திருவையாறு ஆராதனை உருவான வரலாறு

1904 ஆம் ஆண்டு முதல் தியாகராஜ ஆராதனை விழா திருவையாறில் நடைபெறத் தொடங்கியது. திருவையாறில் பச்சையப்ப முதலியாருக்குச் சொந்தமான சத்திரத்தில் இந்த விழா நடத்தப்பட்டது.
ஆராதனை நாளில் நடைபெற்ற பஞ்சரத்ன கீர்த்தனையில் பங்கேற்ற இசைக் கலைஞர்கள் (கோப்புப்படம்).
ஆராதனை நாளில் நடைபெற்ற பஞ்சரத்ன கீர்த்தனையில் பங்கேற்ற இசைக் கலைஞர்கள் (கோப்புப்படம்).

கர்நாடக இசை மரபை உருவாக்கியவர்களில் தலைசிறந்தவரும், ராமபக்தருமான ஸ்ரீ சத்குரு தியாகராஜ சுவாமிகள் 1847 ஆம் ஆண்டு ஜன. 6-ம் தேதி சித்தி அடைந்தார். காவிரிக் கரையின் வட பகுதியில் அவருக்கு சமாதி அமைக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து தியாகராஜரின் நினைவு நாளில் அவரது சமாதியில் அவருடைய சீடர்கள் அஞ்சலி செலுத்தி வந்தனர். காலப்போக்கில் திருவையாறுக்கு செல்ல இயலாத சீடர்கள் தங்களது வீட்டிலேயே அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.

தியாகராஜரின் சிஷ்யர்களான உமையாள்புரம் சகோதரர்களான கிருஷ்ண பாகவதர், சுந்தர பாகவதர் 1903 ஆம் ஆண்டில் திருவையாறுக்கு வந்தனர். அப்போது, பிருந்தாவனத்தை அடையாளம் காண்பதே சிரமமாக இருந்தது. சிலருடைய உதவியுடன் பிருந்தாவனம் புதுப்பிக்கப்பட்டது.

இதன்பின்னர், 1904 ஆம் ஆண்டு முதல் தியாகராஜ ஆராதனை விழா திருவையாறில் நடைபெறத் தொடங்கியது. திருவையாறில் பச்சையப்ப முதலியாருக்குச் சொந்தமான சத்திரத்தில் இந்த விழா நடத்தப்பட்டது.

தில்லைஸ்தான சகோதரர்களான நரசிம்ம பாகவதர், பஞ்சு பாகவதர் ஆராதனைக்கு என செயல் திட்டம் வகுத்தனர். அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு அத்திட்டம் பின்பற்றப்பட்டது.

இந்த ஆராதனை விழாவை 1907, 1908, 1909, 1910 ஆம் ஆண்டுகளில் விமரிசையாக நடத்தப்பட்டன. இதன் பின்னர், தில்லைஸ்தான சகோதரர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. எனவே, நரசிம்ம பாகவதர் 1911 ஆம் ஆண்டு ஆராதனையின் போது திருவையாறை விடுத்து, கும்பகோணத்தில் பல வித்வான்களின் ஆதரவோடு நடத்தினார். திருவையாறில் பஞ்சு பாகவதர் ஆராதனையை நடத்தி முடித்தார்.

பெரிய கட்சி - சின்ன கட்சி

நரசிம்ம பாகவதர் காலமானதைத் தொடர்ந்து, 1912 ஆம் ஆண்டில் ஆராதனையை திருவையாறிலேயே நடத்த கும்பகோணம் குழு முடிவு செய்தது. ஆனால், இரு குழுக்களும் தனித்தனியாகவே செயல்பட்டன.

கும்பகோணம் குழு பெரிய அண்ணன் நரசிம்ம பாகவதருடையது என்பதால், அதற்குப் பெரிய கட்சி எனக் குறிப்பிடப்பட்டது. பஞ்சு பாகவதரின் குழுவை சின்ன கட்சி என அழைத்தனர். இரு கட்சிகளிடையே போட்டி மனப்பான்மை உருவாகி பிரபல வித்வான்களை தங்களது பக்கம் இணைத்துக் கொண்டு பலப்படுத்தத் தொடங்கினர்.
தஞ்சை மன்னர்கள் கட்டிய கல்யாண மஹாலில் பெரிய கட்சியும், பச்சையப்ப முதலியாரின் சத்திரத்தில் சின்ன கட்சியும் ஆராதனை விழாவை நடத்தி வந்தன.

பின்னர், பெரிய கட்சிக்கு திருச்சி கோவிந்தசாமி பிள்ளையும், சின்ன கட்சிக்கு சூலமங்கலம் வைத்தியநாத பாகவதரும் தலைமை வகித்தனர். சின்ன கட்சி ஆராதனையைக் கொண்டாடுவதற்காக தியாகராஜ பரப்பிரம்ம வைபவ பிரகாச சபை என்ற பெயரில் ஒரு அமைப்பு உருவாகியது.

நாளடைவில் சின்ன கட்சியிலிருந்து பிரிந்த ஒரு குழுவினர் ஸ்ரீ தியாகராஜ பரப்பிரம்ம பக்த கான சபா என்ற பெயரில் பச்சையப்ப முதலியார் சத்திரத்தில் ஆராதனையை நடத்தத் தொடங்கினர். அது ஓரிரு ஆண்டுகளோடு முடிந்து போனது. மீண்டும் சின்ன கட்சியின் ஆராதனையே நடைபெற்று வந்தது.

இதனிடையே, பெங்களூரு நாகரத்தினம்மாள் திருவையாறுக்கு வந்தார். பெரிய கட்சியுடன் இணைந்து செயல்பட்ட இவர், ஆராதனை விழாவில் பெண்களையும் பங்கேற்கச் செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். அதற்கு பெரிய கட்சியைச் சேர்ந்தவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை.

இதனால், கோபத்துடன் வெளியேறிய நாகரத்தினம்மாள் பெண்கள் கொண்ட தனிக் கட்சியை உருவாக்கினார். ஆராதனை நாளன்று 40 பெண்களுடன் வந்த நாகரத்தினம்மாள் இசை நிகழ்ச்சிகளை நடத்தி புரட்சி செய்தார். இந்த விழாவில் மக்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.

ஆனால் சமாதி இருக்கும் அதிஷ்டானத்தில் பெரிய கட்சி, சின்ன கட்சி ஆகிய இரு குழுக்களில் யார் ஆராதனை நடத்துவது என்பது தொடர்பான பிரச்னை திருவையாறு மாஜிஸ்திரேட்டிடம் கொண்டு செல்லப்பட்டது.

இந்தக் காலகட்டத்தில் அப்போது தஞ்சையில் பணியாற்றிக் கொண்டிருந்தவரும், இசைக் கலைஞர்களோடு அதிகத் தொடர்புடையவருமான ஐ.சி.எஸ். அதிகாரி எஸ்.ஒய். கிருஷ்ணசாமி மற்றும் முசிறி சுப்பிரமணிய ஐயரின் முயற்சியால் பல கட்சிகளையும் ஒருங்கிணைத்து ஆராதனையை நடத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் மூலம், 1940 ஆம் ஆண்டுக்குப் பிறகு உருவான ஸ்ரீ தியாகப்பிரம்ம மகோத்சவ சபாதான் இப்போதும் ஆராதனை நிகழ்ச்சிகளைத் திருவையாறில் நடத்தி வருகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com