'உலக நல்வாழ்விற்கான உலக அறிவியல்'

இந்திய இயற்பியலார் சர் சி.வி.ராமன் ”ராமன் விளைவு” என்னும் ஒளிச்சிதறல் கோட்பாட்டை உலகுக்கு அறிவித்த பிப்ரவரி 28 ஆம் நாளை தேசிய அறிவியல் நாளாக கொண்டாடி வருகிறோம்.
'உலக நல்வாழ்விற்கான உலக அறிவியல்'

இந்திய இயற்பியலார் சர் சி.வி.ராமன் ”ராமன் விளைவு” என்னும் ஒளிச்சிதறல் கோட்பாட்டை உலகுக்கு அறிவித்த பிப்ரவரி 28 ஆம் நாளை தேசிய அறிவியல் நாளாக கொண்டாடி வருகிறோம்.

ஒவ்வொரு ஆண்டும் இந்த நிகழ்வு ஒரு குறிப்பிட்ட அறிவியல் கருப்பொருளில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 'உலக நலவாழ்விற்கான உலக அறிவியல்' என்னும் பொதுத் தலைப்பில் கொண்டாடப்படுகிறது. இந்த ஒளிச் சிதறல் கோட்பாட்டிற்காக டாக்டர் ராமன் 1930-ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றார்.

ரோபோட்டிக் புரட்சி யுகத்தில் வாழும் நமக்கு அன்றாட வாழ்வில் அத்தியாவசியமாகிப்போன தொலைக்காட்சி, கைபேசி, கணிணி உள்ளிட்ட   மின்னணு சாதனங்கள், பல்வேறு மருத்துவ உபகரனங்கள், லேசர் கருவிகள் என பலவற்றிற்கும் அடிப்படையாக அமைந்துள்ள அவரது கண்டுபிடிப்பு மனித குலத்தை பெரும் பாய்ச்சலில் முன்னெடுத்துச் சென்றுள்ளதை யாரும் மறுக்க முடியாது.

அவர் திருச்சி திருவானைக்காவலில் 1888 ஆம் ஆண்டு நவம்பர் 7 ஆம் தேதி பிறந்தார். தனது 11-வது வயதில் பள்ளிப்படிப்பை முடித்த அவர் 15-வது வயதில் சென்னை மாநிலக் கல்லூரியில் இயற்பியல் மற்றும் பி.ஏ ஹானர்ஸ் படிப்பை முடித்து மாநிலத்திலேயே முதல் மாணவனாகத் தேர்வு பெற்றார். அதே கல்லூரியில் மாநிலத்திலேயே முதல் மாணவனாகத் தனது முதுகலைப் படிப்பையும் முடித்தார். இதனைத் தொடர்ந்து கொல்கத்தாவில் உதவி அக்கவுண்டண்ட் ஜெனரலாகப் பணியில் சேர்ந்தார், 10 ஆண்டுகள் இந்தப் பணியில் இருந்த அவருக்கு கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் இயற்பியல் துறையில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது அவர் சில ஆய்வுகளை மேற்கொண்டு வந்தார்.

கொல்கத்தாவில் பணியாற்றி வந்த சர்.சி.வி ராமன் ஒருமுறை ஐரோப்பாவில் நடைபெற்ற விஞ்ஞானிகள் மாநாட்டுக்கு கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் பிரதிநிதியாக பங்கேற்க கப்பல் பயணம் மேற்கொண்டார். அப்பொழுது அவரிடம் இருந்த அறிவியல் மனப்பான்மையின் கரணமாகவும். இயற்கை மீது அவருக்கு இருந்த ஈடுபாட்டின் காரணமாகவும் வானத்தை உற்றுநோக்கி வந்தார். அவரின் பயணத்தின்போது அவர் பார்த்த மத்திய தரைக்கடல் பகுதியின் வானம் ஏன் அவ்வளவு நீல நிறமாகக் காட்சியளிக்கிறது என்று சிந்தித்தார். இதுகுறித்து பல தொடர் ஆராய்ச்சிகளை அவர் மேற்கொண்டார். அந்த ஆராய்ச்சிகளின் முடிவில், திட, திரவ, வாயு உள்ளிட்ட அனைத்து ஊடகங்களிலும் ஒளி ஊடுறுவிச் செல்லும்போது அதன் இயல்பில் ஏற்படும் மாறுதல்களுக்குக் காரணமாக ‘ஒளியின் மூலக்கூறு சிதறல்' (molecular scattering light) ஏற்படுகிறது என்ற பெரும் உண்மையைக் கண்டறிந்தார்.

இன்றைய அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியில் பெரும் பங்களிப்பை செலுத்தி வரும் இந்த சிறப்புமிகு கண்டுபிடிப்பினைப் பாராட்டி, 1930ல் அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. அவரது ஆய்வின்போது அவர் வண்ணப்பட்டை நிழற்பதிவுக் கருவியை (spectrograph) பயன்படுத்தினார். சூரிய ஒளியை பல்வேறு ஊடகங்களின் வழியே செலுத்துவதன் மூலம், நிறமானியில் சில புதிய ‘வண்ண வரிகள்' தோன்றுவதை அவர் கண்டார். அவை ‘ராமன் வரிகள்' என்றும், அவருடைய கண்டுபிடிப்பு ‘ராமன் விளைவு' (Raman effect) என்றும் அழைக்கப்பட்டு வருகிறது.

டாக்டர் சி வி. ராமன் 1924-ம் ஆண்டு லண்டன் ராயல் அமைப்பின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1929-ம் ஆண்டில் அவருக்கு பிரிட்டிஷ் பேரரசின் வீரர் என்ற பட்டத்தை பிரிட்டிஷ் அரசு அளித்து கௌரவித்தது. இந்த பட்டத்தை பெற்றதன் காரணமாக அவர் சர் சி.வி.ராமன் என அழைக்கப்பட்டார்.

மத்திய அரசின் தேசிய அறிவியல் தொழில்நுட்ப பரிமாற்றக் குழு 1986-ம் ஆண்டு பிப்ரவரி 28ம் நாளை முதன் முதலில் தேசிய அறிவியல் தினமாக அறிவித்தது. 1987ம் ஆண்டு முதல் அறிவியல் பிரசாரத்தில் சிறப்பாக செயல்படும் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களுக்கு அறிவியல் பரப்புதலுக்கான தேசிய விருது இந்த நாளில் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த விழாவானது இந்தியா முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பொது உரைகள், அறிவியல் கண்காட்சிகள், விவாதங்கள், மற்றும் பல்வேறு அறிவியல் தின போட்டிகளாக நடத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அறிவியல் இயக்கம் போன்ற அறிவியல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள தன்னார்வ அமைப்புக்கள் இந்த தினத்தில் வான் நோக்குதல், நிலவோடு உரையாடுதல், அறிவியல் திருவிழாக்களை நடத்துதல், கருத்தரங்குகளை நடத்துதல் என பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன.

தேசிய அறிவியல் தினத்தின் முக்கியத்துவம்:

'உலக அறிவியலுக்கான உலக அறிவியல்' என்ற கருப்பொருளில் இந்த ஆண்டு (2023) அறிவியல் தினம் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மக்களின் அன்றாட வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தும் அறிவியலின் முக்கியத்துவத்தைப் பற்றிய செய்தியைப் பரப்புவதற்காக தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்படுகிறது. மனிதகுல மேம்பாட்டிற்காக அறிவியல் துறையில் அனைத்து செயல்பாடுகள், முயற்சிகள் மற்றும் சாதனைகளை காட்சிப்படுத்தவும். அறிவியல் துறையின் வளர்ச்சி குறித்து மதிப்பீடு செய்யவும், புதிய தொழில்நுட்பங்களை கண்டறிந்து செயல்படுத்தவும் இது கொண்டாடப்படுகிறது. 

(பிப். 28 - தேசிய அறிவியல் நாள்)

[கட்டுரையாளர் - மாநில துணைத் தலைவர்,

தமிழ்நாடு அறிவியல் இயக்கம்

பேராசிரியர், குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக் கல்லூரி, தஞ்சாவூர்]

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com