சங்கீத மும்மூர்த்திகளில் முதன்மையானவர் ஸ்ரீதியாகராஜர்

தமிழ்நாட்டில் கர்நாடக இசை வளர்ச்சி பெறவும், அதில் பல அரிய பாடல்களைப் பாடி இன்றளவும் நிலைத்து நிற்கும்படி செய்ததில் கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளில் முதன்மையானவர் ஸ்ரீதியாகராஜ சுவாமிகள்.
ஸ்ரீதியாகராஜ சுவாமிகள்
ஸ்ரீதியாகராஜ சுவாமிகள்

கர்நாடக சங்கீத மும்மூர்த்திகள் எனப் போற்றப்படுவர்கள் ஸ்ரீதியாகராஜ சுவாமிகள், ஸ்ரீமுத்துசாமி தீட்சிதர், ஸ்ரீசியாமா சாஸ்த்ரி. தமிழ்நாட்டில் கர்நாடக இசை வளர்ச்சி பெறவும், அதில் பல அரிய பாடல்களைப் பாடி இன்றளவும் நிலைத்து நிற்கும்படி செய்ததில் இவர்களுடைய பங்களிப்பு அளப்பரியது. இவர்களில் முதன்மையானவர் ஸ்ரீதியாகராஜ சுவாமிகள்.

தஞ்சாவூரை மராட்டிய மன்னர்கள் ஆண்டபோது, தியாகராஜரின் பாட்டனார் கிரிராஜ பிரம்மம் தனது தந்தை பஞ்சநத பிரம்மத்துடன் திருவாரூரில் குடியேறினார். கிரிராஜ பிரம்மத்தின் மகன் ராமபிரம்மம். இவர் வீணை காளஹஸ்தி அய்யாவின் மகள் சீதம்மாவை மணந்தார். இவர்களுக்கு பஞ்சநதன், பஞ்சாபகேசன், தியாகராஜர் ஆகிய மூன்று பிள்ளைகள் பிறந்தனர். இவர்களில் மூன்றாவது மகனாக ஸ்ரீதியாகராஜர் கி.பி. 1767 ஆம் ஆண்டு மே மாதம் 4 ஆம் நாள் திருவாரூரில் அவதரித்தார்.

ராமாயண சொற்பொழிவாற்றுவதிலும், பஜனைகளிலும் சிறந்து விளங்கிய இவரது தந்தை ராமபிரம்மம் தஞ்சை மன்னர் இரண்டாம் துளஜாவிடமிருந்து அடிக்கடி மானியங்கள் பெற்று வந்தார். திருவையாறு ஏழூர் வலம் வரும் விழாவுக்கு (சப்தஸ்தான விழா) பஜனை செய்யச் சென்ற ராமபிரம்மத்தின் மனதை திருவையாறு கவர்ந்தது. திருவையாறிலேயே குடியேற நினைத்த ராமபிரம்மம் தனது விருப்பத்தை மன்னர் துளஜாவிடம் தெரிவித்தார். இதையடுத்து, ராமபிரம்மத்துக்கு திருவையாறு திருமஞ்சன வீதியில் ஒரு வீட்டையும், பசுபதிகோவிலில் ஒரு வேலி நிலமும் மானியமாக மன்னர் வழங்கினார்.

திருவையாறு ராஜா சம்ஸ்கிருத கல்லூரியில் தியாகராஜர் கல்வி பயின்றார். அவருக்குத் தந்தை ராமபிரம்மம் ராமதாரக மந்திரத்தை உபதேசம் செய்தார். தாய் சீதம்மாவும் ராமதாஸ், புரந்தரரின் கீர்த்தனைகளையும், அஷ்டபதியையும் கற்றுக் கொடுத்தார்.

ராமபிரம்மம் பூஜை செய்யும்போது, அவருக்கு எதிரில் தியாகராஜரும் அமர்ந்து கொண்டு புரந்தரர், ராமதாஸ் கீர்த்தனைகளை பாடுவார். ஒரு நாள் தனது தந்தையின் பூஜையில் ஆழ்ந்து போயிருந்த தியாகராஜர் தன்னையும் அறியாமல் ஸ்ரீராமபிரானிடம் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டு நமோ நமோ ராகவாய அநிசம் என்ற தேசியத் தோடி ராகக் கீர்த்தனையை பாடினார்.

தியாகராஜரின் இசை ஆர்வத்தைப் பார்த்த ராமபிரம்மம் சங்கீத வித்வான் சொன்டி வெங்கட்டரமணய்யாவிடம் தியாகராஜரை அனுப்பி வைத்து, முறையாக இசை பயில வைத்தார்.

ஒரு நாள் தியாகராஜரை அழைத்த சொன்டி வெங்கட்டரமணய்யா, புதிதாக இயற்றிய கீர்த்தனையை இசைக் கலைஞர்கள் முன்னிலையில் பாடுமாறு கூறினார். தொருகுனா இடுவண்டி சேவா என்ற பிலஹரி ராக கீர்த்தனையை முறைப்படி பாடி, கடைசி சரணத்தில் விரிவாக நிரவல் செய்தார். இதைக் கேட்டு பரவசமைடந்த வெங்கட்டரமணய்யா தனது தோடாவையும், மகர கண்டியையும் தியாகராஜருக்கே அணிவித்து, இப்படிப்பட்ட ஒரு சிஷ்யன் கிடைப்பானா எனப் போற்றிப் புகழ்ந்தார்.

தியாகராஜருக்கு 18 வயதான போது பார்வதி என்ற பெண்ணை திருமணம் செய்து வைத்தனர். ஆனால், மணமான 5 ஆண்டுகளில் பார்வதி குழந்தைப் பேறின்றி காலமானார். எனவே, அவரது தங்கை கனகம்மாளை மணந்து பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.

ராமபிரானின் ஆணையால் சந்நியாசம் வாங்கிக் கொண்ட தியாகராஜர், கிரிபை நெல கொன்ன ராமுனி என்ற ஸகானா ராக கீர்த்தனையை பாடினார். பத்து நாள்களில் உன்னைக் காண்பேன் என்று சொன்ன ராமனைக் குறி தவறாமல் கண்டேன் என்பது அப்பாடலின் பொருள். அதுபோலவே பத்தாவது நாளில் (கி.பி. 1847 ஆம் ஆண்டில்) புஷ்ய பகுள பஞ்சமியன்று அதிகாலையில் இறைவனடி சேர்ந்தார்.

ஸ்ரீதியாகராஜர் இறைவனடி சேர்ந்த புஷ்ய பகுள பஞ்சமியன்று ஆண்டுதோறும் திருவையாறு காவிரிக் கரையிலுள்ள சத்குரு ஸ்ரீதியாகராஜரின் சமாதி முன் இசைக்கலைஞர்கள் ஒன்று கூடி கீதாஞ்சலி செலுத்தி வருவது இப்போதும் தொடர்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com