ஆராதனை விழா அன்றும் - இன்றும்

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு காவிரிக்கரையில் நடைபெறும் தியாகராஜ ஆராதனை இப்போது 176 ஆம் ஆண்டாக தொடர்கிறது. ஐந்து நாள்கள் நடைபெறும் இந்த விழா மூலம் திருவையாறு நகரமே விழாக்கோலம் பூண்டுவிடும். 
பஞ்சரத்ன கீர்த்தனை (கோப்புப் படம்)
பஞ்சரத்ன கீர்த்தனை (கோப்புப் படம்)

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு காவிரிக்கரையில் நடைபெறும் தியாகராஜ ஆராதனை இப்போது 176 ஆம் ஆண்டாக தொடர்கிறது. ஐந்து நாள்கள் நடைபெறும் இந்த விழா மூலம் திருவையாறு நகரமே விழாக்கோலம் பூண்டுவிடும். இது, அந்தக் காலம் முதல் இப்போதும் நீடிக்கிறது. இசைக் கலைஞர்களும், ஆர்வலர்களும் போற்றும் இத்திருவிழாவில் வயது கடந்தாலும் இப்போதும் அதே ஆர்வத்துடன் கலந்து கொண்டு மன நிறைவு பெறுகின்றனர்.

இதுகுறித்து திருவையாறு அரசு இசைக் கல்லூரி முன்னாள் முதல்வரும், மரபு அறக்கட்டளை நிறுவனருமான இராம. கெளசல்யா தெரிவித்தது:

எனக்கு விவரம் தெரிந்த நாள் முதல் அம்மா, அப்பா, அத்தையுடன் ஆராதனை விழாவுக்குச் செல்வேன். இப்போது வயது 73. கிட்டத்தட்ட 70 ஆண்டுகளாக ஆராதனை விழாவுக்குச் சென்று கொண்டிருக்கிறேன்.

எங்களது ஊரில் எல்லோருமே ஆராதனை விழாவுக்குச் செல்வர். அக்காலத்தில் வாகன வசதி கிடையாது என்பதால், நடந்தேதான் சென்று வருவோம். வசதியுள்ள சிலர் மாட்டு வண்டியைக் கட்டிக் கொண்டு வருவர்.

நடந்து சென்றாலும் கூட்டமாகப் பேசிக் கொண்டே செல்வதால் அயர்வு தெரியாது. கச்சேரி முடிந்து வீட்டுக்குத் திரும்பும்போது யார், யார் எந்தெந்த ராகத்தில் எப்படி பாடினர்? என்பது குறித்து விவாதித்துக் கொண்டே வீட்டுக்கு நடந்து செல்வோம். அப்போதெல்லாம் நள்ளிரவு 12 அல்லது 1 மணி வரையிலும் கூட கச்சேரி நடைபெறும். இதனால், சாப்பாடு கட்டிக் கொண்டு சென்று, அங்கேயே சாப்பிட்டுவிட்டு கச்சேரி முடிந்தவுடன் வீட்டுக்குப் புறப்படுவோம்.

மூத்தக் கலைஞர்கள் பாடியதை தோழிகளுடன் கலந்து விவாதிப்போம். இந்த விவாதம் மறுநாள் கல்லூரியில்கூட தொடரும். இதன் மூலம் நிறைய விஷயங்களைக் கற்றுக் கொண்டோம். இளம் இசைக் கலைஞர்கள் உள்ளிட்டோருக்கும் இந்த ஆராதனை புத்துணர்வைத் தருவது மட்டுமல்லாமல், பல புதிய விஷயங்களையும் தெரிந்துகொள்ள பேருதவியாக இருக்கிறது.

இராம. கெளசல்யா 
இராம. கெளசல்யா 

விழா நடைபெறும் 5 நாள்களும் திருவையாறு உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் எல்லோரது வீடுகளிலும் விருந்தினர் வந்திருப்பர். திருவையாறு பகுதியிலிருந்து திருமணமாகி வெளியூர், வெளி மாநிலம், அயல்நாடுகளுக்குச் சென்றவர்கள் கூட, ஆராதனையின்போது வந்திடுவர். அக்காலத்தில் தங்கும் விடுதி, ஓட்டல்கள் வசதி கிடையாது. எனவே, வெளியூர்களிலிருந்து வரும் அனைவரும் உறவினர்கள் வீடுகளிலேயே தங்குவதால், தெருக்களிலும் விழாக் கோலம் பூண்டிருக்கும்.

இதேபோல, வெளியூர்களிலிருந்து வரும் கலைஞர்களும் உறவினர்களது வீட்டில் தங்கிக் கொண்டு, ஆராதனையில் பங்கேற்று பாடுவர். சிலர் அரசர் கல்லூரியில் இருந்த கல்யாண மகாலில் தங்கிக் கொள்வர். பெரிய, பெரிய கலைஞர்களும் மிக எளிமையாக வந்து செல்வர்.
அக்காலத்தில் ஆராதனை திடலில் மேடை இருந்ததில்லை. மூத்த கலைஞர்கள், இளம் கலைஞர்கள் உள்பட அனைவரும் மணலில் அமர்ந்தே பாடுவர். இப்போது, கால அட்டவணை உள்ளது போன்று அப்போது கிடையாது. எனவே, கால அட்டவணைப்படி யாரும் பாடியதில்லை. எப்போது வருகின்றனரோ, அப்போது காத்திருந்து பாடிச் செல்வர். இதேபோல, கூட்டமும் நிறைந்து காணப்படும். பந்தலுக்குள் மட்டுமல்லாமல், சுற்றிலும் நின்று பார்ப்பர். பிரபல இசைக் கலைஞர்கள் பாடும்போது திடலே நிரம்பி வழியும்.

அதே கூட்டம் இப்போதும் தொடர்கிறது. ஆனால், இப்போது வாகன வசதி, தங்கும் விடுதிகள், ஓட்டல்கள் வசதி பெருகிவிட்டதால், இசை ஆர்வலர்கள் வந்து செல்வது எளிதாக இருக்கிறது. இங்கிருந்து புலம்பெயர்ந்தவர்கள், திருமணமாகிச் சென்ற பெண்கள் எல்லோரும் அப்போது உள்ளதைப் போன்று வெளியூர், வெளி மாநிலம், அயல்நாடுகளிலிருந்து வந்து செல்கின்றனர்.

ஆராதனை விடுமுறை நாள்களில் வந்தால் கூட்டம் நிரம்பக் காணப்படும்.
இப்போது, கால அட்டவணை போடப்படுகிறது. இதனால், இசைக் கலைஞர்கள் காத்திருக்காமல், குறித்த நேரத்துக்கு வந்து பாடி இசை அஞ்சலி செலுத்துகின்றனர். முன்பை விட இப்போது குழந்தைகள், இளம் கலைஞர்களுக்கு பாடுவதற்கு நிறையவே வாய்ப்பு வழங்கப்படுகிறது. கால அட்டவணை போடப்படுவதால், முறையாக நடைபெறுகிறது. இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்துவது மிகவும் சிரமம் என்றாலும், சரியாகத் திட்டமிட்டு மிக அழகாக நடத்தப்படுவது மகிழ்ச்சியாக இருக்கிறது என்றார் கெளசல்யா. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com