2023-ல் நிறைவுபெற்ற சின்னத்திரை தொடர்கள்!

மக்கள் மனங்களைக் கவர்ந்து 2023ஆம் ஆண்டில் வெற்றிகரமாக நிறைவு பெற்ற சின்னத்திரை தொடர்கள் குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்.
2023-ல் நிறைவுபெற்ற சின்னத்திரை தொடர்கள்!

நாள்தோறும் வீட்டின் வரவேற்பறைக்கே வந்து, மக்கள் மனங்களைக் கொள்ளையடித்து வைத்திருந்த நெடுஞ்தொடர்கள் சில 2023ஆம் ஆண்டில் வெற்றிகரமாக நிறைவுபெற்றுள்ளன.

நாள்தோறும் சின்னத்திரைத் தொடர்களுக்கான ரசிகர்கள் அதிகரித்துக்கொண்டேதான் இருக்கின்றனர்.  

அந்த வகையில், சின்னத்திரை தொடர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, சின்னத்திரை தொடர்களுக்கான பார்வையாளர்களும் அதிகரித்துவிட்டனர். தற்போது இளம் தலைமுறையினரையும் கவரும் வகையில் பல்வேறு அம்சங்களைக் கொண்டு சின்னத்திரை தொடர்கள் எடுக்கப்படுகின்றன. 

ஒருசில தொடர்களில் சினிமாவுக்கு இணையாகவும் காதல், நையாண்டி, சண்டைக் காட்சிகள் இடம்பெறுகின்றன. சின்னத்திரையில் மக்கள் மனங்களைக் கவர்ந்து அதன்மூலம் வெள்ளித்திரை வாய்ப்பு பெறும் கலைஞர்களின் எண்ணிக்கையும் தற்போது அதிகரித்துவிட்டது.  

சொல்லப்போனால், சினிமா நட்சத்திரங்களுக்கு இணையாக சின்னத்திரை தொடர்களில் நடிக்கும் நடிகர்களுக்கும் ரசிகர் பட்டாளம் உருவாகியுள்ளது. இதனால், ஒவ்வொரு தொடர் முடியும்போதும் அது சமூகவலைதளங்களில் சின்னத்திரை ரசிகர்களால் அதிகம் விவாதிக்கப்படுகிறது. 

சில தொடர்கள் முடிவதால் வருத்தமும் உண்டு. சில தொடர்கள் முடிவதால் மகிழ்ச்சியுண்டு. அந்தவகையில் இந்த ஆண்டு நிறைவைக் கண்ட சின்னத்திரை தொடர்கள் பட்டியலைக் காணலாம். அவை எந்தவகையான உணர்வைத் தந்தன என்பதைக் குறித்தும் காணலாம். 

பாண்டியன் ஸ்டோர்ஸ்

இன்றைய தேதிவரை விஜய் தொலைக்காட்சியில் அதிக நாள்கள் ஒளிபரப்பான தொடர் என்றால் அது பாண்டியன் ஸ்டோர்ஸ்தான். கடந்த 2018ஆம் ஆண்டுமுதல் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் ஒளிபரப்பாகி வந்தது. இந்தத் தொடர் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பானது. 

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 சகோதரர்களின் குடும்பங்களுக்குட்பட்ட கதையாக இருந்தது பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர். ஸ்டாலின், சுஜிதா, குமரன் தங்கராஜன், வெங்கட் ரங்கநாதன் உள்ளிட்ட பலர் முதன்மை பாத்திரங்களில் நடித்திருந்தனர். 

தொடர்ந்து 5 ஆண்டுகளாக இந்தத் தொடர் ஒளிபரப்பாகி வந்தது. இந்தத் தொடரில் முல்லை பாத்திரத்தில் நடித்துவந்த விஜே சித்ரா மறைவுக்குப் பிறகு அந்த பாத்திரத்தில் பலர் மாறினர். ஆனால், முல்லை பாத்திரத்தில் விஜே சித்ரா இன்றளவும் நினைவுகூரப்படுகிறார். 

இந்தத் தொடர் ஆரம்பத்தில் நல்ல விமர்சனங்களைப் பெற்றது. பிறகு சில கதாபாத்திரங்கள் மாறியது இந்தத் தொடருக்கு பெரும் பின்னடைவாக இருந்தது. 5 ஆண்டுகளாக ஒளிபரப்பானதால், சில நேரங்களில் சலிப்பைக் கொடுத்தாலும், பலமூறை டாப் 10 சீரியல்களில் ஒன்றாகவே இருந்தது. 

புதுப்பொலிவுடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் -2 தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. 5 ஆண்டுகள் ஆனாலும், இரண்டாம் பாகத்திற்கும் நல்ல வரவேற்பு உள்ளது. பாண்டியன் ஸ்டோர்ஸ் -2 தொடரும் நல்ல டிஆர்பி பெறுகிறது.

மெளன ராகம் -2

விஜய் தொலைக்காட்சியில் பிரலமான மற்றொரு தொடர் மெளன ராகம் -2. முதல் பாகத்துக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து ஒளிபரப்பானது இரண்டாம் பாகம். குழந்தை நட்சத்திரமாக நடித்துவந்த ரவீனா முதல்முறை நாயகியாக களமிறங்கியதும் மெளன ராகம் -2 தொடரில்தான். 

மெளன ராகம் இரண்டாம் பாகம் 2021  பிப்ரவரியில் தொடங்கியது. 568 எபிஸோடுகள் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி 2023 மார்ச் மாதம் தனது பயணத்தை முடித்துக்கொண்டது. இதன் பிறகு நடிகை ரவீனா பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். அவர் அந்நிகழ்ச்சி செல்ல முக்கிய காரணமாக இருந்தது மெளன ராகம் -2 தொடர். 

இந்தத் தொடர் தமிழில் பெற்ற வரவேற்பைத் தொடர்ந்து மலையாளத்திலும் மறு உருவாக்கம் செய்யப்படுகிறது. மலையாள தொடர்கள் பல தமிழில் எடுக்கப்படும் நிலையில், தமிழிலிருந்து மலையாளத்துக்கு செல்லும் தொடர் என்ற பெருமையப் பெற்றது மெளன ராகம் -2.

பாரதி கண்ணம்மா -2

சமூக வலைதளங்களில் அதிகம் கேலிக்குள்ளான தொடர் என்றால் அது 'பாரதி கண்ணம்மா'தான். ஒரு பெண் கணவன் வீட்டை விட்டு பையுடன் வெளியேறும் காட்சி பல வாரங்களாக ஒளிபரப்பானது. தொடரில் உணர்வுப்பூர்வமான காட்சியாக இருந்தாலும், அது நீண்டுக்கொண்டே சென்றதால், சலிப்படைந்து மீம்ஸ்களாகவும், ட்ரோல் மெட்டிரீயலாகவும் சமூக வலைதளங்களில் மாறியது. 

பாரதி கண்ணம்மா முதல் பாகத்தைப் போலவே வேறு நடிகர்களுடன் பாரதி கண்ணம்மா -2 ஒளிபரப்பானது. 

ரோஜா தொடரில் நடித்து கவனம் ஈர்த்த சிபு சூர்யன், விணுஷா தேவி ஆகியோர் முதன்மை பாத்திரங்களில் நடித்தனர். 

முதல் பாகத்துக்கு கிடைத்த வரவேற்பு இரண்டாம் பாகத்துக்கு கிடைக்கவில்லை. 2023 பிப்ரவரியில் தொடங்கி ஆகஸ்ட் மாதம் நிறைவு பெற்றது. வெறும் 115 எபிஸோடுகள் மட்டுமே ஒளிபரப்பானது. 

போதிய அளவு கவனம் பெறாததாலும், டிஆர்பி இல்லாததாலும் பாரதி கண்ணம்மா -2 தொடர் முடிக்கப்பட்டது. இறுதிக்காட்சிகளில் பிக்பாஸ் பிரபலம் ஷிவின் மற்றும் ஆர்.ஜே. பாலாஜி ஆகியோர் சிறப்புத் தோற்றத்தில் நடித்தனர்.

பாரதி கண்ணம்மா -2 தொடருக்கு பதிலாக தற்போது கிழக்கு வாசல் தொடர் (அதற்கும் பாரதி கண்ணம்மா -2 நிலைதான்) ஒளிபரப்பாகிறது. 

கண்ணே கலைமானே

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவந்த தொடர் கண்ணே கலைமானே. 2022 அக்டோபர் முதல் ஒளிபரப்பானது. கண்ணே கலைமானே தொடர் ஆரம்பிக்கப்பட்ட சில மாதங்களுக்குள் இத்தொடரின் கதாநாயகன் நவீன் மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக நந்தா நடித்து வந்தார். 

முதன்மை நடிகர் மாற்றப்பட்டது இத்தொடருக்கு பெரும் பின்னடைவாக இருந்தது. போதிய அளவு டிஆர்பியும் இல்லை. இதனால்  350 எபிஸோடுகளுடன் 2023 டிசம்பரில் இந்தத் தொடர் முடிவுக்கு வந்தது.  

இந்தத் தொடருக்கு பதிலாக டிசம்பர் 4 முதல் பிற்பகல் 1.30 மணிக்கு சக்திவேல் என்ற புதிய தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.

கண்ணான கண்ணே 

சன் தொலைக்காட்சியில் பெரும் வரவேற்பைப் பெற்ற தொடர்களில் ஒன்று கண்ணான கண்ணே. நவம்பர் 2020-ல் இத்தொடர் ஒளிபரப்பை தொடங்கியது. இந்தத் தொடரில் நிமேஷிகா ராதாகிருஷ்ணன், ராகுல் ரவி மற்றும் பப்லூ பிரித்விராஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். இந்தத் தொடர் தெலுங்கு தொலைக்காட்சி தொடரான பௌர்ணமியின் மறு உருவாக்கமாகும். 

தெலுங்கு கதையாக இருந்தாலும்  காட்சிப்பத்தும் விதத்தில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது கண்ணான கண்ணே தொடர். இத்தொடர் 700 நாள்கள்வரை ஒளிபரப்பானது. இறுதிக்காட்சிகளில் சினிமா நடிகை இனியா சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார். இதனால் கண்ணான கண்ணே தொடரி இறுதிக் காட்சிகள் அதிக அளவில் டிஆர்பி பெற்றது. அதிக கவனத்தையும் ஈர்த்தது. 

கண்ணான கண்ணே தொடரை தனுஷ் இயக்கினர். அவர் தற்போது சிங்கப்பெண்ணே தொடரை இயக்கி வருகிறார். இந்தத் தொடர் தமிழ் சின்னத்திரையில் அதிக டிஆர்பி பெறும் தொடராக உள்ளது.

பாண்டவர் இல்லம் 

சன் தொலைக்காட்சியில் மதிய நேரம் ஒளிபரப்பாகி அதிக கவனம் ஈர்த்த தொடர் பாண்டவர் இல்லம். சகோதர்கள் 5 பேர் கொண்ட வீட்டில் அவர்களுக்கு மனைவியாக வருபவர்களிடையே நடக்கும் கதைதான் பாண்டவர் இல்லம். 

நகைச்சுவை காட்சிகளுக்கு முக்கியத்துவம்கொடுத்து இந்தத் தொடர் எடுக்கப்பட்டது. பாண்டவர் இல்லம் தொடரில் பாப்ரி கோஷ், நரேஷ் ஈஸ்வர், குகன் சண்முகம், ஆர்த்தி சுபாஷ் உள்ளிட்ட பலர் நடித்தனர். சன் தொலைக்காட்சியில் 2019 ஜூலை முதல் பாண்டவர் இல்லம் தொடர் ஒளிபரப்பானது. 2023 அக்டோபர் மாதம் இந்தத் தொடர் நிறைவு பெற்றது. 

மொத்தம் 1216 எபிஸோடுகள் வரை ஒளிபரப்பானது. சந்திரலேகா தொடருக்கு அடுத்து அதிக நாள்கள் ஓடிய பிற்பகல் நேரத் தொடராக பாண்டவர் இல்லம் மாறியது. 

சுந்தரி

சுந்தரி தொடர் 2021 பிப்ரவரி முதல் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. கருப்பு நிறத்திலுள்ள கிராமத்துப்பெண்ணை திருமணம் செய்து ஏமாற்றி மறுமணம் செய்துகொள்ளும் கணவன் முன்பு, படித்து ஆட்சியராக வேண்டும் என்ற கனவோடு வாழும் பெண்ணின் கதையே  சுந்தரி தொடர்.

அழகர் இயக்கிய இந்தத் தொடரில் கேப்ரியல்லா முதன்மைப் கதாபாத்திரத்தில் நடித்தார். அவருக்கு ஜோடியாக ஜிஸ்னு மேனன் நடித்திருந்தார். இத்தொடரில் பல சவால்களைக் கடந்து சுந்தரி தனது ஐஏஎஸ் கனவை நனவாக்கினார். அத்தோடு சுந்தரி தொடர் சுபம் போடப்பட்டது. 

சுந்தரிக்கு கிடைத்த வரவேற்பால் தற்போது சுந்தரி -2 எடுக்கப்பட்டு வருகிறது. ஆட்சியரான பிறகு சுந்தரியின் செயல்பாடுகள் மற்றும் இல்லற வாழ்க்கையை மையமாக வைத்து ஒளிபரப்பாகிறது.

மகராசி

சன் டிவியில் ஒளிப்பரப்பான தொடர் மகராசி. இத்தொடரில் சினிமா நடிகை சுருத்திகா மற்றும் ஆர்யன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். மேலும், ரியாஸ் கான், ஸ்ரீ ரஞ்சினி, பூவிலங்கு மோகன், மகா லட்சுமி போன்ற சினிமா பிரபலங்களே பெரும்பாலும் முதன்மை பாத்திரங்களில் நடித்தனர். இதுவே இத்தொடர் அதிக ரசிகர்களை ஈர்த்ததற்கு காரணம். 

மகராசி தொடர் அக்டோபர் 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 1030 எபிஸோடுகளைக் கடந்து  ஒளிப்பரப்பானது. 

காற்றுக்கென்ன வேலி

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் தொடர் காற்றுக்கென்ன வேலி. மொஹார் என்ற வங்காள மொழித் தொடரின் மறு உருவாக்கமாக இந்தத் தொடர் எடுக்கப்பட்டது. இந்தத் தொடர் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 1 மணிக்கு ஒளிபரப்பானது.

கடந்த 2021ஆம் ஆண்டுமுதல் ஒளிபரப்பாகிவரும் இந்தத் தொடர் ஆரம்பக்கட்டத்தில் இளம்தலைமுறை ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. இத்தொடரில் பிரியங்கா குமார், சுவாமிநாதன் அனந்தராமன் முதன்மை பாத்திரங்களில் நடித்தனர். இவர்களுக்கு இடையிலான காதல் காட்சிகள் மிகவும் ரசிக்கப்பட்டவை. 

சமூக வலைதளங்களில் இவர்களின் காதல் காட்சிகளுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. பலபேரின் வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ் விடியோக்களாக காற்றுக்கென்ன வேலியின் காதல் காட்சிகள் இருந்தன. 

2023 பிற்பாதியில் வணிக ரீதியாக பெரும் பின்னடைவை சந்தித்தது. டிஆர்பி பட்டியலில் பல புதிய நண்பகல் தொடர்கள் வரவே, காற்றுக்கென்ன வேலி பின்னடைவை சந்தித்தது. இதனால், காற்றுக்கென்ன வேலி தொடர் திட்டமிட்டு விரைவாக முடிக்கப்பட்டது.

திருமகள்

திருமகள் சீரியல் அக்டோபர் 2020 முதல் சன் டிவியில் ஒளிப்பரப்பாகி வருகிறது. திங்கள் முதல் சனிக்கிழமை வரை மதியம் 12:30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இத்தொடரில் ஹாரிகா சாது, ஷமிதா, சுரேந்தர் சண்முகம் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தனர்.

திருமகள் தொடர் தெலுங்கு தொடரின் மறு உருவாக்கம்தான். எனினும் இந்தத் தொடர் போதிய கவனம் பெறவில்லை. டிஆர்பியிலும் போதிய அளவில் கவனம் ஈர்க்கவில்லை. 2022ம் ஆண்டு முழுவதும் மிகக்குறைந்த டிஆர்பியே பெற்றது. இதனால் 2023ல் முடிவுக்கு வந்தது.  திருமகள் சீரியலுக்கு பதிலாக மீனா என்ற புதிய தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. 

இந்த ஆண்டு முடிவுக்குவந்த தொடர்களின் எண்ணிக்கையை விட புதிதாக வந்த தொடர்களின் எண்ணிக்கை அதிகம். அவற்றில் சில வெற்றிகரமாகவும் ஓடிக்கொண்டிருக்கின்றன. ஒருசில தொடர்கள் தமிழ்நாட்டில் அதிக மக்கள் பார்க்கும் தொடராகவும் உள்ளன. அவை அடுத்த ஆண்டுக்கான சின்னத்திரை வளர்ச்சியில் எந்த அளவு பங்கெடுக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com