் வெளிப்பாடாக, பாசாங்கற்றும் ஒளிவுமறைவற்றும்  வெள்ளந்தியான கவி மனதைத் திறந்து காட்டுகிறது. 

கால் நனைக்க கானல் நீராவது

காலத்தில் வருமா என்றே

காத்திருந்தவளுக்கு தெரியாது…

உயிர் நனைக்கும் ஓடையொன்றை

உறவுகள் தருமென்று.

வாழ்க்கை எப்பொழுதும் இவ்வகையில்தான் நிகழ்கிறது. அதன் புதிர்கள் ஒவ்வொன்றாக விலக விலக நாம் எதிர்பாராத ஒளித்திறப்புகளின் முன்னிலையில் புதிய திசைகள் திறந்துகொள்கின்றன. மேற்குறிப்பிட்ட  கவிதை வரிகளுக்கு முன்பாக ஒரு கதையாடல் நிகழ்த்தப்படுகிறது(பஞ்சம் பிழைக்கப் போனவள் கடும் பாலையொன்றில் சிக்குண்ட கதை) என்ற போதிலும் நம் அனுபவ உணர்வு சார்ந்து  நமது போக்கில் புரிந்துகொள்ளும் சுதந்திரத்தை இலக்கியம் நமக்கு தந்திருக்கிறது. இக்கவிதை வரிகளை மீண்டும் மீண்டும் வாசித்துப் பார்க்கையில் அவற்றினூடே அதிர்வுறும் இசைத் தன்மை மிக்க ரிதம் இந்த முழுக் கவிதையையும் அழகாக்கிவிடுகிறது.

இத்தொகுப்பில் பல அகம் சார்ந்த கவிதைகள் வைக்கப்பட்டிருக்கின்றன. அவை உள்ளீடற்ற வெறும் காதல் கவிதைகள் என்றளவில் நீர்த்துப் போகாமல் அதன் உள்ளார்ந்து இவர் பேசும் அரசியல் வழியாக அந்தக் கவிதைகள் தனித்தன்மை பெறுகின்றன. 

மதுரைவீரனிடத்து

மதியிழந்து கிடப்பவளுக்கு 

மாயக்கண்ணனுன் லீலைகளிடத்தில்

மனம் லயிப்பதில்லை கண்ணா!

ஆண்டாள், மீரா மற்றும் கோபியர்களின் வைதீக மரபுக்கு மாற்றாக சுமித்ரா முன்வைக்கும் குலதெய்வ மரபு என்பது நம் மண்ணின் அழியாப் பெருமையை நிலைப்படுத்த மேற்கொள்ளும் முயற்சி. பக்தியையோ இறைவன் மேல் வரித்துக்கொள்ளும் காதலையோ சொல்வதல்ல இந்தக் கவிதை. மதுரைவீரன் மாயக்கண்ணன் என்பதெல்லாம் உருவகங்கள்தான். நம் மண்ணின் ஆதி பழமையான பண்பாட்டுக்கூறுகள் மேல் தனக்கிருக்கும் ஒப்புரவு பற்றி அவர் குறித்துக்காட்ட அத்தகைய உருவகங்களைப் பயன்படுத்திக்கொண்டார்.

கவிதையின் கட்டமைப்பு குறித்து எந்தவொரு முன்திட்டமும் சுமித்ரா கொண்டிருப்பதில்லை. தன்னியல்பாக அவருக்குள் எல்லாம் நிகழ்ந்து விடுகிறது. கவிதைக்குள் வலிந்து தத்துவங்களை அவர் திணிப்பதுமில்லை. காந்தத் துண்டை சூழ்ந்து இரும்புத் துகள்கள் திரள்வது போல அவர் மனதிற்குள் அழகான சொற்கள் சேர்க்கையடைந்து அது கவிதையாகச் சமைந்துவிடும் தருணத்தில் அது இயல்பாக தத்துவச் சாயல் கொள்கிறது.

சாம்பல் பரப்பில் கடைசியாக எஞ்சிய ஒற்றை நெருப்புத் துகள் காற்றின் விசிறலில் பெருங்கனலாக மூண்டு அது தன் உயிர் மீட்டுக்கொள்வதுபோல சருகாகிக் கொண்டிருக்கும் இலைக்குள் மீந்த ஒரு துளி ஈரத்திலிருந்து தன்னைப் புனரமைத்துக்கொள்ளப் போராடும் அந்த இலையின் பெருமுயற்சியோடு கூடிய நம்பிக்கையைப் பற்றி பேசும் கவிதை அவரவர் வாழ்பனுபவம் சார்ந்து தனித்தனி தத்துவ தர்சனங்கள் அளிப்பவை.

ஒட்டியிருக்கும் உயிர்துளிர்த்து

உருவாகும் வரை …

உலர்ந்து சருகாகாமல்

உள்ளிருக்கும் ஈரம் காக்க வேண்டுமென்பதே

அவ்வொற்றை இலையின் 

வேண்டுதலாய் இருந்திருக்கும்! 

இத்தொகுப்பில் அகம் சார்ந்த கவிதைகளுக்கு பெரும்பான்மை வாய்ப்பு வழங்கியிருக்கிறார் கவிதாயினி. ஆனால் அவை முற்றிலும் மாறுபட்ட  நுண்ணனர்வு தொனிக்க படைப்பாக்கம் கொண்டிருக்கின்றன. ஆண் எழுதும் அகம் சார்ந்த கவிதையும் பெண் எழுதும் அகம் சார்ந்த கவிதையும் ஒன்றல்ல. உலகம் முழுவதும் இப்பொழுது பெண்மொழி என்பது தனித்து இயங்கும் வகையில், எல்லா தேசங்களிலும், பெண் படைப்பாளிகளால் கட்டமைக்கப்பட்டு, அவர்களது உணர்வுகளை தயக்கமற்று வெளிப்படுத்துகிறார்கள். இது மேற்கு நாடுகளில் இந்த நூற்றாண்டில்தான் பரவலான கவனம் பெற்று வருகிறது. நம் சங்கத் தமிழ் பெண்பாற் புலவர்கள் இத்தகைய கவிதைகளை பல நூற்றாண்டுகளுக்கு முன்பே சாதித்துவிட்டார்கள். பெண் தன்னை சற்று பூடகமாகவே வெளிப்படுத்தும் தன்மை கொண்டவள். சுமித்ரா ஒரு கவிதையில் சொல்வது போல: 'சொல்லாமல் இருப்பதன் அழகும் அதுதான்' ஆனால் அதன் பொருளை விரித்தால் பெருங்கடல்களையும் கடந்து நீள்பவை. 

மனதில் பெரும் 

மலைக் குறத்தி எனும்

திமிர் கொண்டே

திரிந்தலைகின்றேன்

மலை நெடுகிலும்…

மழை இரவினில் 

வரும் கனவு முழுவதிலும்

இதில் மலைக் குறத்தி என்பது மிகவும் அழகான, அதே சமயம் மிக நுட்பமான பயன்பாடு. பெண் மரபுக் கூறுகளின் உள்ளார்ந்த இடுக்கில் ஒளிந்துகொண்டிருந்த தொல் பழைமையான ஒரு  பேராற்றல் இந்தக் கவிதைக்குள் மலைக்குறத்தியாக வெளிப்பட்டிருக்கிறது. மலைக்குறத்தி என்பவள் கட்டற்ற பேராற்றலின் குறியீடு. ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் அந்த மலைக்குறத்தி இருக்கிறாள். யாரும் அறியவியலா அவளது ஏகாந்தத்தின் தனிமையில் அவள் மலைக்குறத்தியாக திரிந்தலைகிறாள். மலைக்குறத்தி சக்தி மிக்கவள்; அவள் சுதந்திரமானவள். அவளது பேராற்றலே அவளுக்கு விடுதலை உணர்வை வழங்கியிருக்கிறது. பெண்ணுக்குள் இருக்கும் காருண்யத்தின் காரணத்தாலே அவள் தனக்குள்ளிருக்கும் மலைக் குறத்தியை தன் இணையரிடம் வெளிப்படுத்திக் காட்டுவதில்லை. ஒரு பெண் தன்னுடைய  ஆவலின் முழுமையான  பேராற்றலை வெளிப்படுத்திக் காட்டினால் எந்த ஒரு ஆணும் அந்த சக்தி நிலையின் சந்நிதானத்தில்  அவன் தன் இயலாமையை உணர்ந்து அவள் பாதம் பணிந்து விடுவான். அவளுக்குள் இருக்கும் மலைக்குறத்தி அத்தகைய மாபேராற்றல் மிக்கவள். 

இதை இவரது இன்னொரு கவிதையும் நிறுவுகிறது. மானிடத் தன்மையின் இருப்பு என்பது அன்பின் இருப்பு. அதுவே இவ்வையகத்தை அழகாக்குகிறது. இயற்கைப் பேரிருப்பின் ஒவ்வொரு அசைவும் அன்பின் பெருவிழைவோடு இயங்கிக்கொண்டிருக்கிறது. ஒரு பூ மலர்ந்து, அதன் நறுவாசத்தால் தேனீயை அழைக்கிறது, கதிரவன் ஒளிக்கரங்களால் பூவுலகைத் தழுவுகிறது, மென்காற்று எதிர்ப்படுவோர் இதழ்கள் தோறும் முத்தமிட்டு அணைக்கிறது. ஆனால் மனித சமூகம் தன் அன்பின் இருப்பை வெளிப்படுத்திக்கொள்ள அச்சமும் தயக்கமும் கொண்டிருக்கிறது, ஒவ்வொரு இனக்குழுவும் ஏற்படுத்தி வைத்திருக்கும் செயற்கையான பண்பாடு இயற்கைக்கு எதிர்திசையில் இயங்குகிறது. அகங்காரமும் சூழ்ச்சியும் ஒளிவுமறைவும் உடைய மக்கள் திரள்  முன்னிலையில் தன் இருப்பு முழுமையும் பேரன்பால் ததும்பிப் பிரவகிப்பதை அறிக்கையிட ஒரு கவிஞரால் மட்டுமே இயலும். 

எனக்கென்று ஏதேனுமொரு

அடையாளம் சொல்லச் சொல்லி கேட்கிறான்…

கண்கொள்ளும் மையுடனும்

கைகொள்ளா மையலுடனும்

இருப்பேனென்று சொல் !

இது கண்ணன் மேல் ஆண்டாள் கொண்ட பெரு வேட்கைக்கு நிகரான அன்பின் வெளிப்பாடு. இந்தச் சிறு கவிதைக்குள் தலைவன், தலைவி மற்றும் தோழி ஆகிய மூன்று கதாபாத்திரங்கள் பங்காற்றும் கலைச்செயல்பாடு நிகழ்ந்திருக்கிறது.

சுமித்ராவின் கவிதை வெளிக்குள் எத்தகைய பாடுபொருளும் தயக்கமற்று இயங்குகிறது. இலக்கியப் படைப்பாக்கத்திற்காக  அவர் கொண்டிருக்கும் நேர்மை குறித்து வியக்காமல் இருக்க முடியவில்லை. உடல், மனம் பற்றி பேசவும் எழுதவும் மிகுந்த பக்குவமும் துணிவும் தேவை. பகவத் கீதையின் பதின்மூன்றாம் அத்தியாயமாகிய சேத்ர சேத்ரஞ்க்ய விபாக யோகம் உடல் , மனம் மற்றும் ஆன்மா பற்றி விரிவாகப் பேசுகிறது. கீதையின் ஏழாம் அத்தியாயத்தில் ஒரு ஸ்லோகம்  நமக்கு தெரிவிப்பது: தர்மா விருத்தோ பூதேஷு  காமோஸ்மி. அதாவது, 'தர்மத்திற்கு மாறுபடாத  போகப் பரவசத்தில் இறைவன் வீற்றிருக்கிறார்'’ என்கிறது கீதை. கவிஞர் அதை நவீன நடையில் இங்கு தருகிறார்:

உடல் சார்ந்தியங்கும் ஆண்மையும் 

மனம் சார்ந்தியங்கும் பெண்மையும்

ஒத்திசையும் புள்ளியில் இருக்கும்

உறவிற்கான சூட்சுமம்!

எத்தகைய நுட்பமான கவிதை வெளிப்பாடு இது. ஆண் எப்பொழுதும் உடல் மையமானவன். அவன் மூளையால்  மட்டுமே புரிந்துகொள்பவன். பெண் இதயத்தால் புரிந்துகொள்பவள். இதயம் என்று  இங்கு குறிப்பிடப்படுவது உடலியங்கியல் சார்ந்த ஜட இதயம் அல்ல. ரமணர் போன்ற மகரிஷிகள் குறிப்பிடும் ஆன்மீக இதயம் ( Spiritual Heart ). இது ஜட இதயத்திற்குப் பின்புறமாக ஒளி வடிவில் உள்ளது. அன்பும் பக்தியும் இங்கிருந்து முகிழ்க்கிறது. அன்பைப் பிரவகிக்கும் அனாகதம் என்னும் குண்டலினி மையம் இருக்கும் இந்த ஒளி வடிவ இதயம் இருக்குமிடத்திலிருந்துதான் மீராவின் காதலும் ஆண்டாளின் விழைவும் மற்றெல்லாப் பெண்களின் காதலும் இங்கிருந்தே பிரவாகமெடுக்கிறது. தன் சிசுவிற்கான கருணையும் தன் இணைவனுக்கான  காமமும் அவளுக்கு ஒரே மையத்திலிருந்து சுரக்கிறது. ஆண் உடல் சார்ந்த பிரக்ஞை மட்டுமே அதிகம் கொண்டவன் ஆதலால் அவன் அன்பில் மேலோட்டமானவன். பெண் இயல்பில் மனம் சார்ந்து அதிகம் இயங்குபவள் ஆதலால் அவள் அன்பைப் பொருத்த விஷயத்தில் பெருங்கடலை விஞ்சி நிற்பவள். அதனால்தான் மிகவும் பேரழகான ஒரு பெண் அழகற்ற ஒரு ஆண்மகனை அன்பிற்காக மட்டுமே மணம் புரிந்து அவனோடு மகிழ்ச்சியாக அவளால் வாழ முடிகிறது. ஆனால் ஒரு ஆண், அழகற்ற பெண்ணோடு வாழ்தலை அவன் கொடுப்பினையற்ற வாழ்க்கையாக நினைத்து நொந்துகொள்கிறான். 

உடல், மனம் சங்கமம் நிகழ்கையில் அவர்கள் ஆன்மா ஒருங்கு சேர்ந்து ஒளிர்வதைக் குறித்த சூட்சுமத்தை தன் அழகான கவிதைக்குள் பொதிந்து வைத்த சுமித்ராவின் உள்ளுணர்வையும் இதை கவிதையாக்கத் துணிந்த அவரது கவியாளுமையையும் கண்டு நான் வியக்கிறேன்.

இந்தத் தொகுப்பின் கவிதை வரிகளின் உழவுசால்கள் நெடுகிலும் இவர் விதைத்திருப்பது அன்பை. அன்பின் அனைத்து வடிவங்கள் கொண்டும் கவிதைகள் நெய்யப்பட்டிருக்கின்றன. சக மனிதர்கள் , மரங்கள், அணில், குருவி, மலர்கள், மழை, காற்று, வெயில் என திணை பேதமற்று யாவற்றின் மீதும் இவர் கொண்டிருக்கும் பெருங்காதல் இவர் மனதை கவித்துவப்படுத்தியிருக்கிறது. 

"இவளுக்கு என்னவாயிற்றோ”  என்பதாய்

கீச்சிடும் அணிலின் குரலும்

”இத்தனை நேரம் என்னவாயிற்றுனக்கு” என்பதாய்

சலும்பும் தவிட்டுக் குருவியின் குரலுக்குமாய்

வேற்றுமை இருப்பினும்

கொஞ்சுவதற்கோ கோவம் கொட்டவோ

தேடப்படுகிறோம்

மருதம் மற்றும் நெய்தல் நிலப்பரப்பின் அத்தனை நறுவாசங்களும் சுமித்ராவின் கவிதை வெளிக்குள் கதாபாத்திரங்களாக வந்துபோகின்றன.

இது இவரது முதல் தொகுப்பு.சின்னச் சின்னக் குறைபாடுகள் இல்லாமலில்லை: நெடுங்கவிதைகளில் கவித்துவத்தைக் காட்டிலும் கருத்து முந்திக்கொண்டு நிற்பது, விரித்தெடுக்க வாய்ப்பிருந்தும் சிலவற்றை குறுங்கவிதைகளாக விட்டுச் சென்றிருப்பது ஆகிய குறைபாடுகளை விழிப்புணர்வோடு செப்பம் செய்ய வேண்டும்.

ஆயினும் இவரது தனித்தன்மை மிக்க படைப்பாற்றல் முயற்சி, பண்பாட்டின் மேல் கொண்டுள்ள அக்கறை, நுட்பமான மன உணர்வுகளை தயக்கமற்று வெளிப்படுத்துவதில் நேர்மை ஆகிய குண இயல்புகளால் இவர் பேரிலக்கியம் நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறார் என்னும் நம்பிக்கையளிக்கிறது.

[ஆசை அகத்திணையா(கவிதைத் தொகுப்பு)
-க.சுமித்ரா சத்தியமூர்த்தி, 60/1, JS இல்லம், சுப்பையாபிள்ளை தெரு,
பட்டுக்கோட்டை(அஞ்சல்), தஞ்சாவூர் மாவட்டம்.
கைபேசி: 97897 43053, பக்கங்கள்: 64, விலை : ரூ.100]

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com